Advertisment

18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிப்பு செல்லுமா?

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சபையில் தீர்மானம் கொண்டு வந்துதான் எம்.எல்.ஏ.க்களை நீக்க முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu news today live updates

Tamil Nadu news today live updates

இரா.குமார்

Advertisment

டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி இழப்பு செய்து உத்தரவிட்டுள்ளார் பேரவைத்தலைவர் தனபால். இந்த நடவடிக்கை மூலம் எடப்பாடி பழனிசாமியின் அரசு கவிழாமல் காப்பாற்றப்படும்.

தமிழக சட்டப் பேரவையில் நியமன உறுப்பினரையும் சேர்த்து மொத்தம் 235 எம்.எல்.ஏ.க்கள். ஜெயலலிதா மறைவையடுத்து ஒரு இடம் காலியாக உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுத்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக ஆளுநரிடம் தினகரன் ஆதரவாளர் களான 19 எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்தனர். அதில் ஒருவர் சபாநயகரை சந்தித்து, கடிதம் கொடுத்ததை வாபஸ் பெற்றுக் கொண்டார்.

இதனால், அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 113 ஆக இருக்கிறது. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் 3 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதில் ஒருவரான கருணாஸ் டிடிவி தினகரனுடன் சென்று கவர்னரிடம் மனு கொடுத்துள்ளார். மீதமுள்ள 2 பேரும் யாருக்கு ஆதரவு என்று வெளிப்படையாக சொல்லவில்லை. அந்த 2 பேரின் ஆதரவு கிடைத்தாலும், அ.தி.மு.க.வின் பலம் 115 ஆகத்தான் இருக்கும். டிடிவி தினகரனுக்கு மேலும் 2 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து, கவர்னரிடம் மனு கொடுத்துள்ளனர். எனவே எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 113 ஆக உள்ளது. ஆனால் சட்டசபையில் தனி மெஜாரிட்டிக்கு 117 பேரின் ஆதரவு தேவை.

மெஜாரிட்டிக்கு தேவையான எண்ணிக்கை குறைந்து இருப்பதால் சட்டசபையை உடனே கூட்டி, ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தியுள்ளன. எனினும், இது உள்கட்சிப் பிரச்னை என்று சொல்லி, பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு உத்தரவிட முடியாது என்று ஆளுநர் மறுத்துவிட்டார்.

திமுக கூட்டணியில் 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பேரவையில் எடப்பாடி அரசுக்கு எதிராக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அதற்கு ஆதரவாக, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. அப்படி நடந்தால், எடப்பாடி அரசு கவிழும்.

பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடி அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதி மன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து அவர்களின் எம்.எல்.ஏ.க்கள் பதவியை பறித்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சரியாகச் சொன்னால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ்தான் இந்த நடவடிக்க்கையை பேரவைத் தலைவர் எடுத்துள்ளார். பேரவைத் தலைவரின் இந்த உத்தரவு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கட்சித்தாவல் தடைச் சட்டத்தின்படி, சட்டப் பேரவையில், கட்சியின் கொறடா உத்தரவை மீறி வாக்களித்தால் மட்டுமே, அவரைத் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது. பேரவைக்கு வெளியே நடக்கும் ஒரு நிகழ்வின் அடைப்படையில் தகுதி நீக்கம் செய்யும் நடவடிக்கையை எடுக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை.

எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது இந்தித் திணிப்பை கண்டித்து சட்ட எரிப்புப் போராட்டம் நடத்தியது திமுக. இதில் கலந்து கொண்ட கருணாநிதி உட்பட 8 எம்.எல்.ஏ.க்களை தகுதி இழப்பு செய்து, அவர்களின் எம்.எல்.ஏ. பதவியைப் பறித்து பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்.

அப்போது, சட்ட நிபுணர் என்.சி. ராகவாச்சாரியை சந்தித்து, பேரவைத் தலைவரின் நடவடிக்கை செல்லுமா என்று கருத்து கேட்டேன். முதல்வர் எம்ஜிஆர் நாளை என்னிடம் ஆலோசனை கேட்பார். அதற்குள் பத்திரிகைக்கு நான் கருத்து சொல்லக் கூடாது. எனவே, நான் சொன்னதாகக் குறிப்பிடாமல் செய்தி போட்டுக்கொள் என்று சொல்லிவிட்டு, கருத்து கூறினார்.

அவர் சொன்ன்னது: ”அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்து பதவி ஏற்ற எம்.எல்.ஏ.க்கள் அந்த அரசியல் சாசனத்தின் நகலை எரித்தது தவறு என்று சொல்லிதான் திமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து பேரவைத்தலைவர் உத்தவிட்டுள்ளார். இது செல்லாது. பேரவையில் கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கும் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய மட்டுமே பேரவைத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. திமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமானால், பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால் செல்லும்” என்றார்.

அவர் சொன்னது போலவே அடுத்த சில நாட்களில், திமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தது தனிக்கதை.

இப்போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் கொறடா உத்தரவை மீறவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இது பேரவைக்கு வெளியே நடந்த நிகழ்வு. எனவே இது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்ன் கீழ் வராது. இதன் மீது நடவடிக்கை எடுக்க பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்றுதான் கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில் முடிவுக்கு வர முடிகிறது.

Ra Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment