ஆட்சியாளர்களை குறை சொன்னால் மழையின் சாபம் சும்மாவிடாது!

29ம் தேதி மழை சென்னையை சிதைத்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எங்கே இருந்தார்? மழையே பெய்யாத சேலத்தில் மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்தார்.

chennai rains - thambaram - mudichoor

ச.கோசல்ராம்

தண்ணி போக வேண்டிய ஆத்துல லாரி போனால்… லாரி போக வேண்டிய ரோட்ல தண்ணி தானே போகும்…

இந்த வாசகம்தான், இப்போது சமூக வலைதளங்களில் ஹாட்டாக பரவி வருகிறது.

2015ம் ஆண்டு பெரும் மழையை சென்னை சந்தித்த போது, ஆட்சியாளர்கள் சொன்ன வார்த்தைகள், ‘இவ்வளவு பெரிய மழை வரும் என்பது யாருக்கும் தெரியாது’ என்பதுதான். இப்போதும் அதே பழைய பல்லவியைத்தான் பாடுகிறார்கள்.

இது உண்மையா?

நிச்சயமாக இல்லை. இன்று விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. இந்திய வானிலை ஆய்வு மையம், சென்னை வானிலை ஆய்வு மையங்களில் இருந்து மாதாமாதம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும். ஆனால் அதையெல்லாம் படித்து புரிந்து கொள்ளும் அமைச்சர்கள் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.

ஆற்றில் நுரைவந்தால், மக்கள் சோப்புப் போட்டு குளிப்பதால் வருகிறது என்ற அரிய உண்மையை கண்டுபிடித்த பல பிஎச்டி பெற்ற அமைச்சர்கள் கிடைத்திருப்பது தமிழகம் செய்த புண்ணியம்.
அரசு அட்டுமல்ல… தனியார் வானிலை ஆய்வாளர்கள் இன்று இணையதளங்களில் உலா வருகிறார்கள். 2015ம் ஆண்டு நவம்பர் கடைசி வாரத்தில் தமிழ்நாடு வெதர்மேன் என்பவர் டிசம்பரில் சென்னையைப் புரட்டிபோடும் மழை பெய்யும் என்று சொன்னார், அப்படியே நடந்தது.

அப்போது வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்த ரமணன், சென்னை மேற்கு மாம்பலத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், இப்படியொரு மழை வரும் என்று அரசுக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே தகவல் சொன்னதாக பேசினார்.

ஒரு மாதத்திற்கு முன்னதாக அல்ல, ஓராண்டுக்கு முன்னதாகவே எந்த தேதியில் எந்த இடத்தில் மழை பெய்யும் என்பதை சொல்லக் கூடிய அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஆனால் அதையெல்லாம் கேட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு, வாய் சொல் வீரர்களுக்குத்தானே ஒட்டுப் போட்டு அமைச்சர்களாக்கினோம்.

அமெரிக்கா, லண்டனைவிட அதிகமான முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உள்ளாட்சித்துறை அமைச்சர் சொன்னதை, நெட்டிசன்கள் தவறாக புரிந்து கொண்டு மீம்ஸ் போடுகிறார்கள். அவர் சொன்னது இந்த ஆட்சியை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததைப் பற்றிச் சொல்கிறார்.

இன்றைக்குப் பொதுப்பணித்துறை இலாகாவை வைத்திருப்பவரையே முதல்வராக பெற்றுள்ளோம். பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். அதற்கான நிதியை, விரைந்து செயலாற்றும் முதல்வர் ரிலீஸ் செய்தது எப்போது தெரியுமா? நவம்பர் 1ம் தேதி. இப்படியொரு முதல்வரை பெற தமிழகம் என்ன தவம் செய்ததோ?

அரசில் நிதி இல்லை. டெல்லியில் காத்துக்கிடந்து பெற்று வர தாமதமாகிவிட்டது என்று கூட வைத்துக் கொள்வோம். 29ம் தேதி மழை சென்னையை சிதைத்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எங்கே இருந்தார்? மழையே பெய்யாத சேலத்தில் மழை வெள்ளம் குறித்து ஆய்வு செய்தார். எவ்வளவு கடமை உணர்ச்சி பார்த்தீர்களா? பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு மகிழ்ந்தார். எத்தனை உயர்ந்த உள்ளம் அவருக்கு?

தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தும் நண்பர் ஒருவர் சொன்ன தகவல் அதிர்ச்சி ரகம். 2015ம் ஆண்டு அதிமுகவைச் சேர்ந்த 50 எம்.பிக்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1 கோடி நிவாரணமாக வழங்கினார்கள். ஆனால் அந்த தொகை கடந்த 2 ஆண்டுகளாக செலவு செய்யப்படவில்லை. இதையறிந்த எம்.பி.க்கள் அந்த தொகையை வேறு காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்ந்துள்ளார்கள். எத்தனை மகிழ்ச்சியான செய்தி இது.

‘மிகச் சிறந்த ஆட்சியை நடத்தி வரும்’ ஆட்சியாளர்களையோ, இந்த ஆட்சியையோ யாராவது குறை சொன்னால், மழைக்குக் கூட அடுக்காது. அமைச்சர்களின் சாபம் உங்களை சும்மாவிடாது, ஜாக்கிரதை. இதற்கு மேலும் குறை சொல்வதாக இருந்தால், தண்ணீர் நிரம்பியிருக்கும் சப்வேக்களில் தள்ளிவிட்டு, நீங்களே தற்கொலை செய்து கொண்டதாக சொல்வார்கள்.

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: If you say against rulers the curse of rain will not leave you alone

Next Story
விவசாய நெருக்கடியின் காரணிகள்agricalture
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com