சொன்னால் முடியும் : ஆண்டாள் சர்ச்சை – மதவெறிக்கு மாற்று சாதிப் பெருமிதம் அல்ல

வைரமுத்துவை ஆதரிப்பதா கண்டிப்பதா எனப் பார்க்காமல் இதனூடாக நிலைபெற முயலும் வகுப்புவாதத்தை எதிர்ப்பது எப்படி என்றே பார்க்க வேண்டும்.

By: Updated: January 18, 2018, 01:04:00 PM

ரவிக்குமார்

மார்கழி முடிந்து தை பிறந்துவிட்டது. இன்னும் ஆண்டாள் சர்ச்சை முடிவுக்கு வரவில்லை. கவிஞர் வைரமுத்து வருத்தம், விளக்கம் என வெளியிட்டுக்கொண்டே இருக்கிறார். ஆனாலும் அவர் மீதான தாக்குதல்கள் நிற்கவில்லை. தமிழ்நாட்டில் எப்படியாவது ஒரு கலவரத்தை மூட்டிவிடவேண்டும் என்று திட்டமிட்டு சிலர் இதை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.
ஆண்டாளின் கவிச் சிறப்பைப் போற்றுவதாகவே கவிஞர் வைரமுத்துவின் உரை அமைந்திருக்கிறது. அவரது நோக்கம் ஆண்டாள் பாடல்கள் குறித்து ஆய்வு செய்வதல்ல, ஆண்டாளின் தமிழைப் போற்றித் துதிப்பதுதான். ஆனால் தனது உரைக்கு ஆராய்ச்சியுரை என்ற அந்தஸ்தை வழங்கும் நோக்கில் அவர் எடுத்துக்காட்டிய மேற்கோள் இப்போது அவரை வம்பில் மாட்டிவிட்டுவிட்டது.
திரைப்படப் பாடல்களில்கூட எதையும் மிகையாக வர்ணிப்பதே வைரமுத்துவின் பாணி. அதை ஒருவிதத்தில் பக்தி மரபின் தொடர்ச்சி என்று கூறலாம். அந்த முறை ஆராய்ச்சிக்கு உதவாது. ஆராய்ச்சி என்பது நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துவது. துதி பாடுவதற்கு அது தோதுபடாது.

போற்றிப் பாராட்டி துதி பாடுவதோடு நின்றிருந்தால் வைரமுத்துவுக்கு பாராட்டு கிடைத்திருக்கும். தான் ஒரு கவிஞன் மட்டுமல்ல ஆராய்ச்சியாளனும்கூட என்று காட்டிக்கொள்ள விரும்பியதே அவர் செய்த ‘பிழை’.

கவிஞர் ஒருவர் ஆராய்ச்சியாளராக இருக்கக்கூடாது என்றில்லை. இருக்கலாம். அதற்கு ஆராய்ச்சி நெறிமுறைகளைப் பின்பற்றவேண்டும். அதற்கான உழைப்பு வேண்டும். உழைத்து எழுதிய ஒரு ஆராய்ச்சி உரையை கதாகலாட்சேபம் கேட்டுப் பழகியவர்களின் முன்னால் வாசிக்க முடியாது என்ற தெளிவு வேண்டும்.

தனது உரையில், “ஆண்டாளின் ’பெற்றோர் யாவர்? அக்கால வழக்கப்படி அவள் எக்குலம் சார்ந்தவள்?’ ஆண்டாள் வாழ்ந்த காலம் என்பது யாது?‘ என்ற கேள்விகளை அடுக்கி அவற்றுக்கு விடைகாண முயன்றிருக்கிறார் வைரமுத்து.

vairamuthu வைரமுத்து

“பூமிப்பிராட்டி அம்சமான ஆண்டாள் கலியுகத்தில் 98 ஆவதான நள வருடத்தில் ஆடி மாதத்தில் சுக்லசதுர்த்தி செவ்வாய்க்கிழமை கூடின பூர்வபல்குனி நட்சத்திரத்தில் ” ஸ்ரீவில்லிபுத்தூரில் திருத்துழாய்ப் பாத்தியில் பெரியாழ்வாருக்குத் தோன்றியதாக குருபரம்பரா ப்ரபாவம் கூறுகிறது. கலியுகம் என்பது வானியல் கணக்குக்காக உருவாக்கப்பட்ட கற்பனையான கணக்கு என்பதால் அதை வைத்து ஆண்டாளின் காலத்தை கணிக்க முடியாது.

அதனால்தான், சாமிக்கண்ணுப் பிள்ளை, மு.ராகவையங்கார் முதலானோர் எழுதியவற்றின் அடிப்படையில் ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்கிறார் வைரமுத்து. அந்தக் காலக் கணிப்பும்கூட முடிந்த முடிபு அல்ல. பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி Vaisnavisam in Tamil Literature ( IITS, 2002 ) என்ற தனது நூலில் மா.ராசமாணிக்கனாரை மேற்கோள்காட்டி ஆண்டாள் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார்.

‘சின்னமனூர் செப்பேட்டில் சீவலப்பன் என்ற பெயர் காணப்படுகிறது. சித்தன்னவாசல் கல்வெட்டு ஒன்றில் ‘சீர்கெழு செங்கோல் சீவலப்பன்‘ என உள்ளது. பெரியாழ்வார் அந்த சீவலப்பனின் காலத்தைச் சேர்ந்தவர். திருப்பாவையில் வரும் வானியல் குறிப்புகளினடிப்படையில் அது கிபி 885 ஆம் ஆண்டு எழுதப்பட்டதாகத் தெரிகிறது. எனவே ஆண்டாளும் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்தான் என ராசமாணிக்கனார் கூறியுள்ளதை இந்திரா பார்த்தசாரதி தனது நூலில் வழிமொழிந்துள்ளார்.

The Secret Garland, (Oxford Univ Press, 2010) என்ற ஆய்வு நூலின் ஆசிரியர் அர்ச்சனா வெங்கடேசனும் ஆண்டாள் வாழ்ந்த காலத்தை ஒன்பதாம் நூற்றாண்டு என்றே குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டாள் இயற்றியதாகக் கூறப்படும் பாடல்கள் கிடைத்தாலும் அவர் ஆழ்வார்களில் ஒருவராக வழிபடப்பட்டாலும் ஆண்டாள் என ஒருவர் இருந்தாரா என்ற ஐயத்தை மூதறிஞர் ராஜாஜி ஏன் எழுப்பினார் என்று நாம் பார்க்கவேண்டியுள்ளது. ஆண்டாள் குறித்த அறிமுகத்தையும் ஆண்டாள் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் நூலாக வழங்கியுள்ள அர்ச்சனா வெங்கடேசன் கூறும் செய்தி கவனத்துக்குரியது:

”13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஶ்ரீவைஷ்ணவ தத்துவ அறிஞர் வேதாந்த தேசிகரின் காலத்தில் திருப்பாவை முக்கியத்துவத்தோடு வைத்து கருதப்பட்டபோதிலும் ஆழ்வார்களின் வரிசையில் ஆண்டாளின் பெயர் சேர்க்கப்படவில்லை என்கிறார் இந்த நூலாசிரியர்.  பின்னர் 16 ஆம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குக் கோயில் எடுப்பிக்கப்பட்டு (ஸ்ரீவில்லிபுத்தூர்) அது 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது எனவும் அவர் கூறுகிறார் (The Secret Garland , பக்கம் 6)

hraja - aandal - thiruppavai ஹெச்.ராஜா

அதுமட்டுமின்றி, ஸ்ரீரங்கம் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழியில் நடைபெறும் அத்யயனோத்சவ விழாவின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் ஆழ்வார்களின் செப்புத் திருமேனிகள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும்போது அதில் ஆண்டாளின் செப்புத் திருமேனி இடம்பெறுவதில்லை என வசுதா நாராயணன் என்பவரின் நூலை மேற்கோள் காட்டி அர்ச்சனா வெங்கடேசன் கூறுகிறார். ஆழ்வார்களில் ஒருவராகவும் விஷ்ணுவின் தேவியர்களில் ஒருவராகவும் ஆண்டாள் இருப்பதால் இப்படி விடுபட்டிருக்கலாம் என்ற விளக்கத்தையும் அவர் தருகிறார். ஆண்டாளை அங்கீகரிப்பதில் வெளிப்படும் தயக்கத்துக்கு அதுமட்டும்தான் காரணமா? பக்தி மரபில் பெண்களுக்கு இருந்த இடம் என்ன என்பதோடு வைத்து இதைப் பார்க்க வேண்டுமா? என்பவை ஆய்வுக்குரிய கேள்விகள்.
ஆண்டாள் வாழ்ந்ததாகக் கருதப்படும் பக்தி இயக்க காலம் ஏராளமான இலக்கியங்களை மட்டுமின்றி கல்வெட்டுகளையும் நம்மிடம் தந்து சென்றிருக்கிறது. அந்தக் கல்வெட்டுகளில் பெரும்பாலானவை இன்னும்கூட முழுமையாகப் பதிப்பிக்கப்படவில்லை. படியெடுக்கப்படாத கல்வெட்டுகளும் ஏராளம். அவற்றையெல்லாம் முழுமையாகப் படித்தால் அக் காலகட்ட வரலாற்றையும் அப்போது தோன்றிய இலக்கியங்களின் பொருளையும் இன்னும் தெளிவாக நாம் அறிந்துகொள்ள முடியும். ஆனால் இப்போது எழுந்திருப்பதுபோன்ற சர்ச்சைகள் அத்தகைய முயற்சிக்கு முட்டுக்கட்டையாகவே அமைந்துவிடுகின்றன.

ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் பேச்சை அரசியல் நோக்கத்துக்குப் பயன்படுத்த முயல்வது ஆபத்தானது. வைரமுத்துவை ஆபாசமாக வசைபாடுவதன்மூலம் ஒரு கலவரத்தை ஏற்படுத்த பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா முயற்சிப்பதாகத் தெரிகிறது. அவரது பேச்சு எப்படியாவது தமிழ்நாட்டைக் கலவர பூமியாக மாற்றிவிட வேண்டும் என்ற அவரது தீய நோக்கத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. அவரது தூண்டுதலின் காரணமாக இப்போது வைணவ மதத்தைச் சேர்ந்த பலர் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகின்றனர். இது எப்போது முடியுமோ எதில்போய் முடியுமோ தெரியவில்லை.

கவிஞர் வைரமுத்துவை எதிர்ப்பவர்களின் பேச்சுகளில் மட்டுமல்ல ஆதரிப்பவர்களின் பேச்சிலும்கூட வன்முறை வாடை வீசுகிறது. ஆண்டாளின் பாடல்களை ’ஆபாசக் குப்பைகளாக’ சித்திரித்து சமூக வலத்தளங்களில் சிலர் எழுதிய பதிவுகளைப் பார்க்க முடிந்தது. இத்தகைய வறட்டு நாத்திகப் போக்கு பகுத்தறிவுக்குப் பயன்படாது. மாறாக ஆத்திகம் செழிக்கவே உதவும். தமிழக வரலாற்றில் இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன.

ஆண்டாள் சர்ச்சையில் வன்முறைப் பேச்சு மட்டுமல்ல மதவாத சாதிவாதப் பேச்சுகளும் வெளிப்படுகின்றன. அவற்றில் தமிழ், தமிழ்நாடு என்ற பேரடையாளங்கள் மறைந்து சாதியப் பெருமிதம் தலைதூக்குவது தெளிவாகத் தெரிகிறது.

கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக உணர்ச்சிகரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார் பாரதிராஜா. “ எங்கள் வம்சாவழி எங்கள் உணர்ச்சிகளின் வடிகாலே ஆயுதங்கள்தான்” என்று அதில் பாரதிராஜா குறிப்பிட்டிருந்தார். அவர் சுட்டுவதைத் தமிழின் வம்சா வழி எனக் கருதமுடியவில்லை. அது அவரும் கவிஞர் வைரமுத்துவும் சார்ந்த சாதியின் வம்சாவழியென்ற பொருளே அந்த அறிக்கையில் தொனிக்கிறது.

அண்மையில் இந்த சர்ச்சை குறித்து டிடிவி தினகரன் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அதில்,  ‘திருமங்கை ஆழ்வாரும் , நரசிங்கமுனையராய நாயனாரும் எங்களது மூதாதையர்கள்’ என்று அவர் குறிப்பிட்டார். அதில் ’நாங்கள்’ ’எங்களது’ என அவர் குறிப்பிடுவது ஒட்டுமொத்தத் தமிழர்களையல்ல. எங்களது மூதாதையர் என அவர் சிலரை மட்டும் அடையாளப்படுத்தும்போது அது அவரது குடும்பம் அல்லது சாதி சார்ந்ததாகவே அது பொருள் தருகிறது. மதவெறிக்கு ஒருபோதும் சாதிவெறி மாற்றாகிவிட முடியாது. இரண்டுமே ஒரே தீமையின் அங்கங்கள்தான். இதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

தமிழ்ச்சூழலில் இந்த சர்ச்சை ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் என்ன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் நால்வர் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அளவில் நீதித்துறை செயல்பாடுகளின்மீது வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்; காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரமுடியாது என கர்னாடக அரசு அறிவித்துவிட்டது. இத்தகைய பிரச்சனைகள் பற்றி நாம் சிந்திக்க முடியாமல் நமது கவனம் முழுவதும் இந்த ஆண்டாள் சர்ச்சையிலேயே பிணைத்துப்போடப்பட்டது. இந்த சர்ச்சை தமிழ் மக்களின் இலக்கிய உணர்வை மேம்படுத்தவில்லை, மாறாக வகுப்புவாதக் கருத்துகளைத்தான் பரவலாக்கியிருக்கிறது.

கவிஞர் வைரமுத்துவின் அண்மைக்கால செயல்பாடுகள் தமிழ்நாட்டில் சமயச்சார்பற்ற கருத்துகள் பரவவேண்டும் என்ற கவலைகொண்டவராக அவரைக் காட்டவில்லை. மாறாக, சமயக் கருத்துகளுக்குத் தாம் எதிரியல்ல எனக் காட்டுவதன்மூலம் வகுப்புவாத அமைப்புகளிடம் நற்சான்றிதழ் பெற முடியுமா எனப் பார்ப்பவராகவே அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எனவே, இந்தப் பிரச்சனையை வைரமுத்துவை ஆதரிப்பதா கண்டிப்பதா எனப் பார்க்காமல் இதனூடாக நிலைபெற முயலும் வகுப்புவாதத்தை எதிர்ப்பது எப்படி என்றே பார்க்க வேண்டும். ஆண்டாள் சர்ச்சையை பக்தி இயக்க காலம் குறித்த ஆய்வாக மாற்றுவதே அதற்குச் சிறந்த வழி.

(கட்டுரையாளர் முனைவர் ரவிக்குமார் : கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய / அரசியல் விமர்சகர். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர். writerravikumar@gmail.com)

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Can be said andal controversy is not a caste pride for communalism

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X