Advertisment

ப.சிதம்பரம் பார்வை : ஏழைகளுக்கு வாழ்வளித்த இந்திரா

ஏழ்மை மீது இந்திரா தொடுத்த பலமான தாக்குதல் நல்ல பலன்களை தரத் தொடங்கியது. 1984ம் ஆண்டு, வறுமை விகிதம் 10 சதவிகிதம் குறைந்து 44 சதவிகிதமாக இருந்தது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
indiragandhi

ப.சிதம்பரம்

Advertisment

19, நவம்பர் 2017 எந்த விதமான, நினைவு நிகழ்ச்சியும் இல்லாமல் கடந்தது. வரலாறு குறித்த நமது பொறுப்பில்லாத அக்கறையையே இது வெளிப்படுத்துகிறது. அரசு பாரபட்சமில்லாமல் இருக்க வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டையே இது கேள்விக்குள்ளாக்குகிறது. மிகவும் அவமானகரமான நடத்தை இது.

நவம்பர் 19, 2017, இந்திரா காந்தியின் 100வது பிறந்த தினம். இந்தியாவின் மூன்றாவது மற்றும் ஆறாவது பிரதமர் அவர். அவர் பலரால் நேசிக்கப்பட்டார். கணிசமானோரால் வெறுக்கப்பட்டார். ஆனால் அவர் உயிரோடு இருக்கும் வரை, அவரை யாரும் கவனத்தில் கொள்ளாமல் இருக்க முடிந்ததில்லை.

ஒவ்வொரு பிரதமருக்கும் வெற்றியும் உண்டு, தோல்விகளும் உண்டு. வெற்றிகளும், தோல்விகளும் அந்தந்த காலகட்டத்தின் பின்னணியில், அவர்கள் முன்னால் அப்போது இருந்த சவால்களின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும். இந்திரா பிரதமரான 1966ம் ஆண்டில் இரண்டு போர்கள் நடந்தன. (1962 மற்றும் 1965) இந்த போர்கள், நாட்டின் வளங்களை வெகுவாக குறைத்தன. நாட்டின் உணவு தானியத்துக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டு, இந்தியா உணவு திட்டத்தை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு வெகுவாக பாதிப்படைந்து, வெகுவாக பலவீனமடைந்து இருந்தது. (அடுத்த 24 மாதங்களில் காங்கிரஸ் கட்சி எட்டு மாநில தேர்தல்களில் தோல்வியை தழுவியது).

ஏழைகளை வென்றெடுத்தார்.

1967ல் கிடைத்த தேர்தல் தோல்விக்கு பிறகு, காங்கிரஸில் இருந்து அனைத்துத் தலைவர்களில், இந்திரா காந்திதான் ஏழைகள் காங்கிரஸை கைவிட்டு விட்டார்கள் என்பதை கண்டறிந்தார். ஏழைகளை மீண்டும் காங்கிரஸ் பக்கம் திருப்ப வேண்டும். அதற்காக வலுவான ஒரு திட்டத்தை முன்னெடுத்து, அப்போது நாடெங்கும் பரவலாக ஆதரவுபெற்றிருந்த, சோசலிசக் கொள்கையை முன்னெடுத்தார்.

காங்கிரஸ் காரிய கமிட்டிக்கு ஒரு பத்து அம்ச திட்டத்தை தயாரித்து அனுப்பினார் இந்திரா. தற்போது உள்ள தாராளமய பொருளாதார சூழலுக்கு அந்தக் கொள்கைகள் முரணாக இருக்கும். ஆனால் அந்த காலகட்டத்தில் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அது சரியான ஒரு திட்டமாக இருந்தது. அவற்றில் சில அம்சங்கள் இன்றும் பொருத்தமானவையே. உதாரணத்துக்கு, ஊரக வேலை வாய்ப்பு் திட்டம், நிலச் சீர்திருத்தம், குறைந்தபட்ச அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தல் போன்றவை. அரசியல் கட்சிகளின் கடைசி கவலையாக இருந்த ஏழைகள், கட்சிகளின் வகுக்கும் திட்டங்களின் மையக் கருவாக மாற்றப்பட்டார்கள்.

பின்னர் இந்திரா காந்தி கொண்டு வந்த 20 அம்ச திட்டத்தில், சுத்தமான குடிநீர், சுகாதாரம், கல்வி, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கான சமூக நீதி, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்று ஏழைகளுக்கான பல்வேறு அம்சங்களை அறிமுகப்படுத்தினார். அதற்கு பின் இது போல பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டாலும், இந்திரா அறிமுகப்படுத்திய 20 அம்ச திட்டம் பிற திட்டங்களுக்கான அடிப்படையாக அமைந்தது.

விளிம்புக்கு தள்ளப்பட்ட ஏழைகள்.

ஏழ்மை மீது இந்திரா தொடுத்த பலமான தாக்குதல் நல்ல பலன்களை தரத் தொடங்கியது. 1984ம் ஆண்டு, வறுமை விகிதம் 10 சதவிகிதம் குறைந்து 44 சதவிகிதமாக இருந்தது. ஏழைகள், இந்திராவை தங்கள் பாதுகாவலனாக உணரத் தொடங்கினார்கள். இப்போதும் உணர்கிறார்கள். அதற்குப் பின் வந்த, காங்கிரஸ் அரசுகள், ஏன், வாஜ்பாய் அவர்கள் தலைமையில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கூட, ஏழைகளை தங்கள் திட்டங்களின் மையக்கருவாக வைத்திருந்தன.

ஆனால் இப்போது? மத்திய அரசும், பல மாநில அரசுகளும், ஏழைகளை மீண்டும் விளிம்புக்கு தள்ளி விட்டன. கல்வி மற்றும் சுகாதாரத்துக்கு ஒதுக்கப்படும் நிதி கணிசமாக குறைக்கப்பட்டுவிட்டது. மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் மாபெரும் பிழையாக சித்தரிக்கப்பட்டது. 2014-15 மற்றும் 2015-16 நிதியாண்டுகளில், விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச விலை, மிகக் குறைவான அளவே உயர்த்தப்பட்டது. இது ஏற்கனவே துயரத்தில் இருந்த விவசாயிகளின் துயரங்களை அதிகரித்தது. சிறு குறு நிறுவனங்களுக்க வங்கிக் கடன்கள் மறக்கப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து வேலை தேடத் தொடங்கும் 1.2 கோடி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கு எந்த நடவடிக்கையையும் அரசு எடுக்கவில்லை.

ஏழைகள் எவ்வாறு ஏமாற்றப்பட்டார்கள்.

ஏழை நலனுக்கான திட்டங்களுக்கு பதிலாக, அவர்களை தந்திரமாக ஏமாற்றும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. நமது நகரங்களில் பல வாழத் தகுதியானவையாக இல்லை. ஆனால், நவீன நகரங்கள் என்ற பெயரில், அந்த நகரில் ஒரு சிறு பகுதியை மற்றும் முன்னேற்றுவதற்காக, பல கோடிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. 100,000 கோடி பணத்தை கடன் வாங்கி புல்லட் ரயில் விடத் திட்டமிடும் நமக்கு, நாட்டின் பல பகுதிகளில் உளுத்துப் போய் வரும் ரயில்வே உட்கட்டமைப்பையும், சிறு பாலங்களையும், புறநகர் ரயில்களையும் சீரமைக்கத் தெரியவில்லை.

பணமில்லா டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி என்று அறிவித்து 86 சதவிகித ரூபாய் தாள்களை மதிப்பிழக்கச் செய்து விட்டு, கோடிக்கணக்கான மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை புறந்தள்ளுகிறோம். ஸ்டார்ட் அப் இந்தியா மற்றும் ஸ்டான்ட் அப் இந்தியா என்ற படோடாபமான திட்டங்களுக்கு கோடிக்கணக்கில் நிதியை ஒதுக்கீடு செய்யும் நாம், பல சிறு தொழில்கள் நசிவடைவதையும், அவற்றோடு சேர்ந்து லட்சக்கணக்கில் வேலையிழப்பு ஏற்பட்டதையும் வசதியாக மறந்து விடுகிறோம்.

பெரும் நிறுவனங்களுக்கான திவாலாகும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தத் தெரிந்த அரசு தேசிய உணவு உத்தரவாதத் திட்டத்தை குப்பைத் தொட்டியில் போட்டது. ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் யோகாசனம் என்ற முழக்கத்தோடு கோடிக்கணக்கில் அதற்காக செலவு செய்யத் தெரிந்த அரசுக்கு, முதியோருக்கும் நிராதரவானவர்களுக்கும் மாதம் 1000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க மறுத்து அவர்களை மரணத்தை நோக்கித் தள்ளுகிறது. (தமிழகத்தில் மட்டும் முதியோர் ஓய்வூதியம் கேட்டு 27,06,758 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. ஆனால் மாநில அரசு நிதியில்லை என்று கையை விரிக்கிறது)

சர்வதேச மூடி நிறுவனம் மற்றும் பிஇடபிள்யு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் உலக வங்கியின் அங்கீகாரத்தை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் அரசின் முயற்சிகளில் ஏழைகளுக்கு எங்கே இடமிருக்கிறது? தொழில் செய்ய ஏதுவான நாடுகளின் பட்டியலில் 100வது இடத்தை பிடிப்பது திருப்தியளிக்கும் விஷயமே. ஆனால், வறுமை பட்டியலில் 100வது இடத்தை பிடிப்பது அவமானம் தரும் விஷயம்.

இந்தியாவில் இன்னும் 22 சதவிகித மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள் என்பதையும், அவர்களுக்கும் வாழும் உரிமை உண்டு என்பதையும் நாம் ஒரு போதும் மறந்து விடக்கூடாது. இந்த உண்மையை புரிந்து கொண்ட இந்திரா காந்தி, அவர் வாழ்நாள் முழுவதும் இதற்காக பாடுபட்டார்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் 26.11.17 தேதியிட்ட நாளிதழில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் ஆ.சங்கர்

Indira Gandhi P Chidambaram A Sankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment