Advertisment

மாற்றுத் திறனாளி என்கிற அலங்கார வார்த்தை அவசியமில்லை : எழுத்தாளர் நவீன் உரையாடல்

"அனைத்து ஊனமுற்றோரை ஒரே இடத்தில் வைக்க முடியாது.  தனி தனியா தான் பாக்கனும். ஊனமுற்றோரில்  தலித், உழைக்கும் வர்க்க ஊனமுற்றையும், உயர்சாதி பணக்கார ஊனமுற்றோரையும் ஒரே இடத்துல வச்சு பாக்க முடியாது. உரிமையை அணுகுதல் பணக்காரங்களுக்கு மட்டும் தான் உரியதா இருக்கு. நவீன அணுகல் கருவிகளை ஒரு பணக்கார ஊனமுற்றவர் மட்டும் தான் பெற முடியுது. "-நவீன்

author-image
Vasuki Jayasree
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாற்றுத் திறனாளி என்கிற அலங்கார வார்த்தை அவசியமில்லை : எழுத்தாளர் நவீன் உரையாடல்

முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் நபர்களை தொடர்புகொண்டு ie தமிழ் இணையதளம் சார்பாக பேட்டி காண்கிறோம்.இந்த வாரம் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் எழுத்தாளர் நவீனிடம் பேசினோம்.

Advertisment

உங்களோட சொந்த ஊர்.?

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சிவகங்கை மாவட்டம் தான்.

நீங்க எப்படி எழுத வந்தீங்க?

ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த நாட்களில் நிறைய பேர் சமூக விழிப்புணர்வு மீம்ஸ் போடுறேன்னு கெளம்பி, MC னு அடையாள படுத்துட்டு சுத்துனாங்க, அதுல ஒரு மீம் கிரியேட்டர் தான் நான்.

'Istathukku' னு ஒரு முகநூல் பக்கம் ஆரம்பிச்சு முதல்ல அரசியல் நையாண்டி மீம்ஸ் போட்டுட்டு இருந்தேன். பின்னாடி சமூக அரசியல் படிச்சு மீம் போட துவங்கினப்போ கமெண்ட்ஸ்ல நிறைய கலவரம் வெடிக்கும். கருத்து மோதல், கலந்துரையாடல், வாக்கு வாதங்கள் போன்றவை நடக்கும். அதுல கலந்து விவாதிக்க ஆரம்பிச்சு தான் எழுத கத்துக்கிட்டேன். மீம்ஸ் மூலமா என்னால முழுமையா நா சொல்ல நினைக்கிறத சொல்ல முடியலனு விரிவா மீம் captionல எழுத ஆரம்பிச்சு இப்போ blogs, books னு எழுதிட்டு இருக்கேன்.

உங்க உடல் பற்றிய தாழ்வு மனப்பான்மையிலிருந்து எப்போது வெளியே வந்தீங்கள்?

2018-ல நான் நாத்திகம், தலித்தியம், பெண்ணியம் அதிகமா பேசிட்டு இருந்தேன், அப்போ லோக்கேஷ்னு ஒரு தோழர் ' Ableism' என்ற வார்த்தைய அறிமுக படுத்தி அத பத்தி படிச்சுட்டு பேச சொல்லிட்டே இருந்தார், அது தான் நான் என்னை பத்தியும் சமூகத்த பத்தியும் புதிய புரிதல் அடைய துவக்கமா இருந்ததது.

Ableism, இத 'இயல்வாதிக்கம்'னு தமிழாக்கம் செய்யலாம். இதற்க்கு அர்த்தம், ஊனமுற்ற மக்களை விட ஊனமில்லா மக்கள் உயர்ந்தவர்கள் என்னும் தவறான சமூக புரிதலுடன் ஊனமுற்றோருக்கு எதிராக நடக்கும் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறை. பார்ப்பனீயம், ஆணாதிக்கம் மாதிரி இயல்வாதிக்கமும் ஒரு ஒடுக்குமுறை.

இத தேடி படிக்க ஆரம்பிச்சதும் தான் ஊனமுற்றோர் உரிமை போராட்ட வரலாறு, ஊனமுற்றோரின் அரசியல் போன்றவை அறிமுகம் ஆச்சு. அத படித்து ஏற்பட்ட புரிதல் தான் பிரச்சனை என் உடலில் இருக்கத விட சமூகம் என்னைய பாக்குற விதமும் நடத்துற விதமும் என்னால அணுக முடியாத வகையில் கட்டமைப்புகளும் தான் பிரச்சனை னு தெரிஞ்சிக்கிட்டேன். இந்த அரசியல் புரிதல் தான் என்னை தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுவித்தது.

மாற்றுதிறனாளி என்று  பொதுவாக அழைப்பது  மரியாதை நிமித்தமாக சரியாக இருக்குமா?

அழைக்கலாம், ஒவ்வொரு ஊனமுற்றவர்களுக்கும் தன்னை எப்படி அடையாள படுத்திக்க வேண்டும் என்று ஒரு விருப்பம் இருக்கும், அதன் படி தான் அவங்கள அழைக்கனும். எனக்கு மாற்றுத்திறனாளி என்ற அடையாளம் மீது நிறைய விமர்சனம் இருக்கு. ஊனமுற்றோர் அரசியல உள்வாங்கி இருக்க பலரும் அந்த அடையாளத்த ஏற்க மறுப்பத பாத்துருக்கேன்.

அத ஏற்க மறுக்க நிறைய காரணங்கள் இருக்கு, நா இங்க முதன்மை காரணத்த மட்டும் சொல்றேன். இந்த வார்த்தைய முன்வைக்கும் எல்லாரும் சொல்ற முதல் காரணமே ' ஊனமுற்றோர் என்பது நெகட்டிவ், மாற்றுத் திறனாளி பாசிட்டிவ்', இந்த வாதமே இயல்வாதிக்க மனநிலை தான். ஊனம், ஊனமுற்றோர் போன்ற வார்த்தைகளை தவரான வார்த்தைகளாக, பரிதாபத்துக்குரிய வார்த்தைகளாக, கெட்ட வார்த்தைகளாக பார்த்து அதற்கு மாற்று தேடி அலங்கார வார்த்தைகள் கொண்டு வருவது பிரச்சினைக்குரிய விஷயம்.

மாற்றுத்திறனாளி, ஸ்பெஷல் கிட்ஸ், கடவுளின் குழந்தைகள், வெங்காயம் வெலக்கமாருனு நிறைய அலங்கார வார்த்தைகள் சொல்வாங்க. மோடி கூட சமீபத்தில் திவ்யங்ஜன் என்ற வார்த்தைய கொண்டு வந்தார். இது காந்தி தலித் மக்களை ஹரிஜன் னு சொன்ன அதே கதை தான். தோழர் அம்பேத்கர் ஏன் ஹரிஜன் என்ற வார்த்தைய ஏற்கலயோ அதே மாதிரி தான் நானும் இந்த அலங்கார வார்த்தைகள ஏற்கல.

நான் ஒரு ஊனமுற்றவன்னு பெருமையா சொல்லி அந்த வார்த்தைய இயல்பாக்கி மீட்டுருவாக்கம் செய்வதில் தான் என் முயற்சி இருக்கு.

மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் ஊக்கதொகை மற்றும் அரசுகள் அவர்களை நடத்தும் விதம்?

தமிழ்நாடு அரசு தரும் ஊக்கத்தொகை போதவில்லை என்று தான் ஊனமுற்றோர் இயக்கங்கள் போராடுகிறார்கள். ஆளும் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்ன ஊனமுற்றோருக்கான ஊக்கதொகையே இன்னும் தரப்படவில்லை.  எங்களுக்கான எல்லா உரிமையும்

சட்ட புத்தகத்தில் மட்டும் தான் இருக்கு. உரிமைகளை உண்மையாக்கு என்ற கோஷம் தான் ஊனமுற்றோர் அமைப்புகளிடம் இருந்து ஒலிக்கிறது.

வெளிநாடுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரியாதை மற்றும் அரசு சார்பில் அவர்களுக்கு வழங்கப்படும் வசதிகள்  இந்தியாவை ஒப்பிடுகையில் எப்படி இருக்கிறது?

ஊனமுற்றோர் உரிமை போராட்டங்கள் இயக்கங்களாக நடந்த நாடுகளில் இருக்கும் உரிமைகளில் 20 சதவிகிதம் கூட இந்தியாவில் இருப்பதா எனக்கு தோனல.

பேரன்பு படத்தில் தனது பெண் குழந்தைக்கு ஈர்ப்பு ஏற்படும் காட்சிகள் அமைந்திருக்கும். ஆனால் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் பாலின ரீதியான ஈர்ப்பு, காமம், இது பெரிதாக பேசப்படுவதில்லை? இது குறித்து.

ஊனமுற்றோரின் உடல்கள் பாவம் பரிதாபத்துகுரியதா சமூகத்தால் பார்க்கபடுகிறது. அழகான ஈர்க்க கூடிய உடல்களா, சக சுயமரியாதை கொண்ட மனிதர்களா பார்க்கப்படுறதில்ல. சராசரி நபர்களாக  பொது ஊடகங்களில் காட்டப்படுவதில்ல, இந்த பிரநிதித்துவமின்மை ஊனமுற்றோரை சமூகம் பார்க்கும் பரிதாப பார்வைக்கு ஒரு முக்கிய காரணமா இருக்கு. ஊனமுற்றவர்களின் காதல் மற்றும் காம வாழ்க்கை க்கு இந்த இயல்வாதிக்க சமூக மனநிலை ஒரு தடையா இருக்கு.

 எப்படி சாதி, மதம், பார்த்து கல்யாணம் பண்றாங்களோ அதே மாதிரி தான் ஊனமுற்றவரும் ஊனமுற்றவரும் தான் சமம்னு நினைத்து கல்யாணம் பண்றாங்க, இதற்கான திருமண தரகர்கள் கூட இருக்காங்க. இந்த ஊனமுற்றோருக்கு ஊனமுற்றோர் தான் சரினு சொல்லி கல்யாணம் பண்ணுற கட்டமைப்பு பச்சையான இயல்வாதிக்க சமூக மனநிலைய காட்டுது. இதே மாதிரி ஒரு ஊனமுற்றவரை ஊனமில்லாதவர் திருமணம் செய்து கொண்டால், அந்த ஊனமில்லாத நபர மீட்பர், கதா நாயகர் போன்ற நிலயில் பார்த்து மீ‌ண்டு‌ம் இருவரும் சமம் இல்லை என்ற இயல்வாதிக்க மனநிலைய சமூகம் காட்டுது.

ஒரு பணம் இருக்கும் மாற்றுதிறனாளிகளுக்கும், அதுவே ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருக்கும் மாற்றுதிறனாளிகளுக்கும் இருக்கும் வேறுபாடுகளை பற்றி கூறுங்கள்?

அனைத்து ஊனமுற்றோரை ஒரே இடத்தில் வைக்க முடியாது.  தனி தனியா தான் பாக்கனும். ஊனமுற்றோரில்  தலித், உழைக்கும் வர்க்க ஊனமுற்றையும், உயர்சாதி பணக்கார ஊனமுற்றோரையும் ஒரே இடத்துல வச்சு பாக்க முடியாது. உரிமையைஅணுகுதல் பணக்காரங்களுக்கு மட்டும் தான் உரியதா இருக்கு. நவீன அணுகல் கருவிகளை ஒரு பணக்கார ஊனமுற்றவர் மட்டும் தான் பெற முடியுது. அனைவருக்கும் அது கிடைக்கணும். ஏன்னா அணுகல் கருவிகள் என்பது சொகுசு இல்ல, அது அடிப்படை உரிமை.

இதில்லாம ஊனமுற்ற திருநர்கள் உடை எல்லாமே இன்னொருவர் உதவியோட மாற்ற வேண்டி இருக்கும். அவங்க Gender dysphoria பத்திலாம் அந்த உதவியாளருக்கு புரிதல் இல்லைனா அந்த நிலைய யோசிச்சு பாருங்க. பெண்கள் விசயத்துலயும், வாய் பேச முடியாத பெண்கள் பாலியல் வன்முறை குறித்து வழக்கு தொடுக்க காவல் நிலையம் போனா காவலர்களுக்கு சைகை மொழி தெரியனும். ஆனா தெரியறதில்ல. இந்த மாதிரி தனிபிரிவுகளா சமூக ஒடுக்குமுறை நடக்குது.  இத புரிஞ்சிக்க நமக்கு Intersectional பார்வை தேவை.

பொது சமூகம் மாற்றுதிறனாளிகளை எப்படி பார்க்க வேண்டும்?

இயல்பான மனிதர்களா பார்த்தா போதும்.  ஊனமுற்றோரை தெய்வ வழிபாடும் பண்ண வேணாம். இழிவாவும் பாக்க வேணாம். சாதாரண மனிதர்களா, சுயமரியாதை இருக்க சக சமமான மனிதர்களா பாத்தா போதும்.

 பொதுவாக அரசு உயர் பதவிகளில் மாற்றுதிறனாளிகள் வருவது அறிதாக இருக்கிறது. ஒரு நாட்டின் முதல்வர் மற்றும் பிரதமர் போன்ற பதவிகளில் அவர்கள் வர வேண்டும் தானே இந்த மாற்றம் சாத்தியப்படுமா?

சட்டமன்றம், பாராளுமன்றம் உள்ள போறதுக்கே இன்னும் அரசு முயற்சி எடுக்குற மாதிரி தெரில. உள்ளாட்சி தேர்தல்களில் கூட நாங்க இல்ல.

ஊனமில்லாதவங்க ஊனமில்லாதவங்களுக்கு திட்ட வரைவு இயற்றும் நிலை தான் இன்னும் இங்க இருக்கு. எங்கள பெறும் இடத்தில் இருந்து கொடுக்கும் இடத்திற்கு நகர்த்தனும். தலித்களுக்காக தலித்களை பிரதிநிதித்துவப்படுத்தனும்ங்கற மாதிரி ஊனமுற்றோரை ஊனமுற்றோர் பிரதிநிதித்துவப்படுத்தனும்.

உள்ளாட்சி தேர்தல்களில் ஊனமுற்றவர்களுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீடு என்பது டிசம்பர் மூன்று இயக்கத்தின் கோரிக்கையா இருக்கு.

லாரன்ஸ் படங்களில் நடனமாடும் மாற்றுதிறனாளிகளை பார்த்து ஏற்படும் ஒரு பரிதாப மனநிலை மற்றும் சந்தை பொருளாக்கப்படும் மாற்றுதிறனாளிகளின் சாதனைகள் குறித்து உங்கள் கருத்து

பொதுவாவே ஊனமுற்றோர்கள் பாவப்பட்டவங்களா, சந்தை பொருளாவே ஊடங்களில் ஊனம் காட்டப்படுது.  ஊனமுற்ற கதாநாயகர்களை சக மனிதர்களாவே காட்டுறதில்ல.

 செய்திதாள்களில் கூட 'ஊனத்தை தாண்டி சாதித்தவர்'னு தான் தலைப்பு வருது.  'இயல்வாதிக்க சமூகத்தை தாண்டி சாதித்தவர்' னு தான் செய்தி போடனும். ஊனம் இயல்பானது, ஊனமுற்றோருக்கு வாழ்க்கைய பிரச்சனைக்குரியதா மாற்றுவது இயல்வாதிக்க சமூகம் தான். தடைய நீங்க போட்டு வச்சிட்டு அத கஷ்டப் பட்டு தாண்டி வரப்ப அங்கயே உக்காந்துட்டு கை மட்டும் தட்டுறது நகைப்புக்குரியதா இருக்கு.  ஏன் அப்படினா நீங்க பாராட்டுறதுனால படிக்கட்டுகள் சாய்வு தளங்களா மாறப்போறதில்ல, நூலகத்திலிருக்கும் புத்தகங்கள் braille எழுத்துகளுடன் வரப்போறதில்ல. Inspirationனு கை தட்டுறத நிறுத்திட்டு எங்களுக்கு உங்க இயல்வாதிக்க போட்டு வச்சிருக்க தடைகளை நீக்க களத்தில் இறங்கி போராடுங்க.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment