கூட்டாட்சியா? ஒற்றையாட்சியா? ஜனநாயகத்துக்கு எது நல்லது!

கூட்டாட்சித் தத்துவத்தின் தன்மைகளோடு முரண்படும் நம் அரசியலமைப்பின் கூறுகளை விளங்கிக் கொள்ளாதவரை, அரசியல் சூதாட்டங்களை புரிந்து கொள்ளவே முடியாது.

விவேக் கணநாதன்

ஒரு குறிப்பிட்ட காலத்தில் அரசியலில் என்ன சொற்கள் மிக அதிகமாக புழங்கப்படுகிறதோ அந்தச் சொற்கள் தான் நாட்டின் அரசியல் போக்கைத் தீர்மானிக்கின்றன. இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் கவனிக்கின்ற போது அரசியல் களத்தைத் தீர்மானித்த முழக்கங்கள், ஆக்கிரமித்த சொற்கள், அவை உருவாகி வந்த விதம், அவற்றுக்கான தேவை, சமூக – பொருளாதாரச் சூழல் போன்றவற்றால் சுதந்திரப் போராட்டத்தின் தன்மையும், வீரியமும், கோட்பாட்டு வடிவங்களும் சுதேசி, சுயாட்சி – சுயராஜ்யம் , சுதந்திரம் என படிப்படியாக மாறிக்கொண்டே வந்திருப்பதை உணர முடியும். இந்தச் சொற்கள், அவை முழங்கப்பட்ட காலத்தின் சமூக – அரசியல் சூழலை அறியச் செய்யும் வரலாறு காட்டிகள். இன்றைக்கு அரசியல் களத்தை ஆக்கிரமித்திருக்கும் இரண்டு சொற்கள் கூட்டாட்சி – ஒற்றையாட்சி.

நிகழ்கால அரசியல் என்பது துர்பாக்கியத்தின் ஆசிர்வாதம். உரையாடல்கள், விவாதங்கள், இயல்பான பரிணாம வளர்ச்சிகளால் அதிகார மட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றங்களை நோக்கி முன்னேற வேண்டிய இந்தியா போன்ற மிகப்பரந்த ஜனநாயக தேசத்தில், அதற்கு முற்றும் எதிராக, ஜனநாயகத்தின் ஆன்ம இயல்புகளின் மீது நடக்கும் கொடூரமான தாக்குதல்களால் வரலாற்றை ஆராயவும், படிப்பிணைகளைப் பெற்றுக் கொள்ளவும் காலம் நம்மை நிர்பந்திக்கிறது.

2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து இன்றைக்கு கட்சிகளுக்கு இடையேயும், மத்திய – மாநில அரசு அதிகாரங்களுக்கு இடையேயும் நடக்கும் களேபரங்கள் ஒருவகையில் நமக்கு நல்லது. தகவல் மைய சமூகமாக மாறியிருக்கும் இன்றைய சமூகத்தில் நடக்கும் இந்தக் களேபரங்கள், ஏழு தசாப்தங்களாக இந்தியாவின் அதிகார இயக்கத்துக்குள் நடந்து கொண்டிருக்கும் சூதாட்டங்களை புரிந்து கொள்ளவும் – அம்பலப்படுத்தவும் நமக்கு உதவுகின்றன. யார் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்கிற கேள்வியைத் தாண்டி, என்ன மாதிரியான அதிகாரம் நம்மை ஆள வேண்டும், இந்தியாவின் அதிகார அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திப்பதற்கான வாய்ப்பை 2019 நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு வழங்கியிருக்கிறது. இந்த வாய்ப்பு வந்து சேர்ந்திருக்கும் காலம் ஓர் வரலாற்றுக் கண்ணி.

இன்றைக்கு இந்தியாவில் இருக்கும் மிகப்பெரும்பாலான கட்சிகள் முன்வைக்கும் முழக்கம் ‘கூட்டாட்சித் தத்துவம்’ காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான். இங்கு ஒரு கேள்வி எழுகிறது. இந்தியா ஒரு கூட்டாட்சியா?

இந்தியாவின் அரசியலமைப்பு உருவான காலத்திலிருந்து இன்று வரை அதனை ஆய்வு செய்த நிபுணர்கள் அனைவருமே சொன்ன ஒரு விஷயம், இந்தியா ஒரு ஒற்றையாட்சி (Unitary) அமைப்பும் அல்ல, முழுமையான கூட்டாட்சி (Federal) நாடும் அல்ல. இந்தியாவில் இருக்கும் அரசியல் சட்டம் உணர்வில் கூட்டாட்சியாகவும், அமைப்பில் ஒற்றையாட்சியாகவுமாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதனை தோற்றத்தில் கூட்டாட்சி போல் இருக்கும், ஆனால் உண்மையில் கூட்டாட்சியாய் இல்லாத, போலிக் கூட்டாட்சி (Quasi – Federal) என்றே வழங்குகிறார்கள். இந்தப் போலிக் கூட்டாட்சி அமைப்பில், அது கட்டமைக்கப்பட்டிருக்கும் லாவகத்தால், இயல்பான அரசியல் போக்குகளின்போது அதன் சிக்கல்களை நாம் உணர வாய்ப்புகிட்டுவதில்லை. ஆனால், சமூக – பொருளாதார காரணிகளுக்கும், செயலாற்றும் தேவைக்கும் முற்றும் முரணாக அதிகாரங்கள் குவிக்கப்படும் போது அல்லது அதிகார மோசடி அதிகம் நடக்கும் போது இங்கு அரசியலமைப்பின் தத்துவம் கேள்விக்குள்ளாகிறது. அதிகாரத்தைக் குவிக்கும் இயல்புடையவர்கள் மத்தியப் பேரதிகாரத்திலும், அதிகார சமத்துவம் பற்றிய விழிப்பு கொண்டவர்கள் மாநில அதிகாரத்திலும் ஆட்சி செய்கின்ற நாட்களில் இந்த முரண்கள் எளிமையாக வெளிப்பட்டிருக்கின்றன.

இந்தியா ஓர் அரசியல் அமைப்பாக, ஒன்றாக ஆளத்துவங்கப்பட்ட பிரிட்டிஷ் காலத்தில் தான் இந்த அதிகார முரண்கள் – தத்துவார்த்த முரண்களாகவும் உணரப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்த காலத்தில் வைசிராயாக இருந்தவர்களிலேயே, கர்சன் வைசிராயாக இருந்த காலத்தில் தான் அதிகாரம் மத்தியில் குவிக்கப்பட்டது. கர்சனுக்குப் பிறகு வைசிராயாக வந்த மிண்டோவும், இந்தியாவுக்கான இங்கிலாந்து நாடாளுமன்ற அமைச்சராக மார்லியும் இருந்தபோது மத்தியில் அதிகாரங்களைக் குவித்து வைத்துக்கொண்டு நிர்வாகம் செய்வது கடினம் என்பதை உணர்கின்றனர். விளைவாக, இந்தியாவின் அதிகாரம் செலுத்தும் முறையைப் பற்றி ஆராய்வதற்காக 1907ம் ஆண்டு ‘அதிகாரப் பரவலாக்கத்துக்கான ராயல் கமிஷன்’ என்ற ஆணையத்தை நியமித்தார்கள். இந்த கமிஷன் அளித்த அறிக்கையில் ‘நிர்வாக வசதிகளுக்காகவும்’, ‘பொறுப்புணர்ச்சியை அதிகரிப்பதற்காகவும்’ அதிகாரப் பரவலாக்கம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது. இந்த அறிக்கைக்குப் பிறகு தான் அன்றைக்கு இருந்த பிரிட்டிஷ் மாகாணங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, பட்ஜெட் மீது விவாதம் நடத்தும் உரிமை போன்றவை கொடுக்கப்பட்டன.

இதன் பிறகு, வைசிராயாக மாண்டேகு பொறுப்பேற்ற பிறகுதான் இந்தியா குறித்த பிரிட்டிஷின் எதிர்காலத் திட்டம் என்ன என்பதைப் பற்றிய ஆகஸ்ட் பிரகடனம், 1917ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி வெளியிடப்படுகிறது. அந்த பிரகடனத்தில் தான், இந்தியாவைக் குறித்த பிரிட்டிஷ் அரசாங்கத்தின் எதிர்கால திட்டம் என்ன என அறிவிக்கப்படுகிறது. அத்திட்டத்தின் படி, இந்தியர்களை அதிகார மட்டத்தின் பிரிவுகளில் அதிகம் இடம் பெறச்செய்வது, படிப்படியாக அதிகாரம் பெறச் செய்து என்கிற திட்டத்தை குறிப்பிடுகின்றனர். இந்த பிரகடனத்தைச் செயல்படுத்தும் விதமாக, இந்தியாவில் செய்யப்பட வேண்டிய அதிகார மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து கொடுக்கப்பட்ட மாண்டேகு – செம்ஸ்போர்டு அறிக்கை 1918-ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி சமர்ப்பிக்கப்பட்டு, ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. மாகாணங்களுக்கும், மத்திய அரசுக்குமான அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, இரட்டை ஆட்சி முறை உருவாக்குவது போன்ற அம்சங்கள் அடங்கிய அந்த அறிக்கையின் பரிந்துரையில் தான் முதன்முதலாக, இந்தியாவின் அதிகார அமைப்பை உருவாக்கும் ஓர் திட்டத்தில் ‘கூட்டாட்சி’ என்கிற சொல் பயன்படுத்தப்படுகிறது.

மாண்டேகு – செம்பஸ்போர்டு சட்டம் தான் முதன்முதலாக நிர்வாக ரீதியாக துறைகளைப் பிரித்து மாகாண பட்டியல், மத்திய அரசுப் பட்டியல் என்ற பிரிவை உண்டாக்கியது. ஆனால், இரட்டை ஆட்சி முறை காரணமாகவும், மாகாணங்களில் ஆளுநர்களின் ஆதிக்கம் காரணமாகவும் இந்தத்திட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை.

காத்திரமான மாற்றங்கள் ஏதும் இல்லை என்றாலும்கூட, கூட்டாட்சியின் வாசனையை இந்தியாவின் அதிகார மட்டத்தில் மெலியச்சேர்த்த அந்த அறிக்கை வெளியிடப்பட்டு நூறு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. அந்த வகையில், இந்தியாவில் கூட்டாட்சித் தத்துவத்துக்கான நூற்றாண்டு இது!

வரலாற்றுச் சிறப்புமிக்க வருடத்தில் இந்தியா மிகவும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும். காந்தியின் நூற்றாண்டில் அவர் பிறந்த குஜராத் மாநிலம் கலவரங்களால் எரிந்தது. பெரியாரின் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெற பெற்றோரின் ஆண்டு வருவாய் 9000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்கிற சட்டத்தை எம்.ஜி.ஆர் கொண்டுவந்தார். நேருவின் நூற்றாண்டில் அவர் வாழ்க்கையிலேயே அவரை அதிகம் உறுத்திய காஷ்மீர் உச்சக்கட்ட கலவரத்தைக் கண்டது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இந்த துன்ப மரபுக்கு வலுசேர்க்கும் வகையில், கூட்டாட்சித் தத்துவத்துக்கான நூற்றாண்டில் நம் கண்ணுக்கு முன்னால் அந்த தத்துவம் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறது.

1919ம் ஆண்டு வெளியிடப்பட்ட மாண்டேகு செம்ஸ்போர்டு அறிக்கைக்குப் பிறகு, இந்தியாவில் அரசமைப்பை உருவாக்குவதைக் குறித்து அமைக்கப்பட்ட அத்தனை ஆய்வு குழுக்களுமே இந்தியா ஒரு நாடாளுமன்ற ஜனநாயகம் கொண்ட கூட்டாட்சியாக இருக்க வேண்டும் என்றே பரிந்துரை செய்தன. மாநில சுயாட்சியை உறுதிப்படுத்தும் கூட்டாட்சித் தன்மைமிக்க, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டிருந்தால் . இந்திய – பாகிஸ்தான் பிரிவினையே தடுக்கப்பட்டிருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால், இந்தியா ஒரு நிலமாக இறுகத் தைக்கப்படுவதற்கு மத்தியில் பேரதிகாரம் கொண்ட ஒன்றிய அரசு உருவாக்கப்பட வேண்டும் என்று அன்றைக்கு காங்கிரஸும், அதன் அநேகமான தலைவர்களும் விரும்பினர். இரக்கமற்று விமர்சிக்க வேண்டும் என்றால், நம் அரசியலமைப்பு என்பது அன்றைக்கு காங்கிரஸில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த மேட்டிமை குழுக்களால் கட்டுப்படுத்தப்பட்டு, கடவுளுக்கு நிகராகக் கொண்டாடப்பட்ட மாபெரும் தலைவர்களின் கையில் அதிகாரமிக்க செங்கோலை வழங்க உருவாக்கப்பட்ட அதிகார சாசனம்.

மத்திய அரசிடம் அதிக அதிகாரங்கள் இருக்கவேண்டும் என்றே அன்றைக்கு நேரு, அம்பேத்கர் உள்ளிட்ட பெருந்தலைவர்களே நினைத்தனர். காரணம், அன்றைய சூழலில் சாதிய – மத பெரும்பான்மைவாதத்தால் தூண்டப்பட்டு எந்த நேரமும் சிறுபான்மையினரும் – ஒடுக்கப்பட்ட மக்களும் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருந்தது. பலரிடம் அதிகாரங்களைப் பிரித்துக் கொடுப்பதன் மூலம், பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு இந்தியா உள்ளாகக்கூடும் என்று நேருவும், அம்பேத்கரும் நினைத்தனர்.

ஆனால், அதே நேரு இடஒதுக்கீட்டுக்கு பிரச்னை வரும் என்கிற போது அரசியல் சாசனத்தை திருத்த தவறவில்லை. இட ஒதுக்கீட்டுக்காக, முதன்முதலாக இந்திய அரசியல் சாசனம் திருத்தப்பட்ட பிறகு உரையாற்றிய நேரு, “ நாம் எல்லா காலத்திற்குமான ஓர் சாசனத்தை உருவாக்கிவிடவில்லை. காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப நம் அரசியல் சாசனத்தை திருத்திக் கொள்ளலாம்” என்று பேசுகிறார்.

மத்திய அரசிடம் அதிக அதிகாரங்கள் குவிவதைப் பற்றி அரசியல் நிர்ணய சபையில் பல உறுப்பினர்கள் விமர்சித்துப் பேசிய போது பதிலளித்த அம்பேத்கர், “நவீன உலகத்தில் வலிமையான மத்திய அதிகாரம் உருவாவது தவிர்க்க முடியாதது. கூட்டாட்சியாக இருந்த அமெரிக்காவில் இன்றைக்கு மத்திய அரசு அதிகாரம் மிக்கதாக மாறியிருக்கிறது. ஆனால், மத்திய அரசு மிகவும் வலிமையானதாக மாறுவதை நாம் எதிர்க்க வேண்டும். மத்திய அரசால் செரிக்க முடியாத அளவுக்கு அது அதிகாரத்தை எடுத்துக்கொள்ளக் கூடாது. தன்னால் சுமக்க முடியாத அளவுக்கு பளுவான அதிகாரத்தை மத்திய அரசு சுமந்தால், அந்த பளுவே மத்திய அரசை சாய்த்துவிடும்” என்கிறார்.

வலுவான மத்திய அரசு இருக்க வேண்டும் என நினைத்த நேருவும், அம்பேத்கரும் ஒற்றைப் பேரதிகாரம் கொண்டு வல்லாதிக்க அரசாக மத்திய அரசு இருக்க வேண்டும் என நினைக்கவில்லை. இந்தியாவில் ஒற்றைப் பேரதிகாரம் கொண்ட – ஒற்றை மைய அரசு இருக்க வேண்டும் என விரும்பும் ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் மட்டுமே!

ஆர்.எஸ்.எஸ்-ன் பைபிளான ‘சிந்தனைக் கொத்து’ புத்தகத்தை எழுதிய கோல்வால்கர், இந்தியாவுக்கு ஒற்றைப் பேரதிகாரம் கொண்ட உறுப்பு அரசே (Unitary goverment) சரியானது என அந்தப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப்புள்ளியில், கூட்டாட்சித் தத்துவத்தின் தன்மைகளோடு முரண்படும் நம் அரசியலமைப்பின் கூறுகளை விளங்கிக் கொள்ளாதவரை இங்கே நடக்கும் அரசியல் சூதாட்டங்களை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. பேரதிகார வல்லமையை மத்தியில் குவித்து வைப்பதன் மூலம், ஒரு தேசத்தை வழிநடத்த வேண்டிய அரசியலமைப்பே அதிகார ஊழலால் நிர்ணயிக்கப்படும் அவலம் இங்கே தொடர்ந்து கொண்டே இருக்கின்றது என்றால், அறிவிக்கப்படாத சர்வாதிகாரம் நம் அரசியலமைப்பு சாசனத்தின் கூறுகளில் நிலைபெற்றிருப்பதுதான் அதற்கு காரணம்.

இறுதி முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருக்கும் ஆளுநர் – குடியரசு தலைவர் பதவிகளுக்கான சாசன வரைவில், கூட்டாட்சியையும் – சட்டத்தையும் நிலைநிறுத்தக்கூடிய வழிமுறைகளைவிட, தனிமனித நேர்மையின் மீதான நம்பிக்கையே அதிகம் மேலோங்கியிருக்கிறது. ஆளுநர் – குடியரசு தலைவருக்கான தனித்த அதிகாரங்கள், நம் அரசியலமைப்பை அது செயல்பட வேண்டிய இறுதிக்கட்டத்தில், தனிமனித உடைமை ஆக்கிவிடுகிறது. அதிகாரத்தை தனியுடைமை செய்யும் அரசியலமைப்பின் கூறுகள் தான் மீண்டும் மீண்டும் ஒரேவிதமான அரசியல் சூதாட்டங்களையும், பேர விளையாட்டுகளையும், நிறுவனப்படுத்தப்பட்ட அதிகார ஊழலையும் இங்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதனால் தான், அரசியல் சாசன அமைப்பின் கூறுகளில் உள்ள சிதிலங்களைக் கொண்டு, பலவந்தமான பேரதிகாரத்தால் மக்களை சர்வசாதாரணமாக ஒடுக்கமுடியும் என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். மோடியின் காலத்தில் பாசிச எழுச்சியுடன் நடக்கும் இந்த சர்வாதிகார ஜனநாயகமும், ஒற்றையாட்சி முறையை நோக்கிய நகர்வுகளும் நமக்கு கூடுதல் படிப்பிணைகளைச் சொல்லிக் கொடுக்கின்றன. இன்றைக்கு நமக்கு தேவை கூட்டாட்சி அமைப்பை நிலைநிறுத்துவது குறித்த தத்துவார்த்தமான விவாதங்களும், உரையாடல்களும்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close