Advertisment

அம்பேத்கரின் ‘மூக்நாயக்’ நூற்றாண்டு; ‘சூரியோதயம்’ 150 ஆண்டு நிறைவு; இதழியலில் தலித்துகள் நிலை

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் 1920-ம் ஆண்டில் அவர் தொடங்கிய முதல் ‘மூக்நாயக்’ பத்திரிகையின் நூற்றாண்டு இது. தமிழில் முதல் தலித் பத்திரிகையான சூரியோதயம் இதழின் 150வது ஆண்டு நிறைவு நடைபெறுகிறது. இது குறித்து ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
ambedkar first magazine mook nayak centenary, அம்பேத்கர், மூக்நாயக் பத்திரிகை, மூக்நாயக் நூற்றாண்டு, ambedkar magazine mook nayak centenary, first tamil dalit magazine suryodhayam 150 years, சூரியோதயம் இதழ் 150, dalit politics, mook nayak magazine centenary, suryodhayam 150 years

ambedkar first magazine mook nayak centenary, அம்பேத்கர், மூக்நாயக் பத்திரிகை, மூக்நாயக் நூற்றாண்டு, ambedkar magazine mook nayak centenary, first tamil dalit magazine suryodhayam 150 years, சூரியோதயம் இதழ் 150, dalit politics, mook nayak magazine centenary, suryodhayam 150 years

தமிழகத்திலும் இந்திய அளவிலும் தலித் அரசியலில் மிக முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்வை நினைவு கூறும் ஆண்டாக 2020 அமைந்துள்ளது. ஆம், ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பர் என்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தலைமைச் சிற்பி என்றும் போற்றப்படும் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலில் அடியெடுத்து வைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பேசுவதற்காக 1920-ம் ஆண்டில் அவர் தொடங்கிய முதல் பத்திரிகையான ‘மூக்நாயக்’ பத்திரிகையின் நூற்றாண்டு இது. அதே வேளையில், தமிழகத்தில் தலித் அரசியல் வரலாற்றில் 1869-ம் ஆண்டு திருவேங்கடசாமி பண்டிதரால் சூரியோதயம் பத்திரிகை தலித் அரசியல் பேசிய முதல் தலித் பத்திரிகையின் 150 ஆண்டு நிறைவு ஆகும். அந்த வகையில், 2020-ம் ஆண்டு தலித் அரசியலில் மிக முக்கியமான ஆண்டாக அமைந்துள்ளது.

Advertisment

பிரிட்டிஷ் இந்தியாவில் 1919-ம் ஆண்டு சவுத் பரோ கமிட்டியின் முன்பு சாட்சியம் அளித்ததில் இருந்தே அம்பேத்கரின் அரசியல் பயணம் தொடங்கியதாக அறியப்படுகிறது. அதற்குப் பிறகு, அம்பேத்கர் தனது அரசியல் கருத்துகளை ஒடுக்கப்பட்ட மக்களிடையே பரப்புவதற்காக கோல்ஹாப்பூர் மன்னர் சத்ரபதி சாஹு மகராஜ்ஜின் நிதியுதவியுடன் ஜனவரி 31-ம் தேதி 1920-ம் ஆண்டு மராத்தி மொழியில் மூக்நாயக் என்ற மாதமிருமுறை பத்திரிகையைத் தொடங்கினார்.

மூக் நாயக் என்பதற்கு ஊமைகளின் தலைவன் என்று பொருள். இந்த இதழின் முதல் ஆசிரியர் நந்த்ரா பட்கர். இவருக்குப் பிறகு தியான்தார் கோலப் ஆசிரியராக இருந்தார்.

சாதி ஒழிப்பையும் சமத்துவத்தையும் வலியுறுத்திய அம்பேத்கர் இன்றைய இந்தியாவில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான எல்லா போராட்டங்களிலும் போராட்டப் பதாகையாக எழுகிறார். சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், புரட்சியாளர், சமூக சீர்திருத்தவாதி, பொருளாதார அறிஞர், வரலாற்றாய்வாளர், மானிடவியலாளர், தேசிய தலைவர் என்று போற்றப்படும் அம்பேத்கரின் ஆரம்பகால எழுத்துகள் மராத்தி மொழியில் மூக் நாயக் பத்திகையில்தான் வெளியானது. மூக் நாயக் இதழ்களை டாக்டர் பி.ஆர்.காம்ளி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். அம்பேத்கரின் எழுத்துகள் 37 தொகுதிகளாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியாகியிருந்தாலும் மூக் நாயக் தொகுப்பு இன்னும் தமிழுக்கு வரவில்லை.

இந்த சூழலில்தான் கடந்த ஜனவரி 31-ம் தேதி மூக்நாயக் பத்திரிகையின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. அதனை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு நினைவு கூர்ந்தனர்.

இந்தியாவில் தலித் அரசியலின் முன்னோடி மாநிலமான தமிழகத்தில் மூக்நாயக் பத்திரிகையின் நூற்றாண்டு கொண்டாடும் அதே வேளையில், முதல் தலித் அரசியல் இதழாக அறியப்படும் 1869-ம் ஆண்டு வெளியான சூரியோதயம் பத்திரிகையின் 150வது ஆண்டு நிறைவு ஆண்டு என்பது முக்கியமானதாக அமைந்துள்ளது.

தலித் இதழ்கள் ஆய்வாளர், பேராசிரியர் ஜெ.பாலசுப்ரமணியம்

இந்த சூழலில் தலித் இதழ்கள் குறித்து ஆய்வு செய்துள்ள ஆய்வாளர், எழுத்தாளர், பேராசிரியர் ஜெ.பாலசுப்ரமணியம் அவர்களிடம் இன்று தலித் இதழ்கள் குறித்து பேசினோம். தலித் இதழ்கள் தொடங்கப்பட்ட சூழல் குறித்து கூறுகையில், “காலனிய காலத்தில் சட்டத்தின் ஆட்சி என்ற நவீன அரசை உருவாக்குகிறார்கள். அரசின் பல துறைகளும் உருவாக்கப்படுகிறது. அப்படி அரசு உருவாகும்போது தலித்துகளுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாய்ப்பு மூலம் முன்னேற்றம் அடைந்து சமூகப் பிரச்னைகளைப் பேசுவது, அரசாங்கத்திலும், கல்வியிலும், அரசாங்க வேலைகளிலும் பிரதிநிதித்துவம் பெற வேண்டும் என்பதற்காக அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் வாகனங்களாகத்தான் பத்திரிகைகள் ஆரம்பிக்கிற போக்கு இருந்தது.

publive-image

இதில் சூரியோதயம் பத்திரிகை 1869-ம் ஆண்டில் தொடங்கப்பட்டுள்ளது. இதை புதுப்பேட்டையைச் சேர்ந்த திருவேங்கடசாமி பண்டிதர் தொடங்கி நடத்தியுள்ளார். இவர் தமிழ் புலவர் என்றும் இந்த பத்திரிகை ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது என்றும் அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றபடி வேறு எந்த தகவலும் அதைப் பற்றி கிடைக்கவில்லை.” என்று கூறினார்.

தலித்துகள் மத்தியில் பத்திரிகை தொடங்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த மரபு எப்போது விடுபட்டது?

சுதந்திரத்திற்கு முன்பு பத்திரிகைகள் அரசிடம் மக்களின் கோரிக்கைகளை வைப்பதற்கு ஒரு வாகனமாக பயன்பட்டுள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு வேறுவேறு வெளிகள் உருவாகிவிட்டது. அப்போது மையநீரோட்ட பத்திரிகை நிறுவனங்கள் வருகின்றன. அதோடு பத்திரிகை தொடங்க பெரிய மூலதனம் தேவைப்படுகிறது. அந்தளவுக்கு இவர்களிடம் மூலதனம் இல்லாமல் போகிறது.

இரண்டு, பிரதிநிதித்துவ அரசியல் வரும்போது தலித்துகள் தங்கள் கோரிக்கைகளை பிரதிநிதிகள் மூலம் முன்வைக்கின்றனர். அதே நேரத்தில், பத்திரிகை என்பது சமூக முன்னேற்றத்துக்காக நடத்தப்படுவது என்பதில் இருந்து லாப நோக்கில் நடத்தப்படும் ஒரு தொழிலாக பண்டமாக மாறிப்போகிறது. அதன் பிறகு தலித்துகளால் லாபகரமாக நடத்த முடியாமல் போகிறது. இதனால், அவர்கள் மைய நிரோட்ட பத்திரிகைகள் நடத்த முடியாமல் போகிறது. ஆனாலும், தலித்துகள் பத்திரிகை நடத்துவது என்பது அதோடு முடிந்துபோகவில்லை. இடைவெளிகள் இருந்தாலும் தொடர்ந்து தலித் பத்திரிகைகள் வந்துகொண்டுதான் இருந்தது.

நான் ஆய்வு செய்த தலித்துகள் நடத்திய பத்திரிகைகள் எல்லாமே சாதி எதிர்ப்பைத்தான் பேசியுள்ளன. எந்த பத்திரிகைகளும் சாதியை ஆதரித்து பேசவில்லை. தலித்துகளின் சாதி எதிர்ப்பு மரபு என்பது திருவள்ளுவர், ஔவையார் தொடங்கி அது தொடர்ந்து வந்துள்ளது.

இன்றைக்கு தலித் ஸ்டடீஸ் என்பது அரசியல், இலக்கியம், கல்வியியல் ஆய்வுகள் என எல்லா தளங்களிலும் ஒரு புலமாக ஆகியுள்ளது. அதனால், தலித் உள்ளடக்கம் கொண்ட புத்தகங்களுக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.

இன்றைக்கு தலித்துகளுக்கு  தனியாக பத்திரிகை  என்பதைவிட தலித்துகளையும் உள்ளடக்கிய பிரதிநிதித்துவத்துடன் மைய நீரோட்ட பத்திரிகைகள் இருக்க வேண்டும்.

நாம் கவனித்தால், தலித் பிரச்னைகளுக்கு ஆங்கிலப் பத்திரிகைகளில் உரிய இடம் அளிக்கப்படுகிறது. ஆனால், தமிழ்ப் பத்திரிகைகளில் போதிய இடம் அளிக்கப்படுவதில்லை. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு மாற்றம் நிகழ்ந்து வந்திருக்கிறது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், மைய நீரோட்ட பத்திரிகைகளில் தலித் பிரச்னைகளுக்கும் தலித்துகளுக்கும் இடம் அளிக்கப்பட வேண்டும்.” என்றார்.

எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம்

தலித்துகள் பத்திரிகைகள் தொடங்கிய காலகட்டம் குறித்து எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கூறுகையில், “19 ஆம் நூற்றாண்டிலும் 20 ஆம் நூற்றாண்டிலும் தேசிய விடுதலை சமூக விடுதலை என்கிற இரண்டு போக்குகளே விவாத மையங்களாக இருந்தன. இதில் பிராமண மேலாதிக்கம் தேசியவாதத்தின் வழியே எழுச்சி பெற்றது. இதழ்களை அதன்படியே தொடங்கினர். ஏறக்குறைய பிராமணர்கள் தொடங்கிய சமகாலத்திலேயே தலித்துகள் இதழ்களை தொடங்கினர். சமூக விடுதலை என்கிற கருத்தியலை கட்டமைத்த தொடக்க கால ஆதாரங்களாக இந்த இதழ்களே இப்போது கிடைக்கின்றன. தேசியம் இதழ்கள் வழியே உருப்பெற்ற போது அதற்கு எதிராக சமூக விடுதலை கருத்தை அதே இதழ்கள் வழியே கட்டமைக்கும் எதிர் போராட்டமாக தலித்துகள் செயல்பட்டனர். எனவே தலித்துகளுடையதை அறிவு மரபு என்று சொல்வதோடு நில்லாமல் அவை தீவிர அரசியல் உள்ளடக்கம் சார்ந்தது என்றும் விவரிக்கலாம்.

தலித்துகளின் 150 ஆண்டு கால இதழியல் தொடர்ச்சி இன்று எப்படி இருக்கிறது என்று கருதுகிறீர்கள்?

150 ஆண்டுகால இதழியல் அனுபவம் கொண்ட ஒடுக்கப்பட்ட வகுப்பினர் அத்துறையில் சாதனையாளர்களாக மாறியிருக்க வேண்டும். ஆனால் அப்படியேதும் இங்கு நடக்கவில்லை.

தமிழகத்தில் முன்னணி பத்திரிக்கையாளர்களில் ஒருவர் கூட தலித் இல்லை பத்திரிக்கையாசிரியர்கள், செய்தி உருவாக்குவோர், பத்திரிக்கை நிறுவனங்கள் என்று எதுவும் இல்லை. தமிழ் இதழ்களில் அதன் செய்தியாளர்களில் தலித்துகளின் பிரதிநிதித்துவம் இல்லை. சமூக நீதியை நம்புகிற, அதனால் பலன் பெற்ற நிறுவனங்களே இதை செய்வதில்லை. இந்த நிலை மாற வேண்டும். தலித்துகளில் யாரும் முன்வருவதில்லை என்று காரணம் சொல்லப்படுவதுண்டு. இதில் அவன் உருவாவதற்கான சமூகச் சூழலை நாம் தான் இங்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும்.” என்று கூறினார்.

முதல் தலித் பத்திரிகையின் 150வது ஆண்டு நிறைவு ஆண்டில் இன்றைய மைய நீரோட்ட பத்திரிகைகளில் தலித்பிரச்னைகள் எவ்வாறு இடம் பெறுகிறது அவற்றுக்கு எந்தளவுக்கு ஊடகங்கள் கவனம் அளிக்கிறது என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் டி.என்.கோபாலன் கூறுகையில், “ஊடகங்கள் தலித் அல்லாதவர்கள் கைகளில் இருக்கிறது. அவர்களுக்கு எந்தவிதமான சமூக கண்ணோட்டமும் பெரிதாக இல்லை. இன்னொரு பக்கம் அரசியலும் தலித் மக்களுக்கு சாதகமாக இல்லை. தலித் மக்களுக்காக நடத்தப்படும் கட்சிகளும் சந்தர்ப்பவாதங்களுக்கு இரையாகிப்போகின்றன.

ஊடகத்தின் நிலை, சமூகச் சூழல், அரசியல் நிலை ஆகியவற்றைப் பார்க்கிறபோது எல்லா மட்டங்களிலும் இன்னும் அவலமாகத்தான் இருக்கிறது.

அதற்காக முழுவதுமாக தலித்துகளுக்கு ஆதரவாக எதுவும் இல்லை என்று சொல்லமாட்டேன். தலித்துகளுக்கு ஏதேனும் கொடுமை நடக்கும்போது, சிபிஎம், திக, போன்ற கட்சிகளும் பலரும் பேசுகிறார்கள். பத்திரிகைகளில் ஒரு சில நிரூபர்கள் எழுதுகிறார்கள். செய்தி வெளிவராமல் இல்லை.

நான் குறிப்பிடுவது, அக்கிரமம் நடைபெறுகிறது என்றால் அதை தீவிரமாக எதிர்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முன்முயற்சி எடுப்பதோ அல்லது அநீதி களையப்பட வேண்டும் என்பதோ நடைபெறவில்லை.

ஊடகங்களில் தலித் பிரச்னைகளுக்கான இடம் இல்லை என்று நான் சொல்லமாட்டேன். இடம் மிகக் குறைவாக இருக்கிறது. இன்னும் தலித்துகள் படித்து ஊடகங்களுக்கு வர வேண்டும்.

தமிழ் ஊடகங்கள் பத்திரிகைகளின் சமூக அக்கறை என்பது மிகமிகக் குறைவு. அவை தலித்துகள் மீது அக்கறைகொள்வதில்லை. தமிழ் பத்திரிகைகளில் தலித்துகளுக்கு பெரிய அளவில் வாய்ப்பு என்பதும் இல்லை. மாறாக ஆங்கில ஊடகங்களில் அவர்களுக்கு ஒரளவு வாய்ப்பு உள்ளது. அங்கே அவர்களால் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். காட்சி ஊடகங்களில் தலித்துகளுக்கான இடமே இல்லை. அவர்கள் டி.ஆர்.பி.யில்தான் கவனம் செலுத்துகிறார்கள்.

இதையெல்லாம்விட, சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் கடந்தும் இன்றைக்கும் தலித் மக்கள் கிராமங்களில் ஊருக்கு வெளியே காலனிகளில் தனியாகத்தான் வசிக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய கொடுமை... எவ்வளவு பெரிய அவமானம்... இதை அரசியல் கட்சிகள்தான் பேச வேண்டும். போராட வேண்டும். பெரியார் மண் என்கிறார்கள். ஆனால், இதைப் பற்றி யார் பேசுகிறார்கள்.” என்று கேள்வி எழுப்பிய டி.என்.கோபாலன் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

Dalit Babasaheb Ambedkar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment