Advertisment

மம்தா - ஸ்டாலின் - ராவ்… புயலா? புஸ்வானமா?

ஸ்டாலினிடம் இருந்து மூன்றாவது அணிக்கு கரிசனம் இல்லாத நிலையில், ரஜினியோ கமலோ ‘மாற்றுத் திட்டம்’ என்கிற அடிப்படையில் அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chandrasekar rao - stalin - mamtha

விவேக் கணநாதன்

Advertisment

நாடாளுமன்றத் தேர்தலின் முன்னோட்டம் தொடங்கிவிட்டது. தமிழகத்தில் தேர்தல் நெருப்பை திமுக பற்றவைத்துள்ளது. சந்திரசேகர ராவ் ஸ்டாலின் உடனான சந்திப்பும், அதற்கு முன்னும் பின்னுமான நிகழ்வுகளும் நமக்கு பல செய்திகளைச் சொல்கின்றன.

மாநிலக் கட்சிகளின் அணி சேர்க்கை கோஷத்தைக் கண்டு மருகுகிறது மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அந்த மருகலுக்குக் காரணம் மம்தா.

மூன்றாவது அணி அமைந்தால் அது பாஜகவின் பீ டீமாகாத்தான் இருக்கும் என்று நேரடியாக விமர்சித்துள்ளார் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். உண்மையில், மூன்றாவது அணி முயற்சியோ அல்லது காங்கிரஸ் அல்லாத அணியின் உருவாக்கமோ மார்க்ஸிஸ்ட் கட்சியின் சார்பாகவே முன்னெடுக்கப்படும் என்றே அரசியல் வட்டாரத்தில் நினைக்கப்பட்டது.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டின் இறுதிக்காட்சிகள் வரை இதற்கான ரேகைகள் தெரிந்தன. ஆனால், காங்கிரஸோடு புரிந்துணர்வு உண்டு, கூட்டணி இல்லை என்பதாக முடிவுக்கு வந்தது மாநாடு.

மார்க்ஸிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்த காராசார விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டார் ஸ்டாலின். அந்த பதிவுக்கு நன்றி தெரிவித்தார் மம்தா.

மூன்றாவது அணிக்கு அச்சாரமா? என்ற விவாதங்கள் எழத்துவங்கிய சூட்டோடு ஸ்டாலினைச் சந்திக்க சென்னை வந்தார் தெலங்கானா முதல்வர். இங்கே மூன்றாவது அணி என்கிற புயலை முதலில் கிளப்பியது சந்திரசேகர் தான். மார்ச் முதல்வாரத்தில் தான் தேசிய அரசியலுக்குள் வந்துவிட்டதாக அறிவித்த சந்திரசேகர் ராவ் அடுத்தடுத்து வேகமாக காய்களை நகர்த்தினார். திரிபுரா தேர்தலில் தான் கூட்டணிக்கு அழைத்தும் வராத காங்கிரஸ் மீது கோபத்தில் இருந்த மம்தா, சந்திரசேகரின் அறிவிப்புக்குப் பிறகு நேரடியாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்தினார். இதற்கு பிறகுதான் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மாநிலத்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார் மம்தா. பின்னர், கொல்கத்தாவுக்கே சென்று நேரடியாக மம்தாவைச் சந்தித்தார் சந்திரசேகர் ராவ். செய்தியாளர் சந்திப்பில், மம்தாவையும் வைத்துக் கொண்டே, ‘காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணி” என்று வெளிப்படையாக அறிவித்தார் சந்திரசேகர்.

சந்திரசேகரின் நடவடிக்கைகளை காங்கிரஸ் ரசிக்கவில்லை. தன்னுடைய உள்ளூர் அரசியலுக்காக விளம்பரம் தேடிக் கொள்கிறார் சந்திரசேகர் என கடுமையாக விமர்சித்தனர் தெலங்கானா காங்கிரஸ் கட்சியினர். அவர்கள் அப்படிச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது. 2019ல் தெலங்கானா சட்டசபைக்கும் தேர்தல் வரவிருக்கிறது.

தெலங்கானா கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவராக இருந்த கோதண்டராம் தெலங்கானா ஜனசேனா என்கிற கட்சியைத் தொடங்கியிருக்கிறார். மத்திய அரசு அதிகாரங்களைக் குவிக்கிறது என சந்திரசேகர் பேசிக்கொண்டிருக்கையில், மாநிலத்தில் சந்திரசேகர் அதிகாரத்தைக் குவிக்கிறார், தன்னிச்சையாக செயல்படுகிறார் என விமர்சித்துக் கொண்டிருக்கிறார் கோதண்டராம்.

இதனால், காங்கிரஸ் உடன் கூட்டணி கண்டு கோதண்டராமன் தேர்தலைச் சந்தித்தால் தனக்கு அதிகம் பாதிப்பு ஏற்படும் என அஞ்சுகிறார் சந்திரசேகர். எனவே, நாடாளுமன்றத் தேர்தலையும், பாஜக எதிர்ப்புணர்வையும் மையப்படுத்தி தேசிய முகமாக தன்னைக் கட்டமைத்துக் கொள்வதன் மூலம் சட்டசபைத் தேர்தலிலும் தெலங்கானாவில் செல்வாக்கோடு இருக்கும் காங்கிரஸையும் வீழ்த்தி, நாடாளுமனத்திலும் எண்ணிக்கையைப் பெறலாம் என கணக்குப் போடுகிறார் சந்திரசேகர். மே 10ம் தேதி தெலங்கானாவில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்க மற்ற மாநிலக் கட்சித் தலைவர்களை அழைத்து அதன் மூலம் மூன்றாவது அணி கோஷத்தை வலுப்படுத்தலாம் என நினைத்த சந்திரசேகர் அதன் ஒரு பகுதியாகத்தான் இந்தியா முழுமைக்கும் ‘தெலங்கானா மாதிரி வளர்ச்சி’ என்று பேசத்துவங்கினார். ஏப்ரல் 27ம் தேதி நடந்த தனது கட்சியின் 17வது ஆண்டுவிழாவில் “கூட்டாட்சி கூட்டணி என்கிற என்னுடைய அறிவிப்பு டெல்லியில் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என பேசி காங்கிரஸைச் சீண்டினார். சந்திரசேகர் ராவ் தான் அடுத்த பிரதமர் போஸ்டர் ஒட்டத் துவங்கினர் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியினர்.

மூன்றாவது அணி என்ற கோஷம் எழுந்ததும் அளவில்லா மகிழ்ச்சியடைந்தது பாஜகதான். ஏனெனில், திமுக தொடங்கி பல கட்சிகளுக்கும் பாஜக ஆரம்பம் தொட்டே அனுப்பும் செய்தி ‘நீங்கள் எங்களோடு வரவேண்டாம்; ஆனால், காங்கிரஸைத் தனிமைப்படுத்தங்கள்” என்பதுதான். இந்நிலையில், மூன்றாவது அணி என்றதும் துள்ளிக்குதித்தனர் பாஜகவினர். போதாக்குறைக்கு, பாஜக ஆட்சியில் ’திடீர் வளர்ச்சி’ பெற்றவர்களில் ஒருவரான பாபாராம் தேவ், சந்திரசேகர ராவைச் சந்தித்து மூன்றாவது அணிக்கு ஆதரவு தெரிவித்தது சந்தேகங்களை வலுக்கச் செய்தது. பாஜகதான் சந்திரசேகர ராவை வைத்து மூன்றாவது அணி என்று ‘பீ டீமை’ உருவாக்குகிறது என்று விமர்சனங்கள் எழுந்தன. ஏனென்றால், தெலங்கானாவில் பாஜகவுக்கு பெரிய செல்வாக்கில்லை. ஆனால், காங்கிரஸுக்கு அங்கு வாக்குவங்கி இருக்கிறது. இந்தியா முழுவதும் பாஜக மீது கடும் அதிருப்தி இருக்கும் நிலையில் சந்திரசேகர ராவின் முயற்சி காங்கிரஸுக்கு எதிரான பாஜகவின் கையாடல் தான் என சர்ச்சைக்குள்ளானது.

ஆனால், ஏப்ரல் 29ம் தேதி சென்னையில் ஸ்டாலினைச் சந்தித்த பிறகு சந்திரசேகரிடம் காங்கிரஸ் அல்லாத அணி என்று பேசிய உற்சாகத்தைப் பார்க்க முடியவில்லை. ஸ்டாலினோடு சேர்ந்து சந்திரசேகர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், மாநில சுயாட்சி, நிதி உரிமைகள், மத்திய - மாநில அதிகாரப் பகிர்வு, மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு, பாஜக எதிர்ப்பு என மம்தாவை வாழ்த்திய ஸ்டாலினின் ட்வீட்டில் இருந்த எல்லாமும் இருந்தது; ஆனால், ஒருநாளைக்கு முன்புவரை சந்திரசேகர் பேசிய எதுவும் அந்த செய்தியாளர் சந்திப்பில் இடம் பெறவில்லை.

மாநில உரிமைகளுக்கான குரலாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதும், கல்வி, சுகாதாரம் போன்றவற்றை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வருவதும் தன்னுடைய எதிர்கால அரசியலுக்கு நல்லது என நினைக்கிறார் ஸ்டாலின். தனது ஆளுமையை நிரூபிக்க ஸ்டாலினுக்கு அவை உதவும். இவற்றுக்கான செயல் திட்டங்களை முன்வைப்பதன் மூலம், திமுகவின் தேசியச் செல்வாக்கையும் மீட்டெடுக்க முடியும். ஆனால், மாற்றங்களை முன்வைத்து தன்னை நிலை நிறுத்திக்கொள்ள காங்கிரஸும் அவசியம் என்பதை புரிந்து வைத்திருக்கிறார் என்றே அவரது செயல்பாடுகள் காட்டுகின்றன. திருநாவுக்கரசரின் போக்கில் மகிழ்ச்சி இல்லை என்றாலும், ராகுல் காந்தியோடு தன் தொடர்பைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார் ஸ்டாலின். இன்னும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் காங்கிரஸ் மாநிலத் தலைமையிலேயே மாற்றம் வரலாம் என்ற கருத்தும் பரவலாக அடிபடுகிறது. ஒருவேளை பீட்டர் அல்போன்ஸ், வசந்த்குமார் போன்றவர்கள் காங்கிரஸின் தலைமைக்கு வந்தால், அது திமுகவுக்கு இன்னும் வசதி. திமுகவோடு எப்போதும் இணக்கமாக இருப்பவர்கள் அவர்கள். எனவே, அவசரப்படுவதில் அர்த்தமில்லை என நினைக்கும் ஸ்டாலின் ஆழம் மட்டுமே பார்க்கிறார். தேசிய அளவில் தனக்கான செல்வாக்கையும், கவனத்தையும் அதிகரித்துக் கொள்வதன் மூலம் கூட்டணியின் போது காங்கிரஸை ’கம்பீரமாக கையாள’ அது ஸ்டாலினுக்கு உதவக்கூடும்.

ஸ்டாலின் உடனான சந்திப்பிற்கு பிறகு, அகிலேஷ் யாதவ் சந்திரசேகரை ஹைதாராபாத்துக்கு வந்து சந்தித்து இருக்கிறார். சென்னையில் நடந்த ஸ்டாலின் உடனான சந்திப்பின் போது பேசப்பட்டவைகளின் நீட்சியாகவே அகிலேஷ் - சந்திரசேகர் சந்திப்பின் செய்தியாளர் சந்திப்பும் அமைந்திருந்தது. மூன்றாவது அணி, நான்காவது அணி போன்றவை எதுவும் இல்லை என்று சென்னையில் பேசிய சந்திரசேகர், அகிலேஷ் உடனான சந்திப்பில் எங்களோடு யார் வேண்டுமானாலும் இணையலாம் என அறிவித்திருக்கிறார்.

அகிலேஷ் யாதவும் மூன்றாவது அணி என்ற பதத்தை பயன்படுத்தவில்லை. காங்கிரஸ் குறித்தான கேள்விக்கு, “யார் வேண்டுமானாலும் கூட்டணி சேரலாம்” என்பதாகவே பதில் அளித்துள்ளார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கைச் சந்திக்கவும், சந்திரசேகர ராவ் நேரம் கேட்டுள்ளார். ஆனால், ‘மரியாதை நிமித்தமாகவே’ சந்திப்பு இருக்கும் என்றும், அரசியல் ஏதுமில்லை என்றும் அறிவித்துவிட்டார் பட்நாயக்.

தமிழ்நாட்டில் என்ன நிலை?

மம்தாவை வாழ்த்திய ஸ்டாலினின் ட்வீட்டால் அதிகம் வெறுப்பானது காங்கிரஸ் தான். ‘முழு கேக்கையும் தானே சாப்பிட ஆசைப்படுகிறார் ஸ்டாலின்’ என்று டிவிட்டரில் முதல் கல்லை வீசினார் ஒரு காங்கிரஸ் பிரமுகர். அடுத்த ஒரு மணிநேரத்தில் காங்கிரஸுக்கு ஆதரவாகத்தான் ஸ்டாலின் கூட்டணி முயற்சி செய்கிறார் என்று அவரே மாற்றிக் கொண்டார்.

ஸ்டாலின் - சந்திரசேகர் சந்திப்பையும் பல்லைக் கடித்துக்கொண்டுதான் காங்கிரஸ் பார்த்துக் கொண்டிருந்தது. ஸ்டாலின் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்று திமுகவினரே குழப்பத்தில் தான் இருந்தனர். ஆனால், சந்திரசேகருடன் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “சந்திப்பில் பேசப்பட்ட விஷயங்களை எங்களோடு ஒத்தக் கருத்துள்ள தோழமைக் கட்சிகளையும் கலந்து ஆலோசித்து கூட்டணி குறித்து முடிவெடுப்போம்” என்ற போதுதான் காங்கிரஸுக்கு கொஞ்சம் மூச்சு வந்தது.

ஆனால், காங்கிரஸுக்கு இன்று போக்கிடம் இல்லை என்று கூறிவிட முடியாது. தேசியம் பேசும் கமல், கூட்டம் கூட்டிக் காட்டிக்கொண்டிருக்கும் தினகரன் என ‘சாய்ஸ்’ இருக்கவே செய்கிறது. பாஜகதான் ரஜினியை அரசியலுக்கு இழுத்து வருகிறது என ஊரே பேசிக் கொண்டிருக்கும் போதும், “ரஜினியை பாஜக இயக்குவதாக நான் நினைக்கவில்லை” என திருநாவுக்கரசர் சொல்வதும் ஊகங்களை கிளப்புவதால் கிடைக்கும் அரசியல் லாபங்களை அறுவடை செய்யத்தான்.

மேடைக்கு மேடை ‘எனக்கு முதல்வராக தகுதியிருக்கிறது; நான் அதிமுகவில் இருந்தால் இன்று பொதுச்செயலாளர்” என்று பேசிவரும் திருநாவுக்கரசர், தினகரனோடும் ‘சாப்ட் கார்னரோடுதான்’ இருக்கிறார்.

பாஜகவோடு கூட்டணி வைத்தால் கதை கந்தலாகிவிடும் என்பதால் அடக்கி வாசிக்கும் தினகரன், காங்கிரஸோடு கூட்டணி கிடைத்தால் ஜாக்பாட் என்றே கருதுகிறார். ஏனென்றால், அது மாநில அளவில் அவருக்கு வலுவான கூட்டணியாகவும், தேசிய அளவில் அறிமுகம் கிடைக்கவும் உதவும். எனவே, திருநாவுக்கரசரின் அதிமுக பாசம், தினகரனின் அரசியல் தேவையும் வேறுசில கணக்குகளையும், யூகங்களையும் ஸ்டாலின் - சந்திரசேகர் சந்திப்பின் போது எழுப்பியது. அதனால் தான் ஸ்டாலின் - சந்திரசேகர் சந்திப்பிற்கு முன்பு, ‘எந்தக் கூட்டணியும் ஆயுட்கால கூட்டணியில்லை” என்று பேசிய திருநாவுக்கரசர், சந்திப்பிற்கு பிறகு ‘திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தினகரன் சேரவேண்டும்” என்கிற அளவுக்கு பேசத்துவங்கியுள்ளார்.

இந்தச் சலனங்களுக்குக்கு மத்தியில் திமுகவில் ஒருதரப்புக்கு ஷாக் கொடுத்தது திருமாவளவன் - ராகுல் காந்தி சந்திப்பு. டெல்லியில் ராகுலைச் சந்தித்த திருமா, தேசிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகளை அணிதிரட்டும் பணியை காங்கிரஸ் செய்ய வேண்டும் என்றும், மூன்றாவது அணி என்ற ஒன்று அமைந்தால் அது பாஜகவுக்கே சாதகமாக இருக்கும் என்றும் அச்சப்படுவதாகவும்” தெரிவித்தார்.

இன்னொருபுறத்தில், டோல்கேட் உடைப்பு, ஐ.பி.எல் எதிர்ப்பு, தமிழ்த்தேசியக் குரல் மூலம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் கவனத்தை ஈர்த்த வேல்முருகன், காடுவெட்டி குருவுக்காக சொத்தை இழக்கவும் தயார் என்று கூறி தன் ஆதார ஓட்டுக்களை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறார். சீமானோடு அவர் அமைத்திருக்கும் கூட்டணியின் திசைகள் பாமகவுக்கும் புரிந்திருக்கிறது.

இதனால், நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து திமுக கூட்டணிக்கு வர பாமக விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்தக் காட்சிப் பின்னணியில் நடந்த ராகுல் - திருமா சந்திப்பு, காங்கிரஸ் - தினகரன் - திருமா இணைந்து அணிசேர்க்கையா என்ற விவாதத்தை எழுப்பியது.

ஆனால், ஜூன் மாதத்தில் நடக்கும் இந்திய தேச பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ள ராகுல் காந்தியை அழைத்திருக்கிறோம் என்றும், அதில் ஸ்டாலினும் கலந்து கொள்வார் என்றும் அறிவித்து ஊகங்களை மட்டும் மிச்சம் வைத்துவிட்டு சர்ச்சைகளை முடித்துக் கொண்டது விடுதலைச் சிறுத்தைகள். தற்போது, திமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி என்று, திமுக வேண்டும் என்றே அப்படி பரப்புகிறது என்றும் ராமதாஸ் பதில் அளித்திருக்கிறார். ஊகங்கள் எழுவதால் கிடைக்கும் அரசியல் லாபங்களை பல முறை அறுவடை செய்தவர் ராமதாஸ்.

கூட்டணி தேவை என்றால் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்பது ராமதாஸ் எண்ணம். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையாவது தக்க வைக்க வேண்டும் என்பது அன்புமணி கணக்கு. இப்போதைக்கு, கூட்டணி கருத்தூகங்களுக்கு பாமகவும் அரைப்புள்ளி வைத்திருக்கிறது.

ஸ்டாலின் மூன்றாவது அணியை ஆதரித்தால், அதனால் ஏற்படும் விளைவுகள் திமுகவுக்கும் சேதாரத்தை ஏற்படுத்தும் என சந்தோஷப்பட்டது பாஜக. ஆனால், ஸ்டாலினின் எச்சரிக்கை உணர்வு மூன்றாவது அணி என்கிற கோஷத்தை லாவகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.

சந்திரசேகர் ராவைச் சந்தித்த கர்நாடகாவின் தேவ கௌடா, ஜார்கண்ட் மாநிலத்தின் ஹேமந்த் சோரன் போன்றவர்களும் தங்கள் இடத்தை வலுப்படுத்திக் கொண்டு காங்கிரஸோடு இணைந்துகொள்ள நினைப்பதகாவே தெரிகிறது. மூன்றாவது அணி என்கிற கோஷத்திற்கு பெரிய ஊட்டமளிக்கவில்லை.

தமிழ்நாட்டில், ஸ்டாலினிடம் இருந்து மூன்றாவது அணிக்கு கரிசனம் இல்லாத நிலையில், ரஜினியோ கமலோ ‘மாற்றுத் திட்டம்’ என்கிற அடிப்படையில் அத்தகைய முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்கலாம். பாஜகவோடு சேரமுடியாது, காங்கிரஸோடு கூட்டணி அமையவில்லை என்றால், அப்படி ஒரு கூட்டணியில் தன்னை இணைத்துக் கொள்ளும் ‘பொருள் பலம்’ தினகரனுக்கும் இருக்கிறது. எனவே, பாஜகவின் பீ டீமோ அல்லது மூன்றாவது, நாலாவது அணி என்கிற பெயரிலோ நாடாளுமன்றத் தேர்தலில் கூடுதல் அணிகள் தமிழ்நாட்டில் இருக்கப்போவது உறுதி.

ஏனென்றால், இவையாவும் வெறும் மூன்று நாள் சுழற்சிக்குள் நடந்த மாறுதல்கள். இன்னும் நாட்கள் இருக்கின்றன. கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் என மூன்று மாநிலங்களின் தேர்தல் இருக்கிறது. அவற்றில் காங்கிரஸ் ஏற்படுத்தும் தாக்கங்களும், பாஜக பதிக்கப்போகும் தடங்களும் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

இப்போதைக்கு சந்திரசேகர ராவ் எண்ணம், மம்தா முயற்சி, ஸ்டாலினின் கணக்கு எதுவும் புயலும் இல்லை; புஸ்வானமும் ஆகவில்லை; அவை புழுதியை மட்டுமே கிளப்புக் கொண்டிருக்கின்றன. புழுதி அடங்கும் போதுதான் யார் கண்ணில் எல்லாம் மண் விழுந்து கண்ணீர் வருகிறது என தெரியும். அந்தக் கண்ணீர் விடும் கண்கள் மக்களாக இருந்துவிடக்கூடாது என்பது மட்டுமே எல்லோருடைய கூட்டு விருப்பம்.

கட்டுரையாளர் விவேக் கணநாதன் ஊடகவியலாளர்.

M K Stalin Vivek Gananathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment