மன்னிப்பின் பொருளை இராகுல் அறிவாரா?

உங்கள் உள்ளத்தில், அன்பு, பரிவு, இரக்கம், அற உணர்வு குடிகொண்டிருந்தால், தமிழர்கள் எழுவர் விடுதலையை அறிவிக்கச் செய்யுங்கள்!

இலக்குவனார் திருவள்ளுவன்

மன்னிப்பு என்றால் என்ன? இதன் பொருளை இராகுலோ, அவரின் மன்னிப்புப் பேச்சை நம்புகிறவர்களோ அறிவார்களா?

ஒருவர் மற்றொருவரை மன்னித்து விட்டார் என்றால் குற்றச் செயலுக்குரிய தண்டனக்குரிய நிழல்கூட அவர்மீது படாமல் காக்கிறார் என்று பொருள். தண்டனைக் காலத்தில் மன்னிக்கிறார் என்றால் எஞ்சியத் தண்டனைக் காலத்தில் இருந்து விடுவிக்கிறார் என்று பொருள்.

மன்னிப்பு என்பது தண்டனையின் பகுதியாகவும் சட்டத்தின்படியானதுமாகும். எனவேதான் சிறுவர்கள், இளைஞர்கள், முதல் குற்றவாளிகள் முதலானவர்களை நீதிபதிகளே மன்னித்து விடுதலை செய்கின்றனர்.

ஒவ்வொரு சிறைச்சாலையிலும் தண்டனைக் குறைப்புப் பிரிவு உள்ளது. தண்டனைவாசிகளை அவர்களின் தண்டனைக் காலம் முடியும் முன்னரே விடுதலை செய்வதுதான் இப்பிரிவின் பணி.

இசுலாமியத் தீவிரவாத முத்திரையில் உள்ளவர்களுக்கும் இராசீவு (ராஜிவ்) கொலைவழக்கில் சிக்கவைக்கப்பட்டவர்களுக்கும் மக்கள்நலப் போராளிகளுக்கும் சட்டத்தின்படியான எவ்வகைச் சலுகையும் வழங்குவது கிடையாது. இது சட்டத்திற்கு எதிரான செயல்பாடாக இருப்பினும் மத்திய மாநில அரசுகள் கவலப்படுவது இல்லை.

விசாரணை அதிகாரிகள், நீதிபதிகள் மனச்சான்றுகள் அளித்த வாக்குமூலங்கள் அடிப்படையில் அப்பாவிகள் எழுவரின் விடுதலைக்கு இராசீவு குடும்பத்தினர் வழி வகுத்தார்கள் என்றால், காலங்காலமாகப் போற்றுதலுக்குரியவர்கள். மாறாக மன்னித்து விட்டோம் என்று போலியாகச் சொன்னார்கள் என்றால் தமிழ்மக்கள் வாக்குகளைப் பெற நடிக்கிறார்கள் என்றுதான் பொருள்.

வடக்கிலிருந்து வரும் வாடைக் காற்று நமக்கு ஆகாதது. வடக்குக் காற்று மட்டுமல்ல. வடக்கில் உள்ள கட்சிகளும் நமக்கு ஆகாதவைதான். பேராயக்கட்சியாகிய காங்கிரசும் பாசகவும் அரசியலில் பகைவர்கள். தமிழர்களை ஒழிப்பதில் நண்பர்கள். இல்லாவிட்டால், காங்கிரசு எதிர்க்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பாசக செயல்படாதா? காங்கிரசு கருவறுக்கத் துடிக்கும் தமிழர் எழுவருக்கு ஆதரவாகப் பாசக செயல்பட்டிருக்காதா? தமிழர் நலன்களுக்கு எதிராகக் கை கோக்கும் இவர்களை எப்படி நம்புவது?

சரி. இப்பொழுதேனும் மனம் மாறிவிட்டார்கள் என்று நம்புவோம். 1,70,000 ஈழத்தமிழர்களைக் கூட்டணி அமைத்துக் கொன்றொழித்தார்களே! தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரனின் இளம்பிஞ்சு போன்ற எத்தனையோ மழலை அழிப்பிற்குக் காரணமாய் அமைந்தார்களே! இனப்படுகொலைகளில் தப்பிப் பிழைத்தோர், வீடிழந்து வளமிழந்து நடைப்பிணங்களாய் இருக்கக்காரணமானார்களே! இவற்றை எல்லாம் மன்னிக்க முடியாதுதான். என்றாலும் கடந்த காலத் துயரங்களை உள்ளத்தில் பூட்டி வைத்துக்கொண்டு இனியேனும் அமைதியாகவும் உரிமையுடனும் வாழமாட்டோமா என ஏங்கிக் கொண்டுள்ளார்களே, அவர்களுக்காக ஆறுதலாகச் சொல்லலாமே! குற்றச் செயல்களை ஒப்புக்கொள்ளவும் கூட்டாளிகளைத் தண்டிக்கச் சொல்லவும் மனம் வராதுதான். ஆனால் ஈழத்தமிழர்களின் தாயகம் தமிழ் ஈழம் என்னும் வரலாற்று உண்மையை உலகறியச் சொல்லலாமே! மன்னிப்பு என்னும் போலிச் சொல்லைவிடத் தமிழ் ஈழத்தை ஏற்பது ஆற்றல் வாய்ந்தது என்பதைக் கட்சியில் புது இரத்தம் பாய்ச்ச விரும்பும் இராகுல் உணர்வாரா?

அப்பாவித் தமிழர் எழுவரை மன்னித்து விட்டோம் என்று சொல்வதைவிட, அவர்களுக்கு விடுதலை வழங்கச் செய்யுங்கள். குடியரசுத் தலைவரிடம் வேண்டியும் மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டும் விடுதலை உலகில் உலவச் செய்யுங்கள்.

மன்னிப்பு எனப் பொருளற்றுப் பயன்படுத்துவதை விட, விடுதலை என்னும் பொருள் பொதிந்த சொல்லைச் சொல்லுங்கள்!

குற்றம் புரியாமல் தண்டனையில் வாடுபவர்களுக்குத் தேவை மன்னிப்பு அல்ல, விடுதலைதான் என்பதை உணருங்கள்.

உங்களால் முடியும் என்னும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. எங்கள் நம்பிக்கையை வீணாக்க வேண்டா! உங்கள் உள்ளத்தில், அன்பு, பரிவு, இரக்கம், அற உணர்வு குடிகொண்டிருந்தால், எழுவர் விடுதலையை அறிவிக்கச் செய்யுங்கள்!

ஒருவேளை இவர்களுக்குக் குற்றத்தில் பங்கு உண்டு எனக் கருதினாலும், கண்ணோட்டம் கொள்ளுங்கள்.

ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர்.

தண்டிக்கும் ஆற்றல் இருப்பினும் மன்னிப்பதே சிறந்த பண்பு என்கிறார் அவர்.

அந்த உண்மையான மன்னிப்பை விடுதலை வடிவில் தாருங்கள்!

உண்மைத் தமிழ்உள்ளம் உங்களை வணங்கிப் போற்றும்!

×Close
×Close