கவிஞர் சந்திரகலா
இசை வெளியீட்டுக்கே 12 கோடியை பறக்கவிடும் திரையுலக பிரம்மாண்டங்களுக்கு மத்தியில், பணமுடை காரணமாக தாமதமாக வெளியாகி வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது அறம் திரைப்படம்.
தனது கதைகளின், கனவுகளின் அஸ்திவாரத்தை பெயர்த்து ஆளாளுக்கு ஆடம்பர மாளிகை கட்டிக்கொண்ட போதும் ஆடிப்போகாமல், திறமையுடன் நின்று திரைக்களமாடி தான் யாரென்று நிரூபித்திருக்கிறார் இயக்குநர் கோபி நயினார்.
தயாரிப்பாளருக்காக, நடிகருக்காக , ரசிகனுக்காக என தனித்தனியாக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் சொல்ல வந்ததை சொல்லவேண்டிய நேரத்தில் பொட்டில் அடித்தமாதிரி புரிய வைத்திருப்பதற்காக இந்த படத்தை பார்த்தவர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்தபடத்தில் ஒவ்வொரு பாத்திரப்படைப்பும் பிரம்மாதம். கருவேல முள் தொடங்கி எல்லாமே கச்சிதமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அதிலும் கலெக்டர் மதிவதனியாக நடித்து, 'நயன்தாராவா இது..!' என பேசவைத்திருக்கிறார் இதுவரை பார்த்திராத இன்னொரு நயன்தாரா.
நயன்தாராவின் பாத்திரப்படைப்பு கூர்மையானது. கோரிக்கை மனு கொடுத்தால் கடவுள் கண்டுகொள்ளாததை கூட கலெக்டர் நிறைவேற்றித்தருவார் என அப்பாவி ஏழை மக்கள் நம்புகிறார்கள். ஆனால் சமகால கலெக்டர்கள் பலரின் நடவடிக்கைகள் சலிப்பேற்படுத்துகின்றன. அதன் வெளிப்பாடுதான், சாமானிய மக்கள் தாங்கள் மனதில் வரிந்து வைத்த கலெக்டர் பிம்பமாக திரையில் நயன்தாராவை பார்த்ததும் புளகாங்கிதப்பட்டு போயிருக்கிறார்கள்.
போதாகுறைக்கு இயக்குநர் ரஞ்சித் டிவிட்டரில் பதிவிட்ட ‘தோழர் நயன்தாரா’ என்ற வார்த்தையை தூக்கிப்பிடிக்கும் ரசிகர்கள், நயன்தாராவை ‘தோழர், தோழர்..’ என்றே கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு தோழர் என்றால் நயன்தாரா; நயன்தாரா என்றால் தோழர் என்றாகியிருக்கிறது.
பொதுவாக தான் நடிக்கிற படங்களை புரமோட் பண்ணுகிற நிகழ்வுகளுக்கு வராதவர் காசி தியேட்டருக்கு வந்து 10 நிமிடம் படம்பார்த்தார். ரசிகர்களுக்கு கை கூப்பி வணக்கம் சொன்னார். சமூக அக்கறை காரணமாகத்தான் பணச்சிக்கலில் படம் தடுமாறியபோது பண உதவி செய்து படம் வெளியாக காரணமானார். இவையெல்லாம் தோழர் என்ற வார்த்தைக்கு வலு சேர்க்க ரசிகர்கள் குறிப்பிடும் கூடுதல் காரணங்களாக இருக்கிறது.
எத்தனையோ படங்களில் ரசிகர்களை நெருங்கிய கமல், ரஜினியை கூட தோழர் என்ற உரிமையோடு ரசிகர்கள் பார்த்ததில்லை. நயன்தாரா விசயத்தில் எப்படி இந்த ரசவாதம் நிகழ்ந்தது?
அபிமான நடிகைகளை கனவுகன்னி, கைபடாத ரோஜா, நடிகையர்திலகம் என்றெல்லாம் குறிப்பிட்டதை போல அல்ல இது. ஒருவகையில் இது அபத்தமான வார்த்தை பிரயோகம்.
தோழர் என்பது வார்த்தை அல்ல வாழ்க்கை. இடதுசாரி கட்சியை சேர்ந்தவர்கள், அதே நிறமொத்த சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் காலம் காலமாக தரித்து வரும் மகுடம் அது.
நயன்தாரா அப்படி இல்லை. அவருக்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது் உண்மைதான். அவர் நகைக்கடை திறக்க வந்தால் பத்தாயிரம் பேர் கூடுகிறார்கள் என்பதும் சரிதான். அதே இடத்தில் ஏதேனும் துணிக்கடை திறக்க இன்னொரு நடிகை வந்தால் அதே பத்தாயிரம் பேர்தான் வருகிறார்கள்.
அரசியல் கட்சிகளுக்கென சில ஆபாச பேச்சாளர்களை நேர்ந்து விட்டதை போல சினிமா நடிகைகளுக்காக நேர்ந்து விடப்பட்டவர்கள் இவர்கள். குஷ்புவுக்கு கோயில்கட்டியவர்கள் வேறு யாராம்? இவர்களா நயன்தாராவை தோழராக்குவது??
நயன்தாரா ஆகச்சிறந்த நடிகை. நாளை இதே போல சமூக அக்கறை கொண்ட ஏதோவொரு படத்தில் ஊருக்கே தீ வைக்கிற மாதிரி வில்லத்தனம் நிறைந்த கேரக்டர் கொடுத்தாலும் அவர் நடிப்பார். சம்பளம் மட்டும் கூடக்குறைய கொடுக்க நேரிடும். அவ்வளவுதான்.
இந்த சாதாரண உண்மை கூட தெரியாதபடிக்கு தமிழ் ரசிகனின் கண்ணை மாயத்திரை மறைப்பதும், சிற்பியை மறந்துவிட்டு சிலைகளை ஆராதிப்பதும் ஆரோக்கியமான போக்கு அல்ல. தோள் கொடுப்பான் தோழன் என்பதை சொல்லவேண்டிய சூழலில் தோழர் நயன்தாரா என்றால் ஏற்புடையதே அல்லாமல், அதற்கு உள்ளார்ந்த அர்த்தம் வேறு என்றால் நிஜமான தோழர்கள் மட்டுமல்ல. நயன்தாராவே ரசிக்க மாட்டார்.
(தொடர்புக்கு : kachandrakala@gmail.com)