இதுவரை பார்க்காத விசித்திர ஆட்சி!

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்குக்கு எப்போதும் கியாரண்டி இருக்கும். ஆனால், இப்போது தலைநகர் சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

By: Updated: February 16, 2018, 11:21:31 AM

ச.கோசல்ராம்

எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டில் தமிழகம் வளர்ச்சி பாதையில் சென்று இருக்கிறதா? ஆட்சி, நிர்வாகம், கட்சி என்ற மூன்று தளங்களிலும் எடப்பாடி சாதித்தது என்ன? என்பதை பார்க்கலாம்.

முதல்வர் பதவிக்கு எடப்பாடி வருவதற்கு காரணமாக இருந்தவர் வி.கே.சசிகலாவும், டிடிவி.தினகரனும்தான். கூவத்தூர் ரிசார்ட்டில் 124 எம்.எல்.ஏ.க்களை தங்க வைத்து, எடப்பாடியை முதல்வராக்கினார்கள். எல்லாமே மூன்று மாதங்களில் தலைகீழானது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி.தினகரன் சிறையில் இருந்த போது எடப்பாடி அவரை பார்க்க செல்லவில்லை. இதுதான் முதல் உரசல்.

அதன் பின்னர் எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து விலக ஆரம்பித்தார். ஓபிஎஸ் அவருடன் இணைந்த பின்னர், உறவை முற்றிலுமாக உதறிவிட்டார். டிடிவி.தினகரனும், எதிர்கட்சியினரும், ’இன்னும் 2 மாதத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும்… இரண்டொரு நாளில் கவிழ்ந்துவிடும்’ என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் ஓராண்டுகள் அவர் முதல்வராக நீடிப்பதே சாதனையாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இது அவரை பொறுத்தவரையில் சாதனைதான்.

முதல் அமைச்சராக இருந்தாலும், அவரால் அவர் நினைத்தப்படி ஆட்சி நடத்த முடிகிறதா என்றால், நிச்சயமாக இல்லை. அமைச்சர்களை மாற்றும் அதிகாரமோ, அல்லது அவர்களை கண்டிக்கும் தைரியமோ அவருக்கு இல்லை. அமைச்சர்கள் மட்டுமில்லாமல், எம்.எல்.ஏ.க்களையும் ‘கவனித்து’ தனது முதல்வர் பதவியை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

தலைமை செயலாளரை கூட அவர் விரும்பிய நபரை அவரால் நியமிக்க முடியவில்லை. அட்வகேட் ஜெனரல் கூட வேறு யாரோ சொல்லி நியமிக்கக் கூடிய நிர்பந்தத்தில்தான் இருக்கிறார். கவர்னருடைய செயலாளராக, தலைமை செயலாளருக்கு இணையான அந்தஸ்துள்ள அதிகாரியை நியமிக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அவரால் டிஜிபியை மட்டும், அவர் ஓய்வு பெறுவதற்கு அரை மணி நேரத்துக்குள் நியமிக்க முடிந்தது. அதுவும் ஒரு அமைச்சரை காப்பாற வேண்டிய நிர்பந்ததால்தான்.

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, தன்னை ‘மிஸ்டர் கிளின்’ என்று காட்டிக் கொள்வதற்காக, அமைச்சர்கள் மீது புகார் வந்தால் நடவடிக்கை எடுப்பார். சட்டவிரோதமாக குட்கா விற்ற வழக்கிலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது பணம் பட்டுவாடா செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமானவரித்துறை நேரடியாக குற்றம்சாட்டியும் நடவடிக்கை எடுக்க முடியாமல் தத்தளிக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சி மீது ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், அவர் தன்னை ஏழை பங்காளனாக காட்டிக் கொண்டார். பொது விநியோக திட்டம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் என ஏழைகளுக்கான திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் எடப்பாடி அரசோ, ஏழைகள் அதிகமாக வாங்கக் கூடிய பருப்பு வகைகளை இல்லை என்று சொல்கிறது. எண்ணெய் கிடையாது என்கிறது. அம்மா உணவகங்கள் தள்ளாட ஆரம்பித்துள்ளது. ஏழை மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் இல்லை என்பது கூட பிரச்னை இல்லை. ஆனால் அவர்களின் தலையில் பாரத்தை தூக்கி வைக்கும் வகையில் பஸ் கட்டண உயர்வை ஏற்றி வைத்துவிட்டார்.

எடப்பாடி முதல்வரான பின்னர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை அறிவித்தார்கள். அவர்களோடு பேச்சுவ்வார்த்தை நடத்தி, போராட்டத்தை தடுக்கக் கூட முடியவில்லை. அதன் பின்னர் நர்ஸ்கள் போராட்டம், போக்குவரத்து தொழிலாளர் போராட்டம், இப்போது மின் துறை ஊழியர்கள் போராட்டம் என தொடர்ந்து எந்த போராட்டத்தையும், பேச்சுவார்த்தையால தீர்க்க முடியவில்லை. கோர்ட் தயவால், போராட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டதால், பெரு மூச்சுவிட்டு வருகிறார்.

மத்திய அரசு தமிழகத்தில் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்தும், அவரால் எங்கு அமைப்பது என்ற முடிவை எடுக்க முடியவில்லை. தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ‘மாநில அரசு முடிவெடுக்காமல் தாமதப்படுத்துகிறது’ என்று வெளிப்படையாக குற்றம் சுமத்துக்கிறார். ஆனால் மாநில அரசிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இன்னொரு பக்கம் நாங்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம். அப்போதுதான் மத்திய அரசிடம் இருந்து அதிக நிதி பெற முடியும் என்று அமைச்சர்கள் சொல்கிறார்கள். கடந்த ஓராண்டில் வர்தா புயல், ஓக்கி புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி வாங்க முடியவில்லை. அது கூட பரவாயில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால், பிரதமர் மோடியை சந்தித்து பாதிப்புகள் குறித்து விவரிக்க நேரம் கூட வாங்க முடியவில்லை. கவர்னர்தான் எல்லா மத்திய அமைச்சர்களுடன் கலந்தாலோசிக்கிறார். மாநில சுயாட்சி பேசிய திராவிட கட்சி ஆட்சியில் இருக்கும் போது, சர்வ சாதாரணமாக கவர்னர் ஆய்வு நடத்துக்கிறார். அதை கண்டிக்க கூட முடியாத முதல்வராக இருக்கிறார்.

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்குக்கு எப்போதும் கியாரண்டி இருக்கும். ஆனால், இப்போது தலைநகர் சென்னையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கணவருடன் நடந்து செல்லும் பெண்ணிடம் நகையை பறிக்கிறார்கள். பதைபதைக்க வைக்கும் வகையில், இழுத்துக் கொண்டு செல்கிறார்கள். சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. ரவுடிகள் சர்வ சாதாரணமாக பிறந்த நாள் கொண்டாடி மகிழ்கிறார்கள். ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்து, சட்டவிரோத செயல்கள் தலைவிரித்தாடுகிறது. எதையும் கடுப்படுத்தும் இடத்தில் முதல் அமைச்சர் இல்லை.

இதைவிட கொடுமை என்னவென்றால், அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட கந்துவட்டி சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியான அன்பு செழியன் அமைச்சர் வீட்டு நிகழ்ச்சியில் முதல்வர், துணை முதல்வர் கலந்து கொண்ட விழாவில் முதல் வரிசையில் இடம் கொடுக்கப்படுகிறது. போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளியை, போலீஸ் துறையை கையில் வைத்திருக்கும் முதல் அமைச்சர் தனியாக சந்தித்து பேசியதாக ராமதாஸ் சொல்கிறார். அதற்கு கூட முதல்வர் எடப்பாடியால் பதில் சொல்ல முடியவில்லை.

ஆட்சி நிர்வாகம் என இரண்டிலும் பல ஓட்டைகள் இருக்கிறது. கட்சியாவது அவரது முழு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. கட்சியின் சின்னத்தை மீட்டெடுத்த போதிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஒரு சுயேட்சையிடம் வெற்றியை பறிகொடுத்துவிட்டு நிற்கிறார். டிடிவி.தினகரன் ஆதரவாளர்களான கட்சி நிர்வாகிகளை தினம் தினம் நூற்றுக் கணக்கில் நீக்குகிறார்கள். ஆனால், அவர்களுக்கு மாற்றாக யாரையும் நியமிக்கக் கூடிய தெம்பும் திறாணியும் இல்லாதவறாக நிலை குலைந்து போய் உள்ளார்.

கடந்த ஓராண்டில் தமிழகம், இதுவரை கண்டிறாத பல விசித்திர நிகழ்வுகளை பார்த்துவிட்டது. ஆட்சியிலும் அதிகாரமும் கோர்ட்டின் தயவில்தான் இருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருப்பதால், அமைதியாக வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Fairytale rule that has not yet been seen

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X