Advertisment

அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் - 8

Tamil writer Azhagiya Periyavan New Series about Teachers Tamil News: கற்றுக் கொடுக்கிறவருக்கும், கற்றுக் கொள்கிறவருக்கும் இடையே வெற்றிடம் இருக்கிறது. அதை வெற்றிடம் என்று சொல்வதைக் காட்டிலும் ’அநீதியின் பள்ளத்தாக்கு’ என்று சொல்வதே சரியாக இருக்கும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Azhagiya Periyavan’s Tamil Indian Express series part - 8

Azhagiya Periyavan

*

அழகிய பெரியவன்

*

எல்லோரும் சமம் தானே டீச்சர்?

*

புகழ்ப்பெற்ற தெலுங்குக் கவிஞரும், இதழியலாளருமான சதிஷ் சந்தர் எழுதிய பஞ்சம வேதம் கவிதைத் தொகுதியில் ஒரு கவிதை உண்டு (தமிழில்: புதிய கையெழுத்து, விடியல் பதிப்பகம், 2003). ஓர் ஆசிரியர், கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு பதினேழு மதிப்பெண்களை மட்டுமே கொடுத்து தோர்ச்சியை வழங்காததாலும், வகுப்பறையில் ஓயாமல் சாதியைச் சொல்லி திட்டுவதாலும், ரேஷன் கடையில் வழங்கப்படும் மண்ணெண்ணையைக் கொண்டே, தற்கொலை செய்துகொள்ளும் ஒரு மாணவன் எழுதுவதைப் போன்ற நீண்ட கவிதை அது.

Advertisment
“உங்கள் கை விரல்களை எண்ணி
எனக்கு கணக்குச் சொல்லித் தந்தீர்கள்
செத்தாலும் புரியாதென்று
என்னைச் சபித்தீர்கள்
சாகும் போதுதான்
இது எனக்குப் புரிந்தது
எப்படிக் கூட்டிப் பார்த்தாலும்
என் கையில் இருப்பது
நான்கு விரல்கள் மட்டுமே
……………அய்யா!
நீங்கள் சொல்லுங்கள்
பஞ்சம சாதி என்பது யார்?
ஐந்தாவது விரல் இல்லாதவனா?
என் முப்பாட்டன்
ஏகலைவனிடமிருந்து
நான் கற்றுக் கொண்டது இதுதான்”

இந்தக் கவிதையை தொடக்கத்தில் படித்தபோது பலநாள் யோசித்தேன். பெரும் மன உளைச்சலுக்கு ஆளானேன். இப்போதும் கூட இக்கவிதை நினைவுக்கு வருமானால் ஒரு வினாடி மெல்லிய மன அதிர்வுக்கு ஆளாவேன். ஒரு கைவிரல் இல்லாத சந்ததி என்பதும், அவ்விதம் ஒருவிரல் இல்லாததால் (கணக்குத்) தேர்வில் எப்படிக் கூட்டி விடைகளை எழுதினாலும் மதிப்பெண்கள் வருவதில்லை என்பதும் எவ்வளவு பெரிய குறியீடுகள்! ஒரு வேதனை மிகுந்த வரலாறை எத்தனை துன்பியல் அழகோடு கவிஞன் பதிவு செய்துவிட்டான்!

இராமநாதபுரம், குளத்தூர் பள்ளி ஆசிரியர், மாணவனிடம் பேசுகின்ற ஒலிப்பதிவை கேட்கும்போது மீண்டும் அதே வேதனையை உணர்ந்தேன். அதைக் கேட்டு முடிக்கையில் பதைபதைப்பு தொற்றிக்கொண்டது. இங்கும், சதீஸ் சந்தர் கவிதையில் வருவதைப் போன்ற அதே ஆசிரியர்-மாணவர் தான். ஆனால் மாணவர் தலித் அல்லாத மக்கள் திரளிலிருந்து ஒரு சமத்துவ விரும்பி. மாணவர் கேட்கிறார். ”எல்லாரும் சமம் தானே டீச்சர்?” சாதி நோய் பீடித்த அந்த ஆசிரியர் அதைத் தவறு என்று மறைமுகமாகச் சொல்கிறார். ”அப்படி சொல்லுதியா நீ? நல்ல பையானா பேசுதியே!” சமத்துவம் நல்லதில்லை என்று மாணவனை வஞ்சகமாய்ப் புகழ்ந்து, ஒரு தெள்ளிய மனதை கொலை செய்கிறார்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

அந்த ஆசிரியரிடம், அந்த மாணவர் கேட்ட கேள்வி காலத்தின் கேள்வி. இன்றைய ஆசிரியர் மாணவர் பிம்பங்களை பொதுச் சமூகத்துக்கு துல்லியமாக வழங்கியிருக்கிற கேள்வி. கற்றுக் கொடுக்கிறவர்கள் இன்னும் பிற்போக்குச் சிந்தனையோடு தான் இருக்கிறார்கள். கற்றுக் கொள்கிறவர்களோ காலத்தைக் கடந்து சிந்திக்கத் துடிக்கிறார்கள். கற்றுக் கொள்கிறவர்கள் அநீதியான சாதியச் சமூகக் கட்டமைப்பை வெறுக்கிறார்கள். அவர்கள் இதிலிருந்து விடுபட விரும்புகிறார்கள். கற்றுக் கொடுக்கிறவர்கள் அதை அனுமதிக்காமல் பிடித்து இழுக்கிறார்கள்.

கற்றுக் கொடுக்கிறவருக்கும், கற்றுக் கொள்கிறவருக்கும் இடையே வெற்றிடம் இருக்கிறது. அதை வெற்றிடம் என்று சொல்வதைக் காட்டிலும் ’அநீதியின் பள்ளத்தாக்கு’ என்று சொல்வதே சரியாக இருக்கும். வெறுமனே எண்ணையும் எழுத்தையும் கற்றுத்தருவது என்ற அளவிலேயே இந்தியக் கல்விமுறை நொய்ந்து நலிந்து விட்டது. அதற்கேற்ப ஆசிரியர்களும் சுருங்கிவிட்டனர். அதிலும் கூட யாருக்குக் கற்றுத்தரலாம், யாருக்குக் கற்றுத்தரக் கூடாது என்ற வரையறையும் உண்டு. ஒருவேளை இன்று இந்த வரையறையை வெளிப்படையாய் அமல்படுத்தாதவாறு நாட்டின் சட்டங்கள் தடுக்கலாம். ஆனால் சந்தர்ப்பம் கிடைக்கிற போதெல்லாம் குளத்தூர் ஆசிரியரைப் போல சட்டத்தை மீறி அதை சிலர் வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றனர்.

ஆசிரியர்கள் யாருடைய பிரதிநிதிகள்?

ஆசிரியர்கள் வானத்திலிருந்து குதித்துவிடுவதில்லை. அவர்களும் இந்தச் சமூகத்தில் தான் பிறக்கின்றனர். அவர்களுக்கும் குளத்தூர் ஆசிரியர் சொல்லிக் கொடுத்ததைப் போன்று யாரேனும் சொல்லிக் கொடுத்து தானிருப்பார்கள். ஒருவேளை அந்த மாணவன் பேசியதைப் போலவும் அந்த ஆசிரியர் தன் மாணவப் பருவத்தில் ’நல்லவராகப்’ பேசியிருக்கக் கூடும்! ஆனால் காலப்போக்கில் புதியன கழிதலும் பழையன புகுதலும் என்ற நிலையை சிந்தனையளவில் அவர் அடைந்திருக்கலாம்.

இந்தியாவில் மதம், பண்பாடு, மரபு, பழமை என்று வலியுறுத்தப் படுகின்ற வற்றையெல்லாம் ஏற்றுக்கொண்டு சமூகம் இயங்கிக் கொண்டிருப்பதைப் போல ஆசிரியர்களும் இயங்கிக் கொண்டிருப்பதில் இருந்தே இந்தச் சிக்கல்கள் தொடங்குகின்றன. ஆசிரியர்கள் யாருடைய பிரதிநிதிகள்? சமூகத்தின் பிரதிநிதிகளா? அல்லது சமூக மாற்றத்தின் பிரதிநிதிகளா? பொதுச்சமூகம் சரியென்று வலியுறுத்துகிற எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்வதல்ல அறிவுத்துறை. அதற்கு சுய சிந்தனையும், பகுத்தறிவும் உண்டு. கல்வித்துறை அறிவுத்துறை தானே? மிகத்தெளிவாக ’கற்க கசடு அற’ என்றார் வள்ளுவர். இங்கோ கசடை வைத்துக் கொண்டே கற்பது என்கிற நிலைதானே நீடிக்கிறது?

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

எந்த வருணத்தைச் சேர்ந்தவன் என்று தெரியாததால் கர்ணனுக்கும், பழங்குடியினத்தவன், பஞ்சமன் என்பதனால் ஏகலைவனுக்கும் கற்பிக்க மறுத்த துரோணரை மிகச்சிறந்த ஆசிரிய முன்மாதிரியாக போற்றத் தொடங்கு வதிலிருந்தே இந்திய அறிவுத்துறையின் வீழ்ச்சியும் தொடங்கிவிடுகிறது. துரோணர் பெயரிலும், இராதாகிருஷ்ணன் பெயரிலும் தானே இங்கு சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன? சமத்துவ சமூகம் மலர்ந்திட இந்த இரண்டு பெரும் ஆசிரியர்களும் சொல்லிச் சென்றிருக்கும் கருத்துகள் என்ன? என்ன வகையான முன்மாதிரிகளை இவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்? இவர்களுடன் மேட்டுக்குடி அடையாளம் ஒட்டிக்கொண்டு இருக்கிறதா இல்லையா? இந்தியாவில் ஆசிரியராக விரும்பும் ஒருவருக்கு விவேகானந்தர், இரபிந்திரநாத் தாகூர், இராதாகிருஷ்ணன் போன்றோரின் கல்விச்சிந்தனைகளே கற்பிக்கப்படுகின்றன. ஜோதிபா புலே, சாவித்திரிபாய் புலே, அம்பேத்கர், அபுல்கலாம் ஆசாத், பெரியார் போன்றோரின் கல்விச்சிந்தனைகள் கற்பிக்கப்படுவதில்லை. பிறகு எப்படி சிந்தனையைத் தூண்டும் ஆசிரியர் சமூகம் மலரும்?

சமூகம் தனக்குக் கற்பித்திருப்பதே சரி. தான் எண்ணுவதே சரியானது என்ற தன்னிலை தலைக்கன கருத்து நிலையிலேயே இங்கு முக்கால் விழுக்காட்டு ஆசிரியர்கள் உள்ளனர். இரண்டாயிரத்தின் தொடக்க ஆண்டுகளில் நிரந்தர வேலைக் கிடைக்காத சூழலில் ஒரு மேல்நிலைப் பள்ளியில் வேலை செய்தபோது நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அந்தப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்துவந்த தலித் மாணவி ஒருவர் செய்முறைத் தேர்வுக்குப் பிறகு, தன் காதலனோடு வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார். ஒன்றிரண்டு நாட்களிலேயே இரண்டு குடும்பத்தினரும் அவர்களைக் கண்டுபிடித்து அழைத்துவந்து ஏற்றுக் கொண்டனர். வழக்கு, காவல் நிலையம் என்று அவர்கள் போகவில்லை.

அந்த மாணவி தரப்பைச் சேர்ந்த ஒருவர், பொதுத்தேர்வு நடப்பதற்கு இரண்டொருநாள் முன்னதாக என்னைச் சந்தித்து, அந்த மாணவி தேர்வு எழுதுவதற்கு உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார். நான் அவரை தலைமையாசிரியரிடம் அழைத்துப் போனேன். தலைமையாசிரியரோ திருமணத்தைக் காரணம் காட்டி தலித் மாணவி தேர்வெழுதுவதற்கு அனுமதியளிக்க மறுத்துவிட்டார். திருமணம், வழக்கு எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். அதை இருவீட்டாரும் பார்த்துக் கொள்வார்கள். ஆனால் தேர்வு எழுதுவதற்கும், மாணவியின் திருமணத்துக்கும் தொடர்பு இல்லை. கல்வித்துறை விதிகளும் அவ்வாறு இல்லை. எனவே அவரைத் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டுப் பார்த்தேன். நகரத்திலிருந்த தலித் அமைப்புகள் மூலமாகவும் அவரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்தத் தலைமையாசிரியர் ஒரு மில்லி மீட்டர் கூட கீழிறங்கி வரவில்லை. பிறகு மாணவி தரப்பினர் உயரதிகாரி, மனுகொடுத்தல் என்று அலைந்தார்கள். ஆனால், அதே ஆண்டில், அந்தத் தலித் மாணவியைப் போலவே, தேர்வுக்கு முன்பாகத் திருமணம் செய்து கொண்ட தலித் அல்லாத மாணவி ஒருவரை அந்தத் தலைமை ஆசிரியர் தேர்வெழுதுவதற்கு அனுமதித்தார்.

வேறொரு பள்ளியில் அரசியல் அமைப்புச் சட்டம் குறித்த பாடத்தை நடத்திக் கொண்டிருந்த போது, அரசியலமைப்பின் தந்தை அம்பேத்கர் என்றேன் நான். அந்த வகுப்பிலிருந்த மாணவன் ஒருவன் மறுநாள் என்னை அச்சுறுத்தும் வகையில் மறுத்துப் பேசினான். “அம்பேத்கர் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் மட்டும் தான். நீங்கள் அவரைப்பற்றி மிகைப்படுத்திச் சொல்கிறீர்கள்” என்றான். அந்தப்பள்ளி இருந்த ஊரோ வீரர்களுக்குப் பெயர்போனது. என்னிடம் அவனை அப்படி பேசவைத்தது அப்பள்ளியின் தலைமையாசிரியர் தான் என்று பின்னர் அறிய முடிந்தது.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

பள்ளி, ஆசிரியர்கள், சாதியம் ஆகியவற்றை தொடர்பு படுத்தி அவ்வப்போது செய்திகள் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. பள்ளியில் படிக்கும் தலித் மாணவர்களுக்கு பெறப்பட்ட கல்வி உதவித்தொகையை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் வைத்திருந்த தலைமையாசிரியர் ஒருவர் மீது கல்வித்துறை நடவடிக்கை எடுத்த செய்தி ஒன்று அண்மையில் வந்தது.

ஆசிரியர்களுக்கு சங்கம் வைத்துக்கொள்ள உரிமை உண்டு. அச்சங்கங்கள் ஆசிரியர்களின் தனிப்பட்ட நலன்களைக் குறித்து மட்டுமே எப்போதும் கவலைக் கொள்ளும். சாதிய பார்வையுடைய சில அதிகாரிகளின் போக்கோ வேறுமாதிரி இருக்கும். விதிமுறைகளை முன்னிறுத்துகிற போர்வையில் முதலில் மிரட்டிப் பார்ப்பார்கள். பின்னர் ஓய்வுபெறுவதற்கு முன்போ, ஓய்வு பெறும் நாளிலோ ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பழிவாங்கி விடுவார்கள். இந்த வகையான சில அதிகாரிகளைப் பொறுத்தவரை எல்லாம் ’சுமூகமாக’ செல்லவேண்டும். மாற்றம் என்று பேசும் ஆசிரியர்கள் என்றால் இவர்களின் அகராதியில் பொருள் ’தொந்தரவு அல்லது ஆபத்து’. முன்னுதாரண ஆசிரியர்கள் என்று அறியப்படுகின்றவர்களின் பின்னால் இருக்கும் சில கசப்பான அனுபங்களைக் கேட்டுப்பாருங்கள். இம்மாதிரியான சில அதிகாரிகளும், இம்மாதிரியான சில தலைமையாசிரியர்களும், இம்மாதிரியான சில உதவி ஆசிரியர்களும் உண்டு.

ஆசிரியர் யாராய் இருக்கிறார்?

ஆசிரியர் என்ன கற்றுத் தருகிறார் என்பதைவிடவும் முக்கியமானது அவர் யாராய் இருக்கிறார் என்பது. இப்படிச் சொன்னவர் புகழ்ப்பெற்ற அமெரிக்க உளவியல் அறிஞரான கார்ல் மெனிங்கர். காலந்தோறும் இருந்து வந்த பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களில் கணிசமானோர் அறிவு நேர்மையோடும், மனிதத் தன்மையுடனும் இருந்திருந்தால் இந்த நாட்டில் எத்தனை மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் என்று எண்ணிப் பார்ப்பதற்கு நம்மைத் தூண்டுகிறது மெனிங்கரின் கூற்று.

எப்போதுமே சமூகம் ஒற்றைத் தன்மையோடு இயங்குவதில்லை. மாற்றுக் குரல்களும், மாற்றுச் செயல்பாடுகளும், மாற்று மனிதர்களும் சமூகத்தில் உண்டு. கல்வித் துறையிலும் அவ்வகை மாற்று ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தனிப்பட்ட வகையில் அவர்கள் எடுக்கும் முயற்சிகளால் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. தன் சொந்த செலவில் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்தும் ஆசிரியர்கள், கற்பித்தலில் புதுமையைப் புகுத்தும் ஆசிரியர்கள் என இவ்வாறான ஆசிரியர்களின் பட்டியல் எப்போதுமே உண்டு. இதில் சமத்துவச் சிந்தனையோடு மாணவர்களிடம் அதிகளவில் அக்கறை காட்டும் ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். மானுடநேயம் கொண்ட இந்த ஆசிரியர்களிடமிருந்து தான் மிகச்சிறந்த மாணாக்கர்கள் உருவாகின்றனர்.

அம்பேத்கரின் வாழ்க்கையில் மூன்று ஆசிரியர்கள் அப்படி இருந்தனர். தொடக்கப்பள்ளி ஆசிரியரான பந்த்சே, உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான அம்பேத்கர், வில்சன் பள்ளி உதவி ஆசிரியரான கே.ஏ.கெலுஸ்கர். தொடக்கப்பள்ளி ஆசிரியர் பந்த்சே ஒருமுறை மழையில் நனைந்து வந்த சிறுவன் அம்பேத்கரை தன் வீட்டில் குளிக்கவைத்து மாற்று உடையை அளித்திருக்கிறார். ஆசிரியர் கே.ஏ.கெலுஸ்கரோ பள்ளி மாணவரான அம்பேத்கர் படிப்பதற்கு நூல்களை அளித்ததோடு, அவர் மெட்ரிக் தேர்வில் வெற்றி பெற்றபோது பாராட்டு விழாவில் வாழ்த்தியும் ஊக்கப்படுத்தியும் பேசியிருக்கிறார். கடும் நெருக்கடி நேரங்களில் பண உதவி செய்து, பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட்டிடம் அழைத்துப்போய் அறிமுகப்படுத்தி மேற்படிப்பிற்கான உதவித்தொகையைப் பெறுவதற்கும் உதவியிருக்கிறார் கெலுஸ்கர்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

இவர்களில் அம்பேத்கர் என்ற ஆசிரியரின் பெயர் வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒன்று. வியப்பூட்டும் வகையில் மாணவன் பெயரும், ஆசிரியர் பெயரும் ஒன்றாக இருந்தது அம்பேத்கரின் வாழ்க்கையில்தான் என்று நினைக்கிறேன். அம்பவடே என்ற ஊரிலிருந்து வந்ததால் அம்பேத்கரின் பள்ளிச் சான்றுகளில் அவர் பெயர் அம்பேத்கர் என்றே பதியப் பட்டிருந்தது.

ஆசிரியர் அம்பேத்கர் ஆசிரியப் பணியில் சுமாரானவர்தான். அவர் தன் வகுப்பை ஒரு மாணவனிடம் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, பள்ளிக்கு அருகில் இருக்கும் புகையிலைக் கடையில் கணக்குப் பிள்ளையாக வேலை செய்வார். கல்வி அதிகாரிகள் வந்தால் ஒருவழியாக சமாளிப்பார். ஆனால் இந்த ஆசிரியர் தான் மாணவர் அம்பேத்கரிடத்தில் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். அக்கறை காட்டினார்.

பின்னாளில் பெரும் ஆளுமையாகி வட்டமேசை மாநாட்டுக்கு அம்பேத்கர் சென்றபோது, அதைப் பாராட்டியும் வாழ்த்தியும் ஆசிரியர் அம்பேத்கர் எழுதியிருந்த கடிதத்தை ஒரு புதையலைப் போல அறிவர் அம்பேத்கர் வைத்திருந்தார் என்பது வரலாறு. (ஆதாரம்: டாக்டர். பி. ஆர். அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு, தன்ஞ்செய் கீர்). இன்றைக்கு மட்டுமின்றி என்றைக்குமே மனித விழுமியங்களைப் போற்றுகிற, வளர்த்தெடுக்கிற ஆசிரியர்கள் தான் இந்தச் சமூகத்துக்குத்து தேவைப்படுகிறார்கள்.

எதிரிலிருந்து வரும் குரல்

அங்கிங்கெனாதபடி காற்றைப் போல் எங்கும் சாதி பரவியிருக்கிற இந்நாட்டில் தலித் அல்லாத தரப்பிலிருந்து ஒரு சமத்துவக் குரல் ஒலிப்பது எப்போதுமே பெரும் மகிழ்ச்சியைத் தருகிற ஒன்றாகும். தலித் மாணவரைத் தாக்கும் சக மாணவர்கள், சாதி அடையாளத்தை தெரிவிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளைக் கட்டிக்கொண்டு வரும் மாணவர்கள், சாதியப் பெருமிதத்தை அறிவிக்கிற பனியன்களை அணிந்துவரும் மாணவர்கள் என்று தொடர்ந்து கேட்டுவரும் வேளையில், சமத்துவத்தை பேசும் ஒரு மாணவனின் குரல் பெரும் உற்சாகத்தை கொடுக்கிறது.

நாய்க்குட்டியைக் காப்பாற்றிய மாணவர், கொரொனாவுக்கு நிதியளித்த மாணவர், ஆட்டோவில் தவறவிட்ட பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர் போன்ற பல மாணவர்களை விடவும் முக்கியமானவர் எல்லாரும் சமம் தானே டீச்சர் எனக்கேட்ட மாணவர்! பிற செயல்கள் இரக்கத்தினால் உந்தப்பட்டு விளைந்தவை. பின்னதோ சமூக மாற்றத்தை விரும்பியதால் எழுந்தது. இந்த அரிய குரல் பலகுரல்களாகி சமத்துவ சேர்ந்திசையாய் ஒலிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் தேவை. இதை மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

பள்ளிகளில் சாதி ஒழிப்பைக் குறித்தோ, சாதியக் கொடுமைகளைக் குறித்தோ வெளிப்படையாக பேச இயலாது. ஆனால் இந்த நோக்கங்களை உள்ளடக்கிய நடவடிக்கைகளை தாராளமாக மேற்கொள்ள முடியும். எல்லா பாடநூல்களிலும் முகப்புச் செய்தியாக அச்சிடப்பட்டிருக்கும் ‘தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்’ என்ற செய்தியை வைத்துக்கொண்டே கூட ஆசிரியர் பாடம் நடத்திட முடியும்.

அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சமத்துவநாள் கொண்டாட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிற மிகுந்த பாராட்டுக்குரிய ஆணை இதன் ஒரு அங்கம்தான். இந்த அரசாணையை செயல்படுத்துவதில் காலம் தாழ்த்துவதோ, சுணக்கமோ இருகக்கூடாது என்பதைக் கருதித்தான், சமத்துவ நாள் திறன்போட்டி முடிவுகளை அன்று மாலையே அளித்துவிட வேண்டும் என்றது அரசு.

இந்தச் செயல்பாடுகளுடன் வேறு சிலவற்றையும் கூட செயல்படுத்தலாம். ஒரு பள்ளியிலிருந்து இன்னொரு பள்ளிக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் சென்று கலந்துரையாடி வருகிற பள்ளிப் பரிமாற்றத் திட்டம் ஒன்று இப்போது நடைமுறையில் உள்ளது. அதைப்போலவே நாட்டுநலப்பணி திட்டம் சார்பிலோ, களப்பயணம் என்ற வகைமையிலோ, அனுபவப் பரிமாற்றம் என்ற பெயரிலோ, எல்லா மாணவர்களும் எல்லா குடியிருப்புகளுக்கும் சென்று அங்கிருக்கும் வாழ்க்கை நிலைமைகளை அறிந்து, மக்களுடன் கலந்துரையாடி வருவது போன்ற நிகழ்ச்சிகளை வடிவமைக்கும்போது பயனை விளைவிக்கும்.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

எதிரெதிர் பக்கங்களைக் காட்டினாலும், மனிதரிடையே தடையை ஏற்படுத்தி வைத்திருக்கிறது சாதி-நெகிழித் திரை. வேதி-நெகிழியைப் போலவே சாதி-நெகிழியும் ஆயிரமாண்டுகளாகியும் மக்கவேயில்லை. கற்பிதங்களைக் களைந்து, இதைக் கிழித்தெறிவதற்கு கலந்துரையாடலும், நட்பாடலும், உறவாடலும் தான் நமக்குத் தேவைப்படுகின்றன. இதில் சில தனிமனித குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் தீர்வென்பது கலந்துறவாடல் என்ற ஒன்றில்தான் இருக்கிறது. தலித் மக்களிடத்தில் அம்பேத்கரையும், தலித் குடியிருப்புகளில் சாதியொழிப்பையும் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பதால் அவர்களை அணித்திரட்டலாமே ஒழிய வேறு எந்தப் பயனும் விளையப் போவதில்லை. நாம் சாதியொழிப்பை பேசவேண்டிய இடம் தலித் அல்லாதோரிடமும், ஊர்களிலும் தான்.

ஆசிரியர் கற்க

குளத்தூர் ஆசிரியரின் கருத்து நிலையைக் கொஞ்சம் அலசிப்பார்த்தால் அவர் கொண்டிருக்கும் திடமான நம்பிக்கைகள் புலப்படும். பள்ளி பெற்றோர் ஆசிரியர் குழு தலைமைப் பொறுப்பை ஒருசாராரிடமே கொடுத்துவிடக் கூடாது. எல்லாரும் இருக்கும் படி அது பொதுவாக இருக்க வேண்டும் என்று பேசுகிறார் அவர். பொது என்று அவர் கருதிக்கொண்டிருப்பது தலித்மக்கள் நீங்கிய ஒன்றைத்தான்! ’சாதி தடையில்லை. எஸ்டி எஸ்சி தவிர’ என்று மேட்ரிமோனியல் விளம்பரங்கள் வருமே அதைப் போல! இந்த மண்ணின் பூர்வக்குடிகள் என்றாலும் தலித் மக்கள் வாழும் இடங்கள் காலனி என்று அழைக்கப்படுகிறதே அதுபோல. இட ஒதுக்கீடு என்பது நூறுவிழுக்காடு. அதில் தலித் மக்கள் பெறுவது பதினெட்டு சதவிகிதம் தான் (ஒன்றிய அரசுப் பணிகளில் 15 சதவிகிதம்). ஆனால் நூறுவிழுக்காட்டையும் தலித் மக்களே அபகரித்துக் கொள்வதைப் போன்றதொரு பொய்ப்பரப்புரை தொடர்ந்து பரப்பப்படுகிறதே அதுபோல.

தலித் மக்களுக்கு பொதுவில் இடமில்லையா? அவர்கள் என்ன வேற்று கிரகவாசிகளா? என்றெல்லாம் அந்த ஆசிரியர் யோசிக்கவேயில்லை. நாடு முழுக்கவும் பல உயர் பதவிகளில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் இடங்களிலேயே அவர்கள் அமர்த்தப்படவில்லை. நாடு விடுதலையடைந்து இத்தனை ஆண்டுகளாகியும் தலித் முதல்வரோ, தலித் பிரதமரோ, தலித் நிதியமைச்சரோ, தலித் உள்துறை அமைச்சரோ, தலித் தலைமைச் செயலாளர்களோ இன்னமும் இல்லை என்பதெல்லாம் அவருக்குத் தெரியுமா? தன்னை இன்ன சாதி என்று கூச்சமில்லாமல் சொல்லிக் கொள்கிறாரே அந்தச் சாதியின் சமூகவரலாறாவது அவருக்குத் தெரியுமா? அவர் கொண்டிருப்பது அடிப்படையில்லாத, போலி வரலாற்றுடன் சேர்ந்த, வெற்றுப் பெருமித உணர்வுதான். அதுவும் அவர் ஒருபெண் ஆசிரியர். மதங்களின் சாதி உணர்வோ புனிதப்படுதப்பட்டது. ஆண்களின் சாதி உணர்வு கௌரவம், வீரம் ஆகியவற்றுடன் இணைந்தது. பெண்களின் சாதியுணர்வோ அன்புமயமானது. இது முந்தைய இரண்டைவிடவும் மோசமானது.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ‘ஒவ்வொரு விரலிலும் உலகம்’ – 1

தொடர் கற்றல் என்பது கல்வியின் அடிப்படை. ஆனால் ஆசிரியராக பணிக்கு வரும் ஒருவர் தொடர்ந்து கற்கிறாரா? அன்றாடம் நாளேடுகளைக்கூட படிக்காத ஆசிரியர்களும் இருக்கவே இருக்கிறார்கள்! முதலில் ஆசிரியர்கள் தங்களை சமூக மாற்றத்தை நோக்கிய பணியில் ஈடுபடுத்திக் கொள்கிறவர்களாக உணரவேண்டும். வெறுமனே ஊதியம் ஈட்டுகிற பணியல்ல ஆசிரியர் பணி. ஆசிரியர் பணி அறப்பணி என்பது அலங்காரத்துக்குச் சொல்வதல்ல.

ஆசிரியர்களுக்குக் கற்பிப்பது உலக நாடுகளெங்கிலும் தொடர் செயல்பாடாக இருக்கிறது. ‘Educating Teachers- New Practices for New Millennium என்ற பெயரில் அங்கு ஆசிரியர்களுக்கென்று கையேடுகள் வெளியிடப்படுகின்றன. நம் ஆசிரியர்களுக்கும் இங்கு கலைத்திட்டம் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் கட்டாயமாகவும், முழுமையாகவும் அவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அண்மைக்காலமாக ஒவ்வொரு பயிற்சியின் இறுதியிலும் மதிப்பீட்டுத் தேர்வும் நடக்கிறது. இவற்றுடன் இணைந்தார்போல சமூக வரலாற்றையும், சமூக இயங்கியலையும் ஆசிரியர்களுக்கு கற்பிக்கவேண்டிய அவசியம் இருக்கிறது. இந்திய வரலாறென்பது பொற்கால வரலாறல்ல. சாதியின் பெயரால் மனிதரை மனிதர் ஒடுக்கிய வரலாறு. இன்னும் ஒடுக்குகிற வரலாறு. இந்த வரலாற்றைப் புரிந்துகொண்டு அதைக் களைவதற்கு கற்பிப்பதுதான் ஓர் உண்மையான ஆசிரியரின் வேலை.

இதையும் படியுங்கள்: அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 9

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment