scorecardresearch

இக்கட்டான சந்தர்ப்பத்தில் காந்தியின் நடைமுறைகளே உதவின: பெருமாள் முருகன்

எத்தனையோ சந்தர்ப்பங்களில் காந்தி மன்னிப்பை வலியுறுத்தியிருக்கிறார். மன்னிப்புக் கேட்பதும் மன்னிப்பதும் உயர்ந்த குணங்கள் என்பது காந்திய நம்பிக்கை.

இக்கட்டான சந்தர்ப்பத்தில் காந்தியின் நடைமுறைகளே உதவின: பெருமாள் முருகன்
perumal murugan about gandhism, பெருமாள் முருகன், எழுத்தாளர் பெருமாள் முருகன்

பெருமாள்முருகன்

(கவிதை, கட்டுரை, நாவல் என இலக்கிய உலகில் தடம் பதித்திருப்பவர், பெருமாள்முருகன். இவரது மாதொருபாகன், பெரும் விவாதங்களை உருவாக்கியது)

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் என் வாழ்வில் மிகவும் முக்கியமானது. அப்போதைய இக்கட்டான சூழலில் மிக முக்கியமான முடிவை எடுக்க நேர்ந்தது. ஆம். நான் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவல் தொடர்பான சர்ச்சை பெருமளவில் எழுந்து சொந்த ஊர் மக்களுக்கே வேண்டாதவனாக ஆனேன். ஊரையும் பெண்களையும் இழிவுபடுத்துவதாக என் எழுத்து இருக்கிறது என்னும் பொய்ப்பிரச்சாரம் மேலோங்கி ஒலித்தது.

என் குரலுக்கு அங்கே எந்த மதிப்பும் இல்லை. மாறாக என் உயிருக்கு அச்சுறுத்தல்; குடும்பத்திற்கு நெருக்கடி; இடம்பெயரும் சூழல்; வாழ்வாதாரம் பிடுங்கப்படும் நிலை. அதிலிருந்து மீண்டாக வேண்டும். அப்பிரச்சினையின் கள நிலவரத்தை அறியாதவர்கள் பலர் பலவிதமான ஆலோசனைகளைத் தெரிவித்தனர். நிலைமைக்குப் பொருந்தாதவை என உணர்ந்துகொண்டேன். நிலவரத்தைப் பெருமளவு அறிந்தவர்களும் யோசனைகளைத் தெரிவித்தனர். அவற்றில் மிகுதியும் கொள்கை சார்ந்து உணர்ச்சிவசப்பட்டவையாக இருந்தன. எந்தப் பதிலும் சொல்லாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டேன். எல்லாமும் சேர்ந்து குழப்பின. என்ன செய்வது என்பது பிடிபடவில்லை.


தூய இருள் படர்ந்த ஓரிரவு. மொட்டை மாடியில் வெகுநேரம் உலவிக் கொண்டிருந்தேன். அப்போது வெள்ளத்துக்குள் மாட்டிக்கொண்ட ஒருவனின் சித்திரம் எனக்குள் தோன்றியது. வெள்ளத்தை நீந்திக் கடப்பது, எதிர்த்து மேலேறுவது என்பனவெல்லாம் சாத்தியமில்லை; வெள்ளத்தினூடே அதன் போக்கில் போய்ப் பிழைக்க முயல்வது ஒன்றுதான் சரி என்றுணர்ந்தேன்.

மனசாட்சியின் வழியில் நடப்பதற்கே முன்னுரிமை அளித்தேன். தவறில்லை என்பதுதான் என் தரப்பு; தவறு என்கிறது எதிர்த்தரப்பு. ஓங்கி ஒலிக்கும் எதிர்ப்புக்கு முன் என் முணுமுணுப்புக்கு ஏது இடம்? என் தரப்புக்குரிய மதிப்பை நான் குறைத்துக்கொள்ளப் போவதில்லை. அதை எப்படியேனும் காப்பாற்றிக் கொள்ளலாம். அது எனக்குள்தானே இருக்கிறது? ஆகவே எதிர்த் தரப்பின் உணர்வுக்கு மதிப்பளிப்பது என முடிவெடுத்தேன்.

gandhism principles, perumal murugan about gandhism, பெருமாள் முருகன், எழுத்தாளர் பெருமாள் முருகன்

மன்னிப்பு பாவச் செயல் அல்ல. மனக் கனிவின் வெளிப்பாடுதான் அது. மன்னிப்புக் கேட்டு எழுதிக் கையொப்பம் இட்டுக் கொடுத்தேன். எதிர்த் தரப்புக்கு உரிய மதிப்பைக் கொடுத்தாகிவிட்டது. அதற்காகத் தவறிழைக்காத என் தரப்பை அழித்துக்கொள்ள முடியாது. என் தரப்பு மதிப்பை இனிக் காப்பாற்றிக் கொண்டாக வேண்டும். அந்த யோசனை எனக்குள் ஓடிக்கொண்டிருந்த ஒன்றுதான்.

அதன் தொடர்ச்சியாக இரண்டு முடிவுகளை மேற்கொண்டேன். என் படைப்புகள் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன், இனி எதுவும் எழுதப் போவதில்லை என்பவை அவை. என் மனநிலையை முன்வைத்து எடுக்க நேர்ந்த இம்முடிவுகள் நான் எதிர்பார்க்காத விளைவுகளைப் பொதுவெளியில் ஏற்படுத்தின. ஆகவே இன்னொரு தீர்மானத்திற்கும் வர வேண்டியதாயிற்று. பொதுவெளியில் பேசாமல் மௌனம் காப்பது என்பது அது.

என் முடிவுகளைப் பற்றிப் பலவிதமான கேள்விகள் தொடர்ந்து எழுந்தன. அவற்றைக் குறித்துக் காரசாரமான கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன; விவாதிக்கப்பட்டன. எனக்குள்ளுமே ஒரு தேடல் நிகழ்ந்தது. என் முடிவுகளை இழை பிரித்துப் பார்த்தேன். மன்னிப்பு, விலகல், மௌனம் ஆகிய அம்சங்கள் என் முடிவுகளின் அடியோட்டமாக இருந்ததை உணர்ந்தேன். இந்த அடியோட்டம் எனக்குள் எப்படி வந்து சேர்ந்தது? நிச்சயமாக அதைக் காந்தியின் செல்வாக்கு, காந்தியத்தின் தாக்கம் என்று சொல்வேன்.

காந்தியைப் பாடநூலில் ‘தேசத்தந்தை’ எனப் படித்து அறிந்த சிறுவயதிலேயே அவரது சுயசரிதமான ‘சத்திய சோதனை’யை வாசிக்கும் வாய்ப்பும் அமைந்தது. எட்டாம் வகுப்பு மாணவனாக இருந்த பருவத்தில் பள்ளி சார்பாகப் பல்வேறு கவிதைப் போட்டிகளுக்குச் சென்றேன். ஏதோ ஒரு போட்டியில் பங்கேற்றமைக்காக என் கைகளில் வந்து சேர்ந்த பரிசுப் புத்தகம் ‘சத்திய சோதனை.’

எந்தப் புத்தகத்தையும் விலை கொடுத்து வாங்க வாய்ப்பில்லாத குடும்பப் பின்னணி என்னுடையது. எழுத்தாகத் துண்டுச்சீட்டு கைக்கு வந்தாலும் படித்து விடுகிற ஆவல் கொண்ட எனக்கு அப்புத்தகம் பேருவகை தந்தது. அதே காலத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய அவரது சுயசரிதையான ‘வனவாசம்’ நூலையும் படிக்க வாய்த்தது. ‘என் வாழ்க்கையே என் செய்தி’ என்னும் காந்தியின் வாக்கை எடுத்துக்கொண்டு ‘எப்படி வாழ வேண்டும் என்பதற்கு உதாரணம் சத்திய சோதனை; எப்படி வாழக் கூடாது என்பதற்கு உதாரணம் வனவாசம்’ என்று தம் வாழ்க்கையை அந்நூலின் முன்னுரையில் மதிப்பிட்டிருப்பார் கண்ணதாசன். அவர் வாழ்க்கையைப் பற்றிய மதிப்பீட்டைவிடச் சத்திய சோதனை பற்றிய அவரது மதிப்பீடே எனக்கு முக்கியமாகப் பட்டது. அந்த வெளிச்சத்தில் இன்னொரு முறை அந்நூலை வாசித்துப் பார்த்தேன். இப்படிப் பலமுறை அந்நூலை வாசித்திருக்கிறேன்.

பின்னர் தமிழில் வெளியான காந்தியின் எழுத்துத் தொகுதிகளில் சிலவற்றைத் தேர்வு செய்து வாசித்தேன். தந்தை பெரியாரின் எழுத்துக்கள் வழியாகவும் காந்தியின் கருத்துக்களை அறிந்திருக்கிறேன். காந்தியின் கருத்துக்களைச் சிலசமயம் பாராட்டியும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கடுமையாக விமர்சித்தும் பெரியார் பலவிடங்களில் எழுதியும் பேசியும் இருக்கிறார்.

காந்தி மறைந்தபோது அவரது நினைவைப் போற்றும் வகையில் என்னென்ன செய்யலாம் எனப் பெரியார் பலவற்றைப் பரிந்துரைத்திருக்கிறார். இந்த நாட்டுக்குக் ‘காந்தி தேசம்’ எனப் பெயரிடலாம் என்பதும் அதனால் பல நன்மைகள் உண்டாகும் என்பதும் மிக முக்கியமான பரிந்துரை.

காந்தியின் கொள்கைகளோடும் நடைமுறைகளோடும் ஏராளமான முரண்பாடுகள் பெரியாருக்கு இருந்தபோதும் போராட்ட வழிமுறைகளில் காந்தியைத்தான் பெரியாரும் பின்பற்றினார். தம் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் காங்கிரசில் முக்கியப் பதவிகள் வகித்துக் காந்திய வழிமுறைகளைப் பயின்றிருந்த பெரியார் தம் போராட்டங்களை அவ்வழியிலேயே நடத்தினார். வன்முறைக்கு இடமில்லாத, பெரும்பாலும் சட்டத்திற்கு உட்பட்ட போராட்ட வழிமுறை அது. பிற்காலத்தில் தமக்கெனச் சில தனித்துவமுடைய போராட்ட வழிமுறைகளைப் பெரியார் கைக்கொண்ட போதும் ‘அகிம்சை’ என்னும் ஆதாரத்தைக் கைவிடவில்லை. பெரியார் காட்டிய காந்தியின் கோணங்கள் பல.

இவ்வாறு காந்தியை உள்வாங்கியிருந்த எனக்கு இக்கட்டான சந்தர்ப்பத்தில் அவரது நடைமுறைகளே பின்னிருந்து உதவின எனத் தோன்றுகிறது. மன்னிப்பு, விலகல், மௌனம் ஆகியவை காந்தியம் எனக்குக் காட்டிய வழி என்றே நம்புகிறேன். பொதுவாக மன்னிப்புக் கேட்பதற்கு மனம் ஒப்பாத சமூகம் நமது. சாதி, வயது, பதவி, பொறுப்பு ஆகியவை முன்னால் வந்து நின்று மன்னிப்புக் கேட்கும் மனதைப் பின்னுக்குத் தள்ளிவிடுவதுதான் நம் இயல்பு.

தவறே செய்யவில்லை என்றாலும் தமக்குக் கீழிருப்பவர்தான் தம்மிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருதும் தன்னகங்காரத்தை நம் சாதியப் படிநிலைச் சமூகம் கொடுத்திருக்கிறது. காந்தியம் அதைக் கேள்விக்கு உட்படுத்திக் கலைத்துப் போடும் தன்மை கொண்டது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் காந்தி மன்னிப்பை வலியுறுத்தியிருக்கிறார். மன்னிப்புக் கேட்பதும் மன்னிப்பதும் உயர்ந்த குணங்கள் என்பது காந்திய நம்பிக்கை.

ஒரு போராட்டம் கை மீறிச் செல்லும்போது அதன் பாதகத்தை முன்னுணர்ந்து நிறுத்திவிடும் ‘விலகல்’ என்பதும் காந்திய நடைமுறையே. தனிப்பட்ட வாழ்விலும் இந்த ‘விலகல்’ மனோபாவம் காந்தியிடம் உண்டு. உணர்ச்சிமயமான சூழலைச் சட்டெனக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது ‘விலகல்.’ ஒன்றைப் பயன்படுத்தி என்னென்னவோ செய்யலாம் என எண்ணும் பலருடை திட்டங்களை ஒன்றுமில்லாமல் செய்துவிடும் தன்மை வாய்ந்தது ‘விலகல்.’ ஒன்றில் ஈடுபடும் ஒருவர் அதைக் கடைசிவரை கொண்டு சென்றுதான் ஆக வேண்டும் என்பதில்லை. இடையில் நேரும் பிரச்சினைகளின் வீர்யம் உணர்ந்து அவற்றைத் தவிர்த்தல்தான் ‘விலகல்.’ எதிரியின் ஆயுதங்களுக்கு வேலை இல்லாமல் செய்துவிடும் ‘விலகல்.’ எழுத்திலிருந்து விலகும் என் அறிவிப்பை அப்படித்தான் பார்க்கிறேன். சொந்த பாதிப்புகள் மட்டுமல்லாமல் பொதுநிலையிலும் பல பாதிப்புகளைத் தவிர்த்து விஷயத்தை உரையாடலை, விவாதத்தை நோக்கித் திருப்பியதும் அந்த ‘விலகல்’தான். அதை எனக்குக் கொடுத்தது காந்தியம் என்பதில் சந்தேகமில்லை.

காந்தியின் கூராயுதம் ‘மௌனம்.’ மனதிற்குப் பேராற்றலை வழங்கும் மௌன விரதங்கள் மேல் காந்திக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. மிக முக்கிய சந்தர்ப்பங்களில் அவர் மௌனத்தைக் கைக்கொண்டிருக்கிறார். மௌனத்தால் தனிப்பலன்கள் மட்டுமல்ல, பொதுவெளியிலும் பல பயன்களை அது ஏற்படுத்தும்.

நாம் உதிர்க்கும் சொற்கள் நாம் நினைக்கும் பொருளோடு பொதுவெளியில் சென்று சேரும் என்று சொல்ல முடியாது. அதன் தொனியிலிருந்தும் கூறும் பின்னணியிலிருந்தும் இன்னும் வெவ்வேறு காரணங்களாலும் பல அர்த்தங்களைப் பெறும். விபரீத அர்த்தங்களும் ஏற்பட வாய்ப்புண்டு. அத்தகைய சமயங்களில் எல்லாம் சொல்லை உதிர்த்தவர் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. ஒரு சொல்லைப் பயன்படுத்தும் முன் பலமுறை யோசிக்க வேண்டும். வீசி விட்ட சொல்லைத் திரும்பவும் பொறுக்கி எடுத்துக்கொள்ள முடியாது. மௌனம் அப்படியல்ல. மௌனம் ஒரு கவசம் போன்றது. அது எல்லாவித ஆயுதத் தாக்குதல்களையும் தாங்கும் சக்தி படைத்தது.

பொதுவெளியில் பேசுவதில்லை என்னும் முடிவுக்கு வந்தபோது இவ்வாறெல்லாம் நான் யோசித்திருக்கவில்லை. மௌனத்தின் விளைவுகளை உணர்ந்த பிறகே அதன் ‘கவசத்தன்மை’யை அறிந்தேன். பெரும்பாலும் நம்மைப் பேசச் சொல்பவர்கள் அவர்களின் கருத்துக்களை நம் குரலில் கேட்க விரும்புபவர்கள்; அல்லது சர்ச்சையை உருவாக்கும் சிலவற்றை உருவி எடுக்கும் எண்ணம் கொண்டவர்கள்தான். அத்தகைய நிலையில் மௌனம் பெரிய பாதுகாப்பை வழங்கியது.

இப்போதும் எனக்குப் பேச்சில் பெரிதாக ஈடுபாடு கிடையாது. தேவைக்குப் பேசினால் போதும். மௌனமாக இவ்வுலகைக் காணும்போது நமக்குத் திறக்கும் கதவுகள் பல.
சாதாரண எழுத்தாளனாகிய எனக்குள் காந்தியம் இவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தி இக்கட்டான சூழலைச் சமாளிக்கும் வழிமுறைகளை கொடுத்திருக்கிறது. அப்படியானால், இந்தச் சமூகத்திற்கு அது வழங்கியிருக்கும் விஷயங்கள் ஏராளமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தன் துன்பம் நேர்ந்தாலும் பொறுத்துக்கொண்டு, பிறருக்குத் துன்பம் தராமல், ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் அங்கீகரித்தபடி ஒருங்கிணைந்து வாழும் முறைகளைத் தனிமனிதருக்கும் சமூகத்திற்கும் அது வழங்கியிருக்கிறது. பிரிவினைகளை விரிவாக்கி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளும் சக்திகள் மேலோங்கி வரும் இன்றைய சூழலில் பிறரைக் குறித்து கவனம் கொள்ளச் செய்யும் காந்தியத்திற்கு வேலை நிறைய இருக்கிறது.

இன்றைக்கும் நாம் கையாளும் போராட்ட வழிமுறைகளான உண்ணாவிரதம், முழக்கம், ஊர்வலம், யாத்திரை உள்ளிட்ட பலவும் காந்தியம் நமக்குத் தந்ததுதான். எதிர்கருத்துக்களை வெளிப்படுத்தவும் எதிர்ப்பைத் தெரிவிக்கவும் கோரிக்கைகளைக் காதுகளுக்குக் கொண்டு சேர்க்கவும் இவற்றை விடவும் வலிமையான வழிமுறைகளை இன்னும் நாம் கண்டடையவில்லை. ஆகவே தனிமனித வாழ்வுக்கும் பொதுச்சமூகத்திற்கும் இன்றைக்கும் காந்தி தேவைப்படுகிறார்; காந்தியமும் தேவைப்படுகிறது.

 

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Gandhism helped in crisis perumal murugan writes