Advertisment

ப.சிதம்பரம் பார்வை : நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மேலும் குரல்கள்

இந்தியா ஒரு ஏழை நாடு என்பதையும், ஏழைகளால் நிறைந்துள்ளது என்பது பற்றியும் யாரும் கவலைப்படவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
budget1

ப.சிதம்பரம்

Advertisment

பிப்ரவரி 2018, எனக்கும் என்னைப் போலவே சிலருக்கும் அரசியலில் சில பாடங்களை கற்றுத் தந்துள்ளது. 25 வருடங்கள் என்ற காலமானது, கடந்த காலத்தை, குறிப்பாக பொருளாதார வரலாற்றை மறக்க வைக்க போதுமானது என்பதே அது. 27 ஆண்டுகளுக்கு முன்னால், பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது.

இறக்குமதிகள் மோசமான நிலையில் இருந்தது. மாற்று ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன.

வரி விதிப்புகள் அதிகமாக இருந்தது. அதிக வரி விதிப்புகள் என்றால் பாதுகாப்பான பொருளாதாரம் என்று பொருள்.

அந்நியச் செலாவணி தங்கம் போல பாதுகாக்கப்பட்டது. அதனால் அதை தங்கத்தைப் போலவே பதுக்கி வைத்திருந்தோம்.

வரிகள் அவசியமானதாக இருந்தன. அதிகமான வரி விதிப்பு நமது தேவைகளை சுட்டிக்காட்டியது.

அதிகமான வரி விகிதம் வங்கிகளில் வைப்புத் தொகை வைத்திருப்பவர்களையும், வங்கி அதிகாரிகளையும் மகிழ்ச்சியாக வைத்திருந்தது. ஆனால், கடன் வாங்கியவர்களும், முதலீட்டாளர்களும், உதாசீனப்படுத்தப்பட்டனர்.

இந்தியா ஒரு ஏழை நாடு என்பதையும், ஏழைகளால் நிறைந்துள்ளது என்பது பற்றியும் யாரும் கவலைப்படவில்லை. அவர்கள் பாதுகாப்பாக இருந்தனர் என்று கூறி நாம் திருப்திப்பட்டுக் கொண்டோம். யாரும் எதிர்ப்பார்க்காத இரு சம்பவங்கள் நடந்தன. வரலாற்றில் நேர்ந்த யாரும் எதிர்பாராத விபத்து, பி.வி.நரசிம்மராவை இந்தியாவின் பிரதமராக்கியது. உலகெங்கும் அறியப்பட்ட பொருளாதார வல்லுனரான டாக்டர் மன்மோகன் சிங்கை அவர் நிதியமைச்சராக நியமித்தார். மிக மிக நீண்ட காலமாக நிர்வாகத்தில் பணியாற்றிய அனுபவம் இருவருக்குமே உண்டு. ஆகையால் அவர்கள் நிர்வாகத்தை திறம்பட நடத்துவார்கள் என்பதில் அனைவருக்கும் நம்பிக்கை இருந்தது.

கடின உழைப்பு

3 ஜுலை 1991 அன்று இந்தியா கண் விழித்தபோது புது தில்லியில் புல்டோசர் இயந்திரத்தோடு ஒரு இடிமானக் குழு ஆட்சிக்கு வந்துவிட்டதோ என்று சந்தேகம் எழுந்திருக்கும். பழைய கட்டுமானம் ஒவ்வொரு செங்கலாக அகற்றப்பட்டது. மொத்த கட்டுமானமும் தரை மட்டமாக்கப்பட்டது. புதிய கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. 27 வருடங்கள் கழித்து, இந்த கட்டுமானப் பணி இன்னமும் தொடர்கிறது.

ஆனால், மீண்டும் புல்டோசர்களோடு, 27 ஆண்டுகளாக நடந்து வரும் கட்டுமானப் பணிகளை இடித்து தரைமட்டமாக்கும் நோக்கோடு, மற்றொரு குழு டெல்லியில் இறங்கியுள்ளதோ என்று தோன்றுகிறது. இந்தியாவின் மந்தமான வளர்ச்சி விகிதத்துக்கு காரணமாக இருந்த பழைய பொருளாதார நிலையை அகற்றி, உருவாக்கப்பட்ட புதிய கட்டமைப்பை இந்த புதிய இடிமானக் குழு இடித்துத் தள்ள முயற்சிக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சமீபத்தில் அரசு எடுத்துள்ள சில முயற்சிகளையும், நிதிநிலை அறிக்கையின் சில அம்சங்களையும் வேறு எப்படி புரிந்து கொள்வது?

1991 முதல் இந்தியாவின் உற்பத்தித் துறை ஒட்டுமொத்த ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை ஒட்டியே வளர்ந்துள்ளது. அதே நேரத்தில் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. 1990-91ல், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி, ஜிடிபி விகிதத்தில் 6.93 சதவிகிதமாக இருந்தது. 2016-17ம் ஆண்டில், இந்த வளர்ச்சி விகிதம் 19.31 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பான, மூடப்பட்ட பொருளாதாரத்தில்தான் உற்பத்தித் துறை வளரும் என்பதும், ஏற்றுமதி அதிகரிக்கும் என்பதும் பிழையான நம்பிக்கை. மாறாக, மூடப்பட்ட பொருளாதாரம் இந்தியாவின் முதலீடுகளை குறைத்து, தொழில்நுட்பம் கிடைக்காமல், உற்பத்தித் துறையின் ஏற்றுமதியை போட்டியில்லாததாக செய்யும். நேர்மையற்ற தொழில் நடத்துபவர்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள சட்டபூர்வமான வழிமுறைகள் உள்ளன. உலக பொருளாதார நிறுவனம், ஒரு சில பொருட்களின் மீது வரிகளை விதித்துக் கொள்ள அனுமதி வழங்குகிறது. இறக்குமதியில் திடீர் அதிகரிப்பை தற்காலிகமாக ஒரு சில பொருட்களின் மீது தற்காலிகமாக, குறுகிய காலத்துக்கு இறக்குமதி வரி விதித்து சரி செய்து கொள்ள முடியும். தேவையற்ற பொருட்கள் இந்தியாவில் குவிக்கப்படுவதை தடுக்க தேவையான வரி விதிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இந்தியாவுக்குள் தரமற்ற, மலிவான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதை தடுக்க, வரி விதிப்பு அல்லாமல் வேறு சில நடவடிக்கைகளையும் எடுத்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். உற்பத்தியில் முன்னேறிய நாடுகள் மற்றும் அதிக வர்த்தகம் செய்யும் நாடுகள், வெளிப்படையான, திறந்த பொருளாதார முறையின் கீழ் ஏராளமான பயனடைந்துள்ளன. இந்தியாவும் பலனடைந்துள்ளது.

திசை மாற்றும் நடவடிக்கை

சுதேசி பொருளாதாரத்துக்கு ஆதரவாக மீண்டும் குரல்கள் எழுந்து, அதன் காரணமாக, அரசின் சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? நிதிநிலை அறிக்கைக்கு சற்று முன்பாகவும், நிதி நிலை அறிக்கையிலும் அரசு அறிவித்துள்ள பல நடவடிக்கைகள், பழமைவாத மற்றும் வரிவிதிப்பை ஆதரிக்கும் சக்திகளின் கை ஓங்கியுள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

1) டிசம்பர் 2017ல், செல்போன்கள், மைக்ரோவேவ் அடுப்புகள், கேமராக்கள், மானிட்டர்கள் போன்றவற்றின் மீது, பூஜ்யத்தில் இருந்து 15 சதவிகிதம் வரை சுங்க வரி உயர்த்தப்பட்டது. இது தற்காலிக நடவடிக்கை அல்ல.

2) பழச்சாறுகள், நறுமண சாதனங்கள், டாய்லெட் பொருட்கள், மோட்டார் உதிரி பாகங்கள், காலணிகள், கவரிங் நகைகள், மொபைல் போன்கள், நவீன கைக்கடிகாரங்கள், விளையாட்டு பொம்மைகள், பட்டு ஆடைகள், காய்கறி எண்ணைகள், பட்டங்கள், மெழுகுவர்த்திகள், குளிர் கண்ணாடிகள் போன்றவற்றின் மீது பூஸ்யத்தில் இருந்து 20 சதவிகிதம் வரை வரி விதிக்கப்பட்டது.

3) முதலீடு பல முனைகளில் இருந்தும் வரி விதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கி, நீண்ட கால முதலீட்டு லாப வரியை குறிப்பிட்டு, முதலீட்டை குறைக்கும் ஐந்து வரிகளில் இது ஒன்று என்று கூறுகிறது.

4) சிங்கப்பூர் பங்குச் சந்தையுடனான தனது பல ஆண்டு ஒப்பந்தத்தை, தேசிய பங்குச் சந்தையும், மும்பை பங்குச் சந்தையும் ரத்து செய்தது. குறைந்த வரி விதிப்பு, குறைந்த கட்டுப்பாடுகள் ஆகியவற்றால், முதலீட்டாளர்கள் சிங்கப்பூருக்கு இடம் பெயர்வதை தடுக்க, சிங்கப்பூர் பங்குச் சந்தையோடு தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு ஒத்துழைப்புகளுக்காக இந்த ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

5) நிதிப் பற்றாக்குறை இந்த ஆண்டு ஏற்கனவே எதிர்ப்பார்த்ததை விட அதிகரிக்க உள்ளது. இது எத்தகைய பணவீக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணராமல் அரசு இதை அனுமதிக்கப் போகிறது. மத்திய ரிசர்வ் வங்கி, ஏப்ரல் – செப்டம்பர் 2018 வரையிலான காலத்தில் பண வீக்கம் 5.6 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று மதிப்பிட்டுள்ளது.

6) சர்வதேச கச்சா எண்ணை விலையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. கலால் வரியை குறைப்பது அல்லது, பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டியின் வரம்புக்குள் கொண்டு வருவது போன்ற மாற்று யோசனைகளை அரசு சிந்திப்பதாகவே தெரியவில்லை.

தோல்வியின் ஒப்புதல்

தற்போது அரசு எடுத்து வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஒரு வெளிப்படையான ஒப்புதல். மேக் இன் இந்தியா திட்டம் ஒரு தோல்வி. எளிதாக தொழில் நடத்தும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏறுமுகம் கண்டது என்பது ஒரு மாயை. உட்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது என்பது ஒரு வெற்று முழக்கம். சமீப காலமாக, அரசு நிர்வாகத்தில் இருந்தே எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.

நிதி ஆயோக் அமைப்பின் முன்னாள் துணைத் தலைவர், டாக்டர் அரவந்த் பனாகரியா கலால் வரிகளை உயர்த்தியது குறித்து கடுமையாக விமர்ச்சித்துள்ளார். பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் டாக்டர் ரத்தின் ராய், நிதிப் பற்றாக்குறை இலக்குகளை மீறுவது குறித்து விமர்சித்துள்ளார். இக்குழுவின் மற்றொரு உறுப்பினரான டாக்டர் சுர்ஜித் பல்லா, நீண்ட கால முதலீட்டு லாப வரி குறித்து கடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார். நித்தி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக உள்ள டாக்டர் ராஜீவ் குமார், தற்போது உயர்த்தப்பட்டுள்ள இந்த வரிகள், தற்காலிக நடவடிக்கைகள் என்று நம்புவதாக சன்னமாக குரல் கொடுத்துள்ளார்.

மத்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு, ஆறு முக்கிய கூறுகள், பண வீக்கத்துக்கு காரணமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. இவற்றில் மூன்று, சமீபத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டவை. மூதறிஞர் ஜார்ஜ் சாந்தாயனா கூறியதை இந்த இடத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன். “கடந்த கால வரலாறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவர்கள், அந்தத் தவறுகளை மீண்டும் செய்யுமாறு சபிக்கப்பட்டவர்கள்”

(இந்தியன் எக்ஸ்பிரஸ் 18.01.18 இதழில் இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் : ஆ.சங்கர்

A Sankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment