Advertisment

அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் - 14

Tamil writer Azhagiya Periyavan New Series for Tamil Indian Express Tamil News: விபத்துகள் கவனக்குறைவால் மட்டுமல்ல, அலட்சியத்தாலும் நடக்கின்றன. இந்த விபத்துகளில் நாம் நமது அன்புக்கும் காதலுக்கும் உரியவர்களை இழந்துவிடுகிறோம்.

author-image
WebDesk
New Update
Azhagiya Periyavan’s Tamil Indian Express series part - 14

Azhagiya Periyavan

அழகிய பெரியவன்

Advertisment

*

வேகம் வேடிக்கையல்ல

*

சென்னையிலிருந்து ஆம்பூருக்கு தொடர்வண்டியில் திரும்பி கொண்டிருந்தபோது அந்தக் காட்சியைப் பார்த்தேன். ஒரு நிலையத்தில் வண்டி நின்று புறப்பட்டதும், இளைஞர் ஒருவர் வண்டி போகும் திசையில் பின்புறமாகவே ஓடியபடி செல்ஃபி வீடியோ எடுத்தார்.

நடைமேடையில் பாதுகாப்புக்கு போடப்பட்டிருக்கும் மஞ்சள் கோட்டுக்கு உள்ளே, தொடர்வண்டிக்கு மிக நெருக்கமாக, பத்தடி தொலைவுக்கு அந்த இளைஞர் அப்படி பின்புறமாக ஓடினார். நடைமேடையில் இருந்த பயணிகளும், தொடர் வண்டிக்குள் இருந்த பயணிகளும் கத்திக் கூச்சலிட்டனர்.

அதற்கு அவரின் முகத்திலிருந்து ஓர் அலட்சியப் புன்னகை மட்டுமே விடையாக உதிர்ந்தது. வீடியோவை எடுத்த பிறகு சாகச உணர்வோடு, மகிழ்ச்சியில் அவர் நடந்து சென்றார். அந்த வீடியோவை அவர் வலைதளங்களில் நிச்சயம் பதிவிட்டிருப்பார். அவருடைய நண்பர்கள் பலரும் உறுதியாக அவருக்கு லைக் போட்டிருப்பார்கள். பாராட்டுகளும் கிடைத்திருக்கும். ஒருவேளை அவர் வீடியோவை எடுக்கும்போது தடுமாறி விழுந்து உயிரிழந்திருந்தால் அதுவும் ஒரு வலைதள செய்தியாகி சில கருத்துப் பிதற்றல்களுடன் மறக்கப்பட்டிருக்கும்.

விபத்துகள் தினந்தோறும் நடக்கின்றன. ஒவ்வொரு நொடியும் நடக்கின்றன. நம் கண்ணெதிரிலோ, அல்லது நாம் பயணிக்கும் வண்டியிலோ, சிலசமயங்களில் நமக்கோ. கைபேசிகளும், கண்காணிப்புக் கேமிராக்களும் வழங்குகின்ற துணுக்கு வீடியோக்கள் பெருகிவிட்ட பிறகு விபத்து குறித்த விழிப்புணர்வு அதிகரிப்பதற்குப் பதிலாக வேடிக்கையே அதிகரித்திருக்கிறது.

2020ம் ஆண்டு புள்ளி விவரப்படி இந்திய அளவில் 3,66,138 சாலை விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன. இவ் விபத்துகளில் 1,20,806 மரணங்கள். சற்றேறக்குறைய பாதியளவு. 2022ம் ஆண்டில் இந்திய அளவில் தமிழகமே விபத்துகளில் முதலிடம். கடந்த 2021ம் ஆண்டில் தமிழகத்தில் 55,713 விபத்துகள். அதில் 14,912 பேர் இறந்திருக்கிறார்கள். 19,537 பேர் கடுமையாக காயமடைந்திருக்கிறார்கள்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளைக் காட்டிலும் அதிவேகத்தில் ஓட்டுவதும், தவறான வழியில் ஓட்டுவதும், கைப்பேசியைப் பயன்படுத்திக் கொண்டே ஓட்டுவதும் தான் அதிகளவில் விபத்துகளை ஏற்படுத்தியிருக்கின்றன என்கிறது ஆய்வறிக்கை. வாகனங்கள் என்பவை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு நம்மை கொண்டுபோய் சேர்ப்பவை என்ற எண்ணம் போய், அவை வேடிக்கை செய்வதற்கானவை என்ற எண்ணம் இளைஞர்களிடையே பரவலாக உருவாகிவிட்டது.

நமது நாட்டில் வாகனங்களை ஓட்டுவதற்கு பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை என்பதை சாலைகளில் போகும் வாகன ஓட்டிகளை வைத்தே கணித்துவிடலாம். கைபேசியில் பேசிக்கொண்டு மட்டுமல்ல. வாட்ஸ் ஆப்பையும், செய்திகளையும், முகநூலையும் பார்த்துக் கொண்டு கூட சிலர் இருசக்கர வாகனங்களை ஓட்டுகிறார்கள். வேக நிர்வாகம் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று. மனித நடமாட்டம் அதிகம் இருக்கிற பகுதிகளில் வேகத்தைக் குறைக்க வேண்டும் என்று அவர்கள் என்ணுவதேயில்லை. வண்டியில் ஏறியமர்ந்ததால் ராக்கெட் வேகம் தான்.

சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது இங்கு மிகச்சாதாரணம். எங்கள் நகரத்தின் முக்கிய இடங்களில் பள்ளி மாணவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டக்கூடாது என்று காவல் துறை பதாகைகளை வைத்தது. அதனால் ஒன்றும் பலனில்லை. அந்தப் பதாகையை படித்துக் கொண்டே வண்டிகளை ஓட்டிச்செல்கிற சிறுவர்களைதான் பார்க்க முடிந்தது!

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

ஆட்டோக்களில் மட்டுமின்றி இருசக்கர வண்டியிலும் ’ஓவர் லோட்’ உண்டு. நான்கு பேர் கூட உட்கார்ந்து ஓட்டிப் போவதை சாதாரணமாக பார்க்க முடியும். சுமைகளை ஏற்றிச்செல்லும் லாரிகளும், சின்ன லாரிகளும் கூட நமக்கு மனிதர்கள் பயணம் செய்கிற வாகனங்கள் தான்! எல்லோரும் ஹெல்மெட்டை அணிவதில்லை. எல்லோரும் சீட் பெல்ட்டை போடுவதில்லை. இருசக்கர வாகன விபத்துகளில் 44.43% மரணங்கள் தலைக்கவசம் அணியாததால் நடப்பதாக அறிக்கைகள் சொல்கின்றன.

அதிக வேகம், அதிக சுமை, அதிகப் பயணிகள், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்கு எரியும் சிக்னலை பொருட்படுத்தாமல் செல்லுதல், வாகனம் ஓட்டுகையில் கைப்பேசியை பயன்படுத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுவோரின் ஓட்டுநர் உரிமங்களை ரத்துசெய்யலாம் என உச்சநீதிமன்றம் பரிந்துரைத்திருக்கிறது. அதன் படி எத்தனைப் பேரின் ஓட்டுநர் உரிமத்தை இதுவரை போக்குவரத்துத் துறை ரத்து செய்திருக்கிறது என்ற புள்ளிவிவரம் கிடைக்குமா?

பெரும்பாலான வாகன விபத்துகள் மனிதர்களின் விதிமீறலாலும், வேண்டுமென்றே செய்கின்ற தவறுகளாலும் தான் நடக்கின்றன. முன்னால் செல்கிறவரையோ, பின்னால் வருகிறவரையோ கவனிக்காமலும், பொருட்படுத்தாமலும் தான் பலரும் வண்டிகளை ஓட்டுகிறார்கள். சக பயணிகளை மதிப்பதில்லை. போக்குவரத்து அறிவிப்புகளை ஒழுங்காக கவனிப்பதில்லை. அவற்றைப் பொருட்படுத்துவதும் இல்லை.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

விபத்துகளுக்கு காரணம் சாலைகளின் தரம், அதிகப்படியான வாகனங்கள், அதிகப்படியான மக்கள் என்றும் சிலர் சொல்லக்கூடும். மறுப்பதற்கில்லை. ஆனால் அவை மிகக்கடைசியில் வைக்கவேண்டிய காரணங்கள். மிக முதன்மையாக மனித நடத்தைதான் அனைத்துக்கும் காரணமாகின்றன. டிராபிக் ஜாம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? யாராவது ஒருவர் பொது சிந்தனையும், சுரணையும் இல்லாமல் தனது வாகனத்தை சாலையில் குறுக்காக நிறுத்துவது தானே? அப்படி ஏற்படும் போது வாகன ஓட்டிகள் எதிரும் புதிருமாக தங்கள் விருப்பத்திற்கேற்ப நுழைந்து முற்றிலுமாக வழியை அடைத்துக் கொள்வதால் தானே? கட்டுக்கோப்பும், பொது ஒழுக்கம் இல்லாத, பயிற்றுவிக்கப்படாததாக, தாந்தோன்றித்தனமான சமூகமாக நம்முடைய சமூகம் இருப்பதை நாம் சாலைகளில் தான் பார்க்க முடியும். அந்த அளவுக்கு அவலமான காட்சிகள் அரங்கேறுகின்றன.

லேசான காயத்தை உருவாக்கியது முதல் ஒரு வாரம் வரைக்கும் நடக்க முடியாமல் முடக்கிப் போட்ட விபத்துகளில் சில தடவைகள் சிக்கியிருக்கிறேன். அத்தருணங்களை மீண்டும் நினைக்கும்போது மனதில் அச்சம் உருவாகிறது. நெடுஞ்சாலை ஓரமாக இருக்கின்ற ஓர் ஊரில் ஆடுகளை சாலையிலேயே விட்டு வளர்ப்பார்கள். வேலைக்குச் சென்று கொண்டிருக்கும் போது அந்த ஊரை கடக்கையில் சடாரென ஓர் ஆட்டுக் குட்டி குறுக்கே வந்தது. பிரேக் பிடித்து நிலைத் தடுமாறி சில அடிகள் இழுத்துச் செல்லப்பட்டேன்.

காட்டுப் பாதையில் சென்று கொண்டிருக்கையில், சாலை வளைவில் ஹாரன் அடிக்காமல் இருசக்கர வாகனத்தில் சரேலென வந்து கடந்தான் ஓர் இளைஞன். அப்போதும் விழ நேர்ந்தது. மோதிவிடாமலிருக்க பிரேக் பிடித்து பாதையோரத்திலிருக்கும் பாறையில் உரசி விழுந்தேன். அந்தத் தடவை ஒருவாரத்துக்கு இயல்பாய் நடக்க முடியவில்லை. எல்லாரும் வேலைக்குப் போகிற காலை நேரத்தில் எங்கள் நகரத்தின் பிரதான சாலையைக் கடப்பது பெரும் சவால். சாலைக்கு நடுவே எடுக்கப் பட்டிருக்கும் தடுப்புச்சுவரில் பத்தடிக்கு ஒரு வழியை விட்டு வைத்திருப்பதால் எதிரும் புதிருமாக ஆட்கள் நுழைவார்கள்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலையில் ஷேர் ஆட்டோக்களின் கூட்டம் வேறு (ஷேர் ஆட்டோக்களைப் பற்றி தனியாக எழுதவேண்டும்!). நெரிசல் அதிகரிக்கும்போது சில மீட்டர் தொலைவுக்கு ஊர்ந்து தான் செல்ல வேண்டும். பள்ளிக்கு மகளை அழைத்துச் சென்று கொண்டிருந்த ஒருவர், தன் வாகனத்தால் என்னுடைய வாகனத்தை வேகமாக இடித்தார். நான் அதிர்ந்து திரும்பியதும் அவர் சற்றே மிரட்டும் தொனியில் சொன்னார்.

“ஒன்னும் சொட்டையாகல போ சார்!”

கிராமத்துச் சாலை ஒன்றில் வேகத் தடுப்பை கடப்பதற்கு பிரேக் பிடித்து சென்றபோது, பிரேக் பிடிக்காமல் வந்து பின்னால் மோதி அவரும் விழுந்து என்னையும் விழவைத்தார் ஒரு பெரியவர். டமார் என்று மோதிய சத்தம். எல்லாம் முடிந்துவிட்டது என்று நினைத்துக் கொண்டேன். நான் தடுமாறி எழுந்து நின்று, வேகத்தடுப்பு பலகையை பார்க்கவில்லையா என்று அவரிடம் சத்தம் போட்டேன். அவர் பரிதாபமாக விழித்தபடி இல்லையென்றார். அவருக்கு அந்தப் பலகையைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.

விபத்துகள் கவனக்குறைவால் மட்டுமல்ல, அலட்சியத்தாலும் நடக்கின்றன. இந்த விபத்துகளில் நாம் நமது அன்புக்கும் காதலுக்கும் உரியவர்களை இழந்துவிடுகிறோம். தடை இல்லாமல் போகும் வாழ்க்கைக்கு விபத்து முற்றுப்புள்ளி வைத்துவிடுகிறது. ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறோம். உறுப்புகளை இழந்துவிடுகிறோம். அரிதினும் அரிதான வாழ்க்கையையே இழந்துவிடுகிறோம். வேகம் ஒரு போதை. அதற்கு அடிமையானால் அது நம்மை முடக்கிப் போட்டு விடும். வேகம் வேடிக்கையல்ல.

*

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 15

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment