Advertisment

ஐந்தாவது தூணின் கறைகள்

சமூக வலைதள செய்தி சேவைகளை ஒதுக்க வேண்டும் என்பதல்ல என் கருத்து. அது தவிர்க்க இயலாத, தவிர்க்கக் கூடாத, தொழில்நுட்ப மாற்றம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
social-media rules for candidates

social-media

மகேஷ்.கே

Advertisment

இந்த இணைய யுகத்தில், மக்கள் செய்திகளை கிரகிக்கும் விதத்தில் பெரும் மாற்றத்தைக் காண முடிகிறது. காலை செய்தித்தாள் வாசிப்பும், தொலைக்காட்சி செய்தி அறிக்கையை கேட்பதும் பழங்கால பழக்க வழக்கமாக கருதப்படுகிறது. அதிலும் குறிப்பாக இளைய தலைமுறைக்கு, செய்திக்கட்டுரைகளை வாசிப்பதற்கு நேரமோ பொறுமையோ இருப்பதில்லை. 140 சொற்கள் என்ற எல்லைக்குட்பட்ட ட்வீட், சமூக வலைத்தளங்களின் newsfeed, whatsapp குறுஞ்செய்திகள், Hashtag, trends, news tickers எனப்படும் தொலைக்காட்சி செய்திச்சுருள்களும் மட்டுமே செய்திகள் என நம்பி கடந்து செல்லும் போக்கு ஆரோக்கியமானதல்ல.

இது தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சிதானே, இதில் என்ன தவறு?

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இத்தகைய செய்தி நுகர்வில் இருக்கும் ஆபத்துகளை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

தவறான தகவல்:

சமூக வலைத்தளங்களில் சில சமயம் தெரியாமலும், பல சமயங்களில் தெரிந்தும் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. பல தொலைக்காட்சி ஊடகங்களும் இதில் அடக்கம். பிரபல சமூக வலைதள ஆராய்ச்சியாளர் Clay Sherky-யின் வார்த்தையில் சொல்வதென்றால், இவர்களது வர்த்தகத்திற்கு வேகமும், பரபரப்பும்தான் மூலதனம். உண்மைத்தன்மையும், தரமும் ஒரு பொருட்டே அல்ல. இதற்கு சான்றாக பிரபலங்களின் மறைவு பற்றியும், தனி மனித வாழ்க்கை பற்றியும் தவறான தகவல்கள் காட்டுத்தீ போல பரப்பி விடப்பட்டதை பல தருணங்களில் கண்கூடாகப் பார்த்தோம்.

பல முன்னணி செய்தி ஊடகங்கள் இன்று காலமாற்றத்திற்கேற்ப மின்னணுமயமாகி இருக்கின்றன. செய்திகளையும் கட்டுரைகளையும் காகிதங்களில் அச்சடிப்பது மட்டுமின்றி, மின்னணு வடிவத்திலும் வெளியிடுகின்றன. சில விதி விளக்குகளைத் தவிர இச்செய்திகள் பெரும்பாலும் பொறுப்புணர்ச்சியோடும், நம்பகத்தன்மைக்கான உத்தரவாதத்தோடும் வெளியிடப்படுகின்றன

ஆனால், இவற்றை படித்து அறிய தலைப்படுகிறோமா? Pew ரிப்போர்ட் படி அது இல்லை என படுகிறது. சமூக வலைதள feed மூலமாகவோ, தேடல் எந்திரங்கள் மூலமாகவோ, வருவோர், செய்தி வலைத்தளில் செலவிடும் சராசரி கால அளவு (engangement) 1.41 நிமிடம். இது நேரிடையாக செய்தி வலைத்தளங்களுக்கு வருவோரின் கால அளவை விட மிக மிக குறைவு.

செய்திகளை முழுவதுமாக படித்து உள்வாங்கி அதன் பின் உருவாகும் கருத்தாக்கம், அந்தந்த மனிதனுடைய, பகுத்தாயும் அறிவைப் பொறுத்தது என்ற போதும் அது நியாயமானது. அது தவறோ சரியோ, நிச்சயம் மதிக்கத்தக்கது. ஆனால், செய்திகளையோ, அது தொடர்பான கட்டுரைகளையும் ஆழ்ந்து படிக்காமல், flash செய்திகளையும், குறுந்செய்திகளையும் மட்டுமே பார்த்துவிட்டு, ஒரு விஷயத்தைப் பற்றி ஒருவர் உண்டாக்கும் அபிப்பிராயம் எப்படி சரியாக இருக்கும்?

துரதிருஷ்டவசமாக, இன்றைய சமூக வலைதள செய்திச்சேவை, தலைப்புகளை மட்டுமே நுகரும் ஒரு தலைமுறையை மட்டுமே வளர்க்கிறது.

உதாரணமாக பண மதிப்பீட்டிழப்பு அறிவிப்பு வெளிவந்ததும், அதற்கான எதிர்வினைகள் (knee-jerk reactions) சில நிமிடங்களில் வந்தன. "கறுப்பு பணத்தின் மீதான சம்மட்டி அடி" என்றும் "இது இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு வித்திடும்" என்றும் எல்லோரும் உடனடி பொருளாதார வல்லுனராக மாறி கருத்துகளை பறக்க விட்டனர். அவை whatsapp-லும், twitter-லும் தெறிக்க விடப்பட்டன. செய்தியை முதலில் உள்வாங்க வேண்டும், பொருளாதார நிபுணர்களின் கருத்தைப் படிக்க வேண்டும் என்ற பொறுமை அவர்களுக்கு இல்லை.

மூன்றாவது கோணம்.

சமூக வலைத்தளங்களின் செய்தி விநியோகத்தில் இருக்கும் இன்னொரு குறைபாடு குறுகிய வட்டம். இந்த செய்திகளும் கருத்துகளும் வருவது பெரும்பாலும் ஒருவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும் சுற்றத்தார் வட்டத்திலிருந்தோ, அவர் சார்ந்த சமூக குழுவில் இருந்தோ, அவருடைய வாழ்வியலில் சம அந்தஸ்தில் இருப்போரின் கூட்டத்தில் இருந்தோதான். இந்த கருத்துக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும். இதனைத் தாண்டி ஒரு வெளியுலகம் இருக்கிறது என்றும், அவர்களுடைய கண்ணோட்டம், வாழ்முறை மாறுபட்டு இருக்கலாம் என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பும் மறைந்து போகிறது. மாறாக, பெரும்பாலான செய்தி ஊடகங்களில் வரும் செய்திகளும், கட்டுரைகளும், சமூகத்தின் 360 டிகிரி பார்வையாகவே இருக்கின்றன.

செய்தியும் கருத்தும்:

கருத்துகள் ஆளுக்கு ஆள் மாறலாம். ஆனால் செய்தி மாற முடியாது, சமூக வலைத்தளங்களில், செய்திக்கும் கருத்துக்கும் இடையே உள்ள கோடு மங்கலாகவே உள்ளது. கருத்துக்கள் செய்திகள் போல திணிக்கப்படுகின்றன.

இன்று நிறைய சமுக வலைத்தளங்கள் வெற்றுக்கூச்சலையும், தவறான தகவல்களையும் பெருமளவு உற்பத்தி செய்யும் கூடங்களாக மாறி வருகின்றன. இவற்றில் சில போகிற போக்கில் அள்ளித் தெளிக்கப்படுவதாகவும், சில கருத்தியல் தாக்கம் உண்டாக்கும் பொருட்டு, வேண்டும் என்றே விதைக்கப்படுவாதாகவும் இருக்கின்றன. ஆனால் இவை வாசகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டு செய்கின்றன.

முந்தைய தலைமுறையில், இப்போதை விட தொழில் நுட்பமும், கல்வி அறிவும் குறைவு என்ற போதும், அவர்களுக்கென்று சில பழக்க வழக்கங்கள் இருந்தன - செய்தித்தாள் வாசிப்பு அல்லது வாசிப்பவர்களிடம் கேட்டறியும் தன்மை, தெருமுனை மற்றும் தேநீர் விடுதிகளில் போலி அல்லாத நிஜ முகங்களுடன் அரசியல் மற்றும் சமுக நிகழ்வுகள் குறித்து உரையாடுதல், பொதுக்கூட்டங்களுக்கு, பிரியாணிக்காக அல்லாமல் தாமாகவே சென்று செவி மடுத்தல் போன்றவை. இவை அந்த தலைமுறையினரின் பகுத்தாயும் அறிவை உயிர்ப்புடன் வைக்க உதவின.

சமீப காலங்களில் பல அரசியல் கட்சிகள், கட்சித்தலைவர்கள் பற்றிய பிம்பத்தை மக்களிடையே கட்டமைப்பதற்காகவும், எதிரிக்கட்சி தலைவர்களைப் பற்றிய எதிரிடையான தகவல்களை பரப்பி விடுவதற்காகவும், பகுதி நேர, மற்றும் முழு நேர ஊழியர்களை பணியமர்த்துவதைப் பார்க்கின்றோம்.

இவர்களது பணி சாமானியர் என்ற முகமூடியின் பின் இருந்தபடி, தங்கள் எஜமானர்களின் கருத்துக்களை வலைத்தளங்களிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பிரபலப்படுத்துவது, அவர்கள் பற்றிய செய்திகளை trending ஆக்குவது, போலியான பின்பற்றாளர்களை உருவாக்குவது; எதிர் தரப்பினரை memes போன்ற ஜனரஞ்சகமான கருவிகள் மூலம் மூலம் பகடி செய்தும், அவர்கள் பற்றிய தவறான செய்திகளை viral ஆக்கி, இழிவு படுத்தி, அவர்களை பிம்பக் கொலை (character assassination) செய்வதும்.

இந்த தந்திரத்திற்கு, whatsapp குறுஞ்செய்திகளையும், tweet -களையும், trending தலைப்புகளையும் மட்டுமே செய்திகள் என்று நம்பிச்செல்லும் தலைமுறை எளிதில் பலிகடா ஆகிவிடுகிறது.

இது ஏதோ தனிநபர் சம்பந்தப்பட்ட விஷயம் என புறந்தள்ள முடியாது. ஏனென்றால், இத்தகைய நுனிப்புல் மேயும் பலி ஆடுகளிடமும், நம்மைப்போன்ற பெரும்பான்மை ஜனநாயகத்தை பின்பற்றும் நாட்டின் தலை எழுத்தை நிர்ணயிக்கும் உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.

இவர்களும் செய்திக்கட்டுரைகளை படிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதே சரியான தீர்வாக இருக்க முடியும்.

செய்திப் பத்திரிகைகள் பெரும்பாலும் பொறுப்புணர்வுடன் கண்ணியத்தோடும் செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடத் தலைப்படுகின்றன. முன்பே குறிப்பிட்டதைப் போல, அவை, செய்தித்தாள் வடிவிலோ மின்னணு வடிவிலோ வருகின்றன. அண்மைக்காலங்களில் செய்தி ஊடக உலகிலும் நடுநிலைமையும், அற உணர்வும் சரிந்து வருவது உண்மைதான். இருந்தபோதும், இன்னும் பல பாரம்பரிய பத்திரிகைகள் தார்மீக கடமைகளோடு வரைமுறைக்குட்பட்டு செய்திகளை வெளியிடுகின்றன. அவர்களுக்கென்று தரக்கட்டுப்பாடுகளையும், நெறிமுறைகளையும் வரையறுத்துக் கொண்டிருக்கின்றன. செய்திகளை, செய்திகளாகவும், ஆசிரியர் குழுவின் கண்ணோட்டத்தை தலையங்கம் போன்ற பத்திகளிலும், இதற்கு எதிர்மாறான நிலைப்பாடு கொண்ட கருத்துகளை உள்ளடக்கிய கட்டுரைகளைக்கூட அதற்குரிய பக்கங்களிலும் தெளிவான குறியீடுகளுடன் வெளியிடுகின்றன.

சமூக வலைதள செய்தி சேவைகளை ஒதுக்க வேண்டும் என்பதல்ல என் கருத்து. அது தவிர்க்க இயலாத, தவிர்க்கக் கூடாத, தொழில்நுட்ப மாற்றம். சமூக வலைத்தளங்கள் மூலம் பல சமயங்களில் தேவையான விழிப்புணர்ச்சிகள் ஏற்படுத்தப்படுகின்றன என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், இவற்றை மேய்வதோடு நிற்காமல், செய்திகளையும், கட்டுரைகளையும் ஆழ்ந்து படித்து உள்வாங்கி, உண்மைகளை பகுத்தறிந்து பின் கருத்துருவாக்கம் செய்வோம். இதுவே நல்ல ஜனநாயகத்திற்கு அடித்தளமாக அமைய முடியும்.

(கட்டுரையாளர் மகேஷ்.கே பெங்களூரில் உள்ள மல்டி நேஷனல் நிறுவனத்தில் மூத்த பிரிசிபில் புராடக்ட் மேனஜராக பணியாற்றுகிறார்.)

Social Media Magesh K
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment