Advertisment

கொரோனா பீதி: நெஞ்சை உலுக்கும் 3 உண்மைச் சம்பவங்கள்

சாதாரணமாக ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்கும் போது, ‘இதெல்லாம் இப்படித்தான் நடக்கும்; ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. அதனால் கடவுளுக்குக் கூடப் பொறுக்காமல் அவரே இப்படியெல்லம் செய்கிறார்.’ அப்படியென்று ஊருக்குள் சாதாரண மக்கள் பேசிக்கொள்வது வழக்கம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
coronavirus, covid-19, coronavirus lockdown india, கொரோனா வைரஸ், ஊரடங்கு, உறவுகள் சிக்கலில், உண்மை சம்பவங்கள், lockdown tamil nadu, family relationships gets problem, relationship into problem, coronavirus family problem article

coronavirus, covid-19, coronavirus lockdown india, கொரோனா வைரஸ், ஊரடங்கு, உறவுகள் சிக்கலில், உண்மை சம்பவங்கள், lockdown tamil nadu, family relationships gets problem, relationship into problem, coronavirus family problem article

முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்

Advertisment

சாதாரணமாக ஏதேனும் அசம்பாவிதச் சம்பவங்கள் நடக்கும் போது, ‘இதெல்லாம் இப்படித்தான் நடக்கும்; ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது. அதனால் கடவுளுக்குக் கூடப் பொறுக்காமல் அவரே இப்படியெல்லம் செய்கிறார்.’ அப்படியென்று ஊருக்குள் சாதாரண மக்கள் பேசிக்கொள்வது வழக்கம்.

அப்பொழுதெல்லாம் அதை நாம் பொருட்படுத்தாமல் சென்று விடுவோம். ஆனால், இந்த கொரோனா பீதியினால் நடந்திருக்கும் சில உண்மைச் சம்பவங்களைப் பார்க்கும் போது மக்கள் கூறுவதை நம்மால் கூட நம்பாமல் இருப்பதற்கு முடியவில்லை. அப்படி என்னதான் நடந்து விட்டது என்கிறீர்களா இதோ மேலே படியுங்கள் அப்பொழுது புரியும்.

கொரோனா வைரசால் எற்பட்டிருக்கும் ஊரடங்கினால், உங்களைப் போன்று நானும் இல்லத்திலிருக்கிறேன்... தனித்திருக்கிறேன்... தள்ளியிருக்கிறேன்... ஆனால் தினமும் குறைந்தது ஐந்து பேரிடமாவது செல்போனில் நலம் விசாரித்து வருகிறேன். அப்படி நலம் விசாரித்ததில் இவ்வளவு நாள்களுக்குள் மூன்று பேரிடமிருந்து கிடைத்த நெஞ்சை உலுக்கும் மூன்று உண்மைச் சம்பவங்களைத்தான் உங்களோடுப் பகிர்ந்து கொள்கிறேன்.

எனது நெருக்கமான நண்பர் ஒருவர். நன்றாகப் படித்தவர், சமுதாயத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் மிக்கவர். தனது மகளுக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மணமகனைப் பார்த்துத் திருமணப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் முடித்து விட்டார். அதோடு திருமண நிச்சையார்தத்தையும் ஒரு திருமண மண்டபத்தில் பலர் முன்னிலையில்  வெகுவிமர்சையாக நடத்தி முடித்தார். அதோடு வரும் மே மாதம் திருமணம் நடத்துவது என்றும் முடிவு செய்து அதற்காக திருமண மண்டபவம் புக்கிங் செய்ததோடு, மற்ற அனைத்து  ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

இந்நிலையில் இந்தக் கொரோனா வைரசினால் இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டவுடன்  அந்த மணமகனின் வீட்டார், எனது நண்பரிடம் ‘இந்தத் திருமணம் நடக்காது. அதனால் மேற்கொண்டு, இனி எங்களிடம் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்’ என்று கூறியிருக்கிறார்கள். எதனால், இப்படியொரு முடிவை எடுத்தீர்கள் என்று கேட்டதற்கு  ‘இந்தத் திருமணம் நிச்சையித்தப் பிறகு நாட்டில் இப்படியொரு நிலை வந்திருப்பது அபசகுனமாகும். அதனால், இந்தத் திருமணம் நடந்தாலும் பிறகு மணமக்களுக்குள் ஏதேனும் துயரச் சம்பவம் நிகழ்ந்து விடும். அதனால்தான் இப்படியொரு முடிவை எடுத்துள்ளோம்.’ என சிறிதும் நா கூசாமல் கூறியுள்ளனர்.

இதனைக் கேட்டதும் எனது நண்பர் வேதனையிலும் வேதனையடைந்துள்ளார். இவ்வளவும் பேசி முடிப்பதற்குள் அவர் போனில் பேசுகிறோம் என்பதைக் கூட மறந்து கதறி கதறி அழுத அழுகை என் நெஞ்சை உலுக்கியது. நானும் அவரை சமாதானப் படுத்துவதற்கு வார்த்தைகள் இன்றி மௌனமாகிப் போனேன். அந்த மௌனம் அன்று ஒரு நாள் முழுவதும் என்னை முடமாக்கிப் போட்டது.

அடுத்த நாள் என்னை நானே தேற்றிக் கொண்டு, எனக்கு மிகவும் நெருக்கமான ஒருவருக்கு இதைப் போன்று போன் செய்து ‘என்ன சார் எப்படி இருக்கீங்க, கொரோனா தொற்றாம வீட்டில தானா இருக்கீங்க, இல்ல எங்கையாவது ஊர் சுற்றீட்டிருக்கீங்களா?’ எனக் கொஞ்சம் ஜாலியாகவே பேச்சை ஆரம்பித்தேன். ஏனென்றால் அவரும் ஒரு ஜாலியான மனிதர் தான்.

நான் இவ்வளவும் பேசி முடித்தப் பிறகும் மறுமுனையிலிருந்து எந்த சத்தமும் வரவில்லை. நானும் பயந்துபோய் ‘என்ன சார் நான் பேசிக்கிட்டே இருக்கேன் நீங்க பாட்டுக்கு போனை சும்மா வச்சுகிட்டு வேடிக்கைப் பாக்கீங்களா?’ எனக் கேட்டேன். அவ்வளவுதான் மறு முனையிலிருந்து ஒரு விம்மல் சத்தம் வந்தது. எனக்கு இன்னும் பயம் அதிகமாகி ஏன் என்ன நடந்தது? எனப் பரபரப்போடுக் கேட்கத் தழுதழுத்தக் குரலில் அவர் சொன்னார் ‘என் மனைவி என்ன விட்டுவிட்டு இரண்டுக் குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு அவ அம்மா வீட்டுக்குப் போயிட்டா’ அவ்வளவுதான் அதுக்கு மேல் அவரால் எதுவும் பேசவே முடியவில்லை. அப்படியே போனை  வைத்து விட்டார்.

நானும் சிறிது நேரம் அமைதியாகி விட்டு என்ன நடந்திருக்கும் எனச் சிந்தனையில் அமர்ந்தேன். சுமார் 15 நிமிடங்கள் தாண்டி அவரிடமிருந்து எனக்கு போன் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினேன். அவர் பேச்சைத் தொடங்கினார், ‘என் மனைவிக்கிட்ட யாரோ சொன்னாங்களாம் குடிகாரங்க இருக்கிற வீட்டிலப் பிள்ளைகள வச்சிருந்தா கொரோனா நோய் தாக்கும் என்று, அதனால், அவ என்ன விட்டிட்டுப் போயிட்டா. எனக்குச் சமையல்னா என்ன என்றே தெரியாது. வீட்டிலக் குடிக்கக் கூடத் தண்ணி எங்க இருக்கும் என்று கூடத் தெரியாது. வெளியப் போய் சாப்பிடலாமெண்ணா, அதுக்கும் முடியாது. அப்புறம் எப்படித்தான் இவ்வளவு நாளையும் சமாளிக்கப் போறேனோ’ என்று கூறிவிட்டு மீண்டும் அழுவதற்கு ஆரம்பித்தார்.

அவர் அதிகச் சம்பளம் வாங்கும் ஓர் அரசாங்க ஊழியர். ஆனால், கொஞ்சம் அதிகமாகவே குடிப்பழக்கம் உடையவர். அனைவரிடமும் நன்றாகப் பழகும் தன்மை உடையவர். திருமணமாகி இரண்டுக் குழந்தைகள். யரோ மனைவியிடத்தில் தவறுதலாக குடிகாரன் இருக்கும் வீட்டில் இருந்தால் கொரானே நோய் வரும் எனத் தவறுதலாகக் கூற இந்த இக்கட்டான நேரத்தில் அவரை தவிக்க விட்டுவிட்டுச் சென்றிருப்பது என்ன நியாயம்? என்பதைத் தான் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.

என்னதான் நடந்தாலும் எடுத்த முடிவில் மாற்றம் வேண்டாம் எனக்கருதி அடுத்த நாளும் ஐந்து பேரிடம் பேச வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தேன். அதைப்போன்று தொடர்ந்தேன் ஒன்று முதல் நான்கு வரை எந்தப் பிரச்னையும் இல்லை. மனதிற்குள் மிக்க மகிழ்ச்சி, இன்று யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை.

கடைசியாக மாலையில் டீ குடித்துவிட்டு, ஒரு உறவினர், சமுதாயத்தில் பெரும் அந்தஸ்தாகவும் கௌரமாகவும் வாழ்பவர், கல்வி நிறுவனம் உட்படப் பல நிறுவனங்களை நடத்தி வருபவர். மட்டுமல்லாமல் சமுதாயத்தில் பல்வேறு அமைப்புகளில் தன்னை ஈடுபடுத்தி, தன்னால் இயன்ற அளவிற்குச் சமூகச் சேவையும் செய்து வருபவர். அவருக்குப் போன் செய்தேன். போனை எடுத்து அவர்கள் சொன்ன ஹலோவில் வழக்கமானத் தெம்பு இல்லை. அப்போதே நினைத்தேன் இங்கே ஏதோ கொரோனா இருக்கிறது என்று.

‘எப்படி இருக்கீங்க, என்னக் குரல் ஒரு மாதிரியாக இருக்கிறது?’ என்றேன். அவ்வளவுதான், என்ன  நடந்தது என்பதைச் சுற்றி வளைக்காமல் அவர்கள் சொன்ன விஷயத்திற்கு அப்படியே வருகிறேன். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும். இருவருக்கும் திருமணமாகி விட்டது.  மகனுக்கு சுமார் இரண்டு வயது பருவத்தில் ஒரு குழந்தை உண்டு. மருமகள் கொஞ்சம் நாளாக தனது தாயாரின் வீட்டில் குழந்தையுடன் நிற்கிறார்.

ஊரடங்கு உத்தரவுப் பிறப்பித்த மறுநாள் இவர்கள், தமது பேரப்பிள்ளையைப் பார்த்து விட்டு வரலாம் என நினைத்து, தனது மருமகள் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்கள். வீட்டில் சென்றதும் பேரப்பிள்ளை வீட்டின் முன் பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறது. பாட்டியைப் பார்த்ததும், குழந்தை அவர்கள் பக்கத்தில் வந்துள்ளது. அவர்களும் குழந்தையைத் தூக்கி எடுத்துள்ளார்கள். அவ்வளவுதான் உடனே வீட்டின் உள்ளே இருந்து மருமகள் ஓடி வந்திருக்கிறாள். மாமியாரின் கையி்ல் இருந்தக் குழந்தையை அப்படியே பிடித்து இழுத்து எடுத்திருக்கிறாள்.

அதோடு மட்டும் நின்றிருந்தால்கூடப் பரவாயில்லாமல் இருந்திருக்கும். அதற்கும் ஒருபடி மேலே சென்று ‘உங்களுக்கெல்லாம் அறிவிருக்கா? நீங்க ஊரெல்லாம் சுற்றி வரக்கூடியவங்க... அப்படி ஊர் சுற்றி வந்து விட்டு, இப்படிச் சின்னக் குழந்தைகள எடுத்தா அதுகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றுங்கிறது உங்களுக்குத் தெரியாதா? எனக் கூறிக்கொண்டே குழந்தையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றிருக்கிறாள். அந்தக் குழந்தையோ தாயின் கையில் இருந்து கொண்டே பாட்டியிடம் செல்வதற்காகக் கையை நீட்டியப் படியே பாட்டி.. பாட்டி... எனக் கதறி அழுதுள்ளது.

இப்படியொரு சம்பவத்தைச் சிறிதும் எதிர்பாராத அவர்கள் அப்படியே கற்சிலை போல் ஒருசில நிமிடங்கள் அங்கே நின்றுள்ளார்கள். அப்புறம் உடல் நடுநடுங்க காரில் ஏறி வீட்டிற்குத் திரும்பியுள்ளார்கள். உடலும் மனமும் சோர்ந்து வீட்டில் படுத்தப் படுக்கையாக உள்ளார்கள். நாள்கள் சில கடந்த பின்பும் அவர்களின் கவலையும் கண்ணீரும் இன்னும் தீர்ந்த பாடில்லை என்பதுதான் உண்மை.

இந்த மூன்று உண்மை சம்பவங்களும் நமக்கு உணர்த்தும் பாடம் என்ன என்பதை எல்லோரும் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். இந்த உலகம் உறவுகளால் பின்னிப் பிணைந்துள்ளது. அதுமட்டுமல்ல உறவுகளையும் தாண்டி உணர்வுகளால் கட்டி உயர்த்தப்பட்டக் கோபுரங்களையும் தாண்டி உயர்வானது. உறவுகளையும், உணர்வுகளையும் தாண்டி இந்த உலகம் எள்ளளவும் அசையாது என்பதை இந்த இக்கட்டான நேரத்திலாவது அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்பொழுதுதான் புரிகிறது ‘இதெல்லாம் இப்படித்தான் நடக்கும். ஏனென்றால் மக்களின் மனநிலை அப்படித்தான் இருக்கிறது.’ என்று ஊரார் கூறும் கூற்றின் உண்மையானப் பொருள் என்னவென்பது.

கட்டுரையாளர், முனைவர் கமல. செல்வராஜ்

மின்னஞ்சல்: drkamalaru@gmail.com

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Dr Kamala Selvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment