கலைஞர் பதறிய அந்தத் தருணம்: பேராசிரியர் காதர் மொய்தீன் நினைவுகள்

கருணாநிதியுடன் சுமார் 38 ஆண்டுகள் அரசியல் ரீதியாகவும், நட்பாகவும் இணைந்திருந்த பேராசிரியர் காதர் மொய்தீன் தனது நினைவுகளை இங்கே கூறுகிறார்.

கலைஞர் 95: இன்று 95-வது பிறந்த நாள் கொண்டாடுகிறார் திமுக தலைவர் கருணாநிதி. இதையொட்டி கருணாநிதியுடன் சுமார் 38 ஆண்டுகள் அரசியல் ரீதியாகவும், நட்பாகவும் இணைந்திருந்த பேராசிரியர் காதர் மொய்தீன் தனது நினைவுகளை இங்கே கூறுகிறார். பேராசிரியர் காதர் மொய்தீன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர்.

‘ஒரு தமிழ் அறிஞராக, பண்புமிக்க தலைவராக கருணாநிதிக்கு நிகராக என்னால் யாரையும் கூற முடியாது. அரசியல் ரீதியாக எதிர் நிலையில் இருக்கிறவர்களும்கூட மக்கள் பிரச்னைகளை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றால், பொறுமையாக கேட்டு அவர் நிறைவேற்றிக் கொடுத்த வரலாறு நிறைய உண்டு.

எனக்கும் அப்படி அனுபவம் உண்டு. 1999-ல் பாஜக.வுடன் திமுக கூட்டணி அமைத்ததும், நாங்கள் திமுக அணியில் இருந்து விலகினோம். அப்போது கருணாநிதிதான் முதல் அமைச்சர்! கூட்டணியில் இல்லாவிட்டாலும்கூட முதல்வர் என்ற அடிப்படையில் கருணாநிதியை அடிக்கடி சந்தித்து பொதுவான தமிழக பிரச்னைகள் மற்றும் இஸ்லாமியர்களின் தேவைகள் குறித்து கோரிக்கைகளை வைத்து வந்தோம்.

ஒருமுறை எங்கள் கட்சியின் அப்போதைய மாநில தலைவர் அப்துல் சமது, மாநில பொதுச் செயலாளராக இருந்த நான், மாநில பொருளாளராக இருந்த வந்தவாசி வஹாப் ஆகியோர் சென்றிருந்தோம். அப்போது மாதம் தோறும் முதல் வாரத்தில் ஒரு நாள் எங்கள் சந்திப்புக்கு நேரம் ஒதுக்குவதாக கூறி, அதன்பிறகு தொடர்ந்து அதேபோல எங்களை சந்தித்தார். அப்போது நாங்கள் வைத்த கோரிக்கைகள் அடிப்படையிலேயே அடுத்த முறை ஆட்சிக்கு வந்ததும் இஸ்லாமியர்களுக்கு மூன்றரை சதவிகிதம் இட ஒதுக்கீடு, உலமாக்களுக்கு வாரியம் என நிறைவேற்றிக் கொடுத்தார்.

பாஜக கூட்டணியில் இருந்து திமுக விலகியதைத் தொடர்ந்து, 2004 ஜனவரி 1-ம் தேதி எங்கள் கட்சியின் அப்போதைய தேசிய தலைவர் இ.அகமதுவும், மாநிலத் தலைவராக இருந்த நானும் கருணாநிதியை சந்திக்க சென்றோம். கருணாநிதிக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துவிட்டு, கூட்டணியை மீண்டும் உறுதி செய்துவிட்டு வரவேண்டும் என்பது எங்கள் சந்திப்பின் நோக்கம்!

கருணாநிதியை சந்தித்த போது, இ.அகமது இப்படி சொன்னார்… ‘Let us sail or Let us sink’! அதாவது, இணைந்து பயணிப்போம் அல்லது இணைந்து மூழ்குவோம்’ என்பதாக இ.அகமதுவின் கருத்து இருந்தது. அதற்கு கருணாநிதி, ‘அகமதுபாய்… Why sink? We will sing’ என்றார் பாருங்கள்! அதாவது, ‘நாம் ஏன் மூழ்க வேண்டும்? நாம் இணைந்து ஜெயிக்கலாம்’ என்கிற அர்த்தத்தில் சிலேடையாக அவர் குறிப்பிட்டு எங்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

கருணாநிதி சொன்னது போலவே அந்தத் தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளை திமுக கூட்டணி வென்றது. பிறகு அமைந்த மத்திய அமைச்சரவையில் இ.அகமதுவுக்கு இடம் கிடைக்க கருணாநிதி உதவிய விஷயம் வெளியே அவ்வளவாக தெரியாது.

கருணாநிதி புகழ்ச்சியை விரும்புகிறவர் என்கிற மாதிரியான கட்டமைப்பு உண்டு. ஆனால் அளவுக்கு மீறியதாக தான் கருதும் புகழ்சிகளை அவர் ஏற்க மாட்டார் என்பதுதான் நிஜம். தொழில் அதிபதி வி.ஜி.சந்தோஷம் சென்னையில் ‘ஒளி கோவில்’ ஒன்றை அமைத்தார். அதில் கலந்துகொண்ட கருணாநிதி, ‘கற்பனைக்கு எட்டாத வெட்ட வெளியில் இருந்து தானே வெளிக் கிளம்பி பிரவாகம் எடுத்த ஒளி வெள்ளம்’ என ஒளிக்கு விளக்கம் கொடுத்தார்.

நான் எத்தனையோ நூல்களை படித்திருக்கிறேன். ஒளிக்கு இப்படியொரு விளக்கத்தை அதற்கு முன்பு நான் கேட்டதில்லை. இந்த நிகழ்ச்சிக்கு அடுத்த நாள், எங்கள் கட்சி பொதுக்குழுவுக்கு கருணாநிதியை அழைத்திருந்தோம். அங்கு பேசிய நான், கருணாநிதி ஒளிக்கு கொடுத்த விளக்கத்தை குறிப்பிட்டேன். அதோடு, ‘ஒளிக்கு இப்படியொரு விளக்கத்தை மெளலானாக்கள்கூட சொன்னதில்லை. மெலானாக்களுக்கு எல்லாம் மெளலானாவாக விளக்கம் கொடுத்திருக்கிறார் கலைஞர்’ என்றேன்.

இது எங்கள் இஸ்லாமிய சமூகத்தில் பெரிய சர்ச்சை ஆனது. ‘மெளலானாக்களுக்கு எல்லாம் மெளலானாவாக’ என்று எப்படி குறிப்பிடலாம்? என பலர் கேட்டார்கள். பொதுவாக சர்ச்சைகளைப் பற்றி கவலைப்படுகிறவன் அல்ல நான்! என்னிடம் கேட்டவர்களுக்கு உரிய விளக்கத்தை நான் கொடுத்தேன்.

இதன்பிறகு 3 நாட்கள் கழித்து கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்தேன். அப்போது, ‘என்னை வச்சுகிட்டு மெளலானாக்களுக்கு எல்லாம் மெளலானான்னு பேசிட்டீங்களே… எனக்கு சுரேர்…னு ஆச்சு’ என குறிப்பிட்டார். நான் பேசியதில் அவரே பதறிப் போனது அப்போதுதான் எனக்கு புரிந்தது.

2009-ல் முதுகுப் பகுதியில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் அவரை சந்தித்தேன். உடல் வலி ஒருபக்கம், தனது மக்கள் பணிகளை உடல்நிலை முடக்கிப் போட்டதால் ஏற்பட்ட வேதனையில் இருந்தார் அவர்! அப்போது, ‘நான் மனமறிந்து யாருக்கும் எந்தத் தீங்கும் நினைக்கவில்லை’ என கலங்கிப் போய் சொன்னது இன்னமும் என் நெஞ்சில் நிற்கிறது. அதை நினைக்கிற வேளைகளில் எனக்கு கண்ணீர் வரும். தனது நெஞ்சுக்கு நீதியான நேர்மையான அரசியலையே கலைஞர் முன்னெடுத்தார் என்பதற்கு அந்த துயரமான வேளையில் அவர் உதிர்த்த வார்த்தைகள் சாட்சி!’

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close