Advertisment

அரசியல் பழகுவோம் : பெண்களும் பதவிகளும்

போராட்ட களத்தோடு பெரும்பாலான பெண்களின் அரசியல் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
women and power

சுகிதா

Advertisment

வீட்டை நிர்வகிக்க தெரிந்த பெண்களுக்கு நாட்டை நிர்வகிப்பதில் என்ன சிக்கல் ?என்ற எதிர் கேள்வி தான் பெண்களின் அரசியலை பேச, அரசியலில் ஈடுபட முதல் தகுதி. குடிகார கனவனாக இருந்தாலும், இருப்பதில் குடும்ப நடத்தி வீட்டின் பொருளாதாரத்தை செவ்வனே செய்பவர்கள், தன் பிள்ளைகளின் மேல் அக்கறை கொண்டு அவர்கள் வளர்ப்பு, பராமரிப்பில் நிர்வாகத் திறனை கொண்டிருப்பவர்கள், தன் வீட்டு பொருளை பாதுகாப்பதில் கூடுதல் கவனம் செலுத்துபவர்கள், நாள்தோறும் கோடான கோடி பேரின் உயிர்காக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள், இந்த பட்டம் அருவடை செய்ததை அடுத்த பட்டத்துக்கு என்று சேமித்து வைத்து பாதுகாக்கும் தொலைநோக்கு பார்வை கொண்டுள்ள வேளாண்குடி பெண்கள், வனங்களில் சுற்றித் திரிந்து சுள்ளி பொருக்கினாலும் விலங்கினங்களிடம் தற்காத்துக் கொள்ளுதலிலும், அன்னியர்கள் காடுகளுக்குள் நுழைந்திருப்பதை கூர்ந்து கவனிக்கும் பழங்குடியினப் பெண்கள், தெருவை சுத்தம் செய்வது தொடங்கி மனித கழிவுகள் அள்ளும் ஒடுக்கப்பட்ட சமூக பெண்கள் என்று பெண்கள் செய்யும் வேலைகள் அனைத்தும் நேர்த்தியோடு கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இப்படி சாமான்ய பெண்கள் தொடங்கி அதிகாரத்தில் இருக்கும் பெண்கள் வரை தாங்கள் கால்பதிக்கும் துறைகளில் வெற்றி பெறும் போது, நிலைத்து நிற்கும் போது பெண்களால் அரசியல் களத்தில் காலூன்றுவதில் எத்தகைய சிக்கல் உள்ளது என்பதை பகுப்பாய வேண்டியது அவசியம்.

ஆண்களை திறமையால் அளவிடும் சமூகம், பெண்களை உடலியல் ஒழுக்கத்தால் அளவிடும் அளவிற்கு தான் பாலின சமத்துவம் குறித்த புரிதல் உள்ளது. எதிர்காலத்தில் அரசியலில் சிறந்து விளங்குவேன் என்ற யாரும் சிறு வயதில் லட்சியமாக கொள்வதில்லை. ஆண்களும், பெண்களும் சரிவிகித மக்கள் தொகை உள்ள நாட்டில் எவ்வளவு பெண்கள் அரசியலில் இருக்கிறார்கள் என்றால் 10 சதவிதத்துக்கும் குறைவு எனலாம். வாக்களிக்கும் உரிமை கூட பெண்களுக்கு இன்னும் சில நாடுகளில் மறுக்கப்பட்டுள்ள நிலையில் 1921 ம் ஆண்டு அன்றைய மதராஸ் மாகாணத்தில் சொத்துரிமை உள்ள பெண்களும் வாக்களிக்கலாம் என்ற முறை இருந்தது.

மனித உரிமை பேசும் இங்கிலாந்தில் அதன் பிறகு 1928ல் தான் வாக்களிக்கும் உரிமை வந்தது. பாலின சமத்துவம் பேசும் பிரான்சில் 1944 லும் இத்தாலியில் 1945 லும் வாக்களிக்கும் உரிமை பெண்களுக்கு கிடைத்தது .

வல்லரசு அமெரிக்காவில் பெண்கள் அதிபராக முடியவில்லை. ஆனால் குடியரசு தலைவர், ஆளுநர், பிரதமர், முதலமைச்சர், அமைச்சர், மக்களவை சபாநாயகர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என்ற அனைத்து பொருப்பிலும் பெண்கள் இந்தியாவில் அங்கம் வகித்து வருகிறார்கள். தேசிய அரசியலில் காங்கிரசிற்கு சோனியா காந்தி தொடங்கி பிராந்திய கட்சிகளாக மட்டுமல்லாமல் இந்திய அரசியலை நகர்த்தி செல்லும் இடங்களில் தமிழகத்தில் அதிமுகவிற்கு ஜெயலலிதா , மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரசின் மமதா பானர்ஜி, உத்திர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி என்று ஆட்சியில் பங்கு வகித்த பெண் தலைவர்களை கட்சியின் தலைமை பொறுப்பில் கொண்டுள்ள கட்சிகள் கடந்த காலங்களிலும் தற்போதும் இந்தியாவில் தான் உள்ளன.

Congress Party chief Sonia Gandhi addresses media at her residence in New Delhi சோனியா காந்தி

சரோஜினி நாயுடு, விஜயலட்சுமி பண்டிட் போன்ற பல பெண்கள் ஆளுநர் பொறுப்பிலும், இந்தியாவின் முதல் பெண் முதல்வராக உத்திரபிதேசத்தின் சுசேதா கிருபளானியும் அலங்கரித்திருக்கிறார்கள். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையைப் பெற்ற வி.என். ஜானகி அம்மாள் தொடங்கி அதன் பின் வந்த ஜெயலலிதா, டெல்லியில் ஷீலா தீட்சித், குஜராத்தில் ஆனந்தி பென் பட்டேல், ராஜஸ்தானில் வசுந்திர ராஜே, மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி, காஷ்மீரில் மெகபூபா முத்தி என்று பெண் முதல்வர்கள் மாநிலங்களில் கடந்த காலத்தில் ஆண்டதும் தற்போது ஆண்டுக் கொண்டு இருப்பதும் வரலாறு. இன்று வரை அவர்களால் பெண்களுக்கு உரிய அங்கீகாரத்தை தன் அதிகாரத்தை கொண்டு வழங்க முடியவில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பெண் உறுப்பினர்களின் தந்தை, சகோதரன், கணவர் என்று குடும்ப உறவுகளில் உள்ள ஆண்கள் அந்த பெண்களின் அதிகாரத்தை பயன்படுத்தி வலம் வருகிறார்கள் .

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வரான பக்தவச்சலத்தின் பேத்தியான ஜெயந்தி நடராஜன் போன்று சில பெண்கள் அரசியல் பின்புலத்தை கொண்டுள்ள குடும்ப பின்னணியில் இருந்து வருகிறார்கள். ஆனால் சாமான்ய பெண்கள் அரசியலில் காலூன்ற முடியுமா என்றால் எட்டாக்கனி தான். மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினராக இரு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பாலபாரதி போன்றோர் இயக்க பின்னணியில் இருந்து வந்த விதிவிலக்குகளும் உண்டு. இடதுசாரி இயக்கங்களினால் ஈர்க்கப்ட்டு, போராட்டங்கள் மூலம் வார்க்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினரானார் பாலபாரதி. அது போல் ஒரு சிலரே இயக்க பின்புலத்தில் இருந்து வர முடியும். எல்லா பெண்களுக்கும் எல்லா கட்சிகளுக்கும் இத்தகைய வாய்ப்பு கிடைப்பதில்லை.

பெண்கள் அரசியலுக்கு வரும் போது குடும்பத்தினர் ஆரம்பித்து சமூகத்தில் ஒழுக்கம் சார்ந்து வைக்கும் பார்வை மிக கொடுரமானவை. இவற்றை கடந்து தான் பாலபாரதியோ, திமுகவில் இருக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசனோ அரசியல் பங்காற்ற முடிகிறது. பெரும் பணம் புரளும் தேர்தல் அரசியலில் ஆண்களாலே தாக்குப் பிடிக்க முடியாமல் போகும் நிலையில் பெண்கள் தேர்தல் அரசியலுக்குள் தன்னை ஈடுபடுத்துவது நெருப்பின் மேல் நடப்பதாக தான் இருந்து வருகிறது. பணம் உள்ள குடும்பத்தினர் வீட்டிலிருந்து வரும் பெண்கள் தான் பெரும்பாலும் தேர்தல் அரசியலில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு இடங்களை ஆக்ரமிக்கிறார்கள்.

சமீபகாலமாக தமிழகத்தில் நடைபெற்ற போராட்டங்கள் கூடங்குளம், நியுட்ரினோ, நெடுவாசல் போன்ற சூழலிய போராட்டங்களாகட்டும், அய்யாக்கண்ணு தலைமையில் தலைநகர் டெல்லியில் விவசாய போராட்டத்தில் அரைநிர்வாணத்தோடு பங்கேற்ற பெண்களாகட்டும், டாஸ்மாக் கடைகளை அகற்ற தமிழகம் முழுவதும் பெண்கள் குதித்துள்ள போராட்டமாகட்டும், காலிகுடங்களுடன் தண்ணீருக்காக சாலை மறியலில் ஈடுபடும் பெண்களாகட்டும் போராட்ட களத்திற்கு வரும் பெண்கள் எத்தனை பேர் அரசியல் மேடைகளில் இருக்கிறார்கள், எத்தனை பேர் சட்டமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்குள்ளும் போகிறார்கள். போராட்ட களத்தோடு பெரும்பாலான பெண்களின் அரசியல் செயல்பாடுகள் முடக்கப்படுகிறது. இதை எல்லாம் தாண்டி ஒரு பெண் அரசியல் மேடை ஏறவும், அரியணை ஏறவும் கொடுக்க கூடிய விலை கணக்கிட முடியாத ஒன்று.

அவ்வளவு ஏன் தினமும் தொலைக்காட்சி விவாதங்களை நெறிப்படுத்தும் இடத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் ? தொலைக்காட்சிகளில் தினம் தினம் நடைபெறும் அரசியல் விவாத நிகழ்ச்சிகளில் எத்தனை பெண்கள் கருத்துரையாளர்களாக இடம்பிடிக்கிறார்கள். மகளிர் தினத்தன்று மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியை மட்டும் பெண்களை வைத்து நடத்தும் அளவிற்கு தான் தமிழக தொலைக்காட்சிகளின் நிலமை இருக்கிறது. தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் கட்சிகளில் இருந்து பங்கேற்கும் செய்தி தொடர்பாளர்களில் பெண்கள் வெகு குறைவு.

மற்ற மாநிலத்தை விட தமிழகத்தில் பெண்கள் அரசியல் பங்காற்ற முன்னரே தொடங்கி விட்டார்கள். பெரியார் அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். கள்ளுக்கடை மறியலை நிறுத்துகின்ற முடிவு என் கையில் இல்லை; ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்கள் கையில் இருக்கின்றது’என்றார் மகாத்மாகாந்தி. அந்த இருவர் பெரியாரின் மனைவி நாகம்மையாரும் , பெரியாரின் தங்கை கண்ணம்மையாரும் ஆவர். பெண்கள் பொது இடங்களுக்கு வருவது இழிவாகப் பார்க்கப்பட்ட காலங்களில் தமிழக பெண்கள் போராட்டக்களத்தில் ஆண்களுக்கு இணையாக பங்கேற்றார்கள். விடுதலை போராட்டம் தொடங்கி, மொழிப் போர், என அனைத்து அரசியல் வரலாற்று நிகழ்வுகளிலும் பெண்களின் வியர்வை துளிகளும், குருதியும் படிந்திருக்கிறது. எழும்பூரை கடந்து செல்பவர்கள் தில்லையாடி வள்ளியம்மையை பேருந்து நிறுத்தமாக மட்டுமே அடையாளம் கண்டு கடந்த போவதுண்டு.

women in power - Balabarathi பாலபாரதி

தமிழகத்தில் தான் தமிழக அரசியலில் பங்காற்றிய பெண்கள் பெயரில் இத்தனை திட்டங்கள் இருக்கின்றன. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இங்கே தான் பெண்கள் நாட்டின் விடுதலை தொடங்கி தங்கள் விடுதலை வரை பங்காற்றியது அதிகம். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டிற்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணத் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம், சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் என்று இந்த திட்டங்களுக்கெல்லாம் பெயர் சூட்டப்பட்ட பெண்கள் தமிழக அரசியலில் தடம் பதித்தவர்கள் குறிப்பாக திராவிட இயக்கங்களின் தூண்களாக இருந்தவர்கள். ஆனால் இன்று இந்த திட்டங்களை அனுபவிக்கும் பெண்களுக்கே இவர்களின் வரலாறு தெரியாது. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டத்தில் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார் அமைச்சர், ”மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் யார்” என ஒரு செய்தியாளர் கேட்டதாக பத்திரிகையாளர்கள் பேசிக் கொண்டார்கள் . இந்தளவிற்கு தான் பெண்கள் விடுதலை போராட்டத்தில் பங்காற்றியது வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறது . பள்ளிக் கல்வியில் ஜான்சிராணியை தவிர விடுதலை போராட்டத்தில் பங்கேற்ற பெண்களை பற்றியோ, அரசியலில் பங்காற்றிய பெண்கள் குறித்தோ தமிழக பாடத் திட்டங்களில் இல்லை .பிறகெப்படி அடுத்த தலைமுறை பெண்கள் அரசியலுக்கு வருவது.

2014 ம் ஆண்டில் அரசியலில் பெண்களின் பங்கு குறித்த புள்ளி விபர அறிக்கையில் நாடாளுமன்ற அளவில் பெண்கள் பங்கேற்பில் இந்தியாவுக்கு 73 வது இடம் கிடைத்துள்ளது. அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பது, மத்திய அமைச்சர்களாக பதவி வகிப்பது போன்றவற்றில் பெண்களின் பங்கு இந்தியாவில் வெறும் 9.9 சவீதம் மட்டுமே உள்ளது. வளர்ச்சியடையாத பிற நாடுகளோடு ஒப்பிடும் போது இந்தியா அதற்கும் கீழே உள்ளது. குறிப்பாக ஹைதி, ருவாண்டா, காங்கோ, சாத், ஜாம்பியா உள்ளிட்ட நாடுகளில் நடத்திய ஆய்வில் பெண்கள் அரசியலில் பங்கெடப்பதில் இந்தியாவை விட முன்னிலையில் உள்ளன. இந்தியாவில் மத்திய அமைச்சரவையில் 43 அமைச்சர்களுக்கு வெறும் 4 அமைச்சர்கள் என்ற அளவில் மட்டுமே பெண்கள் உள்ளனர்.

இந்த கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக கீதாஜீவன் நியமிக்கப்பட்ட செய்தியும் வருகிறது. கீதாஜீவனின் தந்தையார் என்.பெரியசாமி மறைந்ததையொட்டி அந்த பொறுப்பு கீதாஜீவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும் . முத்தமிழ் செல்வி, வேலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர், அங்கையற்கண்ணி விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் என்று சுயமரியாதை, பெண்ணுரிமைக்கு சட்டங்களும், திட்டங்களும் கொண்டு வந்த திராவிட இயக்கத்தை தாய் கழகமாக கொண்ட திமுகவில் 3 பேர் தான் பெண்கள் மாவட்ட செயலாளர்களாக இருக்கிறார்கள். திமுக துணை பொதுச்செயலாளர் சற்குணபாண்டியன் மறைந்து 10 மாதங்களாகிவிட்டது இன்னும் அந்த இடம் நிரப்பப்படவில்லை.

Women and Power - EVR Priyar தந்தை பெரியார்

ஜெயலிலதா தலைமையிலிருந்த அதிமுகவில் ஒரு பெண் மாவட்ட செயலாளர் கூட கிடையாது. தமிழகத்தின் இரு பெரும் கட்சிகளின் நிலை இப்படி என்றால் மற்ற கட்சிகளை சொல்லித் தெரிய வேண்டியதில்லை . ஆளும் பாஜக தமிழக பாஜகவிற்கு மாநில தலைவராக தமிழிசை சவுந்திரராஜனை நியமித்துள்ளது. சாதிய அடிப்படையில் பொறுப்புகள் வழங்கினார்கள் என்ற விவாதத்தை தாண்டி அவரை நியமித்திருப்பதும் அவருடைய செயல்பாடுகளும் அந்த கட்சியை பொறுத்தவரை வரவேற்க கூடிய ஒன்று. தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் மகளிர் அணியை தாண்டி மற்ற அணிகளுக்கு பெண்களை அணி தலைவராக நியமிப்பதில்லை. தற்போது தமிழக அரசியலில் இருக்கும் பெண்கள் எப்படி இந்த இடத்திற்கு வந்தார்கள், சில அரசியல் பின்னணியில் உள்ள குடும்பங்களில் இருந்து வந்த பெண்களே அரசியலில் சோபிக்க முடியாமல் போனதற்கான காரணம், பெண்கள் அரசியலுக்கு வருவதன் முக்கியத்துவம் என வரும் வாரங்களில் விரிவாகப் பேசலாம் .

(பழகுவோம்)

(கட்டுரையாளர் சுகிதா, கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பன்முகதன்மை கொண்டவர்)

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment