/tamil-ie/media/media_files/uploads/2017/09/cavurey-river-okkenakkal.jpg)
வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
இந்தியாவிலும் நதிநீர் சிக்கல்கள் வட இந்தியாவிலும், தக்காண பீடபூமி மாநிலங்களிலும் நடுவர் மன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக தீர்ப்புகளையும் பெற்று நீர்ப் பகிர்மானத்தை எந்தவித சர்ச்சைகள் இல்லாமல், மாநிலங்கள் இடையே ஒப்பந்தங்கள் செய்து நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆனால் காவிரி நடுவர் மன்றத்துக்கு மட்டும் மத்திய - கர்நாடக அரசுகளும் வாய் மூடி மௌனியாகவே இருக்கின்றன.
வன்சதாரா நதிநீர் பிரச்சினை ஒடிசா-ஆந்திரப் பிரதேசம் இடையில் சிக்கலாக உள்ளது. இது குறித்து விசாரிக்க 2010ல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. மகாதாயி / மண்டோவி நதிநீர் சிக்கல் மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலத்துக்கு இடையே நிலவுகிறது. இதையும் விசாரிக்க 2010ல் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. ஏற்கனவே நர்மதா ஆற்றுப் பிரச்சினைக் குறித்து குஜராத், மகாராஷ்டிராம், மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான் இடையே பிரச்சினையாகி, 1979ல் நடுவர் மன்றம் தீர்ப்பை அளித்தது. மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கிடையில் நடந்த கோதாவரி நதிநீர் பிரச்சினையிலும் 1980ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது.
அதைப் போலவே கிருஷ்ணா நதிநீர்ப் பிரச்சினையில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கிடையே நடந்த பிரச்சினையில் 1976ல் நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் காவிரிக்கு மட்டும் தீர்ப்பு வந்தும், நடைமுறைப்படுத்தாமல், காவிரி ஒரு கேள்விக் குறியாக உள்ளது.
இவ்வளவு நியாயங்கள் தமிழகத்துக்கு இருந்தும் காவிரி பிரச்சினையில் தமிழகத்துக்கு தண்ணீர்விட மறுத்து; கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா, காவிரி ஆற்றின் குறுக்கே 5700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சிக்கல் கொழுந்துவிட்டு எரியும் போதே, மேகதாட்டில் அணை கட்டுவேன் என்று கொக்கரிக்கின்றார். பெங்களூர் நகரத்திற்கு குடிநீர் காவிரியிலிருந்து பெறுவது ஒப்பந்தத்துக்கு முரணானது. ஆனால் காவிரியிலிருந்து பெங்களூருவுக்கு குடிதண்ணீரை எடுப்பதை நிறுத்தாமல் சென்று கொண்டு தான் இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் மேகதாட்டிலிருந்து இனிமேல் தண்ணீரும் 400 மெகாவாட் மின்சாரமும் தயாரிக்க கர்நாடகா திட்டமிட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் குறையும்.
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 78 ஆண்டுகளில் 15 தடவை மட்டுமே மேட்டூர் அணை ஜூன் 12ஆம் நாள் திறக்கப்பட்டது. அதுகூட கடுமையான வெள்ளப் பெருக்கால்தான் உபரி தண்ணீரால் திறக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மற்ற சமயங்களில் காலதாமதத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. மேட்டூர் அணையைத் திறக்க குறைந்த அளவு 75 டி.எம்.சி. தண்ணீர் அணையில் இருக்க வேண்டும். இல்லையென்றால், பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது.
காவிரி சிக்கலில் இன்னொரு அபத்தத்தையும் சொல்லியாக வேண்டும். முன்னாள் பிரதமர் தேவகவுடா உண்ணாவிரதம். 1996ல் காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாடு, புதுவை, கேரளத்தை எதிரிகளாக சேர்த்து பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போதே பிரதமர் பொறுப்பையும் எப்படி ஏற்க முடிந்தது? 1996ல் தேவ கவுடாவை எதிர்த்து பிரதமர் பதவியில் இருக்க தகுதியற்றவர் என Quo Warranto ரிட் மனுவை தாக்கல் செய்தவுடன் அலறியடித்து தன்னுடைய மனுவை திரும்பப் பெற்றார். பிரதமர் பொறுப்புக்கு வந்தபின்னும் தமிழகத்தை எதிரியாகப் பார்த்தவர் தேவ கவுடா. முன்னாள் பிரதமர் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு இன்றைக்கு பொதுவான நபராக இருந்து, காவிரிப் பிரச்சினையை மாநிலங்களிடைய மத்தியஸ்தம் செய்ய வேண்டியவர், வாட்டாள் நாகராஜன் போல உண்ணாவிரதம் இருப்பது முன்னாள் பிரதமருக்கு அழகா? அது மட்டுமா? இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வெங்கட்ராமைய்யாவும், கர்நாடகத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இப்படி அரசியல் சாசன கடமைகள், மரபுகள், பண்பாடுகளை கடைப்பிடிக்காத நபர்கள் கர்நாடகத்தில் காவிரிக்கு முரட்டுத்தனமாக அர்த்தமற்ற முறையில் நடந்து கொள்வதையும் மத்திய அரசு பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றது. உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு கூடாது என்று சொன்னவுடன் மத்திய அரசு என்ன சொன்னது?
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவேண்டும் என்று சொன்னது. ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் மத்திய அரசு மதிக்கவில்லை? இப்படியும் மத்திய அரசு முரணாக நடந்துகொள்கிறது. எல்லாம் தேர்தல் அரசியல்.
பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்துக்கு நர்மதை ஆற்றின் தண்ணீர் செல்கின்றது. அதில் ஏதாவது சிக்கல் வந்தால் மோடி குரல் கொடுக்கின்றார். நர்மதை ஆறு மத்திய பிரதேசம், மகராஷ்டிரம், குஜராத், இராஜஸ்த்தான் வரை செல்கின்றது. அதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் தான் முதல்வராக இருந்தபோது குஜராத்துக்கு குரல் கொடுத்தார். ஆனால் தமிழகத்தின் உரிமைகளின் நியாயங்களை கண்டுகொள்ளாமல் கர்நாடக அரசைப் போல மத்திய அரசு நடந்துகொள்வதுதான் கொடுமையிலும் கொடுமை. பன்மையில் ஒருமை எங்கே இருக்கின்றது? மாற்றான் தாய் போக்கில் நடந்துகொண்டால் வேற்றுமையில் ஒற்றுமை எப்படி வலுப்பெறும்? பல்வேறு மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில், கர்நாடகா, மத்திய அரசு போல நடந்து கொண்டால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதை டெல்லி பாதுஷாக்களும் உணரவேண்டும்.
காவிரியில் மட்டுமா பிரச்னை? காவிரியில் கிடைக்கும் நீரை எப்படி சேமிக்கலாம்? அதனால் என்ன பயன் என்பதை நாளை பார்க்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.