Advertisment

இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 2 : வடக்கத்திய வளர்ச்சி சித்தாந்தம்

‘ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்று நீங்கள் சிந்தித்தால், செயல்பட்டால், நாமெல்லாம் இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரையுள்ள மக்களோடு ஒரே பக்கம் நிற்கிறோம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரை – 2 : வடக்கத்திய வளர்ச்சி சித்தாந்தம்

Advertisment

சுப.உதயகுமாரன்

வளர்ச்சி எனும் சூரியனை சுற்றித்தான் இன்றைய சமூக-பொருளாதார-அரசியல் அமைப்பு சுழன்று கொண்டிருக்கிறது. இந்தச் சூரியன் வடக்கில் உதித்து தெற்கில் மறைகிறது. பூமத்திய ரேகைக்கு வடக்கேயுள்ள தொழிற்மயமாக்கப்பட்ட, கிறித்தவ, வெள்ளையின நாடுகள் பிரகாசமான, பிரம்மாண்டமான நாடுகளாகவும், தெற்கேயுள்ள விவசாயம் சார்ந்த, கிறித்தவரல்லாத, பல்வேறு நிற மக்களைக் கொண்ட நாடுகள் இருண்ட, இன்னலுறும் நாடுகளாகவும் தோற்றமளிக்கின்றன. வடக்கு நாடுகள் தொழிற்புரட்சியின் மையமாகவும், தெற்கு நாடுகள் பாரம்பரிய பிற்போக்குத்தனத்தின் அமைவிடமாகவும் ஆகின்றன.

வளர்ச்சி மொழியில் சொல்வதென்றால், வடக்கு ‘வளர்ந்த’ (developed) நாடுகளாகவும், தெற்கு ‘வளர்ச்சி-குன்றிய’ (under-developed) அல்லது ‘வளரும்’ (developing) நாடுகளாகவும் பார்க்கப்படுகின்றன. வங்காள தேசம், பூடான், ஆப்கானிஸ்தான், சோமாலியா போன்ற சுமார் 40 நாடுகள் ‘அறவே வளராத’ (least developed) நாடுகளாகக் கருதப்படுகின்றன.

இம்மாதிரிச் சொல்லாடல்களே நம்மை பெருத்தக் குறைபாடுகள் கொண்டவர்களாக, வெள்ளையின நாடுகளின் அளவுக்கு உயராதவர்களாக சித்தரிப்பதை நம்மால் உணரமுடிகிறது. தெற்கத்திய நாடுகள் முதிர்ச்சியற்றவர்களாக, முழுமை அடையாதவர்களாக, திறமையற்றவர்களாக, வடக்கின் தரத்துக்கு உயராதவர்களாகப் பார்க்கப்படுகின்றன.

வளர்ச்சி என்பது உள்கட்டமைப்பில் எழும் தாக்கங்களையும், வெளிப்புறத்தில் கொடுக்கப்படும் விலைகளையும் கருத்திற்கொண்டு ஒரு மக்கள் குழுமம் கால மாற்றத்துக்கொப்ப மேற்கொள்ளும், மேலாண்மை செய்யும் படிப்படியான மேம்பாடுதான். பூமியின் மீதுள்ள ஒவ்வொரு மனித சமூகமும் வளர்ச்சி என்பது குறித்தும், அதை அடையும் வழிமுறைகள் குறித்தும் தனித்த புரிதலைக் கொண்டிருக்கின்றன. ஆனாலும் தெற்கத்திய நாடுகளின் வளர்ச்சி சித்தாந்தங்கள் முழுமையாக வளர்ந்து மேலோங்க காலனியாதிக்க, வல்லாதிக்க நாடுகள் அனுமதிக்கவில்லை. அவர்களுடைய சொந்த வளர்ச்சி மும்மையை அடிமைப்படுத்தபட்ட மக்கள் மீது வலிந்து திணித்தனர்.

எனவே இன்றைய உலகில் வளர்ச்சி என்பது ‘பொருளாதார முன்னேற்றம்’ எனும் ஒரு குறிப்பிட்டக் கருத்தியலை, புரிதலை ஒட்டு மொத்த உலகத்தின் மீதும் திணிப்பதாகவே அமைகிறது. இந்த வடக்கத்திய வளர்ச்சி சித்தாந்தம் ‘எண்ணெய், இரும்பு, சிமென்ட்’ (Oil, Steel, Cement) எனும் புனித மும்மையை அடிப்படையாகக் கொள்கிறது. தொழிற்புரட்சியின் மூன்று முக்கியக் கூறுகளை மேற்காணும் மூன்று பொருட்களும் குறிக்கின்றன: அதிவேகம், அவ்வளவு, அபார சக்தி (Speed, Super-Size, Strength).

publive-image

மொத்த வடக்கத்தி வளர்ச்சித் திட்டமுமே அதிவேகத்தை அடிப்படையாகக் கொண்டது. எவ்வளவு வேகமாக மற்றவர்களை அடிமைப்படுத்த முடியுமோ, அடக்கியாள முடியுமோ, ஏமாற்ற முடியுமோ, எடுத்தெறிய முடியுமோ, அவ்வளவு வேகமாக நீங்கள் வளர்ச்சி அடைய முடியும். எனவே ‘வேகமாக அடியுங்கள்’ என்பது முதல் கொள்கை. இரண்டாவது கொள்கை ‘பெரிதாக அடியுங்கள்’ என்பது. வடக்கத்திய நாகரிகத்தில் எல்லாமே பெரிதாக இருக்க வேண்டும். தொழிற்சாலைகள், நகரங்கள், சாலைகள், கார்ப்பரேட்டுகள், சந்தைகள், லாபங்கள் என. இதன் அடிப்படை எண்ணவோட்டம் என்னவென்றால், உங்களின் வலிய, பெரியக் கொடுப்பினைகள், உங்களைப் பெரிதாக மகிழ்விக்கும். ‘சிறிதே அழகானது’ எனும் புத்தகம் எழுதிய ஈ. எஃப். ஷூமக்கர் போன்ற விபரமற்றவர்களுக்கு வேண்டுமானால் சிறியது அழகாக இருக்கலாம். ஆனால் பெரியதுதான் அதிகாரம் மிக்கது.

‘வலிமையோடு அடியுங்கள்’ என்பது மூன்றாவது கொள்கை. எவ்வளவுக்கு எவ்வளவு உங்கள் அடி வலுவாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் வலுப்பெறுவீர்கள், உங்கள் எதிரி வலுவிழப்பார். அம்மாதிரியான ஒரு பலவீனம் உங்களைத் தாக்காதிருக்க, எல்லாவற்றையும் பலமிக்கதாகக் கட்டுங்கள்: அரசு, அதிகார அமைப்பு, இராணுவம், ஆயுதங்கள், இயந்திரங்கள் போன்றவை.

இந்த வளர்ச்சி அமைப்பு உங்களைக் கவரவில்லை என்றால், உங்களிடம் அடிப்படையாகவேப் பெருங்குறைகள் இருக்கின்றன என்று பொருள். நீங்கள் ஒரு சோம்பேறியாக இருக்கலாம், அல்லது மேலை நாடுகளை வெறுக்கும் ஒரு நக்சலைட்டாக, மாவோயிஸ்டாக, புரட்சிவாதியாக இருக்கலாம், அல்லது ஃபிடல் காஸ்ட்ரோ, ஹியுகோ சாவேஸ் போன்ற இடதுசாரித் தலைவர்களை விரும்பும் ஒரு பைத்தியக்காரராக இருக்கலாம்.

publive-image

ஒரு “பண்பட்ட வாழ்க்கை முறையை” ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களுக்கு இன்னும் வரவில்லை என்று அர்த்தம். ‘அதிவேகம், அவ்வளவு, அபார சக்தி’ எனும் புனித மும்மையில் உங்களுக்கு ஈடுபாடு இல்லையென்றால், நீங்கள் ‘மெதுவானவர், மிதமானவர், மிருதுவானவர்’ (Slow, Small, Soft). இன்னும் சொல்லப்போனால், நீங்கள் பெண்மைத்தன்மை கொண்டவர், குழந்தைத்தன்மை உடையவர், பிற்போக்கானவர், பயனற்றவர், மனநலமற்றவர். சுருங்கச் சொன்னால், நீங்கள் வளர்ச்சி-குன்றியவர்.

நீங்கள் வேகமாக இயங்கி, பெரும் சிரமங்களை ஏற்று நடத்துகிற பலமிக்க, ஆண்தன்மையுள்ள, தொழில் விற்பன்னரல்ல. உங்களின் ஏழ்மையும், வறுமையும் நீங்களே உருவாக்கிக் கொண்டவை, உங்கள் தலைவிதி! அது நீங்களாகவே வலிந்து ஏற்றுக்கொண்ட துன்பம். ‘மெதுவான, மிதமான, மிருதுவான’ மும்மை ஒருவரை கவனமாக, நிலைத்த தன்மையோடு, சமத்துவத்தோடு வழிநடத்துகிறது என்று நீங்கள் கருதினால், உங்கள் சிந்தனை அடிப்படைப் பண்பாட்டுக்கே எதிரானது. நீங்கள் ஒரு தேசத்துரோகி, மக்களின் எதிரி.

இம்மாதிரியான விழுமியங்களோடும், மனோபாவத்தோடும், அணுகுமுறையோடும்தான் வடக்கு நாடுகளின் ஆதிக்க சக்திகளும், தெற்கு நாடுகளின் ஆளும் வர்க்கங்களும் வளர்ச்சியை, வளர்ச்சிக்கு எதிரானோரைக் கண்ணுறுகின்றனர். சக்தி வாய்ந்த இந்த ஆளும் தரப்புக்கள் ஒருவருக்கொருவர் உதவிகள் புரிந்து, ஓர் உலகப் பொருளாதார அமைப்பை உருவாக்கி வைத்திருக்கின்றனர். இவர்களின் உலகளாவிய ‘இராணுவ-தொழிற்சாலை-ஆய்வு நிறுவனங்கள்’ (military-industrial-academic complex) எனும் கூட்டணி மேற்குறிப்பிட்ட அமைப்பை தூக்கி நிறுத்துவதில், தொடர்ந்து எடுத்துச் செல்வதில் பெரும் பங்காற்றுகிறது.

ஓர் உலகளாவிய அதிகார மையம்தான் உலக நாடுகளின் சமூக-கலாச்சார-பொருளாதார-அரசியல் நடப்புக்களைத் தீர்மானிக்கிறது. இந்த அமைப்புக்குள் ஒன்றி, முதலாளித்துவ விளையாட்டு விதிகளுக்கு அடிபணிந்து, உங்கள் நலன்களை காப்பாற்றிக் கொள்வது அறிவுடைமை ஆகிறது. இந்த ஏற்பாட்டை கேள்வி கேட்டு, மாற்றியமைக்க முனைவது அறிவின்மையாக, ஆபத்தானதாக மாறுகிறது. இன்றைய உலகின் சமூக-பொருளாதார-அரசியல் ‘தாராளமயம், தனியார்மயம், உலகமயம்’ எனும் மும்மையோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. ‘பணம், இயந்திரம், சந்தை’ எனும் மும்மைதான் இதனை ஆட்டுவிக்கிறது. ‘பணம், பணம், அதிக பணம்’ என்றே ஓடிக் கொண்டிருக்கிறது உலகம். ‘ஊருடன் கூடி வாழ்’ என்று அறிவுரைக்கிறது யதார்த்தம். ‘ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்’ என்று எச்சரிக்கிறது அதிகாரம். ‘ஊருக்கு நல்லது சொல்வேன், எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்’ என்று நீங்கள் சிந்தித்தால், செயல்பட்டால், நாமெல்லாம் இடிந்தகரை முதல் கதிராமங்கலம் வரையுள்ள மக்களோடு ஒரே பக்கம் நிற்கிறோம்.

(சுப. உதயகுமாரன், அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர். மக்களின் வளம் காக்க தமிழகம் முழுவதும் சுற்றிச் சுழன்று போராடி வருபவர்.)

Koodankulam S P Udayakumaran Idinthakarai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment