Advertisment

ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரிசல்ட் : 2ஜி விடுதலையும் ஏன் திமுக.வை காப்பாற்றவில்லை?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவன்று 2ஜி வழக்கில் விடுதலை கிடைத்த பிறகும் திமுக மிக சொற்பமான வாக்குகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
DMK Defeat in RK Nagar, MK Stalin, Kanimozhi, 2G Case

DMK Defeat in RK Nagar, MK Stalin, Kanimozhi, 2G Case

ச.செல்வராஜ்

Advertisment

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவன்று 2ஜி வழக்கில் விடுதலை கிடைத்த பிறகும் திமுக மிக சொற்பமான வாக்குகள் பெற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், தமிழக அரசியலில் பல திருப்பங்களை உருவாக்கி இருக்கிறது. மிக முக்கியமாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும்கட்சிதான் ஜெயிக்கும் என்கிற வரலாறு மாறியிருக்கிறது. கடைசியாக கடந்த 2004-ம் ஆண்டு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் மங்களூரு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததையொட்டி, அங்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் ஆளும்கட்சியான அதிமுக.வை எதிர்த்து திமுக வேட்பாளர் கணேசன் ஜெயித்தார். அதன்பிறகு கடந்த 13 ஆண்டுகளாக ஒவ்வொரு இடைத்தேர்தலிலும் ஆளும்கட்சியே ஜெயித்து வந்தது.

ஆர்.கே.நகர் அந்த வரலாறை மாற்றி எழுதியிருக்கிறது. டிடிவி தினகரன் வெற்றிக்கு பணம் வழங்குவதாக அவரது தரப்பு அளித்த வாக்குறுதி காரணம் என்றால், வாக்குக்கு 6000 ரூபாய் வீதம் வெளிப்படையாகவே ஆளும்கட்சி பணம் வினியோகம் செய்ததையும் கணக்கில் எடுத்தாக வேண்டும். நேரடியாக பணம் கொடுத்த கட்சியைவிட, டோக்கன் கொடுத்த வேட்பாளருக்கு அதிக வாக்குகளை மக்கள் கொடுத்தார்களா? என்பது விவாதத்திற்குரிய கேள்வி.

ஆர்.கே.நகரில் அதிமுக வாக்குகள் சிதறும் என்றும், அதனால் திமுக சுலபமாக ஜெயிக்கும் என்றே ஆரம்பத்தில் பலரும் கருதினார்கள். ஆனால் சுமார் 24,000 வாக்குகளை மட்டுமே பெற்று அந்தக் கட்சி டெப்பாசிட் இழந்தது திமுக தொண்டர்களுக்கு பேரதிர்ச்சி! இந்த வாக்குகள் பதிவான வாக்குகளில் 15 சதவிகிதத்திற்கும் சற்று குறைவு!

1957-ல் தேர்தல் களத்தில் குதித்த திமுக, தமிழகத்தில் 16 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. 1967-க்கு பிறகு எந்தத் தேர்தலிலும் இவ்வளவு குறைவான சதவிகித வாக்குகளை திமுக பெற்றதில்லை. இத்தனைக்கும் திமுக தரப்பில் தமிழகத்தின் அத்தனை மாவட்டச் செயலாளர்கள் 80-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் இருந்தனர்.

‘திமுக-டிடிவி தினகரன் இடையே ரகசிய கூட்டணி உருவாகிவிட்டது. அதனால்தான் திமுக.வின் வாக்குகள் குறைந்து, டிடிவி வெற்றி பெற்றிருக்கிறார்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தங்கள் கூட்டறிக்கையில் கூறியிருக்கிறார்கள். உண்மையில் அப்படி ஒரு கூட்டணி அமைந்திருந்தால், திமுக.வுக்கு அது இன்னும் அவமானம்!

5 முறை தமிழகத்தை ஆண்ட ஒரு கட்சி, இன்றைய சூழலில் தமிழகத்தில் வலுவான ஒரு கட்சி, அந்த சுயேட்சையின் வாக்குகளை தனது பக்கம் திருப்பியிருக்க வேண்டும். அதன் மூலமாக 13 ஆண்டுகளுக்கு பிறகு இடைத்தேர்தலில் ஜெயித்த எதிர்க்கட்சியாக தனது சாதனையை பதிவு செய்திருக்க முடியும். அது அடுத்து வருகிற உள்ளாட்சித் தேர்தலுக்கும், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கும் உந்து சக்தியாக அமைந்திருக்கும்.

ஆனால் சுயேட்சை வேட்பாளரான தினகரனுக்கு விட்டுக் கொடுத்து, ஆட்சியை கவிழ்க்க ஒருவேளை திமுக திட்டமிட்டிருந்தால், அது கண்ணை விற்று சித்திரம் வாங்கிய கதைதான்! காரணம், ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் பங்களிப்பு இல்லாத அரசியல் களத்தில் புதிதாக டிடிவி தினகரன் என்கிற ஆளுமையை இந்த இடைத்தேர்தல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. ஒருவேளை அதிமுக.வை படிப்படியாக டிடிவி தினகரன் கபளீகரம் செய்துவிட்டால், இவரை ஜெயிக்க மு.க.ஸ்டாலின் இன்னும் மெனக்கெட வேண்டியிருக்கும்.

திமுக.வின் வாக்குகள் டிடிவி.க்கு போகவே இல்லையா? என்றால், போயிருக்கிறது என்பதுதான் நிஜம்! எப்படி? திமுக தொண்டர்களில் மெஜாரிட்டியானவர்கள், பாஜக எதிர்ப்பு மனநிலை கொண்டவர்கள்! டெல்லி ஆதிக்கத்திற்கு எதிராக முழக்கம் எழுப்பி பழக்கப்பட்டவர்கள்! அதிகாரத்தால் அடக்கப்படும்போது, நிமிர்ந்து நிற்பதை விரும்புகிறவர்கள்! ‘தில்’லான அல்லது சுவாரசியமான பேச்சுகளில் மயங்குகிறவர்கள்!

கடந்த ஏழெட்டு மாதங்களில் பாஜக அல்லது மத்திய அரசு ஏவிய அத்தனை அடிகளையும் வாங்கிக்கொண்டு, நிமிர்ந்து நின்றார் டிடிவி! ‘என்னை 25 ஆண்டுகள் சிறையில் போட்டாலும், திரும்பி வந்து அதற்கு காரணமான கட்சியை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டேன்’ என சவால் விட்டார். டெல்லி போலீஸின் அடிப்படை முகாந்திரமே இல்லாத ஒரு வழக்கு, தேர்தல் ஆணையத்தின் பாரபட்ச நடவடிக்கைகள், வருமான வரித்துறையின் அதிரடி என அத்தனையையும் எதிர்கொண்டார்.

சசிகலா குடும்பத்தையே ஐ.டி. ரெய்டு வளைத்த நேரத்தில் கோ பூஜை நடத்தியது, ஒவ்வொரு முறையும் கூலாக மீடியாவை எதிர்கொண்டு பதிலளித்த விதம் ஆகியவற்றில் உடன்பிறப்புகளில் மெஜாரிட்டியானவர்கள் மயங்கிப் போனார்கள் என்பதுதான் நிஜம். ‘நாங்கள் டிடிவி மாதிரி எதிரியைத்தான் விரும்புகிறோம். ஓபிஎஸ்-இபிஎஸ் மாதிரி அடிமைகளை அல்ல’ என சமூக வலைதளங்களில் வெளிப்படையாக திமுக.வினர் புளகாங்கிதப்பட்டபோது அது புரிந்தது. ஆர்.கே.நகர் தேர்தல் களத்தில் திமுக.வினர் பலர் டிடிவி ரசிகர்களாகவே மாறியிருப்பது நிரூபணமாகியிருக்கிறது.

‘டிடிவி-க்கு வாக்களித்தால், அதிமுக ஆட்சி கலையும்’ என நம்பி திமுக.வினர் வாக்களித்ததாக ஒரு கருத்து இருக்கிறது. இதில் ஓரளவு உண்மை இருப்பதாக நம்பலாம். டிடிவி தினகரன் வலுப்பெறுவதன் மூலமாக இபிஎஸ்-ஓபிஎஸ் கோஷ்டிகளில் குழப்பம் உருவாக வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் அதே ஆட்சி மாற்ற வாக்குறுதியை கடந்த ஓராண்டாகவே ஸ்டாலின் பேசி வருகிறாரே? ‘இந்த பொதுக்கூட்ட மேடையில் இருந்து நான் இறங்கும் முன்பேகூட இந்த ஆட்சி கவிழ்ந்துவிட வாய்ப்பு இருக்கிறது?’ என எத்தனை மேடைகளில் ஸ்டாலின் பேசியிருப்பார். ஆக, ஸ்டாலின் மீது வைக்காத நம்பிக்கையை டிடிவி மீது திமுக.வினர் வைத்திருந்தால், அதுவும் அந்தக் கட்சிக்கு பெரும் ஆபத்துதான்!

ஆனால் டிடிவி தினகரனுக்கு திமுக விட்டுக் கொடுத்ததாக இபிஎஸ்-ஓபிஎஸ் விட்ட அறிக்கையை மறுத்திருக்கிறார் ஸ்டாலின். ‘அதிமுக அமைச்சர்கள் சிலர்தான் டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைத்தனர்’ என பதிலடி கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். ‘பண நாயகம்தான் திமுக.வின் வாக்குகள் சரிவுக்கு காரணம்’ என்கிறார் ஸ்டாலின்.

அதையும் தாண்டி வேட்பாளர் தேர்வு, தேர்தல் பணிகளில் சரியான நிர்வாகிகளை ஈடுபடுத்துவது, ஸ்டாலினே இன்னும் கூடுதலாக அதில் கவனம் செலுத்துவது என களம் இறங்கியிருந்தால் டெப்பாசிட் இழக்கும் அளவிலான தோல்வியை தவிர்த்திருக்கலாம்.

ஆர்.கே.நகரில் 2016-ல் ஜெயலலிதா போட்டியிட்டபோது களம் இறங்கிய சிம்லா முத்துச்சோழன் 57,000 வாக்குகள் வாங்கினார். திமுக முன்னாள் அமைச்சரும், இதே தொகுதியில் 1989 மற்றும் 1996-ல் எம்.எல்.ஏ.வாக இருந்தவருமான சற்குணபாண்டியனின் மருமகள் இவர். கடந்த ஏப்ரலில் ரத்தான ஆர்.கே.நகர் இடைத்தேர்தலிலும், இந்த முறை நடந்த இடைத்தேர்தலிலும் சிம்லா முத்துச்சோழனுக்கு ‘சீட்’கொடுத்திருக்க வேண்டும் என்கிற கருத்தை இப்போது கட்சிப் பிரமுகர்கள் முன் வைக்கிறார்கள். காலம் கடந்து யோசித்து என்ன பயன்?

வாக்குப் பதிவு நாளான டிசம்பர் 21-ம் தேதி காலை 10.45 மணிக்கு 2ஜி வழக்கில் தீர்ப்பு வந்தது. ஒருவேளை அந்த வழக்கில் கனிமொழியும், ஆ.ராசாவும் தண்டனை பெற்றிருந்தால், இன்று ஆர்.கே.நகர் வாக்கு சரிவுக்கு அதுவே காரணமாக கூறப்பட்டிருக்கும்.

ஆனால் திமுக மகிழ்ச்சி அடையும் விதமாக கனிமொழியும், ஆ.ராசாவும் விடுதலை செய்யப்பட்டனர். அன்று வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்த போதே தொலைக்காட்சிகளில் 2ஜி விடுதலைதான் பிரதானமாக விவாதிக்கப்பட்டது. அதன்பிறகும் ஆர்.கே.நகரில் இவ்வளவுதான் வாக்குகள் என்றால், ஒரு வேளை அன்று 2ஜி தீர்ப்பு வராமல் இருந்திருந்தால் இதைவிட திமுக.வின் வாக்குகள் குறைந்திருக்குமோ?

 

Dmk Rk Nagar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment