Advertisment

இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 1 : வளர்ச்சி என்று வந்ததொரு மாயப் பிசாசு!

இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை மீண்டும், மீண்டும் வெவ்வேறு வழிகளில், விதங்களில் கேட்கப்படும் அடிப்படைக் கேள்விகள் இவைதான்: எந்த மாதிரியான வளர்ச்சி? யாருக்கான வளர்ச்சி?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sp-udayakumar

சுப. உதயகுமாரன்

Advertisment

வளர்ச்சி, முன்னேற்றம், மேம்பாடு, அபிவிருத்தி, ஏற்றம், உயர்வு என்கிற பல்வேறு பெயர்களில் உற்பத்திப் பெருக்கம், லாபம் (பொருள்) ஈட்டல், வாய்ப்பு வசதிகளை பெருக்கிக் கொள்ளல் போன்றவை குறிக்கப்படுகின்றன.

வளர்ச்சி என்பது வாழ்வின் அடிப்படை. இந்த உலகில் உயிருள்ள அனைத்துமே வளர்கின்றன. ஒரு காலகட்டத்தை அடைந்ததும், உடல்கள் மூப்படைந்து, தளர்ந்து, மரணம் அடைகின்றன. மனிதர்களில் மறைந்தவர்களின் நினைவுகளோடும், கனவுகளோடும் அடுத்த தலைமுறை வாழ்க்கையைத் தொடர்கிறது.

suba - kudankulam கூடங்குளம் அனு உலை

வளர்ச்சி என்பது ஒரு தொடர் ஓட்டப் பந்தயம் (ரிலே ரேஸ்). நமது பெற்றோர் நமக்குத் தந்த இந்த உலகத்தை, அதன் வளங்களை நாசமாக்கி விடாமல், கவனமாகப் பாதுகாத்து, நமது வாழ்க்கைக்குத் தேவையான வழிகளில் அவற்றை பொறுப்புணர்வோடு பயன்படுத்திவிட்டு, நமது பிள்ளைகளும், பேரப் பிள்ளைகளும் வாழ்வாங்கு வாழும் வகையில் அவற்றைச் செழுமைப்படுத்தி கையளித்துவிட்டுப் போவது நமது கடமை. “பாதுகாப்பது, பயன்படுத்துவது, செழுமைப்படுத்துவது” எனும் மூன்று கடமைகள் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கின்றன.

கடமையுணர்வும், பொறுப்புணர்வும், ஆவதறிதலுமாக (futuristic) செயல்பட்டால் இயற்கை வளங்களை பாதுகாப்பாக பயன்படுத்த முடியும், பயன்படுத்தும்போதே செழுமைப்படுத்தவும் முடியும். அளவோடிருக்கும் இயற்கையிலிருந்து நமக்கு வேண்டிய மூலாதாரங்களை அக்கறையோடு எடுத்து, தேவைக்கேற்ப பொருள் உற்பத்தி செய்து, சிறுகக்கட்டிப் பெருக வாழும்போது, நிலைபெறு வளர்ச்சி அமைகிறது. இப்படியாக நம் அத்தியாவசியத் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு, இயற்கை வளங்களை ஏற்ற வழிகளில் பயன்படுத்தினால் சுற்றுச்சூழல் நலமாக இருக்கும், சமூக உறவுகள் அமைதியோடு மிளிரும், மண்மீதான நம் வாழ்வு சிறக்கும்.

நேர் மாறாக, இயற்கையின் அளவைப்பற்றி கரிசனம் கொள்ளாது, அள்ளிச்சுரண்டி ஆசைதீர எடுத்து, பேராசையோடு பொருள் உற்பத்தி செய்து, லாபம் அடைவது ஒன்றே வாழ்வின் குறிக்கோள் என்றியங்கும்போது, வெகுசிலர் வளர்கிறார்கள், பொதுச்சமூகம் தளர்கிறது. தேவைகளைத் தாண்டி, பெரும் பசியோடு, பேராசையோடு அள்ளி அள்ளி எடுத்தால், சுற்றுச்சூழல் கெட்டுப் போகும், சமூக அமைதி சீரழிந்துவிடும், வாழ்வு கெடும்.

தாராளமயமாதல், தனியார்மயமாதல், உலகமயமாதல் என்கிற மும்மையின் பெயரில் அந்நிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்து வந்து, 'இலவசமாக நிலம், நீர், மின்சாரம் தருகிறோம்; சூழல் நலத்தைக் காக்க வேண்டாம்; வரிகள் கட்ட வேண்டாம்; தொழிலாளர் உரிமைகளைப் பேண வேண்டாம்' என்று அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கின்றனர் நம்மை ஆளும் ஆதிக்க சக்திகள். நமது வளங்களைச் சுரண்டி, எளிய மக்களின் வாழ்வுரிமைகளை சிதைத்து, வருங்காலத்தை அழித்து, தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடித்து, உள்நாட்டு முதலாளிகளும், வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்களும் செழித்துக் கொழுப்பதே “வளர்ச்சி” என்கின்றனர் அவர்கள்.

ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர்களுக்கும், அதனருகே அடுத்த வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கும் வளர்ச்சி என்பது பெருமுதலாளிகளின் முதலீடுகளாக, அவர்களின் லாப உயர்வாக, அவர்தம் தொழில்களின் விரிவாக்கமாக, வேலைவாய்ப்புக்களாக, மக்களின் வருமானப் பெருக்கமாகத் தோன்றுகிறது. எனவே அதிகார வர்க்கம் பொருளாதாரத் தரப்புக்கு ஆவன அனைத்தும் செய்துகொடுத்து, அவர்தம் உதவிகளோடு, ஆசிகளோடு அதிகாரத்தைப் பெற அல்லது தக்கவைத்து கொள்ள முனைகிறது.

இந்த இரண்டு தரப்புமே இயற்கை வளங்கள் கொள்ளை போவது பற்றியோ, சூழல் மாசுபடுவது பற்றியோ, வருங்காலம் நலிவடைவது பற்றியோ, அடுத்தத் தலைமுறைகள் அவதிப்படப் போவது பற்றியோ கவலைப்படுவதில்லை. இவர்களுக்கு வேண்டியதெல்லாம் பணம், பணம், பணம்! அதிகாரம், அதிகாரம், அதிகாரம்!

இப்படியாக மக்களுக்காக இயங்க வேண்டிய அரசாங்கம் பொருளாதார சக்திகளுக்காக இயங்கும் நிலை எழுகிறது. மக்களுக்கு வேண்டிய வேலைவாய்ப்புக்களையும், வசதிகளையும், சேவைகளையும், வருமானத்தையும் உருவாக்க வேண்டிய பொருளாதாரத் தரப்பு, அதிகார வர்க்கத்தின் நலன்களை மட்டுமே கருத்திற்கொண்டு அவர்களில் யாரை எப்படி கவனிப்பது என்று மட்டுமே சிந்தித்து மக்களைக் கைவிட்டுவிடுகிறது.

பணமும், அதிகாரமும் கொண்டிருக்கும் இவர்கள்தான் தேசம் என்றாகிப்போவதால், இந்த அமைப்புத்தான் தேசப் பாதுகாப்பு என்று பார்க்கப்படுகிறது. இதைத் தட்டிக்கேட்பவர்கள், கேள்விக்குள்ளாக்குகிறவர்கள், எதிர்க்கிறவர்கள் தேசத் துரோகிகளாக மாறிவிடுகிறோம்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டைக் கொண்டுவந்தால், கோடிக்கணக்கான நமது சிறு வியாபாரிகளும் அவர்கள் குடும்பங்களும் அழிந்து போவார்களே என்று நமது அதிகார வர்க்கமோ, பொருளாதாரத் தரப்போ கவலைப்படவில்லை. நிலக்கரி, பெட்ரோலியம், மீத்தேன் போன்ற ஹைட்ரோகார்பன் எரிபொருட்களை விளைநிலங்களிலிருந்து தோண்டி எடுத்தால், அந்தப் பகுதி அழிந்து போகுமே, அதன் மீது உணவுப் பயிர்கள் பயிரிட முடியாதே, உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு அழிந்துபோகுமே என்றெல்லாம் எள்ளளவும் தயங்கவில்லை அவர்கள். அதே போல, கடற்கரை முழுவதும் அணுமின் நிலையங்களும், அனல்மின் நிலையங்களும் நிறுவி மீனவர்களை பாதுகாக்காமல் போனால், அவர்கள் தேடித் தரும் சத்தான உணவும், அந்நியச் செலாவணியும் கிடைக்காமல் போகுமே என்று துளியும் அக்கறை கொள்ளவில்லை அவர்கள்.

வணிகர்கள் ஒழிந்து போனால், அந்நிய நாட்டுக் கடைகள் வரும், அவர்களிடம் பெரிதாகக் கையூட்டு வாங்கலாம். விவசாயம் அழிந்து போனால், உணவுப் பொருட்களை எல்லாம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிவரும். அதன் மூலம், ஏராளமான கமிஷன் பெறலாம். மீன்பிடித் தொழிலை இழந்துவிட்டால் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி கொடுத்து, அதிலும் இடைத்தரகு பெறலாம். மீனவர்கள் அழிந்து போனால், கடலோரத்தை “நீரருகுச் சொத்து” (water-front property) என்கிற அளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலைபேசி அமோகமாக விற்கலாம்; அதிக புரோக்கரேஜ் பெறலாம். கடற்கரையோரம் கிடைக்கும் தாது மணல்களை, ஹைட்ரோகார்பன்களை வெளிநாடுகளுக்கு விற்று பெரும் பணம் சம்பாதிக்கலாம்.

suba ... ongc

பணம், பணம், பணம் என்று அலைந்து நம் நாட்டின், நாட்டு மக்களின் வளங்களை, வாழ்வாதாரங்களை, வருங்காலத்தை அழிப்பது வளர்ச்சியாகுமா? பெருமுதலாளிகளின், பன்னாட்டு நிறுவனங்களின் லாபம் மட்டுமே வளர்ச்சியாகுமா? ஏழை

வணிகர்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் போன்றோரின் நலன்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஓர் அமைப்பு வளர்ச்சியாகுமா? இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை மீண்டும், மீண்டும் வெவ்வேறு வழிகளில், விதங்களில் கேட்கப்படும் அடிப்படைக் கேள்விகள் இவைதான்: எந்த மாதிரியான வளர்ச்சி? யாருக்கான வளர்ச்சி?

(இன்னும் பயணிப்போம்)

(கட்டுரையாளர் சுப. உதயகுமாரன், கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் மூலமாக உலகை திரும்பி பார்க்க வைத்தவர்! நியூட்ரினோ, நெடுவாசல், கதிராமங்கலம் வரை அவரது போராட்டப் பயணம் தொடர்கிறது. மகாகவி பாரதியார், ‘எமக்குத் தொழில் எழுத்து, கவிதை, நாட்டிற்கு உழைத்தல்’ என்று சொன்னதுபோல இவருக்கு போராட்டம் மற்றும் அதைச் சார்ந்த எழுத்தும், பேச்சும்! அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இயங்குகிறார்.)

Koodankulam Idinthakarai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment