மாட்டிறைச்சி அரசியல்: தயக்கத்தை வெளிப்படையாக்கிய தமிழக அரசு!

அப்பேர்ப்பட்ட ஜெயலலிதாகூட மத்திய அரசின் இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பை ஆதிரித்திருக்க மாட்டார்....

கண்ணன்

இந்திய அரசு, விலங்கு சந்தைகளில் இறைச்சிக்கு மாடுகளை விற்கத் தடை விதித்திருப்பது கிட்டத்தட்ட மாட்டிறைச்சி மீதான தடையாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் மாட்டிறைச்சி அனுமதிக்கப்படுகையில் மத்திய அரசு தன்னிச்சையாக மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது மாநில அரசுகளின் உரிமையைப் பறிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

மாட்டிறைச்சி அனுமதிக்கப்படும் மாநிலங்களில் கேரள மாநிலம்தான் இந்த மாட்டிறைச்சிப் பிரச்சனைக்குத் தீவிரமான எதிர்வினை ஆற்றியிருக்கிறது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இதை எதிர்த்துக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மாடுகள் விற்பனை தொடர்பான மத்திய அரசின் புதிய விதிகளைப் பின்பற்ற முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்லியுள்ளார். மேலும் இதை எதிர்த்து நீதிமன்றத்தை நாடவும் தயார் என்று சொல்லியுள்ளார். கேரளத்தில் எதிர்கட்சியாக விளங்கும் காங்கிரஸும் இந்த அறிவிப்பை கடுமையக எதிர்த்துள்ளது. அதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளம், மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் திரிபுரா ஆகிய மாநிலங்களும் மத்திய அரசின் இந்த அறிவிப்பைக் கண்டித்துள்ளன.

ஆனால் தமிழகத்தில் எதிர்கட்சிகள் மட்டுமே கால்நடை விற்பனை மீதான இந்த திடீர்க் கட்டுப்பாட்டை எதிர்த்துள்ளன. திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அறிவிப்பு வெளியான சில மணிநேரங்களில் அதைக் கண்டித்தும், திரும்பப்பெற வலியுறுத்தியும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எஹ்.ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளும் இந்த அறிவிப்பைக் கண்டித்து திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஜூன் 2 அன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மத்திய அரசின் கால்நடைகள் விற்பனை குறித்த புதிய அறிவிப்பு மாநில அரசுகளின் அதிகாரத்தில் தலையிடுவதாகும் என்பதை விளக்கியுள்ளார்.
“மாடு விற்பதைக் கண்காணிக்க மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்கப்படும் என்ற மோடி அரசின் உத்தரவு மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக உள்ளது. மைய அரசின் இந்த வெகுமக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கேரள அரசைப் போல தமிழக அரசும் இதனைக் கடுமையாக எதிர்க்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.”

ஸ்டாலினும் தனது அறிக்கையில் இந்த பிரச்சனையைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளார்.
“மாநில அரசுகளின் அதிகாரங்களை பறிக்கும் இன்னொரு நடவடிக்கையாகவே இந்த அறிவிக்கையைக் கருத வேண்டியிருக்கிறது. மாடுகள் மாநில அரசு சட்டம் இயற்றும் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. அதே போல் மிருகவதை தடுப்புச் சட்டம் மத்திய – மாநில அரசுகள் இரண்டும் சட்டம் இயற்றும் பொதுப் பட்டியலில் உள்ளது. ஆனால் ஜல்லிக்கட்டில் துவங்கி மாட்டு இறைச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரை மாநிலப் பட்டியல் மற்றும் பொதுப் பட்டியல் இரண்டிலும் மாநில அரசுக்கு இருக்கும் அதிகாரத்தை பறிக்கும் அடாவடி அரசியலை தொடர்ந்து மத்தியில் உள்ள பாஜக அரசு செய்துவருகிறது. இது கூட்டாட்சித் தத்துவத்திலோ, மத்திய- மாநில உறவுகளிலோ பாஜகவுக்கு நம்பிக்கையில்லை என்பதை எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது. இது போன்ற தொடர் நடவடிக்கைகள் காலப்போக்கில் மாநில பட்டியலோ பொதுப்பட்டியலோ எந்தப் பட்டியலின் படியும் மாநில அரசுகளுக்கு சட்டமியற்றும் உரிமை இல்லை என்பதுதான் மத்தியில் உள்ள பாஜக அரசின் சிந்தனையா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன்.”

ஆனால் மாநில அரசின் மீதான தலையீட்டைப் பற்றிப் பேச வேண்டிய தமிழகத்தின் ஆளும் கட்சியினர், இந்த அறிவிப்பு வெளியாகி 24 மணிநேரங்களுக்கு மேல் ஆகியும் இது குறித்து இதுவரை வாயைத் திறக்கவில்லை என்பது மட்டுமல்ல. இதைப் பற்றிப் பேசத் தயக்கம் இருப்பதை முதல்வரே வெளிப்படுத்தியுள்ளார். சனிக்கிழமை அன்று செய்தியாளர்கள் மத்திய அரசின் அறிவிப்பு பற்றிக் கேட்டபோது கருத்துக் கூற மறுத்துவிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி.கே.பழனிச்சாமி.

ஜெயலலிதா மறைவு, ஓ.பன்னீர்செல்வம் பிரிந்து சென்றது, அதிமுகவினர் மீதான மத்திய புலனாய்வு அமைப்புகளின் தொடர்ச்சியான சோதனைகள் ஆகியவற்றை அடுத்து தமிழக அரசும் ஆளும் கட்சியும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அடிபணிந்து போவதாகவும் பாஜகவே தமிழக அரசை மறைமுகமாக இயக்குவதாகவும் வலுத்துவரும் குற்றசாட்டுகள் நாளுக்கு நாள் வலுத்துவருகின்றன. அவற்றுக்கு சிகரம் வைத்தாற்போல் மக்களின் உணவு, உரிமை, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை பாதிக்கக்கூடியதாகக் கருதப்படும் இந்த அறிவிப்புக்கும், மாநில அரசின் மீதான உரிமை மீறலாகப் பார்க்கப்படும் இந்த நடவடிக்கைக்கு முதல்வரோ ஆளும் கட்சியினரோ எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

மத்திய அரசின் அறிவிப்பின் மூலம் மாடுகளை விற்பதற்கு மட்டுமல்ல, அவற்றை கோவில்களில் பலிகொடுப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 2001-2006 ஆட்சிக் காலத்தில் அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா தமிழகத்தில் கோவில்களில் மிருகங்களைப் பலிகொடுப்பதைத் தடைசெய்தார். அதைத் தொடர்ந்து 2004 மக்களவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஒரு தொகுதியைக் கூட வெல்லவில்லை. அந்தத் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளே மிருகவதைத் தடையை திரும்பப் பெற்றார்.
அப்பேர்ப்பட்ட ஜெயலலிதாகூட மத்திய அரசின் இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பை ஆதிரித்திருக்க மாட்டார் என்பதும் இதைக் கடுமையாக எதிர்ப்பதில் முதல் ஆளாக நின்றிப்பார் என்றே அரசியல் விமர்சகர்கள் பரவலாகக் கருதுகிறார்கள். மொத்தத்தில் ஜெயலலிதாவின் மரணத்தால் தமிழகம் இழந்தது ஜெயலலிதா என்ற தலைவரை மட்டுமல்ல என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகிக்கொண்டே இருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close