மத்திய அரசின் கண்ணாமூச்சி ஆட்டமும்... மக்களின் பரிதவிப்பும்

ப. சிதம்பரம்

2017-18ற்கான இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதம் பற்றி மத்திய புள்ளியியல் துறை வெளியிட்ட ஆய்வறிக்கைக்கு அடுத்த நாள், ஊடகங்கள் யாவும் 7.7 என்ற வளர்ச்சி விகிதத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தன. ஆரம்பத்தில், மொத்த 2017-18ற்குமான நிதியாண்டியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகித வளர்ச்சியாக இதனை நினைத்து பெருமிதம் அடைந்தார்கள். ஆச்சரியம் நிறைந்ததும் தான், ஆனால் இது மொத்த நிதியாண்டியாற்கான வளர்ச்சியில்லை. 2017-2018 நிதியாண்டியின் கடைசி காலாண்டின் வளர்ச்சி தான் அந்த 7.7%. கடந்த நிதியாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெறும் 6.7% மட்டுமே.

ஆனாலும் ஆட்சியில் இருக்கும் நம்முடைய அரசு இந்த வளர்ச்சியினை நம்மிடம் கூறி, பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டியினால் ஏற்பட்ட குளறுபடிகள் முடிவிற்கு வந்து நாம் முன்னேற்ற பாதையில் நடந்து செல்கின்றோம் என்று கூறுகின்றது. நல்ல வேளையாக அச்சே தின் நம்மிடம் வந்துவிட்டது என்று கூறாமல் இருந்தார்களே அது வரை மகிழ்ச்சி தான்.

development

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்திருக்கும் இந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நான்காண்டு ஆட்சியில் எத்தனை போலியான வாக்குறுதிகளையும் சத்தியங்களையும் நாம் சந்தித்து வந்திருக்கின்றோம். ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம், இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகள், விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையுடன் கூடிய 50% லாபம், விவசாயக்கடன் தள்ளுபடி, அனைத்து விவசாயிகளுக்குமான காப்பீட்டுத் திட்டம், அமைதி மற்றும் பாதுகாப்பான ஜம்மு – காஷ்மீர், மிக எளிய மற்றும் நன்மை தரக்கூடிய ஜிஎஸ்டி வரி, இன்னும் எத்தனையோ. உங்களின் சொந்த அனுபவத்தில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த நான்காண்டு ஆட்சியில் மக்களால் ஒரு தீர்மானத்திற்கு எளிதில் வந்துவிட முடியாது தான். ஆனால் மேலே இருக்கும் விளக்கப்படம் அனைத்தையும் எளிதாக்குகின்றது. இந்தியாவின் பொருளாதாரம், இவர்களின் ஓராண்டு ஆட்சி நிறைவுக்கு பின்னர் எவ்வாறாக கீழ்முகமாக பயணித்திருக்கின்றது என்பதை இதில் கண்டு கொள்ளலாம்.

சில முடிவுகளை முரண்பாடு இல்லாமலே ஏற்றுக் கொள்ளலாம். 2012 – 2013 நிதியாண்டின் தொடக்கத்திலே இந்தியாவின் பொருளாதாரம் மெதுமெதுவாக வளரத்தொடங்கியிருந்தது. 2012 – 13ல் 5.5 % மாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2013-14ல் 6.4% மாகவும், 2014-15ல் 7.4% மாகவும், 2016-2017ல் 8.2% மாகவும் உயர்ந்திருக்கின்றது. ஆனால் கடந்த நிதியாண்டில் வெறும் 6.7% மாக குறைந்திருக்கின்றது. 1.5% குறைவு என்பது பணமதிப்பிழக்க நடைவடிக்கைக்கு பின்னர் நிச்சயமாக நம் நாடு சந்திக்க இருக்கும் பெரும் இழப்பு என்பதை நான் முன்கூட்டியே தீர்மானித்திருந்தேன். அப்படியாகவே நடந்துமிருக்கின்றது.

பாரிதாப நிலையில் இருக்கும் இந்திய பொருளாதாரம்

கடன் மற்றும் அது தொடர்பான வளர்ச்சி என்பது மிக மோசமான அளவிற்கு பின்னடைவினை சந்தித்தது. 13.8% மாக இருந்த அதன் மதிப்பானது 5.4% குறைந்துவிட்டது. தொழிற்சாலைகளுக்கும், தொழில் முனைவோர்களுக்குமான கடன் வளர்ச்சி மதிப்பாடனது இந்த நான்காண்டுகளில் 5.6, 2.7, -1.9, மற்றும் 0.7 சதவீதம் என்ற ரீதியில் குறைந்து போனது.

உற்பத்தி பொருட்களின் வளர்ச்சி என்பது சற்றும் வளரவே இல்லை. இந்நிலையே மேக் இன் இந்தியாவினால் ஏற்பட்டிருக்கும் அபரீதமான வளர்ச்சி என்று கூறப்படும் கட்டுக்கதைகளுக்கு முற்றுப் புள்ளியாக அமைந்துவிட்டது. ஆயுத உற்பத்தியில் அதிக அளவு முக்கியத்துவம் கொடுத்துவந்திருந்தும், மேக் இன் இந்தியாவின் மாதிரியினை கைவிட நேர்ந்திருக்கின்றது என்பது அப்பட்டமான உண்மை.

வங்கிகளில் வாராக்கடன்த் தொகை 2, 63, 015 கோடிகளில் இருந்து 10,30,000 கோடியாக வந்து நிற்கின்றது. இத்தொகை மேலும் அதிகரிக்கும். இன்றைய வங்கிகள் யாவும் திவாலாகும் நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. தைரியமாக கடன் தரும் வங்கி மேலாளரையும், பணத்தினை நம்பிக்கையுடன் திருப்பி செலுத்தும் முனைப்பில் இருக்கும் முதலீட்டாளர்களையும் இந்த நான்காண்டுகளில் என்னால் காணவே இயலவில்லை. இந்தியாவின் மொத்த பொருளாதாரமும் அரசின் செலவில் தான் ஓடிக்கொண்டிருக்கின்றது.

growth-rate

நிலையான மூலதன மதிப்பீடானது 2013-14ல் 31.3 சதவீதமாக இருந்து 2015-16ல் 28.5 சதவீதமாக குறைந்தது. கடந்த மூன்று வருடங்களாக இதே நிலையில் தான் இருக்கின்றதே தவிர எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை.

வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களினால் கிடைத்த வருமானம் 2013-2014 நிதியாண்டில் 315 பில்லியனாக இருந்தது. ஆனால் இந்த ஆட்சியில் 300 பில்லியனை தாண்டுதல் என்பதே பெரிய கனவாக இருக்கின்றது.

இந்த ஆட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையின்மை

இன்னும் ஏராளமான துறைகளை கையில் எடுத்துக் கொண்டு அதன் வளர்ச்சி விகிதத்தினை வரைபடமாக கொண்டு வந்து சேர்த்தோமானால், பணமதிப்பு நீக்கம், குழப்பகரமான ஜிஎஸ்டி, விவசாயிகளுக்கான திட்டங்கள், எரிபொருட்களின் விலைவாசி உயர்வு என பல மோசமான திட்டங்களால் உருவான வீழ்ச்சியினை தான் நம்மால் காண இயலும்.

நாட்டு மக்கள் இந்த ஆட்சியின் மீது அதிருப்தியுடன் இருக்கின்றார்கள். 2018ல் இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்ட கணக்கெடுப்பு ஒன்றில் பங்கெடுத்த சுமார் 48% மக்கள், இந்திய பொருளாதாரம் கடந்த ஒரு வருடத்தில் மிகவும் மோசமான நிலையை சந்திருக்கின்றது என்று கூறியிருக்கின்றார்கள். விவசாயம் போன்ற துறைகளில் இந்த அரசின் மீதான அதிருப்தி கோபமாக மாறியிருக்கின்றது. தலித் மற்றும் வேலையில்லா இளைஞர்களின் மத்தியில் இந்த அதிருப்தி, நம்பிக்கையின்மையாக உருமாறிக்கொண்டிருக்கின்றது.

இந்த பொருளாதார சீர்குலைவிற்கு யார் பொறுப்பேற்பார்கள் அல்லது அதில் இருந்து வெளிவர என்னென்ன மாற்றங்கள் யாரால் கொண்டுவரப்படும் என்பதெல்லாம் தெளிவற்றதாக இருக்கின்றது. அமைச்சகம் இதைப்பற்றியெல்லாம் பெரிதாக பேசிக் கொள்வதில்லை. பிரதம அமைச்சரின் நிதி ஆலோசனைக் குழு என்ற ஒன்று இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது. எத்தனை நாட்களுக்குத் தான் இந்த அரசு வெறும் வாக்குறுதிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் என்பது தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.

தமிழில் நித்யா பாண்டியன்

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 10.6.18 அன்று, முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close