Advertisment

உக்ரைனில் அமைதி; ஜி ஜின்பிங், மோடி செய்ய வேண்டியவை

உக்ரைனில் இராஜதந்திரத்திற்கான வாய்ப்பு வளர்ந்து வரும் நிலையில், அமைதிக்கான தடைகளும் மிக அதிகமாக உள்ளன. ஆனால் அவை போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் இந்தியா மற்றும் சீனா பங்களிப்பதைத் தடுக்கக்கூடாது

author-image
WebDesk
New Update
உக்ரைனில் அமைதி; ஜி ஜின்பிங், மோடி செய்ய வேண்டியவை

சீனாவும் இந்தியாவும் உக்ரைன் போரைப் பற்றிய பொதுவான கவலைகளைத் தாண்டி அமைதியை நோக்கி உறுதியான நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும்

C. Raja Mohan

Advertisment

ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பின் முதலாம் ஆண்டு நிறைவு நெருங்குகையில், இரண்டு முரண்பாடான போக்குகள் வெளிவருகின்றன. ஒன்று, குளிர்கால வாரங்களில் பெரும்பாலும் உறைந்திருந்த ஒரு முன்வரிசையில் புதுப்பிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை உள்ளது. டான்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்யா ஏற்கனவே இராணுவ தாக்குதலை ஆரம்பித்துள்ளது மற்றும் உக்ரைனின் எதிர் தாக்குதல் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. இராணுவ விரிவாக்கத்தின் மத்தியில், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே "பேச்சு வார்த்தைகள் பற்றிய பேச்சு" உள்ளது. நாங்கள் போரில் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்துள்ளோம், சில உயர் அழுத்த அமைதி இராஜதந்திரத்துடன் மேலும் தீவிரமான சண்டைகள் நடைபெறும்.

சீனா இப்போது இந்த கண்ணிவெடியில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வாரம் ஒரு "சமாதான உரையில்", சீன அதிபர் ஜி ஜின்பிங் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்மொழிவுகளின் தொகுப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு முதல் முறையாக உக்ரைனுக்குச் சென்று, மத்திய ஐரோப்பிய நாடுகளின் குழு நேட்டோவின் கிழக்குப் பகுதியை உருவாக்கும் மற்றும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ள "புச்சரெஸ்ட் ஒன்பது" அமைப்பில் உரையாற்றுகிறார். இந்த குழுவின் உறுப்பினர்கள் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்தனர் அல்லது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு சோவியத் செல்வாக்கு மண்டலத்தில் இருந்தனர். உக்ரைனில் நடக்கும் போர் இனி ஐரோப்பாவை மட்டும் பற்றியது அல்ல. உக்ரைனில் "விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதி" குறித்து இந்த வாரம் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் குறித்து ஐ.நா பொதுச் சபை விவாதித்து வருகிறது.

இதையும் படியுங்கள்: வெளிநாட்டு ஊடகங்களின் விமர்சனங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கை பலன் தரலாம்; நிலையான உத்தி அல்ல

சீன ஜி ஜின்பிங்கின் முன்முயற்சி சரியான நேரத்தில் உள்ளது. அமைதிக்கான சாத்தியமான பங்களிப்பில் இந்தியாவின் ஆர்வமும் உள்ளது. ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் வரும் நாட்களில் இந்தியாவுக்கு வரும்போது, ​​உக்ரைனில் போரை முடிவுக்கு கொண்டுவருவது பற்றிய கேள்வி பிரதமர் நரேந்திர மோடியுடனான அவர்களின் விவாதங்களில் முதன்மையாக இருக்கும். டெல்லியில் அடுத்த வாரம் G20 வெளியுறவு அமைச்சர்கள் ஒன்றுகூடுவது, உக்ரைனில் அமைதிக்கான சவால் குறித்த இந்தியப் பிரதிபலிப்புக்கான பரந்த சர்வதேச சூழலையும் வழங்கும். அப்போது ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இருவரும் டெல்லியில் இருப்பார்கள். G20 அமைச்சர்களின் கூட்டத்திற்கு மத்தியில் நாற்கர மன்றத்தின் வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையே ஒரு சுற்று ஆலோசனைகளையும் இந்தியா நடத்தும். உக்ரைன் விவகாரத்தில் இந்தியா இன்னும் தைரியமாக காலடி எடுத்து வைக்க ஒரு நல்ல இராஜதந்திர தருணம் என்றால், அது இப்போது இருக்கலாம். இந்தியா அமைதியை மேம்படுத்துவதில் அதன் பங்கை மிகைப்படுத்தி மதிப்பிடவில்லை என்றாலும், முக்கிய பங்களிப்பை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

கடந்த வாரம் ஐரோப்பா முழுவதுமான தனது பயணத்தின் போது, ​​சீன வெளியுறவு மந்திரி வாங் யீ, அதிபர் ஜி ஜின்பிங்கின் அமைதி முயற்சியை தொடங்குவதற்கான களத்தை தயார் செய்து கொண்டிருந்தார். முக்கிய ஐரோப்பிய சக்திகளான ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் இத்தாலியுடனும், மற்றும் உக்ரைனுடனும் வாங் யீ ஆலோசனை நடத்தினார். ஜெர்மனியின் முனிச்சில் அவர் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவை சந்தித்தார். ரஷ்யாவுடன் ஆலோசனை நடத்துவதற்காக அவர் தற்போது மாஸ்கோவில் இருக்கிறார். சீனா நீண்ட காலமாக உக்ரைனுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது மற்றும் ரஷ்யாவுடனான அதன் சிறப்பு கூட்டாண்மையின் பலிபீடத்தில் உக்ரைனை தியாகம் செய்ய விரும்பவில்லை. அதேநேரம் ரஷ்யாவுடனான கூட்டணியை குழிபறிக்கவும் விரும்பவில்லை. சீனாவின் உக்ரைன் இராஜதந்திரம் என்பது, உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையே உள்ள முரண்பாடுகளை களையவும், சீன நலன்களைப் பாதுகாக்கவும், ஐரோப்பாவில் அதன் மூலோபாய செல்வாக்கை விரிவுபடுத்தவும் வழிகளைக் கண்டறிவதாகும்.

சீனா இப்போது ரஷ்யாவின் மிக நெருங்கிய மற்றும் மதிப்புமிக்க பங்காளியாக இருப்பதால், சமாதானம் குறித்த சீன யோசனைகள் ஐரோப்பாவில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. பிடன் நிர்வாகம், ரஷ்யாவை போரை முடிவுக்கு கொண்டு வர ஊக்குவிக்க சீனாவிற்கு நீண்டகாலமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. அதேநேரம் சீனாவின் பவர் பிளே குறித்தும் அமெரிக்கா எச்சரிக்கையாக உள்ளது. முனிச் பாதுகாப்பு மாநாட்டில், சமாதான பேச்சு வார்த்தைகள் நடந்து வரும் நிலையில் கூட ரஷ்யாவிற்கு ஆயுதங்களை விற்க சீனா தயாராகி வருவதாக அமெரிக்கா வெளியுறவுச் செயலாளர் பிளிங்கன் குற்றம் சாட்டினார். ஐரோப்பிய நாடுகளுடனான பழுதடைந்த உறவை மீட்டமைக்கவும், அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையில் பிளவை ஏற்படுத்தவும் சீனா சமாதானத் திட்டத்தைப் பயன்படுத்துவதாகவும் கருதப்படுகிறது. ஐரோப்பிய பாதுகாப்பு ஒழுங்கின் செயலில் வடிவமைப்பாளராக சீனா வெளிப்படுவதற்கு இந்தப் போர் ஒரு வாய்ப்பாகும். இப்போது வரை, உக்ரைனில் உள்ள பகுதிகள் ரஷ்யாவின் இணைப்பாக சீனாவால் பார்க்கப்பட்டு வருகிறது. சீனா இப்போது ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்துபவராக தன்னை மாற்றிக் கொள்ள விரும்பலாம். ரஷ்யாவின் பலவீனமான நிலை மற்றும் சீனாவின் மீது அதன் வளர்ந்து வரும் சார்பு ஆகியவை, விவாதிக்கக்கூடிய வகையில், ஐரோப்பிய நெருக்கடியில் ஜி ஜின்பிங்கின் செல்வாக்கை மேம்படுத்தியுள்ளது.

அந்த வாய்ப்பு இந்தியாவுக்கும் இருக்கலாம். இரண்டு நாடுகளும் ரஷ்யாவுடன் நட்பாக இருப்பதால், சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவை மிகவும் நியாயமான தோரணையை நோக்கி நகர்த்தலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு உள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பை சீனாவும் இந்தியாவும் கண்டிக்கவில்லை என்றாலும், அதை ஆதரிக்காமல் கவனமாக இருக்கின்றன. கடந்த செப்டம்பரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சமர்கண்ட் உச்சிமாநாட்டில், ஜி ஜின்பிங்கும் மோடியும் போரில் தங்களின் அசௌகரியத்தை வெளிப்படுத்தினர். இரு தலைவர்களும் மோதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு தங்கள் கடுமையான எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில் தீவிரமாக ஈடுபட, சீனாவும் இந்தியாவும் போரைப் பற்றிய பொதுவான கவலைகளைத் தாண்டி அமைதியை நோக்கி உறுதியான நடவடிக்கைகளை பரிந்துரைக்க வேண்டும். தனது பங்கில், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐ.நா சாசனம் ஆகியவற்றின் கொள்கைகளை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை சீனாவின் திட்டம் வலியுறுத்தும் என்று வாங் யீ கூறினார். மேலும், ரஷ்யாவின் சட்டபூர்வமான பாதுகாப்பு நலன்கள் மதிக்கப்பட வேண்டும் என்றும் வாங் யீ கூறினார். உக்ரேனிய இறையாண்மையை ரஷ்ய பாதுகாப்பு கவலைகள் கட்டமைப்புடன் ஒருங்கிணைப்பது எந்தவொரு சமாதான தீர்வின் மிக முக்கியமான அங்கமாகும். ஆனால் இருவரையும் சமரசம் செய்வது என்பது எந்த இராஜதந்திர முயற்சியிலும் கடினமான பகுதியாகும். உக்ரைனைப் பொறுத்தவரை, இறையாண்மை என்பது கிழக்கு உக்ரைன் மற்றும் கிரிமியாவில் ரஷ்ய ஆக்கிரமிப்பை மாற்றியமைப்பது மற்றும் மூன்றாம் தரப்பினரிடமிருந்து நீண்டகால பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவது ஆகும். ரஷ்யாவைப் பொறுத்தவரை, பாதுகாப்பு என்பது உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடுகளின் இறையாண்மையை மேற்கில் கட்டுப்படுத்துவதாகும். அதன் அண்டை நாடுகளுக்கான "வரையறுக்கப்பட்ட இறையாண்மை" என்பது ரஷ்ய சர்வதேச உறவுகளின் நீடித்த கருப்பொருளாக இருந்து வருகிறது. அதன் சுற்றளவில் பிற சக்திகள் இருப்பதைத் தடுப்பதும் ரஷ்ய பாதுகாப்புக் கவலைகளின் மையத்தில் உள்ளது.

சாத்தியமான சமாதான செயல்முறையில் மற்ற இரண்டு முக்கிய யோசனைகளைக் கவனியுங்கள். ஒன்று "போர் நிறுத்தம்", இது எந்தவொரு அரசியல் தீர்வுக்கும் முதல் படியாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் போர்நிறுத்தம் என்பது ரஷ்யாவிற்கு உதவும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் கட்டுப்பாடு ரஷ்யாவிடம் இருக்கும் என்றும், உக்ரைனுக்கு எதிரான தாக்குதல்களை மீட்டெடுக்கவும் புதுப்பிக்கவும் ரஷ்யாவுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் ஐரோப்பாவில் பல நாடுகள் நம்புகின்றன. அப்படியானால், போர்நிறுத்தம் என்பது சமாதானத்தின் தன்மை பற்றிய பரந்த புரிதலுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

உக்ரேனிய பிரதேசத்தை சமாதானத்திற்காக ரஷ்யாவிற்கு தருவது என்பது பொதுவான கருப்பொருளாகும். ஆனால் எந்த நாடு ஆக்கிரமிப்பாளருடன் சமாதானத்திற்காக பிரதேசத்தை விட்டுக்கொடுக்க விரும்புகிறது? சீனாவுடனான அமைதிக்காக லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசம் மீதான சீனாவின் பிராந்திய கோரிக்கைகளை இந்தியா ஏற்குமா? ஆக்கிரமிப்பாளர்களுக்கு வெகுமதி அளிப்பதிலும் பாதிக்கப்பட்டவரைத் தண்டிப்பதிலும் உக்ரைனில் "நியாயமான அமைதி" நிறுவப்பட முடியாது என்று பல ஐரோப்பிய நாடுகள் உறுதியாக நம்புகின்றன.

உக்ரைனில் இராஜதந்திரத்திற்கான வாய்ப்பு வளர்ந்து வரும் நிலையில், அமைதிக்கான தடைகளும் மிக அதிகமாக உள்ளன. ஆனது இந்த தடைகள் உக்ரைனில் அமைதிக்கான ஜி ஜின்பிங்கின் முயற்சியை தடுக்கவில்லை. அதேபோல் பெரிய தடைகளைக் கண்டு பிரதமர் மோடி திகைக்கக் கூடாது. இரு தலைவர்களுக்கும், உக்ரேனில் அமைதியை மேம்படுத்துவது என்பது அவர்களின் பெரும் சக்தி உறவுகளை மறுபரிசீலனை செய்வது மற்றும் அவர்களின் யூரேசிய புவிசார் அரசியலை மறுவரிசைப்படுத்துவது ஆகியவற்றிற்கு உதவும்.

எழுத்தாளர் மூத்த உறுப்பினர், ஆசியா சொசைட்டி பாலிசி இன்ஸ்டிடியூட், டெல்லி மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸில் சர்வதேச விவகாரங்களில் பங்களிக்கும் ஆசிரியர்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India China Ukraine Russia Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment