Advertisment

‘நான் வீட்டுக்கு  போறேன் ’

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளன், 27 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முதலாக பரோலில் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் சந்தித்ததை விவரிக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
perarivalan

அருண் ஜனார்த்தனன் 

Advertisment

அது ஆகஸ்ட் 24. இரவு 7.45 மணிக்கு பேரறிவாளன் படுக்கப்போனார். சிறைக்கதவு திறக்கப்பட்டு, சிறை அதிகாரி உள்ளே நுழைந்தார், "சரி, வெளியே வாங்க. உங்களுக்குப் பரோல் கிடைச்சிருக்கு." என்று அவர் சொன்னார். மூப்பு கூடி, தலையில் வழுக்கை விழுந்து நடுவயதில் நின்று கொண்டிருந்த பேரறிவாளனுக்குத் தான் பரோலில் வீடு திரும்புகிறோம் என்கிற செய்தியை உள்வாங்கிக் கொள்ளவே பல நிமிடங்கள் பிடித்தன என்கிறார் அந்த அதிகாரி.

பேரறிவாளன் என்கிற அறிவு ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் ஜூன் 1991-ல் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 19. அன்றிலிருந்து 26 ஆண்டுகளாக, ஒரே ஒரு நாள் கூடப் பரோலிலோ, பெயிலிலோ பேரறிவாளன் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. "அவர் போட்டுக்கிட்டு இருந்த சட்டை, பேண்ட்டை தவிர ஒரே ஒரு லுங்கியை மட்டும் தான் எடுத்துக்கிட்டார். கூடக் கொஞ்சம் துணிமணி எடுத்துக்கோங்க" என்றதற்கு, "அதெல்லாம் எதுக்கு? நான் வீட்டுக்கு போறேன்." என்றார் பேரறிவாளன் என நினைவுகூர்கிறார் சிறை அதிகாரி.

பேரறிவாளன் வேலூர் மத்திய சிறையை விட்டு வெளியே வந்த போது இரவு ஒன்பது மணி. அந்தக் குளிரான இரவில், அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. பல ஆண்டுகளாகத் தன்னுடைய மகனின் விடுதலைக்குத் தனி ஆளாகப் போராடி கொண்டிருக்கும் 66 வயதாகும் அற்புதம் அம்மாள் ஒரு வழியாகத் தன்னுடைய மகன் வீட்டிற்கு வந்துவிட்டான் என அவரை வீட்டு வாசலில் பார்த்ததும் தான் உணர்ந்து கொண்டார். நோய்வாய்ப்பட்டு இருக்கும் தன்னுடைய தந்தையைக் காண்பதற்கான அனுமதி பரோல் யாரும் எதிர்பாராத நேரத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.

வேலூரில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எண்பது கிலோமீட்டர் தூரம். இரண்டு வாகனங்களில் பன்னிரெண்டு காவலர்கள் புடைசூழ ஒன்றரை மணிநேரத்தில் வீட்டிற்கு வந்து சேர்ந்தார் பேரறிவாளன். "என்ன அறிவு வர வழியில பாத்தேன்னு கேட்டேன். நாலு வழி நெடுஞ்சாலையைத் தவிர வேற எதையும் பாக்கலையேம்மா அப்படினு என் மகன் சொன்னான்" என்று அற்புதம் அம்மாள் கண்கள் ஈரமாகப் பேசுகிறார். "கன்வே ஆம்பூர், வாணியம்பாடியை கடந்தப்ப அந்த ஊருங்களைப் பத்தி கேட்டிருக்கான். 'இந்த ஊருக்குள்ள போகப் போறதில்ல, நெடுஞ்சாலையிலேயே போவோம்னு' சொல்லியிருக்காங்க." என்கிறார் அற்புதம் அம்மாள்.

ஒட்டுமொத்த வீடே பேரறிவாளனுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. அவருடைய பெற்றோர், மணமான சகோதரிகளான அன்புமணி (அண்ணாமலை பல்கலையில் கற்பிக்கிறார்), அருள்செல்வி (ஊரக வளர்ச்சித்துறையில் பொறியியலாளர்) ஆகியோரும், உறவினர்கள், நண்பர்கள் என்று பலரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கடந்த ஒரு மாதமாகப் பலரும் பேரறிவாளனை பார்க்க வந்தவண்ணம் இருந்தார்கள். இரு அறைகள் மட்டுமே கொண்ட வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டு கண்காணித்துக் கொண்டிருக்கும் காவலர்கள் அவர்களுடைய பெயர்கள், முகவரிகளை வாங்கிக் கொண்டார்கள்.

பரோல் நிபந்தனைகளின்படி பேரறிவாளன் நேர்முகங்கள் தரவோ, புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளவோ, வீட்டைவிட்டு வெளியே செல்லவோ அனுமதி கிடையாது. வருகை தருபவர்கள் அலைபேசிகளை வெளியேவே தந்துவிட்டுச் செல்லவேண்டும். "செல்ஃபியும் எடுக்கக் கூடாது" என்கிறார் அற்புதம் அம்மாள்.

arivu

பேரறிவாளனுக்கு செல்ஃபி என்கிற வார்த்தையே சிறைச்சாலையில் தான் அறிமுகமானது. 1992-ல் பதினைந்து நாள் பச்சிளம் பாலகனாகப் பார்த்த அன்புமணியின் மகன் மென்பொருள் பொறியியலாளராக ஆகிவிட்டார் என்று சிறையில் இருந்தே தெரிந்து கொண்டார். அந்த இருபத்தி ஐந்து வயது மருமகன் தன்னுடைய மாமாவை பார்ப்பதற்காக விடுப்பு எடுத்துவிட்டு வந்திருக்கிறார். "மருமகன் அவனுக்கு எடுத்துக்கிட்டு வந்திருந்த ட்ரஸ்லாம் பாத்துட்டு அழகா பேரறிவாளன் சிரிச்சான்" என்கிறார் அற்புதம் அம்மாள்.

45 வயதாகிவிட்ட பேரறிவாளனுக்கு மற்ற நண்பர்கள், உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. பள்ளிக்காலப் பயண நினைவுகள், என்சிசி கேம்ப் கதைகளைச் சொல்லி, தாங்கள் யாரென்று நினைவுபடுத்த முயன்றார்கள்.

ராஜீவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டிற்கு 8 வால்ட் பேட்டரியை கொலையாளிகளுக்கு வாங்கித்தந்த குற்றத்திற்காக மே 1999-ல் பேரறிவாளனுக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. 2014-ல் பேரறிவாளனோடு, இலங்கையைச் சேர்ந்த முருகன், சாந்தன் ஆகியோரின் மரணத் தண்டனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. அதற்கு அடுத்து, தமிழக அரசு அந்த வழக்கின் குற்றவாளிகளான ஏழு பேரையும் விடுவிக்க உத்தரவிட்டது. மத்திய அரசு உச்சநீதிமன்றத்துக்குச் சென்று தடை பெற்றது. வழக்கு நிலுவையில் இருக்கிறது.

சென்னைக்கு சிகிச்சைக்கு 2015-ல் அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன்  (கோப்பு )

ராஜீவ் காந்தியை கொலை செய்யத் தான் பேட்டரி வாங்கப்பட்டது என்று தனக்குத் தெரியாது என்று பேரறிவாளன் இன்றுவரை இறைஞ்சுகிறார். "இங்கே வர்றவங்க யாரும் அவனுக்கு அதில பங்கிருக்குனு நம்பலை. இத்தனை வருஷம் ஜெயிலில இருந்தப்புறமும் 'நான் அப்பாவிம்மா'ன்னு இன்னமும் கதறுறான். அதனால தான் நான் இன்னைக்கு வர அவனுக்காகப் போராடிக்கிட்டு இருக்கேன்." என்கிறார் அற்புதம் அம்மாள்.

முப்பது வருடகாலத்திற்குப் பிறகும் அவர்களுடைய வீடு அப்படியே இருக்கிறது. பேரறிவாளனின் குடும்பம் அவருடைய  அப்பாவின் ஓய்வூதியத்தில் காலம் தள்ளுகிறது. வெளியுலகம் வேகமெடுத்து வேறெங்கோ போய்விட்டது. கிராமங்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை. தன்னுடைய வீட்டு முற்றத்தில் இதைப்பற்றியெல்லாம் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாராம் பேரறிவாளன்.

எழில்மிகுந்த ஏலகிரி மலையடிவாரத்தில் அவர்களின் வீடிருக்கிறது. சுற்றி காலி நிலங்களாக இருந்த இடங்களில் எல்லாம் கான்க்ரீட் வீடுகளும், அடுக்குமாடி கட்டிடங்களுக்கு எழுந்துவிட்டன என்று பேரறிவாளன் பேசினார் என்கிறார் அற்புதம் அம்மாள். "அவனுக்கு ரொம்பப் பிடிச்ச பால்வாடி பள்ளிக்கூட வாத்தியார் பேபிம்மா, உயிரோட இல்லன்னு தெரிஞ்சு உடைஞ்சு போயிட்டான். தெருமுனையில எங்க அவங்க வீடிருந்ததுன்னு கூட இப்போ காட்ட தெரியலை." என்று அற்புதம் அம்மாள் சொல்கிறார்.

வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில், வீட்டிற்கு எதிரே எழுந்திருக்கும் இரண்டு செல்போன் டவர்களில் குடிகொண்டிருக்கும் குரங்குகளைக் கண்கள் விரிய பார்த்துக்கொண்டே இருக்கிறார் பேரறிவாளன். சிறையில் தொலைக்காட்சி வசதி கிடையாது. எப்போதாவது காண்பிக்கப்படும் திரைப்படங்கள் மட்டுமே ஒரே பொழுதுபோக்கு. அவ்வப்போது வரும் வருகையாளர்கள், ஆறு நாட்களுக்கு ஒருமுறை அனுமதிக்கப்படும் ஒரே ஒரு ஒன்பது நிமிட அலைபேசி அழைப்பு மட்டுமே வெளியுலகத்துடனான அவரின் தொடர்பு.

சென்னைக்கு 2015-ல் முதுகுவலி, சிறுநீர் சிக்கல்கள், ரத்த அழுத்த சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதைப் பற்றி நண்பர்களிடம் பேசியிருக்கிறார் பேரறிவாளன். எவ்வளவோ மாறிவிட்டதையும், ரிப்பன் கட்டிடம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகிய இரு கட்டிடங்களை மட்டுமே அவரால் அடையாளம் காண முடிந்திருக்கிறது. சாலைகள், ஓயாமல் அலைபேசியில் காது புதைந்திருந்த மக்கள், குறிப்பாக "பெரியவர்கள் போலப் பேசும் சிறுவர்கள்" ஆகியவற்றால் அசந்து போனார்.

இவற்றைவிட, காலப்போக்கில் அப்பா ஞானசேகரன் எப்படி மாறிவிட்டார் என்பதுதான் அவருக்குப் பேரிடியாக இறங்கியது. ஜோலார்பேட்டை அரசுப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய அவர், குயில் தாசன் என்கிற புனைபெயரில் தமிழ் கவிதைகள் எழுதினார். பயமுறுத்தும் ட்ரில் மாஸ்டராகத் திகழ்ந்த அந்த 75 வயது மனிதர் நலிவுற்று 90 வயதான  முதியவரை போல வலுவிழந்து  காட்சியளிக்கிறார். ஆஸ்துமா, கடுமையான நீரிழிவு நோய், நரம்பியல் கோளாறுகளால் அவதிப்படுகிறார் ஞானசேகரன்.

வீட்டில் இருந்த காலங்களில் தன்னை பேரறிவாளன் முற்றத்திற்குத் தூக்கிக்கொண்டு போவார் என வாஞ்சையோடு நினைவு கூர்கிறார் ஞானசேகரன். தந்தையும், மகனும் மருத்துவரின் அறிவுரைப்படி வெயிலில் மிதந்தபடி அருகருகே அன்பு வழிய படுத்துக்கொண்டிருந்த கணங்களில் ஞானசேகரனின்  உள்ளம் உருகும்.  "அறிவு தான் பள்ளியில் முதல் மாணவன். என்சிசியில் தலைசிறந்த மாணவன், இப்படிப் பல விருது வாங்கிக் குவிச்சான். இப்போ அவன் தலைவிதியை பாருங்க." என்று மருகுகிறார் அந்தத் தந்தை.

தங்களுடைய சிறிய வீட்டில் வருகிற எல்லா விருந்தினர்களையும் தங்க வைத்து விருந்தோம்ப முடியவில்லையே எனப் புலம்புகிறார் அற்புதம் அம்மாள்.

"என் பிள்ளை அறிவு வீட்டுக்கு வந்தப்ப ஒரே படபடப்பா இருந்தது. எனக்கு வயசு வேற ஆகிடுச்சு இல்ல, அதனால தடபுடலா விருந்தெல்லாம் செய்ய முடியலை. தோசை மட்டும்தான் வார்த்து கொடுத்தேன்." என்கிறார் அந்த அன்னை. பேரறிவாளனுக்குப் பிடித்த உணவுப்பண்டங்களை வருகை புரிகிறவர்கள் கொண்டு வருகிறார்கள். சில நண்பர்கள் சென்னையில் இருந்து மீன், நண்டு உணவுகள் அடங்கிய பெட்டிகளை அனுப்பி வைத்துள்ளார்கள். "அவனுக்கு மீன்கறின்னா உயிரு. தமிழ்நாட்டு ஜெயில்களில் மீன் போடறதில்லை. அதனால 1991-ல் இருந்து அவன் மீனே சாப்பிட்டதில்லை." என விருப்பு வெறுப்பற்ற ஞானி போலப் பேசுகிறார் அற்புதம் அம்மாள்.

ஜேம்ஸ் குரியன் எனும் சென்னை கிறிஸ்துவக் கல்லூரி தத்துவப் பேராசிரியான ஜேம்ஸ் குரியனிடம், மீண்டும் சிறைக்குப் போகிற போது மறந்துபோன இப்படிப்பட்ட வாசனைகளைத் தாங்கி செல்வேன் என்றிருக்கிறார். குரியன் பேரறிவாளனோடு அமர்ந்து கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டு சமையலறையின் விறகுப்புகை வாசனையைப் பேரறிவாளன் ஆசையோடு மோப்பம் பிடித்ததை நினைவுகூர்கிறார்.

“பல வருஷமா வெறும் சுவர்களையே பார்த்துக்கிட்டு இருப்பதால உணர்வெல்லாம் மங்கிப்போச்சுன்னு பேரறிவாளன் சொன்னார். சுவரில் இருக்கிற செங்கல்களை எண்ணுவது, கதவு, ஆணியை எல்லாம் அளவிடறதுன்னு பொழுது போக்கியிருக்கார். இதுக்கு முன்னாடி 11 வருஷம் இருந்த தனிமை சிறை அறை 6x9 அடின்னு துல்லியமா சொன்னார்." என்கிறார் குரியன்.

கடந்த மூன்று ஆண்டுகளே பேரறிவாளனுக்கு மோசமான ஆண்டுகளாக இருந்தன என்கிறார் குரியன். மரணத் தண்டனை ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்ட பிறகு விடுதலைக்கான நம்பிக்கைகள் கூடியது. அதனால் எப்போது விடுதலை ஆவோம் என்கிற பரபரப்புக் கூடிக்கொண்டே போனது. 'அதனால் தான் என் முடியெல்லாம் கொட்டிப்போச்சு' என்று பேரறிவாளன் சிரித்துக் கொண்டே சொல்வாராம்.

மரணத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட மற்ற இரு குற்றவாளிகளான முருகன், சாந்தன் மனச்சிதைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தன்னைக் கருணைக்கொலை செய்துவிடுமாறு சமீபத்தில் முருகன் வேண்டுகோள் வைத்தார்.

தனக்குள் ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்கள் நிலைத்து நின்றுவிடும் என்று பேரறிவாளன் அஞ்சுவதாகவும், பல வருடங்களாகத் தனியாகவே வாழ்ந்துவிட்டதால் பேரறிவாளன் கூட்டத்தைக் கண்டால் பதற்றமடைவதாகவும்  குரியன் தெரிவிக்கிறார். குழந்தைகளும், அவர்களின் வெகுளியான அன்பும் பேரறிவாளனை  இன்னமும் அலைக்கழிக்கின்றன. தன்னுடைய தங்கை அருள்செல்வியின் மகள்கள் தன்னைக் காணாமல் எப்படித் தவித்திருப்பார்கள் என்கிற நினைவே அவரை வாட்டியது என்கிறார்கள்.

அவரைக் காண வந்தவரோடு ஒன்பது வயது மகனும் வந்திருந்தான். அந்த நண்பரை யாரென்று நினைவுகூர முடியாமல்,நிலைமையை இயல்பாக்க பேரறிவாளன் 'தம்பி உன் பேரென்ன' என்று அந்தச் சிறுவனைக் கேட்டார். அந்தச் சிறுவன், 'பேரறிவாளன்' என்ற போது உறைந்து போனார்.

இப்படிப்பட்ட ஒவ்வொரு கணத்திலும் அழுது தீர்த்த அற்புதம் அம்மாள் இளையராஜாவின் இசையில் ஆறுதல் தேடினார். இளைஞராக இருந்த காலத்தில், தன்னுடைய அன்னைக்காக இளையராஜா பாடல்களைப் பாடுவது பேரறிவாளனின் வழக்கம். பேரறிவாளன் வழக்கில் அற்புதம் அம்மாளுக்கு உதவிக்கொண்டு இருக்கும் சில நண்பர்கள் குறிப்பாகத் திரைப்படக் கனவுகள் மிக்க இளைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஒரு கீபோர்டை கொண்டு வந்திருந்தார்கள். அன்னையும், அத்தனை காலம் வீடு சேராத மகனும் இணைந்து கீதம் பாடினார்கள்.

பேரறிவாளன் முதல் பாடலாக, 'பொன்னை போல ஆத்தா' என்கிற பாடலை பாடுகிறார். அப்பாடல் சொக்கத்தங்கம் போன்ற அன்னை பெற்ற பிள்ளை அவளுக்குத் துன்பங்களை மட்டுமே திருப்பித் தந்ததைப் பாடும் பாடல்.

அற்புதம் அம்மாள் புதிய நம்பிக்கையோடு வாழ்கிறார். அருள்செல்வியின் மகளின் தலையில் சூட்டி அழகுபார்க்க மல்லிப்பூக்களைப் பறிக்கிறார். "நான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை போய்ப் பார்த்தேன். வீட்டில மகன் வந்திருக்கப்ப என்னைப் பாக்க ஏன்மா ஒருநாளை வீணாக்குறீங்க என்று கடிந்து கொண்டார். 'உங்களுக்கு நன்றி சொல்லத்தான் வந்தேன். அறிவையும் வெளியே விட முயற்சி பண்ணுங்க.' அப்படினு கேட்டேன். மத்திய அரசு அனுமதித்தால் சீக்கிரமே நடக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னார்." என்கிறார் அற்புதம் அம்மாள்.

இந்த முறையாவது அரசு வாக்கை காப்பாற்ற வேண்டும் என்று குரியன் விருப்பம் தெரிவிக்கிறார்.  பேரறிவாளனின் வார்த்தைகளை அவர் உறுதியாக உச்சரிக்கிறார் "ஒட்டுமொத்த உலகத்தையே சிறைச்சாலைக்குள் அழைத்து வந்தாலும், அது சிறை தான்!"

"சத்தியமங்கலத்தில் இருந்து வந்த ஒரு தோழர் அறிவுக்கு அடிச்சு போட மூணு நாட்டுக்கோழியைக் கொடுத்தார். நாங்க ஒரு கோழியைச் சமைச்சோம். 'ஒரு கோழிக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற இரு கோழிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பிறகு விடுவிக்கப்பட்டன'ன்னு அறிவு சிரிச்சான். இப்போ அந்த ரெண்டு கோழியும் வீட்டில சுதந்திரமா உலவிக்கிட்டு இருக்கு." என்கிறார் அற்புதம் அம்மாள்.

தமிழில்: மோ.தருண் 

(இந்தியன் எக்ஸ்பிரஸில் 24.09.17 அன்று அருண் ஜனார்தனன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

A G Perarivalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment