தலித் விடுதலை யுகத்தில் ஊழல்தான் முக்கிய பிரச்னையா விஜய்?

‘கருப்பிக்கள்’ கொல்லப்படும் காலத்தில் ஊழலும், லஞ்சமும் மட்டுமே சமூகத்தின் சிக்கல்கள் அல்ல.

விவேக் கணநாதன்

அறிவித்துவிட்டார் விஜய், இன்னும் வருகை மட்டும் தான் பாக்கி. ரஜினியும் கமலும் கையிலெடுத்த அரசியலே பல விமர்சனங்களைச் சந்தித்து வரும் நிலையில், விஜய்யும் அரசியல் களத்துக்கு தயாராகிவிட்டார். விஜய் இதுவரை செய்திருக்கும் அரசியல், இனி செய்ய வேண்டிய அரசியல் இரண்டும் எப்படியானதாக இருக்க வேண்டும்?

தமிழகத்தில், அரசியல் வருகைக்கான முக்கிய உற்பத்திக்கூடம் ‘கோடம்பாக்கம்’..! தமிழ்நாட்டில் சினிமா அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே சினிமாவுக்கு அரசியலும், அரசியலுக்கு சினிமாவும் தொடர்ந்து பயன்பட்டு வருகின்றன. எம்.கே.தியாகராஜ பாகவதரையும், பி.யு,சின்னப்பாவையும் சுதந்திர போராட்ட நாடகங்களுக்காகவும், பிரச்சாரத்திற்காகவும் காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது. பின்னாளில், காங்கிரஸ் சினிமா – சினிமா கலைஞர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்கிய போது அறிஞர் அண்ணா அதைக் கையில் எடுத்துக் கொண்டார்.

காங்கிரஸிலிருந்து திரைத்துறை விலக்கம் நடைபெற்ற சமகாலத்திலேயே, திராவிட நடிகர் சங்கம் என்கிற அமைப்பை 1942ல் உருவாக்கி கலைஞர்களையும், கலைவடிவங்களையும் பிரச்சார முகத்துக்கு பயன்படுத்தினார். இந்த அடியுரம் தான் பின்னாளில் திரைத்துறை ஜாம்பவான்களை அத்தைனை பேரையும் திமுகவின் பக்கம் கொண்டு வந்து நிறுத்தியது.

அந்த மரபில், என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ராமச்சந்திரன், சிவாஜி கணேசன் என மாபெரும் ஆளுமைகளில் தொடங்கி ராமராஜன், குண்டு கல்யாணம், மனோபாலா வரை தமிழ்நாட்டு அரசியலுக்கு வந்துவிட்டார்கள்.

பானுமதி தொடங்கி நமீதா வரை அரசியலின் சாயம் சினிமாவில் படர்ந்துதான் இருக்கிறது. காமராஜர் தோற்கடிக்கப்பட்ட தமிழகத்தில்தான் ஜெயலலிதா நான்கு முறை முதல்வராக ஆக்கப்பட்டார். நவீன இந்தியாவின் மிகப்பெரும் ராஜதந்திரி எனப் போற்றப்பட்ட ராஜாஜியின் கையில் நீடிக்காத முதல்வர் பதவியை நோக்கித்தான், இன்றைக்கு கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் வந்திருக்கிறார்கள்.

தமிழக அரசியலையே புரட்டிப்போட்ட நீதிக்கட்சியைத் தொடங்கிய பிட்டி.தியாகராயர் தனக்கு வேண்டவே வேண்டாம் என்று மறுதலித்த முதல்வர் பதவியை நோக்கித்தான் கோடம்பாக்கத்து நாக்குகள் எப்போதும் ‘சப்புக்கொட்டி’ கொண்டிருக்கின்றன. அரசியலுக்கு யாரும் வரலாம். எவரும் கட்சி தொடங்கலாம். ஏனெனில், ஒருவர் கட்சி தொடங்கினாலும், தொடங்காவிட்டாலும், அரசியல் பேசினாலும் பேசாவிட்டாலும் அவர் அரசியலுக்குள்தான் இருக்கிறார். அதுதான் ஜனநாயகம்..!

ஆனால், அரசியலுக்கு வரவேண்டும் என ஆசைப்படும் ஒருவர் யாரை நோக்கி பேசுகிறார், எப்படி பேசுகிறார், எந்த மொழியில் பேசுகிறார், யாருக்காக பேசுகிறார், அதை எந்த தொனியில் பேசுகிறார் என்பதில் இருந்துதான் அவர் யாருக்காக, யாருடைய அரசியலைப் பேசுகிறார் என்பது தெளிவாகும்.

இந்தத் தெளிவை விளக்காதவர்கள் அத்தனை பேரும் வேகமாக வீழ்ந்திருக்கிறார்கள். சமீபத்திய உதாரணங்கள் ரஜினியும், கமலும். 40 ஆண்டுகாலம் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்துவிட்டு அரசியலுக்கு வந்திருக்கும் ரஜினியும், கமலும் 6 மாத காலத்திற்குள் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

‘நான் ஒரு நடிகன் என்பதால், என்னை பார்த்தால் மக்கள் சந்தோஷப்படுகிறார்கள்’ என எதார்த்தமாக பேசிவிட்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கச் சென்ற ரஜினிகாந்த் பேசிய அரசியலை அவரது சொந்த ரசிகர்களே ரசிக்கவில்லை. ஊழலுக்கு எதிராக கருத்து சொல்லி, அதிமுகவோடு ட்விட்டரில் யுத்தம் நடத்தி, ‘மய்யமாக’ செல்ல முடிவெடுத்து, கிராம சபை கூட்டங்கள் நடத்தி, பெரியாரையும் காந்தியையும் இணைக்கும் அரசியலைச் செய்யப்போவதாக சொன்ன கமலஹாசன், இடைத்தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் எதிலும் நிற்பாரா என்றே தெரியவில்லை.

40 ஆண்டுகால சினிமா வாழ்க்கை. 30 ஆண்டுகாலமாய் இந்தியா முழுமைக்குமான பிரபலம். இந்தியாவின் வளர்ச்சியுற்ற மாநிலமான தமிழ்நாட்டில், ஒரு சராசரி குடிமகன் ஒருவன் ஆயுள்முழுவதும் சம்பாதிக்க முடியாத படத்தை ஐந்து நிமிட நிகழ்ச்சி பங்கேற்பில் சம்பாதிக்கும் அளவுக்கு செல்வாக்கு, பிரபல்யம் இரண்டும் இருந்தும் ரஜினியும், கமலும் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதுதான் அரசியல் ! இந்த அரசியலுக்குத்தான் விஜயும் வர இருக்கிறார்.

ரஜினியும், கமலும் திணறக் காரணம் அவர்கள் அதிகாரத்தை நோக்கிய அரசியல் செய்ய நினைக்கிறார்களே ஒழிய ஆதிக்கத்துக்கு எதிரான அரசியல் செய்ய விருப்பமில்லை. அதிகாரம் என்பது ஆட்சியிலிருப்பவரின் ஆயுதம். ஆனால், ஆதிக்கம் என்பது சமுதாயத்தை தீர்மானிக்கும் சாசுவதம். ரஜினியும், கமலும் ஆயுதம் பெற நினைக்கிறார்கள், ஆனால் இங்கே எது சாசுவதம் என்று அவர்களுக்குத் தெரியவில்லை அல்லது தெரிந்தும் எதிர்க்க துணிச்சலில்லை.

அதனால்தான், பரியேறும் பெருமாள்கள் வாயடைத்துப் போக வைத்திருக்கும் அதே சினிமாவில் இருந்துகொண்டு ‘சாதி பேசும் காலம் முடிந்துவிட்டது’ என்கிறார் கமல். போராட்டமே வாழ்க்கை என்கிற ‘காலா’ படத்தில் நடித்த சுவடு முடிவதற்குள் ‘எல்லாவற்றிற்கும் போராடினால் நாடு சுடுகாடாகிவிடும்’ என்கிறார் ரஜினி.

இப்படி ரஜினி, கமல் இருவரின் அரசியலும் அடிவாங்கிக் கொண்டிருக்கும் போதே விஜய்யின் அரசியல் வருகை என்கிற ஆருடம், அவர் வாயாலேயே உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

விஜய் தனது ரசிகர் மன்றங்களை 2010ம் ஆண்டு ஜூலை மாதம் மக்கள் இயக்கமாக மாற்றினார். அரசியலுக்கு விதையை அவர் விதைத்தபோதே, குடம் குடமாக அதில் வெந்நீர் ஊற்ற நினைத்தது அன்றைய திமுக. அதிகாரத்துக்கும் விருப்பத்துக்கும் இடையில் பந்தாடப்பட்ட நிலையில், விஜய்யின் சினிமாக்களும் அன்றைக்குத் தோற்றுக்கொண்டிருந்தன. ஆனால், அந்தத் தோல்விகள்தான் விஜய்யை வளர்த்து எடுத்திருக்கின்றன.

திரையில் உச்சநட்சத்திரமாக வளரும் காலகட்டத்தில் அதிநாயகர்கள் (Super Stars) யாரும் தங்களை அதிகாரத்திற்கு எதிரான நபராக கட்டமைத்துக் கொள்வார்களே தவிர, அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்ப்பது கிடையாது. அப்படிச் செய்தால், அவர்களை அதிகாரமட்டத்தில் இருப்பவர்கள் வளர விடமாட்டார்கள். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என நால்வரின் அரசியல் பயணத்திலும் இதைப் பார்க்கலாம்.

தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னனாக எம்ஜிஆர் உயர்ந்துகொண்டிருந்த காலம் 1960-கள். திமுகவின் பிரச்சார பீரங்கியாக, மக்கள் நாயகனாக இருந்த எம்ஜிஆர். ஆனால், ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவை தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஒரு பேட்டியில் குறிப்பிடுகிறார், “அண்ணா என் வழிகாட்டி, காமராஜர்தான் எனக்குத் தலைவர்” என்று.

திமுக ஆட்சிக்கு வரும் காலகட்டம் வரை காங்கிரஸின் ஆட்சிக்கு எதிராகவோ, அதன் தலைமைக்கு எதிராகவோ வலுவாக எந்தக் கருத்தையும் பேசாதவர் எம்ஜிஆர். தனிக்கட்சித் தொடங்கிய பிறகும், மத்திய ஆளும் கட்சிக்கு அனுசரணையான அரசியலையே அவர் எப்போதும் கைபிடித்தார்.

எம்ஜிஆர் இருக்கும் காலம் வரை ரஜினி ஆளும் வர்க்கத்துக்கு எதிராக எதுவும் பேசியது கிடையாது. எம்ஜிஆர் மறைந்து, அதிமுக உடைந்து சேர்ந்த காலத்தில், ஜெயலலிதாவின் செயல்பாடுகள் மிகக்கடுமையாக விமர்சிக்கப்படத் துவங்கியபோது, தமிழ்நாட்டு அரசியலில் கவர்ச்சி அரசியலுக்கான இடத்திற்கு ரஜினிகாந்த் முன்னிறுத்தப்பட்டார்.
அப்போதும், ஜெயலலிதாவுடன் பகை வந்தநேரத்தில் அவர் நேரடியாக ஆதரிக்க நினைத்தது அன்றைக்கு மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸை. மாநிலத்தில் இருக்கும் ஒரு அதிகாரத்தை எதிர்க்க, மத்தியில் இருக்கும் இன்னொரு அதிகாரத்துடன் கைகோர்க்கவே அவர் விரும்பினார்.

ஆனால், மத்தியில் இருந்த காங்கிரஸ், மாநிலத்தில் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே விரும்பியது. இதனால், தமிழ்நாட்டில் காங்கிரஸ் உடைந்து மூப்பனார் தனிக்கட்சித் துவங்கவே தனது ஆதரவு நிலைப்பாட்டை திமுகவை நோக்கி மாற்றிக் கொண்டார் ரஜினி. ஆனால், 1996க்கு பிறகு இன்றுவரை ரஜினி எப்போதும் ஆளும்கட்சிக்கோ அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களுக்கோ எதிராக எப்போதும் பேசியது கிடையாது.

கமலும் அப்படித்தான். இதற்கு மிக சமீபத்திய உதாரணம் ’விஸ்வரூபம்’ படம் குறித்தும், அப்பட வெளியீட்டில் ஜெயலலிதாவின் தலையீடு குறித்தும் அவர் தெரிவித்து வரும் கருத்துகள். அன்றைக்கு ஜெயலலிதா இருக்கும்போது வலுவாக எந்தக் கருத்தையும் தெரிவிக்காதவர், ஜெயலலிதா மறைந்தபிறகு, “மரணம் ஒருவரை குற்றமற்றவராக்கிவிடாது” என வெளிப்படையாக் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்.

விஜய்யும், ஆரம்ப காலத்தில் இந்தப்போக்கில்தான் இருந்தார். ‘சுறா’வுக்கும், ’காவலன்’-க்கும் திமுக குடைச்சல் கொடுத்தபோது, அவர் அதிமுகவை வெளிப்படையாகவே ஆதரித்தார். ஆனால், ‘தலைவா’வை ஜெயலலிதா படுத்தி எடுத்தபோதுதான் அவருக்கு அதிகாரத்தின் குணம் புரிந்தது. ஆனால், ‘தலைவா’வுக்காக அவர் ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. அன்றைக்கு பதுங்குவதன் மூலமே காரியம் சாதிக்கமுடியும் என்பதை உணர்ந்துகொண்டார்.

‘தலைவா’வுக்குப் பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த அத்தனை படங்களுமே அதிகாரத்தில் இருப்பவர்களைச் சீண்டுவதாகவே இருந்தது. ‘கத்தி’, ‘புலி’, ‘பைரவா’, ‘மெர்சல்’ என அத்தனை படங்களிலும் இதை உணரலாம்.

ஆரம்பகாலத்தில் விஜய் செய்த அரசியல் முயற்சிகள் முதிர்ச்சியற்றவையாக, எரிச்சலூட்டுபவையாகவே இருந்தது. நாடக பாணியிலும், ரசிகர்களை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கிலும் மட்டுமே விஜய் அரசியலுக்கு வருகிறார் என கடுமையாக விமர்சிக்கப்பட்டது; இருந்துள்ளது. ஆனால், இன்றைக்கு விஜய்யிடம் ஒரு மாற்றத்தை உணரமுடிகிறது. விஜய்யின் உத்திகள், காய் நகர்த்தல்கள் எல்லாம் மாறியிருக்கிறது.

செல்வாக்கு மிக்கவர் என்கிற நிலையை மாற்றி, மக்களின் பக்கத்தில் நிற்பதையே தன் அரசியலாக அவர் வரித்துக் கொண்டிருக்கிறார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ரஜினி, கமல் அனைவருமே பணமதிப்பிழப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தபோது, விஜய் மிகத் துணிச்சலாக அதை எதிர்த்துக் கருத்து சொன்னார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த அந்தநேரத்தில், அன்றைக்கு ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவே அதுகுறித்து கருத்துசொல்லாதபோது, ‘மக்கள் துன்பப்படுகிறார்கள்’ என சொல்லும் துணிச்சல் விஜய்க்கு இருந்தது.

2017 ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் அவர் போராட்டத்தின் பக்கமே நின்றார். இந்தியா முழுவதும் விவசாயப் போராட்டம் உக்கிரமாகியிருந்த சமயத்தில் ‘வல்லரசு தேவையில்லை; விவசாயிகளுக்கான நல்லரசு போதும்’ என்றார். அனிதா மரணத்தின்போது நடிகர்கள் பலர் பெயரளவிலான இரங்கல் செய்திகளை பதிவு செய்து கொண்டிருந்தபோது, அனிதாவின் வீட்டிற்கே சென்று, கட்டாந்தரையில் அமர்ந்து ஆறுதல் சொன்னார்.
தொடர்ச்சியாக, ‘மெர்சல்’ படத்தில் அவர் பேசிய வசனங்கள், அதனால் எழுந்த சர்ச்சைகள் போன்றவை இந்திய அளவில் விவாதப் பொருளாகின. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க அவர் கையாண்ட முறையும் மிகப்பெரும் பாராட்டைப் பெற்றது.

இதில், அனைத்திலும் உணர்ந்துகொள்ளத்தக்க ஒரு விஷயம்; விஜய் தொடர்ச்சியாக, மத்தியில் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு எதிரான மக்கள் ஆதரவு நிலைப்பாடுகள்தான். எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என நான்கு ஜாம்பவான்களும் கையாளாத ஒரு உத்தி அது.

நேரடியாக அரசியலுக்கு வந்தபிறகும்கூட, மிச்சமிருக்கும் சினிமாக்களின் வணிகத்துக்காக மத்திய அரசோடு ரஜினியும், கமலும் எதிர்க்காமல் இருக்கும்போது, தனது சினிமா பயணத்தில் மிகமுக்கியமான கட்டத்தில் இருக்கும் போதே மத்திய அரசை எதிர்க்கும் நபராக தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் துணிச்சல்தான் விஜய்யை தனித்துவப்படுத்திக் காட்டுகிறது. இது திரைப்பின்னணியில் இருந்து வரும், கவர்ச்சி அரசியல்வாதிகளிடம் இல்லாத ஒரு பண்பு.

விஜய் இவற்றை திட்டமிட்டுச் செய்கிறார் என சொல்லமுடியாது. ஆனால், பொதுவிருப்பத்துக்கும், மக்கள் ஆதரவு நிலைப்பாட்டோடும் இருக்கும் அவரது அரசியல் விருப்பங்கள் வரவேற்கத்தக்கது.

ஆனால், சர்கார் திரைப்பட இசைவெளியீட்டு விழாவில், ‘முதலைமைச்சரானால் நீங்கள் செய்யும் முதல் காரியம் என்னவாக இருக்கும்’? என பொத்தாம்பொதுவாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘எல்லாரும் சொல்வது போலத்தான், ஊழல், லஞ்சம் எல்லாவற்றையும் ஒழிக்கனும். ஆனால், அது அவ்வளவு சுலபமாக தெரியவில்லை. ஆனால், ஒழிச்சுதானே ஆகணும்’ என்கிறார்.

எதிர்பாராத ஒரு தருணத்தில் கேட்கப்பட்ட, ஆழமில்லாத ஒரு கேள்விக்கு, தப்பித்துக் கொள்ளும் மனோபாவத்துடன் அளிக்கப்பட்ட பதில் தான் அது. ஆனாலும், ஊழல் லஞ்சம் என்பதை ஒழிப்பதற்கான வழியாக அவர் சொல்வது ‘சரியான தலைமை இருந்தால், கீழ்மட்டம் சரியாக இருக்கும்’ என்பதாக இருக்கிறது. நேர்மையான அரசியல் தலைமை என்பது ஒருபொதுவான தேவை; ஆனால் அது மட்டுமே சமூகத்தின் தேவையோ, வளர்ச்சிக்கான தடையோ, பிரச்னையோ அல்ல.

விஜய்க்கு எளிதான உதாரணம், அவரது சினிமா துறை படைப்புகளிலிருந்தே இருக்கிறது. ‘இந்தியன்’ தாத்தாக்களின் மார்க்கெட்டும், ‘எஜமான் காலடி மண்ணெடுத்து நெற்றியில் பொட்டு வைக்கும்’ காலமும் முடிந்துவிட்டது, ‘சந்தையும்’ மாறிவிட்டது என்பதைத்தான் பரியேறும் பெருமாள்கள் நம் மனசாட்சிக்கு உணர்த்துகிறார்கள்.

100 ஆண்டுகள் கண்ட தமிழ் சினிமாவில் சாதாரண சாதிப்பின்னணி கொண்டவர்கள் சாதனையாளர்களாக உயர்ந்தது மிக அரிதாகத்தான். வேற்று இன அடையாளமும் – மொழி அடையாளமும் கொண்டவர்களே எப்போதும் முதலிடத்தில் இருந்திருக்கிறார்கள். வைதீக ஆதிக்கம் கொண்ட இந்த மரபிலும் விஜய் வித்யாசப்படுகிறார். மிக எளிமையான சாதியப்பின்னணியைக் கொண்ட விஜய் இன்றைக்கு உச்சநட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.

இன்றைய அரசியலை தலித்திய விடுதலைக்காலம் என வர்ணிக்கிறார்கள் ஆய்வாளர்கள். கவர்ச்சிவாதம், நாயகத்தன்மை என்பதையெல்லாம் தாண்டி இக்காலத்தில் முன்னெடுக்கும் அரசியல் ஒடுக்கப்பட்டவர்களுக்கான அரசியலாக இருப்பின் விஜய் வெல்கிறாரோ இல்லையோ, நிச்சயம் நிலைப்பார். எனவே, நிலைக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தால், ‘கருப்பிக்கள்’ கொல்லப்படும் காலத்தில் ஊழலும், லஞ்சமும் மட்டுமே சமூகத்தின் சிக்கல்கள் அல்ல என்கிற அடிப்படை புரிதல் இருக்க வேண்டும் அவருக்கு.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close