scorecardresearch

லக்‌ஷ்மிகளை ‘கதிர்’கள் சுட்டெரிப்பார்கள்!

சமூக வலைதளங்களில் லேட்டஸ்ட் வைரல், ‘லக்‌ஷ்மி’ என்கிற சில நிமிட குறும்படம். அது குறித்து கவிஞர் சந்திரகலா தனது கருத்துகளை இங்கு பகிர்கிறார்…

லக்‌ஷ்மிகளை ‘கதிர்’கள் சுட்டெரிப்பார்கள்!

கவிஞர் சந்திரகலா

சில நிமிடங்கள் ஓடுகிற குறும்படங்கள் பல நேரங்களில் பார்வையாளர்களை ஒரு உலுக்கு உலுக்கி உட்கார வைப்பதுண்டு. தங்களை அறியாமலேயே விட்டத்தை வெறிக்க விடுவதுண்டு. ஒற்றை நொடி வந்து போகிற காட்சி கூட உயிரைப்பிழிவதுண்டு. ஏன் பலயுகங்கள் ஆனாலும் மறக்கப்படக் கூடாத, முடியாத படங்களாக கூட சில குறும்படங்கள் அமைந்து விடுவதுண்டு.

இவற்றிலிருந்து சற்றே வேறுபட்டு குறும்படத்துக்கான லட்சணங்களோடு வெளியாகி குறிப்பிட்ட பார்வையாளர் வட்டத்தையும் கடந்து பல்வேறு தரப்பினரையும் ‘ஒருமாதிரி’ பேசவைத்திருக்கும் படம் லக்‌ஷ்மி.

கதை மாந்தர்கள் சென்னைமாதிரி நெருக்கடி நகர இடுக்கில் தட்டுப்படும் சாதாரண முகங்கள்தான். இவர்களை வைத்துக்கொண்டு, பாரதியாரின் கவிதைகளின் துணையோடு, நடுத்தர வர்க்கத்துக்கு கீழே வாழ்ந்து அல்லல்படும் ஒரு பெண்ணைக் குறித்து சொல்கிறது இந்த படம்.

லேத்து பட்டறையில் வேலை செய்யும் கணவன். முகவரியற்ற நிறுவனத்தில் வேலை பார்க்கும் மனைவி். பள்ளி வயதில் ஒரு குழந்தை. குக்கர் விசில் சத்தத்துக்கு விடிகிறது குடும்பம். சமையல் முடித்து, குழந்தையை பள்ளிக்கு அனுப்பிவிட்டு கணவனுக்கு ஒற்றை டிபன்பாக்சில் சாப்பாடு தந்துவிட்டு ரயிலில் வேலைக்கு சென்று திரும்புகிற மனைவி. இரவானால் மனைவியுடன் உறவு என மிகச் சாதாரண நிகழ்வைத்தான் கதையென்று ஆரம்பிக்கிறார்கள்.

இனி வம்படியாக திணிக்கப்பட்ட சம்பவமாக கதையை நீட்டிக்கிறார்கள்.

‘தினமும் காலைல எழுந்து வேலை செய்ஞ்சு அலுவலகம் போயிட்டு அலுப்புடன் திரும்பி கிரைண்டர் மாதிரி சுத்தி சுத்தி வேலை செய்தா எந்த பெண்ணுக்கு( குறிப்பு: எந்த பெண்ணுக்கு) தான் தப்பு பண்ண தோணாது’ என சொல்லிக்கொண்டு கதிர் என்றொரு கதாபாத்திரத்தை கையிலெடுக்கிறார்கள். இப்போதே இவர்கள் என்ன சொல்ல ஆசைப்பட்டு இந்த படம் எடுத்திருக்கிறார்கள் எனபது புரிந்து விடுகிறது.

களிமண் கலைஞனான கதிரை பார்த்ததும் லக்‌ஷ்மியிடம் பீறிட்டெழுகிறது உடல்வேட்கை. அதிலும் சூழ்நிலை காரணமாக ( காவிரி பிரச்னையாம்) ஒருநாள் கதிரின் வீட்டில் தங்கி திகட்ட திகட்ட உடல் சேர்ந்து விட்டு வீடு திரும்புகிறாள் லக்‌ஷ்மி.

அத்தோடு விட்டார்களா? இனி வழக்கமான பாதையிலிருந்து விடுபட்டு செல்ல லக்‌ஷ்மி தயாராகிவிட்டதை, ரயிலில் சென்று வந்தவள் இனி பஸ்சில் செல்ல தீர்மானித்திருப்பதாக முடிக்கிறார்கள்.

திக்குவாயன் திக்கி திக்கி சொல்வதெல்லாம் திகில் கதையாகுமா? இந்த கு(வெ)றும்படம் எதை போதிக்கிறது?

கணவனை பார்த்துக்கொள்வது, குழந்தையை பராமரிப்பது, குடும்பத்துக்காக சமைப்பது எல்லாம் உலகமகா துன்புறுத்தல் போலவும், மனைவியின் உடல் மொழி அறிந்து நெருங்குவது உலகமகா பாவமென்றும் சொல்கிறதா இந்த படம்?

மனைவியின் ரசனையென்ன? உள்ளுக்குள் உறங்கும் ஆசையென்ன? என்பதை தேடிப்பிடித்து தீர்த்து வைக்க உலக பணக்காரர்கள் பட்டியலில் இருப்பவர்களால் கூட சாத்தியப்படாது எனும் போது நடுத்தர, அடித்தட்டு ஆண்களை நக்கல் செய்யவா இப்படி ஒரு படம்?

ஏன் அதே ஆணுக்கும் தான் எத்தனை கனவுகள் இருக்கிறது? அதையெல்லாம் மறந்துவிட்டு, சிறகுகளை துறந்துவிட்டு மனைவி, குழந்தை, குடும்பத்துக்காக நத்தையோட்டுக்குள் அவன் சுருண்டுகிடப்பது தியாகமல்லாமல் வேறென்ன?

உடலுறவில் ஆர்வமாக இயங்கும் கணவன் ஆரோக்கியமாக இருக்கிறான். ‘தாமரையில் இருக்கும் லட்சுமியை விட நீங்கள் அழகாக இருக்கீங்க’ என கதிர் சொல்லும் போது, ‘என் கணவர் கூட இப்படித்தான் சொல்லுவார்’ என லக்‌ஷ்மியே சொல்கிறாள். ‘பின் கணவனிடம் ரசனை உட்பட என்ன குறையைக் கண்டீர்கள்.

எந்த வம்புக்கும் போகாத கணவன், ஒற்றைக்குழந்தையோடு வாழவே ஆயாசப்படும் பெண் ஏதோவொரு கதிரிடம் படுத்து எழ ஆசைப்படுவதை சூழ்நிலைகளோடு பொருத்தி நியாயப்படுத்த ஆரம்பித்தால், கணவனோடு சேர்த்து அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களென ஒரு பெருங்கூட்டத்தையை தூக்கிச் சுமக்கிற லக்‌ஷ்மிகள் இங்கே லட்சக்கண்க்கில் இருக்கிறார்களே! அவர்களின் ஒழுக்கத்தை கேலி பேசுகிறதா இந்த படம்?

வீச்சமடிக்கும் கதைப்போக்கை நியாயப்படுத்துகிற முயற்சிதான் ஆங்காங்கே பாரதி கவிதையை தூவியிருப்பது. இந்த கதாபாத்திரத்துக்கு லக்‌ஷ்மி என்ற பெயர் கூட உள் நோக்கம் கொண்டது. கதிர்கள் எப்போதும் தூரத்தில் இருந்து பார்க்க வெளிச்சமாக இருக்கும். அருகில் நெருங்கினால் எரித்து சாம்பலாக்கிவிடும் என்பது குடும்ப சுமைகளுக்கு தோள் கொடுக்கிற லக்‌ஷ்மிகளுக்கு நன்றாகவே தெரியும்.

இது படமெடுத்தவர்களுக்கும் தெரியும்.ஏதோ பரபரப்புக்காக எடுத்திருக்கிறார்கள் என்பதல்லாமல் வேறென்ன???

(கவிஞர் சந்திரகலா, கன்னியாகுமரி மாவட்டம் அதங்கோட்டைச் சேர்ந்தவர். சிறுகதைகள், கட்டுரைகள் மூலமாகவும் கவனம் ஈர்ப்பவர்!)

 

 

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Controversy on lakshmi short film