கூட்டாட்சி தத்துவம் காட்சிப் பிழையா?

மத்திய அரசு ஆணவத்தோடு கடந்த 70 ஆண்டுகளாக பிரிவு 356 யை அத்துமீறி பயன்படுத்தியது. இந்த நிலையில் கூட்டாட்சித் தத்துவம் காட்சிப் பிழையாகி பாழ்பட்டுவிடக் கூடாது...

வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

குடியரசுத் தலைவர் பதவியைக் குறித்தும், அதன் அதிகாரங்களை குறித்தும் விவாதங்கள் நடக்கின்றன. செல்லாத பிரிவு (Dead Letter) 356-ஐ குடியரசுத் தலைவர் மத்தியில் ஆளும் கட்சியின் விருப்பம் போல தவறாக பயன்படுத்தியது. உச்ச நீதிமன்றம் எஸ். ஆர். பொம்மை வழக்கில் 1994ல் வழங்கிய தீர்ப்பின் பின்பு தவறாக பயன்படுத்தாமல் குடியரசுத் தலைவரின் கைகளை கட்டப்பட்டது.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 26-ல் 356-ஐ பயன்படுத்தி அன்றைய ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா பரிந்துரையின் பேரில் பிரணாப் முகர்ஜி கலைத்தார். இதை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் மீண்டும் அன்றைய முதல்வரான நபம் துகி யே தொடர வழிகாட்டி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரீஸ் ரவுத் தலைமையிலான ஆட்சியை பிரணாப் முகர்ஜி கடந்த 27-03-2016 ல் கலைத்தார். உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் நம்பிக்கை வாக்கு எடுக்க ஆளுநர் நிர்ணயித்த தேதிக்கு ஒரு நாளைக்கு முன்பே குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு திணிக்கப்பட்டது.

இதை நீதிமன்றம் கடுமையாக கண்டித்ததோடு, ‘குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமாகும். கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் மத்திய மாநில அரசுகள் இங்கே இயங்குகின்றன. மத்திய அரசும் மாநில அரசும் தங்களுக்கென வரையறுத்துள்ள அதிகார வளையத்துக்குள் இறையாண்மைமிக்கதாக இயங்கவேண்டும். இதையெல்லாம் கவனிக்காமல் போகின்ற போக்கில் மத்திய அரசு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது முறையற்றதாகும்” என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரகண்ட் மாநில ஆட்சிக் கலைப்பை பற்றி கருத்து வெளியிட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு சட்டமன்றத்தில் நடத்தவும் உத்தரவிட்டது. அருணாச்சல பிரதேசம், உத்தரகண்ட்டில் தான் இறுதியாக 356 பிரயோகப்படுத்தப்பட்டது.

நாடு விடுதலைப் பெற்ற 70 ஆண்டுகளில் 128 முறை 356-ஐ பிரயோகப்படுத்தி மாநில அரசுகளை குடியரசு தலைவர்கள் கலைத்தனர். முதன் முதலாக பஞ்சாப்பில் டாக்டர் கோபி சண்ட் தலைமையிலான காங்கிரஸ் அரசு 16.06.1951-ல் கலைக்கப்பட்டது. பெப்சு மாநில அரசு 1953-லும், ஆந்திர அரசு 15.11.1954லும், திருவாங்கூர் கொச்சின் அரசு 1956-லும், காங்கிரஸ் இல்லாத நம்பூதிரிபாத் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியை 1959-லும் கலைக்கப்பட்டது. ஆனால், பலர் நம்பூதிரிபாத் அரசு தான் முதன் முதலாக 356க்கு பழிவாங்கப்பட்ட அரசாங்கம் என்று கருதுகின்றனர்.

ஜவஹர்லால் நேரு

1960களின் இறுதியிலேயே காங்கிரஸ் மேல் அதிருப்தி ஏற்பட்டு இந்தியாவில் எட்டுத் திக்கும் காங்கிரஸ் இல்லா மாநில அரசுகள் உருவாகின. 1967-ல் தமிழகத்தில் காங்கிரஸ் இல்லா அரசை அண்ணா அமைத்தார். மேற்கு வங்காளத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. வங்காள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜாய் குமார் முகர்ஜி முதலமைச்சரானார். பஞ்சாப் மாநிலத்தில் பஞ்சாப் ஐக்கிய முன்னணிக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டது. அகாலிதளத்தைச் சேர்ந்த சர்தார் குர்னாம் சிங் முதல்வரானார். பீகார் மாநிலத்தில் ஜனகிராந்தி தள கட்சியை சேர்ந்த மகாமாயா பிரசாத் சின்ஹா முதலமைச்சரானார்.

1959-ல் கேரள மாநிலத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத் முதலமைச்சரானார். ஒரிசா மாநிலத்தில் சுதந்திராக் கட்சியைச் சார்ந்த ஆர். என். சிங்தேவ் முதலமைச்சரானார். ராஜஸ்தான் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ஏற்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலத்தில், 1967-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் நாள் காங்கிரஸ் கட்சி ஆட்சி ஏற்பட்டு சி.பி. குப்தா முதலமைச்சரானார். ஆனால் 18 நாட்களில் அவர் ஆட்சி கவிழ்ந்து கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஏற்பட்டு சரண்சிங் முதலமைச்சரானார்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில்லாமல் வேறு கட்சிகள், கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி உருவாகிய மாநிலங்களில் தொடர்ந்து அந்தந்தக் கட்சிகளின் ஆட்சிகள் நீடிக்க முடியவில்லை. இடையிலே சில கவிழ்ந்தன. சில அன்றைய காங்கிரஸால் திட்டமிட்டு கவிழ்க்கப்பட்டன.

நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த கேரள மாநில அரசு கம்யூனிஸ்ட் அரசு என்ற காரணத்தால் எவ்வித முகாந்திரமும் இன்றி நேரு காலத்தில் கலைக்கப்பட்டது. கேரளத்தில் நில சீர்திருத்த சட்டம், புதிய கல்வி கொள்கை, மதச் சிறுபான்மை சிக்கல் போன்ற பிரச்சினைகளில், கேரளாவில் நிலவிய போராட்டங்களை காரணம் காட்டி அந்த அரசு அன்றுகலைக்கப்பட்டது. அப்போது ஏ.கே. அந்தோணி மாணவர் காங்கிரஸ் பொறுப்பில் இருந்து பல போராட்டங்களை நடத்தினார். இதற்கு அன்றைக்கு காங்கிரஸை தலைமை தாங்கிய இந்திரா காந்தியின் தனிப்பட்ட பரிந்துரையும் உண்டு.

இந்திரா காந்தி

பிற்காலத்தில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த 16 ஆண்டுகளில் 50 மாநில அரசுகளை பிரிவு 356-ஐ கொண்டு கலைத்தார். இந்தியாவில் மொத்தத்தில் இதுவரை 126 முறையில் 88 முறை காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மாநில அரசுகளை கலைத்தது. நேரு1947லிருந்து 1964 வரை ஆட்சியில் இருந்தபோது 8 மாநில அரசுகளை கலைத்துள்ளார். அவசர நிலை காலத்திற்கு பின், ஜனதா அரசு மொரார்ஜி தலைமையில் அமைந்த போது, மூன்று ஆண்டுகளில் (1977 – 1979) காங்கிரஸ் ஆளும் 16 மாநில அரசுகளை கலைத்துள்ளார்.

இந்திரா காந்தி மத்தியில் பிரதமராக இருந்தபோது ஜம்மு – காஷ்மீரில் ஃபரூக் அப்துல்லா ஆட்சியை கலைத்து, ஷா தலைமையில் ஒரு பொம்மை ஆட்சி அப்போது அங்கு நிறுவப்பட்டது. ஆந்திரத்தில் என்.டி. ராமாராவ் ஆட்சியை கலைத்து பாஸ்கர் ராவ் தலைமையிலும் ஆட்சி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருந்தும் ஜம்மு-காஷ்மீரிலும், ஆந்திரத்திலும் சட்டத்திற்கு புறம்பாக கலைத்தபோது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன.

அப்போது என்.டி. ராமாராவ் தனக்கு பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றது என்பதை காட்ட, தெலுங்குதேச சட்டமன்ற உறுப்பினர்களோடு, டெல்லி ராஷ்டிரபதி பவனுக்கே ராஜ்பாத்தில் பேரணி நடத்தி குடியரசுத் தலைவரை சந்தித்தார். தி.மு.க. ஆட்சி இரண்டு முறை கலைக்கப்பட்டது. 1991ல் இரண்டு வருடம் ஆண்ட தி.மு.க. ஆட்சியை ஆளுநர் பர்னாலா பரிந்துரை இல்லாமலேயே ‘Otherwise’ என சட்டத்திற்கு புறம்பாக அன்றைக்கு மத்தியில் இருந்த சந்திரசேகர் ஆட்சியின் தூண்டுதலால் ஆர். வெங்கட்ராமன் கலைத்தார்.

வாஜ்பாய்

பிரதமர் வாஜ்பாய் தலைமையில் 1999 லிருந்து 2004 வரை பொறுப்பில் இருந்த அரசு 5 மாநில அரசுகளை கலைத்தது. இந்த காலக்கட்டத்தில் தான் 356-ஐ எதிர்த்து கர்நாடகாவில் அரசு கவிழ்க்கப்பட்டதற்காக எஸ்.ஆர்.பொம்மை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிரிவு 356 என்ன சொல்கிறது என்றால்; மத்திய அரசுக்கு மாநில அரசுகளைக் கலைத்து குடியரசுத் தலைவரின் ஆட்சியை நடைமுறைப்படுத்தும் உரிமை உள்ளது. அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட போது, இப்பிரிவு அடிக்கடி பயன்படுத்தப்படும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

டாக்டர் அம்பேத்கர் இப்பிரிவினை ஒரு செல்லாப் பிரிவு (Dead Letter) என்று கூறினார். இப்பிரிவு மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலையும் போதோ அல்லது மாநில அரசால் கையாள முடியாத நெருக்கடி நிகழும் போது மட்டும் பயன்படுத்த வேண்டும் என்பதுதான் அரசியல் நிர்ணய சபையின் நோக்கமாக இருந்தது. ஆனால் நடைமுறையில் இச்சட்டம், மத்திய அரசால், தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்கவும், தங்களுக்கு விருப்பமான அரசை மாநிலங்களில் அமைய பயன்படுத்திக் கொண்டன.

ஜனதா கட்சியின் தலைவர் எஸ் ஆர் பொம்மை ஆகஸ்ட் 1988 இல் கர்நாடக மாநிலத்தின் முதல்வரானார். செப்டம்பர் 1988 இல் ஜனதா கட்சியும், லோக் தளம் கட்சியும் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை உருவாக்கின. ஏற்கனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு பெற்றிருந்த பொம்மைக்கு மேலும் 13 உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். சில நாட்கள் கழித்து கே. ஆர். மொலகேரி என்னும் ஜனதா தள உறுப்பினர் மாநில ஆளுனரை சந்தித்து, தன்னை 19 உறுப்பினர்கள் ஆதரிப்பதாகவும், தன்னை ஆட்சியமைக்க அழைக்க வேண்டுமெனக் கூறினார். அதனை ஏற்ற ஆளுனர் குடியரசுத் தலைவருக்கு பொம்மை, சட்டசபையில் பெரும்பான்மையை இழந்துவிட்டதால், அவரது ஆட்சியை கலைத்துவிடலாம் என்று பரிந்துரைத்தார்.

ஆனால் மொலகேரி குறிப்பிட்ட 19 உறுப்பினர்கள் தாங்கள் கட்சியே மாறவில்லை என மறுத்துவிட்டனர்; பொம்மை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பை வழங்காமல், 1989 ஏப்ரல் 19 ஆம் நாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் விருப்பத்தின் பேரில் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இதனை எதிர்த்து எஸ்.ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தால்தள்ளுபடி செய்யப்பட்டு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

சந்திரசேகர்

1994 ஆம் வருடம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கை நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்புச் சட்ட அமர்வு விசாரித்துதீர்ப்பளித்தது. பொம்மையின் அரசைக் கலைத்தது செல்லாது என்று அறிவித்த நீதிபதிகளின் தீர்ப்பில் (S. R. Bommai Vs Union of India, AIR 1994 Page 1918) முக்கிய சட்ட விளக்கங்கள் வழிவகுத்துத் தந்தது. அதில்;

1. குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்துவது, நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது. தவறான தீய உள்நோக்குடன் (Malafide) ஆட்சி கலைக்கப்பட்டிருக்கும் எனில் கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் நடைமுறைப்படுத்த அதிகாரம் உச்சநீதிமன்றத்திற்கும் / உயர்நீதிமன்றங்களுக்கும் உண்டு.

2. பிரிவு 356 இல் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரம் குறிப்பிட்ட வரம்புகளுக்கும், நிபந்தனைகளுக்கும், மேற்பார்வைக்கும், பரிசீலனைக்கும்உட்பட்டது.

3. மத்திய அமைச்சரவை, குடியரசுத் தலைவருக்கு செய்யும் பரிந்துரை நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டாலும், அப்பரிந்துரை எந்தச் சான்றுகளின் அடிப்படையில் செய்யப்பட்டதோ அவற்றை நீதிமன்றங்கள் பரிசீலித்து ஆய்வுகளை மேற்கொண்டு தீர்ப்புகள் வழங்கலாம்.

4. மாநில அரசுகளை கலைக்கும்போது காரணங்கள் நேர்மையாகவும், நம்பகத்தன்மை உடையதாகவும், வெளிப்படையாகவும் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலை (Ratification) மாநில அரசுகள்கலைக்கப்பட்டபின் அவசியம் பெற வேண்டும்.

5. ஆட்சி கலைப்பின் போது, அரசியலமைப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப் பட்டுள்ளது என்று நீதிமன்றங்கள் கருதும் பட்சத்தில், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியிலமர்த்த நீதிமன்றங்களுக்கு அனைத்து அதிகாரங்களும், வரம்புகளும் உண்டு.

6. இந்தியக் குடியரசின் மதச்சார்பின்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறு விளைவிக்கவும், நாட்டின் பாதுகாப்புக்கு சிக்கல் ஏற்படும் வகையில் செயல்படும் மாநில அரசுகளை கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு உண்டு.

இத்தீர்ப்பின் பயனாக, பிரிவு 356 யை பயன்படுத்தி மாநில அரசுகள் கலைக்கப்படும் நிகழ்வுகள் அரிதாகிவிட்டன. இத்தீர்ப்பு, மத்திய-மாநில அரசுகள் உறவில், மாநில அரசுகளின் நிலையை பலப்படுத்தியதன் மூலம் இந்தியக் குடியரசில் கூட்டாட்சியை (federalism) பலப்படுத்தியுள்ளது.

பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், அரசியல் சூழல்கள் உள்ள இந்தியாவில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற தத்துவத்தில் கடந்த 70ஆண்டுகளாக பல சிக்கல்களை சந்தித்து அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியாவில் மக்களாட்சி ஸ்திரத்தன்மையோடு நடைபெறுவது என்பது பன்னாட்டு அளவில் பெருமைக்குரிய கீர்த்தி செய்தியாகும்.

1977 ல் ராஜஸ்தான் அரசு கலைக்கப்பட்டபோது, உச்சநீதிமன்றத்தை அணுகியபோது நீதிபதி பகவதி, பிரிட்டிஷ் ஆட்சியைப் போல் அல்லவா இந்த 356 இருக்கிறது என்று வினா எழுப்பினார். இது இந்திய அரசியலில் அப்புறப்படுத்தவேண்டிய சூழல் ஆகும் என்றும் கூறினார். (The State of Rajasthan vs. Union of India1977)

உச்சநீதிமன்றத்தில் பொம்மை வழக்குக்கு பிறகு, Kihoto hollohan vs Zachillhu and other & Rameshwar Prasad and others vs Union of India 2005 என்ற இரண்டு வழக்குகள் பிரிவு 356 யைஎதிர்த்து விசாரணைக்கு வந்தன. அப்போது இந்தியா ஒற்றையாட்சி என்பதைவிட கூட்டாட்சி என்று சொல்லாவிட்டாலும் ஒற்றையாட்சி – கூட்டாட்சியின் கலவை என்று கருதிக்கொண்டு 356ஐ மூத்த அண்ணன் மாதிரி விருப்பத்திற்கு ஏற்றவாறு பிரயோகிப்பது மக்களாட்சிக்கு விரோதமானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்த்து.

செல்லா காசு போல இந்திய அரசியல் சட்டத்தில் செல்லாப் பிரிவு என்று சொல்லப்பட்ட பிரிவு 356ஐக் கொண்டு மாநில அரசுகள் பழிவாங்கப்பட்டதை எல்லாம் நமக்கு வரலாறு சொல்கின்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை பொம்மைகளைப்போல ஆட்டி வைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. இருப்பினும் மத்திய அரசு ஆணவத்தோடு கடந்த 70 ஆண்டுகளாக பிரிவு 356 யை அத்துமீறி பயன்படுத்தியது. இந்த நிலையில் கூட்டாட்சித் தத்துவம் காட்சிப் பிழையாகி பாழ்பட்டுவிடக் கூடாது என்பது தான் மக்களாட்சியின் அடிப்படையாகும்.

(கட்டுரையாளர் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன், நதிநீர் இணைப்பு உள்ளிட்ட தமிழக நலன்களுக்காக சமரசமற்று போராடி வருபவர்! தி.மு.க. செய்தித் தொடர்பாளராகவும், ‘கதைச்சொல்லி’ இதழின் இணையாசிரியராகவும் செயல்படுகிறார்.)

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close