Advertisment

ப.சிதம்பரம் பார்வை : பொய்களின் குடியரசு

தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி, ஒரு ஆணோடு போராடும் ஒரு பெண்ணிடம், அந்த ஆண் செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம், என்ன இன்பத்தை அடைய முடியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gang rape, திருச்சி கூட்டு பலாத்காரம்

ப.சிதம்பரம்

Advertisment

நிர்பயாவின் பாலியல் வன்முறை மற்றும் கொலை, நாட்டின் மனசாட்சியையே உலுக்கியது. ஏனெனில் அதற்கு முன்பாக அப்படியொரு கொடூரமான சம்பவம் நடந்தது இல்லை. அடிக்கடி பயன்படுத்தப்படாத ஒரு பதம் இந்த சம்பவம் குறித்து விவரிக்க பயன்படுத்தப்பட்டது. விலங்குகளின் உடலுறவு. அந்தப் பெண் பலரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். கடுமையான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். ஆடைகளின்றி ஓடும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். இறந்து விடுவார் என்ற எண்ணத்தில் பேருந்திலிருந்து வீசப்பட்டார். வியக்கத்தக்க வகையில், அவருக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்க அவர் சில நாட்கள் உயிரோடு இருந்து பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

பாலியல் வல்லுறவு என்பது, செக்ஸ் சம்பந்தப்பட்டதல்ல. தன் பலத்தையெல்லாம் பயன்படுத்தி, ஒரு ஆணோடு போராடும் ஒரு பெண்ணிடம், அந்த ஆண் செக்ஸ் வைத்துக் கொள்வதன் மூலம், என்ன இன்பத்தை அடைய முடியும் என்பதை கற்பனை கூட செய்ய முடியவில்லை. பாலியல் வல்லுறவு அல்லது வன்முறை என்பது, ஒரு ஆண் பெண்ணின் உடல் மீது செலுத்தும் அதிகாரம். குழந்தைகள் பாலியல் வன்முறையைப் பொறுத்தவரை, தன்னை தற்காத்துக் கொள்ளக் கூட சக்தியில்லாத குழந்தை, சில நேர்வுகளில், சில மாதங்களே ஆன குழந்தையை இப்படி வன்முறைக்கு உள்ளாக்கும் நபரை நாம் புரிந்து கொள்ள வேண்டும். செக்ஸ் என்ற உணர்வைத் தாண்டி, தன் அதிகாரத்தை குழந்தையின் மீது செலுத்த வேண்டும் என்ற நிலையில், எல்லாவித தயக்கத்தையும் துடைத்தெரியும் ஒரு குற்றவாளியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இது போன்ற நேர்வுகளில் குற்றமிழைப்பவனுக்கு தான் குற்றமிழைக்கிறோம் என்பது தெரியும். ஆனால், தன்னுடைய பலத்தால், பாதிக்கப்பட்ட பெண்ணை வல்லுறவுக்கு உள்ளாக்க முடியும். அதன் மூலம் தன் பலத்தை பிரயோகித்து நிரூபிக்க முடியும். சட்டம் தன்னை தண்டிக்காது. அப்படியே காவல்துறை தன்னை தண்டிக்க முயற்சி செய்தால் தன்னுடைய சாதிக் கூட்டத்தையோ, உறவினர்களையோ, அல்லது காவல்துறையையோ, தன் கட்சியையோ, அல்லது தனது அரசையோ கூட துணைக்கு அழைக்கலாம் என்றே அவன் நம்புகிறான். அவனது இறுதி நம்பிக்கை நாம் என்றுமே தண்டிக்கப்பட மாட்டோம் என்பதே. கூட்டு வல்லுறவு என்பது தண்டிக்கப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே.

உன்னாவ் மற்றும் கத்துவா பாலியல் குற்றங்கள்

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில், 17 வயது பெண், ஒரு பிஜேபி எம்எல்ஏ மற்றும் அவனது கூட்டாளிகளால் ஜுன் 2017ல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகிறாள். இரண்டு மாதம் கழித்து, அந்தப் பெண், உத்தரப் பிரதேச முதல்வருக்கு, அந்த எம்எல்ஏ மற்றும் அவர் சகோதரர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிடுமாறு கோரிக்கை வைக்கிறாள். ஏப்ரல் 2018ல், அந்தப் பெண்ணின் தந்தை எம்எல்ஏவால், வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டப்படுகிறார். எம்எல்ஏவின் சகோதரர், காவல்துறை முன்னிலையிலேயே அந்தப் பெண்ணின் தந்தையை தாக்குகிறார். காவல்துறையினர் அந்தப் பெண்ணின் தந்தையை பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். ஏப்ரல் 8 அன்று, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவள் உறவினர்கள் முதல்வரின் வீட்டு முன் தற்கொலைக்கு முயல்கிறார்கள். அடுத்த நாள் அந்தப் பெண்ணின் தந்தை மருத்துவமனையில் இறந்து போகிறார். 10 ஏப்ரல் 2018 அன்று எம்எல்ஏவின் சகோதரர் கைது செய்யப்படுகிறார். வழக்கு 12 ஏப்ரல் அன்று சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்படுகிறது. 13 ஏப்ரல் 2018 அன்று சிபிஐ எம்எல்ஏவை கைது செய்கிறது.

ஜம்மு காஷ்மீர் கத்துவாவில், பாதிக்கப்பட்ட பெண், 8 வயதுப் பெண். பாக்கேர்வால் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் அவள். ஜனவரி 2018ல் அவள், ஒரு கோவலில் வைத்து, பலரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, ஒரு வாரம் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்படுகிறாள். அந்த பழங்குடியினத்தையே அந்த இடத்தை விட்டு விரட்டுகிறார்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி, அந்த கோவிலின் பொறுப்பாளர். நான்கு லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, தடயங்களை அழித்த காவல்துறையினர் இருவரும் இதில் அடக்கம். மாநில காவல்துறை நியாயமாக செயல்பட்டு, குற்வாளிகளை பிடித்தது. அவர்கள் மார்ச் மாதம், காவல் நிலையத்தில் சரண்டர் ஆனார்கள். பிஜேபி தலைவர் ஒருவரால், ஏக்தா மார்ச் என்ற ஊர்வலம் நடத்தப்பட்டு, வழக்கின் புலனாய்வை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்படுகிறது. மாநில பாஜக அரசின் இரண்டு அமைச்சர்கள் அந்த பேரணியில் கலந்து கொள்கிறார்கள். பின்னர் எழுந்த நெருக்கடியால் அவர்கள் ராஜினாமா செய்கிறார்கள்.

சிதிலமடைந்துள்ள நீதி பரிபாலண முறை

உன்னாவ் மற்றும் கத்துவா குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு, நாட்டின் குற்றவியல் நீதி பரிபாலண முறை சிதிலமடைந்துள்ளது என்பது நன்றாகத் தெரியும். இதை தெரிந்தே அவர்கள் ஆணவத்தோடு இந்த குற்றங்களில் ஈடுபட்டள்ளனர்.

இந்த போக்கை, பல்வேறு அறிக்கைகள் உறுதி செய்தன. காஷ்மீர் எம்எல்ஏ ஒருவர், “அந்தப் பெண்ணின் தந்தை சிலரால் தாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த பெண்ணை பாலியல் வல்லுறவு செய்தார்கள் என்பதை நம்ப முடியவில்லை”. பிஜேபி செய்தித் தொடர்பாளர் மீனாட்சி லேக்கி “காங்கிரஸ் முதலில் சிறுபான்மை சிறுபான்மை என்று கத்தும். பின்னர் தலித் தலித் என்று கத்தும். தற்போது பெண் பாதுகாப்பு, பெண் பாதுகாப்பு என்று கத்துகிறது. எப்படியாவது பழியை மத்திய அரசு மீது சுமத்த வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம்“ என்றார்.

கடுமையான அமைதி. நாம் தண்டிக்கப்பட மாட்டோம் என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறது. கத்துவா மற்றும் உன்னாவ் சம்பவங்கள் குறித்து நாடே கொந்தளித்துக் கொண்டிருந்தபோது அமைதியாக இருந்த பிரதமர், 13 ஏப்ரலில்தான் இது பற்றி வாய் திறந்தார். சம்பிரதாயமான அறிக்கைகள் பிஜேபி தலைவர்களிடமிருந்து வந்தன. ஆனால், அந்த அறிக்கைகளில் உண்மையான வருத்தம் இல்லை. இந்த விவகாரங்களை அரசியல் ரீதியாக திசைத் திருப்ப பிஜேபி பல வகைகளிலும் முயன்றது. ஆனால், இதை அரசியலாக்காதீர்கள் என்று பலருக்கு உபதேசம் செய்தது.

ஆணவம் தலைவிரித்தாடுகிறது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கெதிராக பெருகி வரும் வன்முறைகள் அபாயகரமாக உள்ளன. ஆனால், இதிலிருந்து தப்பித்து விடலாம் என்ற ஆணவ எண்ணம், ஒவ்வொரு முக்கிய பொது ஊழியரிடமும் வளர்ந்து வருகிறது.

வஞ்சமான வழிகளில், சட்ட விதிமுறைகளை மீறி, கைப்பற்றப்படும் பல்வேறு அரசுத் துறைகள் இதற்கு வழிவகை செய்கின்றன.

பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என்ற எண்ணம் இதை வலுப்படுத்துகிறது.

ஒரு கற்றுத் தேர்ந்த அறிஞராக நினைத்துக் கொண்டு உதிர்க்கும் அபத்தமான கருத்துகள் இதை உறுதிப்படுத்துகின்றது.

நாட்டின் சொத்தை கொள்ளைடித்து விட்டு, துணிச்சலாக வெளிநாட்டுக்கு தப்பித்து செல்ல முடியும் என்ற குற்றவாளிகளின் துணிச்சல் இதை ஊக்குவிக்கிறது.

எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களை விலை கொடுத்து வாங்குவது அல்லது மிரட்டுவது என்ற போக்கு இதை வளர்க்கிறது.

சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கும் ஒவ்வொரு வழக்கும் சாட்சிகள் பிறழ்வதால் தடம் புரள்வது இதற்கு வலு சேர்க்கிறது.

தனி நபர் சுதந்திரத்தை பறிக்க மெனக்கிடும் அரசுத் துறைகள் இதற்கு ஒத்துழைக்கின்றன.

ஒவ்வொரு போலி என்கவுன்ட்டரும் இதை உறுதிப்படுத்துகிறது.

அரசுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகங்களின் மீது தொடரப்படும் பல கோடி ரூபாய் அவதூறு வழக்குகள் மற்றும் ஊடகங்களுக்கு எதிரான தடை உத்தரவுகள் எதிர்குரலை நெறிக்கின்றன.

இதுதான் இத்தகைய குற்றங்கள் தொடர்வதற்கான பின்புலம். இது சட்டத்தின் ஆட்சிக்கு பதிலாக

இதைத் தடுக்கவே முடியாது என்று தோன்றும். ஆனால் இந்தத் தலைமுறையின் கடமை, இந்த மோசடியை தடுத்து நிறுத்துவதே. இந்தக் குடியரசு பொய்களின் குடியரசாக மாறாமல் தடுக்க வேண்டிய கடமை இந்தத் தலைமுறைக்கு உள்ளது.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் 22.04.18 அன்று, இந்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் ஆ.சங்கர்

A Sankar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment