Advertisment

கண்ணியத்துக்குரிய காம்ரேட் சோம்நாத் சாட்டர்ஜி!

சோம்நாத் சாட்டர்ஜியின் அரசியல் பயணம், நாடாளுமன்றத்தில் சபாநாயகராக இருந்து அவர் ஆற்றிய பணிகள், சபையை அமைதியாக நடந்த கையாண்ட விதத்தை விவரிக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சோம்நாத் சாட்டர்ஜி



சோம்நாத் சாட்டர்ஜி மரணம்

Advertisment

நாடறிந்த நல்ல கம்யூனிஸ்ட் தலைவரும் சிறந்த நாடாளுமன்றவாதியுமான சோம்நாத் சாட்டர்ஜியின் மரணம் இந்திய அரசியலுக்கு ஈடுசெய்யமுடியாத இழப்பு. இந்த நேரத்தில் சோம்நாத் சாட்டர்ஜியின் அரசியல் பயணத்தை விவரிக்கிறது இந்தச் சிறப்புத் தொகுப்பு.

அஸ்ஸாம் மாநிலம் திஸ்பூரில் 1929 ஜூலை 29 அன்று பிறந்தவர் சாட்டர்ஜி. தீவிரமான கம்யூனிஸ சிந்தனை கொண்ட சாட்டர்ஜியின் தந்தை நிர்மல் சந்திர சாட்டர்ஜி அகில பாரத இந்து மகா சபையின் நிறுவனத் தலைவர்களுள் ஒருவர். ஆரம்பப் படிப்பைக் கல்கத்தாவில் படித்த சாட்டர்ஜி, மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கேயே பாரிஸ்டர் பட்டத்தை வாங்கிக்கொண்டு இந்தியாவுக்கு வந்தார்.

பாரட்லா முடித்துவிட்டு நேராக அரசியலுக்குள் நுழைந்துவிட ஆர்வமாக இருந்தார் சோம்நாத் சாட்டர்ஜி. ஆனாலும் முதலில் நல்ல வேலை ஒன்றைப் பார்த்துக்கொண்டு அரசியல் நுழைவது நல்லது என்ற ஆலோசனையால் கருப்புக் கோட்டை மாட்டிக்கொண்டு நீதிமன்றத்துக்குள் பிரவேசிக்கத் தொடங்கினார்.

அரசியல் நுழைவு

இடதுசாரி சிந்தனைகள் மீது கல்லூரிப்பருவத்தில் இருந்தே தீவிரக்காதல் சோம்நாத் சாட்டர்ஜிக்கு இருந்தது. அரசியலில் நுழைய வேண்டும் என்ற சிந்தனை வந்தபோது அவரை ஈர்த்த இயக்கம் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

பாராளுமன்றத்தில் சோம்நாத் சாட்டர்ஜியின் பங்கு குறித்து ஒரு பார்வை

கட்சியில் இணைந்த மூன்றாவது ஆண்டிலேயே நாடளுமன்றத்துக்குத் தேர்வு செய்யப்பட்டார் சோம்நாத் சாட்டர்ஜி. தெள்ளத் தெளிவான கருத்துகள், துல்லியமான புள்ளி விபரங்கள், நுணுக்கமான விமர்சனங்கள், நகைச்சுவை இழையோடும் பேச்சு என்ற நான்கு அம்சங்களும் அவரை அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கொண்டுசென்றன.

1971ல் தேர்தல் வெற்றியை முதன்முதலாக ருசித்த சோம்நாத் சாட்டர்ஜி அதன்பிறகு தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். ஒவ்வொரு முறை வெற்றி பெறும்போதும் வாக்கு வித்தியாசம் அபரிமிதமாகவே இருந்தது. அது சாட்டர்ஜியின் மக்கள் செல்வாக்கை உணர்த்தின. ஆளுங்கட்சிக்கு எதிராக பல சிக்கலான சமயங்களில் அவர் எடுத்து வைத்த வாதங்கள் அற்புதமானவை. தவிரவும், நாடாளுமன்றத்தின் பல குழுக்களிலும், கமிட்டிகளிலும் அங்கம் வகித்துள்ள சோம்நாத் சாட்டர்ஜி, ஜோதிபாசுவின் நம்பிக்கைக்குரிய தோழர்.

சபாநாயகராக தேர்வு

நாடாளுமன்றத்தின் அத்தனை விதிமுறைகளையும் விரல் நுனியில் வைத்திருக்கும் சோம்நாத் சாட்டர்ஜியை 1996ன் மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாக அறிவித்தது நாடாளுமன்றம். 2004ல் பதினேழு கட்சிகளின் ஆதரவோடு போட்டியின்றி சபாநாகராகத் தேர்வு செய்யப்பட்டார் சாட்டர்ஜி. சிபிஎம்மின் மத்தியக்குழு உறுப்பினரான மிகத்தாமதமாக நியமிக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி, சபாநாயகரான பிறகு மத்தியக்குழு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.

சபாநாயகரான பிறகு சாட்டர்ஜியின் நடவடிக்கைகள் முக்கியமானவை. கட்சி வித்தியாசமின்றி அனைத்து உறுப்பினர்களுடனும் பழகக்கூடியவரான சாட்டர்ஜி, புதிய உறுப்பினர்கள் பேசுவதற்கும் விவாதங்களில் கலந்துகொள்வதற்கும் அதிக வாய்ப்புகளை வழங்கக்கூடியவர். குறிப்பாக, ராகுல், தயாநிதி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, சச்சின் பைலட் போன்ற இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கியதை சம்பந்தப்பட்ட உறுப்பினர்களே பெருமிதத்துடன் பதிவு செய்துள்ளனர்.

ஒவ்வொருமுறை நாடாளுமன்றம் கூடும்போதும் சபையின் மையப்பகுதிக்குள் குழுமி கோஷமிடுவதும், கலாட்டாவில் ஈடுபடுவதும் எம்.பிக்களின் அன்றாட நடவடிக்கை. அதைத் தடுத்து நிறுத்த முன்முயற்சி எடுத்தார் சாட்டர்ஜி. இதற்காக கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முதல்நாள் சர்வ கட்சித் தலைவர்களையும் அழைத்து, அவை நடவடிக்கைகளில் எப்படி நடந்துகொள்வது என்பதுபற்றி ஆலோசனை நடத்தினார். இதனால் மக்களவை உறுப்பினர்கள் ஓரளவுக்கு அமைதிகாத்தபோதும், அவ்வப்போது ரகளை செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

சோம்நாத் சாட்டர்ஜியின் ஆயுதம்

அப்போதெல்லாம் சாட்டர்ஜியின் ஒரே ஆயுதம், ‘நான் ராஜினாமா செய்துவிடுவேன்' என்பதுதான். சோம்நாத் சாட்டர்ஜி இப்படிச் சொன்னதும் ரகளை செய்யும் எம்.பிக்கள் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவர். ஒருமுறை எம்.பிக்கள் எல்லைமீறியபோது, ‘இப்படி மோசமாக நடந்துகொள்வதற்குப் பதிலாக நாடாளுமன்ற சட்டப்புத்தகத்தை எரித்துவிடுங்கள்' என்று பொங்கிவிட்டார்.

கிட்டத்தட்ட இந்தச் சூழ்நிலையில்தான் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்துவந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திடீரென தன்னுடைய ஆதரவைத் திரும்பப் பெற்றுக் கொண்டது. அதற்குக் காரணம், இந்தியா – அமெரிக்கா இடையிலான 123 – அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸுக்கும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு.

அந்த ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்த்தது சிபிஎம். ஆனால் அதில் கையெழுதிடுவது காலத்தின் கட்டாயம் என்றார் பிரதமர் மன்மோகன் சிங். விளைவு, மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றது சிபிஎம்.

அதன் நீட்சியாக சிபிஎம் கட்சியின் சார்பாக வெற்றிபெற்று சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சோம்நாத் சாட்டர்ஜி பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையை சிபிஎம் முன்வைத்தது. அப்போது சிபிஎம்மின் பொதுச்செயலாளராக இருந்தவர் பிரகாஷ் காரத்.

கட்சி சார்பற்றவன்

சபாநாயகர் பதவியைத் தூக்கி எறியுங்கள் காம்ரேட் என்று மூத்த தலைவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் கோரிக்கை விடத் தொடங்கினர். ஆனால் சாட்டர்ஜியிடம் இருந்து மௌனம் மட்டுமே பதிலாக வந்தது. நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே வந்தன.

குறிப்பாக, அறுதிப் பெரும்பான்மைக்கு ஒன்றிரண்டு இடங்களே குறைவாக இருந்த சமயத்தில் பரபரப்பு அதிகரித்தது. ஒருவேளை, வாக்குகள் சமமாக விழுந்துவிடும் பட்சத்தில் சபாநாயகரின் வாக்கு முடிவைத் தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும். ஆகவே, சாட்டர்ஜியின் ராஜினாமா அத்தியாவசியமானது என்றனர் இடதுசாரிகள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சாட்டர்ஜி, ‘நான் தற்போது கட்சி சார்பற்றவன். நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி இரண்டுக்கும் பொதுவானவனாக நான்காண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டுவருகிறேன். இந்நிலையில் திடுதிப்பென பதவியை ராஜினாமா செய்துவிட்டு சார்பு நிலையை என்னால் எடுக்க முடியாது' என்று பதிலளித்தார் சாட்டர்ஜி.

இங்குதான் பிரச்னை தொடங்கியது. நாற்பதாண்டு கால கட்சிக் கொள்கைகளைக் காட்டிலும் நான்காண்டு காலப் பதவி முக்கியமாகப் போய்விட்டதா என்று எதிர்க்குரல் எழுப்பினர் இடதுசாரித் தலைவர்கள். ஆனால் சாட்டர்ஜி எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. உடனடியாகக் கட்சியை விட்டு நீக்குங்கள் என்று ஆங்காங்கே குரல்கள் எழும்பின. ‘கட்சிக்குத் துரோகம் செய்துவிட்டார் சாட்டர்ஜி' என்ற விமர்சனம் கேரளாவில் இருந்து வந்தது.

சோம்நாத் சாட்டர்ஜி மறைவிற்கு இரங்கல்கள் தெரிவிக்கும் தேசிய கட்சித் தலைவர்கள்

நெருக்கடிகள் முற்றிய நிலையில் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடும் ஒருவரைக் கட்சியை விட்டு நீக்குவதற்கு பொலிட்பீரோவுக்கு இருக்கும் உரிமையைப் பயன்படுத்தி சோம்நாத் சாட்டர்ஜி கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அறிவித்தது சிபிஎம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைப் பொறுத்தவரை உயர் பொறுப்பில் இருக்கும் நபர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது அபூர்வமாக நடக்கக்கூடிய விஷயம்.

ஒழுங்கு நடவடிக்கை

திரிபுரா மாநில முதல்வராக இருந்த நிருபண் சக்ரவர்த்தி, தமிழகத்தைச் சேர்ந்த பி. ராமமூர்த்தி, கேரள முதல்வர் அச்சுதானந்தன், பினராயி விஜயன் என்று விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே ஒழுங்குநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் ஒழுங்கு இருக்க வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளை எடுத்த சோம்நாத் சாட்டர்ஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது வியப்பூட்டும் நிகழ்வு.

ஒழுங்கு நடவடிக்கைக்குப் பிறகு தீவிர அரசியலிலிருந்து விலகியே இருந்தார் சோம்நாத் சாட்டர்ஜி. அப்போது அவரைத் தங்கள் கட்சிக்கு அழைக்கும் முயற்சியில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டன. ஆனால் சோம்நாத் சாட்டர்ஜி எந்தவொரு கட்சியிலும் சேரவில்லை. மாறாக, சிபிஎம்மின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து, தேவையான தருணங்களில் விமரிசிப்பதோடு நிறுத்திக்கொண்டார்.

சமீபத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி 2018 ஆகஸ்டு 13 அன்று மரணத்தைத் தழுவினார். இடதுசாரிச் சிந்தனையை நெஞ்சில் ஏந்திய சோம்நாத் சாட்டர்ஜி, கடைசி வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணையவில்லை, வேறொரு கட்சியிலும் சேரவில்லை. கண்ணியத்துக்குரிய காம்ரேடாகவே மறைந்துபோனார்!

ஆர்.முத்துக்குமார்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment