மற்றுமொரு பொதுத் தேர்வு: சுமையேற்றமா, தீர்வா?

கண்ணன்

தமிழகத்தில் மாநில கல்வித் திட்டத்தின்படி 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது. 10ஆம் வகுப்பில் மாணாக்கர்கள் பெறும் மதிப்பெண், 11,12ம் வகுப்புகளில் அவர்கள் விரும்பிய பாடப் பிரிவைத் தேர்ந்தெடுக்க முக்கியமான தகுதியாகும். அதேபோல் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் கல்லூரிக் கல்விக்கு அஸ்திவாரமாக அமைகிறது. குறிப்பாக பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழில் கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற 12ம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள் மிக அத்தியாவசியமான பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில் தமிழக அரசு 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வை அறிவிக்க இருக்கிறது. இந்தத் திட்டம் நடப்புக் கல்வியாண்டிலிருந்து செயல்படுத்தப்பட இருக்கிறது. அதாவது இந்த மார்ச்-ஏப்ரலில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணாக்கர்கள் அடுத்த மார்ச்-ஏப்ரலில் 11ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வை எதிர்கொள்வர்.
காரணமும் பின்னணியும்

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தின் கீழ் இயங்கும் பல தனியார் பள்ளிகள் 11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்புப் பாடங்களை நடத்தத் தொடங்கிவிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு கடந்த சில ஆண்டுகளாக வலுத்துவருகிறது. அவற்றுள் கணிசமான தனியார் பள்ளிகள் 11ம் வகுப்புக்கான பாடங்களை அறவே தவிர்த்துவிட்டு மாணாக்கர்களை இரண்டு ஆண்டுகளும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கே தயார்படுத்துகின்றன என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இல்லாமல் இல்லை.

10ம் வகுப்பு வரை பொதுவான பாடங்களைப் படிக்கும் மாணவர்கள் மேல்நிலைக் கல்வி எனப்படும் 11, 12ம் வகுப்புகளில்தான் அறிவியல், வணிகவியல் என ஏதேனும் ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்ந்தெடுத்து அது தொடர்பான பாடங்களைப் படிக்கத் தொடங்குகின்றனர். 11ம் வகுப்புப் பாடத்திட்டத்தில்தான் அந்தப் பாடப் பிரிவுகளின் அடிப்படை கற்பிக்கப்படுகிறது. எனவே 11ம் வகுப்புப் பாடங்களைத் தவிர்ப்பது மாணாக்கர்கள் அடிப்படைகளில் அறிவைப் பெறாத நிலையை உருவாக்குகிறது. இதனால் 12ம் வகுப்பில் மனப்பாடம் செய்து மிக நல்ல மதிப்பெண்களை வாங்கும் மாணாக்கர்கள்கூட கல்லூரிக் கல்வியில் அதே பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெறத் தவறும் அவலம் அரங்கேறிவருகிறது. குறிப்பாக பொறியியல் கல்வியில் இந்த அவல நிலை மிகத் தீவிரமாக உள்ளது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக கல்வியாளர்களும் கல்வித் துறை செயற்பாட்டாளர்களும் இந்தப் பிரச்சனையைப் பற்றிப் பேசிவருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக அரசு முதல் முறையாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது. முதலில் 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்கள் சார்ந்த தரவரிசையை (ரேங்க்) வெளியிடக் கூடாது என்று ஆணையிடப்பட்டு அது உடனடியாக செயல்படுத்தப்பட்டுவிட்டது. இது பரவலான வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் தங்கள் மாணாக்கர்கள் எடுத்த தரவரிசையைப் பள்ளியின் விளம்பரத்துக்குப் பயன்படுத்தும் தனியார் பள்ளிகளின் லாபநோக்கச் செயல்பாடு தடுக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக 11ம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட இருக்கிறது. 11ம் வகுப்புப் பாடங்களை இன்றியமையாமல் கற்பிக்கும் நிர்பந்தத்தை ஏற்படுத்தவே இந்தத் திட்டம்.

ஆதரவும் எதிர்ப்பும்

இந்த அறிவிப்பு கல்வியாளர்கள் மத்தியிலும் செயற்பாட்டாளர்கள் மத்தியிலும் வரவேற்பையும் எதிர்ப்பையும் பெற்றுள்ளது. இத்திட்டத்தை வரவேற்பவர்கள் 11ம் வகுப்புப் பாடங்கள் கற்பிக்கப்படுவதைப் பொதுத் தேர்வின் மூலம் கட்டாயமாக்கும் இந்த முடிவை ஆதரிக்கின்றனர்.

அதே நேரம் இந்தத் திட்டத்தை எதிர்க்கும் கல்வியாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு மற்றுமொரு பொதுத் தேர்வு சுமை கூட்டப்படுவதாகக் கருதுகின்றனர். அவர்கள் 11ம் வகுப்புப் பாடங்களின் முக்கியத்துவத்தை நிராகரிக்கவில்லை. ஆனால் அவை கற்பிக்கப்படுவதை பொதுத் தேர்வை அறிமுகப்படுத்துவதன் மூலமாகத்தான் உறுதி செய்ய வேண்டுமா என்று கேட்கின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு அரசுதான் அங்கீகாரம் கொடுக்கிறது. பொதுவான பாடத்திட்டத்தை, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் பின்பற்றுகின்றன. இந்நிலையில் 11ம் வகுப்புப் பாடங்களை பல தனியார் பள்ளிகள் புறக்கணிப்பதைத் தடுக்காமல் இருப்பது அரசின் தவறு. அதை ஈடுகட்ட மாணவர்கள் மீது மேலுமொரு பொதுத் தேர்வுச் சுமையை ஏற்றக் கூடாது. அனைத்துப் பள்ளிகளிலும் 11ம் வகுப்புப் பாடங்களும் சரியாக முழுமையாக கற்பிக்கப்படுவதை அரசு முறையான கண்காணிப்பின் மூலமே உறுதி செய்துவிட முடியும் என்பது அவர்களின் வாதம்.

எந்த ஒரு திட்டத்திலும் சாதகங்களும் பாதகங்களும் இருக்கும். மேல்நிலைக் கல்வி தொடர்பில் தனியார் பள்ளிகளின் லாபவெறிச் செயல்பாடுகளை எதிர்த்து இப்போதுதான் தமிழக அரசு சுதந்திரமாக செயல்படத் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்தத் திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று சில ஆண்டுகள் கவனித்துப் பார்த்துவிட்டு பரிசீலிக்கலாம்.

தேவை சூழல் மாற்றம்

நடைமுறையில் பொதுத் தேர்வுகள் என்பது மாணாக்கர்களுக்கு நல்ல மதிப்பெண் பெற்றாக வேண்டும் என்ற பயத்தை அதிகரிப்பதாகவும் அது தொடர்பான பல்வேறு சுமைகளைக் கூட்டுவதாகவும்தான் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் இன்னொரு பொதுத் தேர்வு என்பது மாணவர்களுக்கு கூடுதல் சுமையாக இருக்கும் என்ற அச்சம் புறக்கணிக்கத்தக்கதல்ல. ஆனால் மாணவர்களை அச்சுறுத்தாத வகையில் பொதுத் தேர்வுகளை ஆக்குவதற்கான சூழல் மாற்றத்தை முன்னெடுப்பதுதான் இதற்கான சிறந்த தீர்வு. அந்தச் சூழல் அமைந்துவிட்டால் அனைத்துத் தேர்வுகளும் முக்கியமான தேர்வுகளாக அமைந்துவிடும். அனைத்து வகுப்புகளுக்கான தேர்வுகளும் பெயரளவில் ஆனவையாக இல்லாமல் பொருள் உள்ளவையாக இருக்கும்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close