Advertisment

டிஜிபி தலை தப்புமா?

டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள டி.கே.ராஜேந்திரன், குட்கா வியாபாரியிடம் பணம் வாங்கியதாக புகார் இருப்பதால், பதவியை தக்க வைப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டிஜிபி தலை தப்புமா?

சங்கர்

Advertisment

தமிழக காவல்துறையின் வரலாற்றிலேயே இல்லாத வகையில் யார் அடுத்த டிஜிபி என்பது இறுதி நிமிடம் வரையில் பரபரப்பு குறையாத ஒரு த்ரில்லர் திரைப்படம் போல இருந்தது. இதுவரை பொறுப்பு டிஜிபியாக இருந்த டிகே.ராஜேந்திரன் கடந்த 30 ஜுன் அன்று பதிவியிலிருந்து ஓய்வு பெற இருந்தார். அடுத்த டிஜிபியாக அவர்தான் நியமிக்கப்படுவாரா அல்லது வேறு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் பரிசீலனை செய்யப்படுமா என்பது மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.

வழக்கமாக பதவியில் இருக்கும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரம் முன்னதாகவே, அடுத்த டிஜிபியை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி விடும். 2006ம் ஆண்டுக்கு முன்பு வரை, யாரை வேண்டுமானாலும் டிஜிபியாக நியமிக்க முடியும் என்று இருந்த நிலை மாறி, ஒரு மாநிலத்தில் பணி புரியும் மூத்த மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர் மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அனுப்பப்பட்டு, அந்த பட்டியல் அந்த ஆணையத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அந்த பட்டியலில் இருந்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று நடைமுறை மாறியது. அதன் பிறகு, மத்திய தேர்வாணையத்துக்கு பட்டியல் அனுப்பப்பட்ட பின்னரே டிஜிபி நியமனம் செய்யப்பட்டு வந்தது.

இந்த முறை டிகே.ராஜேந்திரன் ஓய்வு பெறுவதற்கு ஒரு வாரம் வரை அடுத்த டிஜிபிக்களின் பட்டியலை தமிழக அரசு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. இதற்கான காரணம் என்று காவல்துறை வட்டாரத்தில் சொல்லப்படுவது என்னவென்றால், உச்சநீதிமன்றத்தின் பிரகாஷ் சிங் வழக்கின் தீர்ப்பின்படி, ஒரு மாநிலத்தின் முதல் மூன்று அதிகாரிகளின் பெயர்தான் மத்திய தேர்வாணையத்துக்கு அனுப்பப்பட வேண்டும். தமிழகத்தில் முதல் மூன்று இடத்தில் உள்ள அதிகாரிகள் முறையே, அர்ச்சனா ராமசுந்தரம், கே.ராதாகிருஷ்ணன் மற்றும் கே.பி.மகேந்திரன். நான்காவது இடத்தில்தான் டிகே.ராஜேந்திரன் வருகிறார். இதனால்தான் காலதாமதம் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. பிரகாஷ் சிங் வழக்கில் முதல் மூன்று அதிகாரிகள் பெயர் அனுப்பப்பட வேண்டும் என்று கூறப்பட்டாலும், இந்த முறை, ஏழு அதிகாரிகளின் பெயர் அனுப்பப்பட்டு, அதில் ஆறு பேரின் பெயர்களை தேர்வாணையம் அங்கீகரித்தது.

TTV Dinakaran comeback - CM Palanisamy முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இந்த ஆறு பேரின் பெயர்கள் அடங்கிய பட்டியலில் இருந்து, டிகே.ராஜேந்திரனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்தார். தேர்ந்தெடுத்தாலும் இதற்கான நியமன ஆணை, ஜுன் 30 இரவு 11.30 வரை தயாராகவில்லை. இந்த ஆணைக்காக காத்திருந்த டிகே.ராஜேந்திரன், நள்ளிரவு 11.30க்கு பதவியேற்றார். அவர் பணி நியமனம் ஐபிஎஸ் அதிகாரிகள் இடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியிருந்தது.

திங்களன்று, தமிழக சட்டப்பேரவையிலும் இது எதிரொலித்தது. குட்கா விவகாரம் குறித்து, தமிழக சட்டப்பேரவையில் இதற்கு முன்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். அப்படி முதலமைச்சரே விசாரணை நடைபெறுகிறது என்று ஒப்புக் கொண்ட பின்னர், அந்த விசாரணையில் சம்பந்தப்பட்டுள்ள ஒரு நபரை டிஜிபியாக நியமித்தது எப்படி என்று அனைத்துத் தரப்பிலிருந்தும் விமர்சனக் கணைகள் எழுந்தன.

இந்த நிலையில்தான், மதுரை கட்டிடத் தொழிலாளர்கள் சங்கமான ஏஐடியுசியின் செயலாளர் கதிரேசன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார்.

தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர், வருமான வரித்துறை ஆணையர் உள்ளிட்டோரை எதிர் மனுதாரர்களாக சேர்த்து அந்த பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. கதிரேசன் தனது மனுவில், தமிழக அரசு டிகே.ராஜேந்திரனை அவரின் சிறந்த சட்டம் ஒழுங்கு பணிக்காகவும், திறம்பட காவல்துறையை வழிநடத்தும் திறமைக்காகவும், டிஜிபியாக நியமிப்பதாக தெரிவித்திருந்தது. 1992ம் ஆண்டு, கும்பகோணத்தில் மகாமகம் நடந்தபோது தஞ்சை எஸ்பியாக இருந்தவர் டிகே.ராஜேந்திரன்தான். அப்போது சரியான பாதுகாப்பு ஏற்பாடகளை செய்யாத காரணத்தால் 50க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.

அதே போல 1999ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபோது, காவல்துறை சரிவர செயல்படாமல் தடியடி நடத்திய காரணத்தால், 17 பேர் உயிரிழந்தனர். இதனால் சட்டம் ஒழுங்கில் சிறந்தவர் என்று டிகே.ராஜேந்திரனை கருத முடியாது.

MK Stalin முக ஸ்டாலின்

மேலும் வருமான வரித் துறையினர் சென்னை, மாதவரத்தில் சட்ட விரோதமாக நடைபெற்று வந்த குட்கா குடோனில் நடத்திய சோதனையில், ஒரு கணக்குப் பதிவேடு கைப்பற்றப்ப்டடது. அந்த கணக்குப் பதிவேட்டில், சென்னை மாநகர ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மாதந்தோறும் 15 லட்சத்துக்கும் மேல் லஞ்சம் கொடுத்துள்ள விபரம் தெரிய வந்துள்ளது. இது குறித்து சட்டப்பேரவையில் பேசியபோது, தமிழக முதலமைச்சரே இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து வருவதை ஒப்புக் கொண்டார். அப்படி இருக்கையில், ஊழல் விசாரணையை எதிர் கொண்டு வரும், டிகே.ராஜேந்திரனை டிஜிபியாக நியமித்தது தவறு. எனவே, டிகே.ராஜேந்திரன் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். குட்கா விவகாரத்தில் லஞ்சம் பெற்றது தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தனது மனுவில் கதிரேசன் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பொதுநல வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேகே.சசீதரன் மற்றும் ஜிஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தங்கள் உத்தரவில் " தலைமைச் செயலாளர் டிகே.ராஜேந்திரன் டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டது குறித்த அனைத்து ஆவணங்களையும் முழுமையாக தாக்கல் செய்ய வேண்டும். வருமாண வரித்துறை ஆணையர், குடகா விவகாரத்தில் நடந்த சோதனைகள், அது தொடர்பாக தமிழக அரசுக்கு அளித்த அறிக்கை குறித்த அனைத்து விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் வருமான வரித்துறையின் கடிதத்தின் அடிப்பைடையில் நடந்த விசாரணை குறித்த முழுமையான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும்" என்றும், வழக்கு விசாரணை மீண்டும் 10 ஜுலை அன்று மேற்கொள்ளப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இந்த உத்தரவு டிஜிபி டிகே.ராஜேந்திரனுக்கு பெரும் பின்னடைவு என்று கருதப்படுகிறது. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தி வரும் விசாரணை, வருமான வரித்துறையின் கடிதத்தின் அடிப்படையில் அல்ல. குட்கா வியாபாரிகளிடம், ஆய்வாளர்களும், டிஎஸ்பிக்களும் லஞ்சம் பெற்றுள்ளனர் என்று டிஜிபி ஜார்ஜ், எழுதிய ஒரு கடிதத்தின் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது. முதல்வரும் சட்டப்பேரவையில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறை வருமான வரித்துறையின் கடிதத்தை கேட்டு பல முறை கடிதம் எழுதியும் இது வரை அந்த கடிதம் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்படவில்லை.

மேலும் வருமான வரித்துறை, சென்னை உயர்நீதிமன்றத்தில், குட்கா ஊழல் தொடர்பாக விரிவான அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. வருமான வரித்துறை தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய அறிக்கை 100 பக்கங்களை கொண்டது. அந்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் அதை அத்தனை எளிதாக ஒதுக்கி விட முடியாது.

வருமான வரித்துறையின் அறிக்கையை பார்வையிட்ட சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வேளை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் அது டிஜிபி டிகே.ராஜேந்திரனுக்கு பெரும் சிக்கலாக முடியும். வரும் திங்கட்கிழமை, குட்கா விவகாரம் மேலும் பரபரப்பை கிளப்ப இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

Tn Assembly Tk Rajendran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment