நம் உயிர்த் தோழன் 1 : பேரழிவுகளுக்கு யார் காரணம்?

எங்கெல்லாம் மரங்களை வளர்க்கும் வாய்ப்புகள் உள்ளனவோ அங்கெல்லாம் அவற்றை வளர்த்து இவ்வுலகை காக்க அனைவரும் கட்டாயம் முயற்சி எடுக்க வேண்டும்,

முனைவர் மு. உதயகுமார்

உலகம் முழுவதும் புவிப்பரப்பின் வெப்பநிலை உயர்ந்து வருவது பல்வேறு அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் மிக வேகமாக உயர்ந்து வரும் கரியமில வாயுவின் அளவு (கார்பன்-டை-ஆக்சைடு) புவிப்பரப்பின் வெப்பநிலை உயர்விற்கு மிக முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

கார்பன் என்ற ஒரு தனிமம் இல்லை என்றால் எந்த ஒரு உயிரினமும் தோன்றியிருக்க முடியாது, இருப்பினும் அதன் அடர்த்தி அதிகமாவதன் விளைவாக இப்போது பல்வேறு எதிர்பாராத மோசமான விளைவுகளை நாம் சந்தித்து வருகிறோம். தொழிற்புரட்சிக்கு முன் 250 பிபிஎம் என்ற அளவில் இருந்த கரியமில வாயுவின் அடர்த்தி இன்று 400 பிபிஎம்-க்கு மேல் உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக புவி வெப்பமயமாதல், புயல், கடும்பனி, வெள்ளம், கடல்மட்ட உயர்வு, தூந்திரப்பிரதேசங்களிலுள்ள பனி உருகுதல், மேகவெடிப்பு, பஞ்சம் மற்றும் பலத்த மழை ஆகியவற்றை இவ்வுலகம் சந்தித்து வருகின்றது. வளிமண்டலத்திலுள்ள கரியமில வாயுவின் அளவு உயர்வதற்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வரம்பின்றி அதிகம் பயன்படுத்துவதும், காடுகளை அழிப்பதும் மிகமுக்கிய காரணங்களாக உள்ளன.

இன்று நாம் பயன்படுத்தும் மேற்கண்ட பொருட்களை தொடர்ந்து வரம்பின்றி பயன்படுத்துவோமானால் சில நூறாண்டுகளில் இந்த உலகம் உயிர்கள் வாழ தகுதியற்றதாக மாறிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வளிமண்டலத்தில் சேகரமாகும் கரியமில வாயுவை உறிஞ்சி ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்கள் தங்களுக்கு தேவையான உணவை தானே தயாரித்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல் இவ்வுலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் உணவளிக்கின்றன. நூறாண்டுகளுக்கு முன் இருந்த வளமான காடுகள் இன்று இல்லை, காடுகளின் பரப்பும் மிக வேகமாக குறைந்து வருகின்றது.

பருவநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதில் தாவரங்களும் அவை செறிந்துள்ள காடுகளும் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்பதை பன்னாட்டு அமைப்புகள் ஏற்றுக்கொண்டுள்ளன, அறிவியலும் அதனை மெய்ப்பித்துள்ளது. உலகம் முழுவதும் இன்று நாம் காணுகின்ற இயற்கைப் பேரழிவுகளுக்கு மூலகாரணமாக விளங்கும் ஒரே உயிரினம் மனித இனம் மட்டுமே என்று சொன்னால் அது மிகையல்ல. எனவே எங்கெல்லாம் மரங்களை வளர்க்கும் வாய்ப்புகள் உள்ளனவோ அங்கெல்லாம் அவற்றை வளர்த்து புவிவெப்பமயமாதலையும் பிற எதிர்பாராத பின்விளைவுகளிலிருந்தும் இவ்வுலகை காக்க அனைவரும் கட்டாயம் முயற்சி எடுக்க வேண்டும், இல்லையேல் இவ்வுலகம் வாழத்தகுதியற்றதாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

(கட்டுரையாளர் முனைவர் மு. உதயகுமார், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தாவரவியல் துறை துணைப் பேராசிரியர்)

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close