Advertisment

'ஒவ்வொரு தலித் மாணவனின் விடுதி அறைக்கும் நல்ல தரமான கயிறு ஒன்றையும் கொடுத்து அனுப்புங்கள்’

இப்படித்தான் அன்று ஒரு நாள் ரோஹித் சக்ரவர்த்தி வெமுலாவும் இந்த அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற தற்கொலை செய்து கொண்டான்.

author-image
Nithya Pandian
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mumbai Doctor Payal Tadvi Suicide Case

Mumbai Doctor Payal Tadvi Suicide Case

Mumbai Doctor Payal Tadvi Suicide Case : “மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் நாளன்று உங்கள் கல்லூரியில் படிக்க வரும் ஒவ்வொரு தலித் மாணவருக்கும் 10 மி.கி சோடியம் அசைடை கொடுத்துவிடுங்கள்.” அல்லது “ஒவ்வொரு தலித் மாணவனின் விடுதி அறைக்கும் நல்ல தரமான கயிறு ஒன்றையும் அன்றே கொடுத்துவிடுங்கள்” - ரோஹித் சக்ரவர்த்தி வெமுலா

Advertisment

(டிசம்பர் 18, 2015, ஐதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவுக்கு, முனைவர் பட்டம் படிக்க வந்த ரோஹித் வெமுலா எழுதிய கடிதம்)

இந்த கடிதத்திற்கு பதில் கிடைத்திருந்தால் இந்த நாட்டிற்கு ஒரு நல்ல எழுத்தாளன் கிடைத்திருப்பான். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால் தான் மீண்டும் ஒரு முறை நாம் ரோஹித் வெமுலாவின் இறுதிக் கடிதத்தை படிக்க வேண்டியதாய் உள்ளது.

சிலருக்கு வாழ்க்கை என்பது வெறும் சாப வடிவிலானது. என்னுடைய பிறப்போ ஒரு பெரும் விபத்தின் விளைவு” - கடைசிக் கடிதத்தின் முதல் முயற்சி என்று சொல்லிவிட்டு , இறுதியாக ஜெய்பீமை உதிர்த்துவிட்டு அவன் மறைந்து நாட்களும் ஆண்டுகளும் கடந்து போகின.

இன்று நம் கண் முன்னால், மீண்டும் ஒரு மாணவியை சாதிய மேலாதிக்க சக்திகளுக்கும், அவர்களின் நவீனகால தீண்டாமைகளுக்கும் இறையாக்கிவிட்டு செய்வது அறியாது திகைத்து நிற்கின்றோம்.

Mumbai Doctor Payal Tadvi Suicide Case

ஆண்டாண்டு காலமாக அடக்குமுறைகளை சந்தித்து வரும் ஒரு சாரருக்கான கல்வி, வேலை வாய்ப்பு, சமநிலை, மரியாதை என்பது தொடர்ந்து மறுக்கபட்டுத் தான் வருகிறது. யாரும் நாம் 21ம் நூற்றாண்டில் இருக்கின்றோம் என்பதை நினைவுப்படுத்தாதீர்கள். சாதிய வர்க்கங்களில் ஊறித் திளைத்துப் போன, மேம்பாடு அடையாத மனநிலை கொண்ட மக்களோடு தான் தினமும் இந்த வாழ்க்கை கடந்து போகிறது.

மும்பை டி.என். தோப்பிவாலா தேசிய மருத்துவக் கல்லூரி ஒன்றில் பெண்கள் நலம் மற்றும் மகப்பேறு பிரிவில் (Gynaecology and Obstetrics) முதுகலைப்பட்டம் படித்து வந்தவர் 26 வயதான பாயல் தத்வி.  இவருடைய அம்மா, அபேதா சலிம் ஒரு புற்றுநோயாளி. சகோதரன் ரித்தேஷ் தத்வி போலியோவினால் பாதிக்கப்பட்டவர். இவர்கள் இருவரின் உடல்நிலையை பார்த்து வளர்ந்த  பாயல் தத்விக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது ஆசை, கனவு, நிறைவேறாமல் போன லட்சியம்.

இவருடைய கணவர் சல்மான் தத்வி. இவரும் ஒரு மருத்துவர். ஆர்.என். கூப்பர் மருத்துவமனையில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.  இந்த மாணவி முதுகலை மருத்துவம் படித்திருந்தால், இவர்களின் இன மக்களுக்காக ஜல்கோவானில் ஒரு மருத்துவமனை கட்ட வேண்டும் என்பது இந்த தம்பதியினரின் கனவு.

சாதிய ரீதியில் அடக்குமுறைக்கு ஆளான பாயல்

இஸ்லாமிய பழங்குடி இனமான பில் இனத்தில் இருந்து, கடந்த வருடம் மே மாதம் 1ம் தேதி, இடஒதுக்கீடு அடிப்படிடையில் இந்த கல்லூரிக்கு படிக்க வந்தவர் பாயல். ஆரம்ப காலம் முதலே இவரின் இடஒதுக்கீடு குறித்தும், கல்வி அடிப்படையில் இடம் கிடைக்கவில்லை என்றும் ரேகிங் செய்து வந்துள்ளனர் இவருடைய சீனியர்களான டாக்டர் ஹேமா அஹூஜா, டாக்டர் அன்கித்தா கான்டெல்வால், மற்றும் டாக்டர் பக்தி மெஹர் .

மேலும் இவர்கள், இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் எல்லாம் மருத்துவம் படித்து, நோயாளிகளை குணப்படுத்தினால் என்ன ஆவது என்றும் சாதிய ரீதியாகவும் புண்படுத்தியுள்ளனர்.  கல்லூரியில் சேர்ந்த நாளில் இருந்தே இது போன்ற பிரச்சனைகளை சந்தித்து வந்த பாயல், டிசம்பர் மாதம் வரை இது குறித்து அவருடைய வீட்டில் பேசவில்லை.

டாக்டர் ஹேமா அஹூஜா, டாக்டர் அன்கித்தா கான்டெல்வால், மற்றும் டாக்டர் பக்தி மெஹர் ஆகிய மூவரும் தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் பாயலுக்கு தொல்லைகள் கொடுத்து வந்துள்ளனர். மேலும் மருத்துவமனையில், சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு சிசேரியன் மற்றும் பிரசவம் பார்க்கவும் பாயலுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக பாயலின் குடும்பத்தினரும், கணவரும் கல்லூரி நிர்வாகத்திடம் மே 13ம் தேதி புகார் அளிக்கப்பட்டது. எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இவர் புகார் அளித்த விவகாரம், அந்த சீனியர்களுக்கு தெரிந்த பின்பு ஒவ்வொரு நாளும் பாயலுக்கு நரகமாய் அமைந்தது. தொடர்ந்து பல்வேறு தரப்பிலும் அழுத்தங்களை கொடுத்து வந்தனர்.

மே 22ம் தேதி ஆப்ரேசன் தியேட்டரில், மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் இதர பணியாட்கள் முன்னிலையில், பாயலை மிகவும் மோசமாக நடத்தி, தவறான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டி அவரை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அங்கிருந்து வெளியேறிய அவர், தோப்பிவாலா மருத்துவமனையுடன் தொடர்பில் இருக்கும் நாயர் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் இதனை வெறும் ரேகிங் பிரச்சனையாகவே பார்த்த கல்லூரி நிர்வாகத்திற்கு இது மிகப்பெரும் பிரச்சனையாக உருமாறும் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.  தற்போது அந்த மாணவிகள் மூவர் மீதும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு கீழும், மகாராஷ்ட்ரா ரேகிங் தடுப்புச் சட்டம் 1999ன் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவறு செய்துவிட்டேன் என வருத்தப்பட்ட கணவர்

சாதிய ரீதியில் துன்புறுத்தலுக்கு பாயல் ஆளாகியுள்ளார் என்று சல்மான் புகார் அளிக்கவில்லை. அந்த மூன்று பெண்களின் எதிர்காலம் கெட்டுவிடக் கூடாது என்பதால் நாங்கள் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒவ்வொரு முறையும் பாயலிடம் நான் கூறுவேன், அவர்களை பெரிதாக கருத்தில் எடுத்துக் கொள்ளாமல் நன்றாக படி என்று. நான் தவறு செய்துவிட்டேன். எங்களின் கனவு மருத்துவமனை வெறும் கனவாகவே போய்விட்டது.

விசாரணையின் போது 30க்கும் மேற்பட்ட மாணவிகள், உடன் பணி புரிந்த மருத்துவர்கள், விடுதியில் இருந்தவர்கள் பாயலுக்கு நடந்தேறிய கொடுமைகளை பதிவு செய்துள்ளனர். அந்த மருத்துவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை வரை அவர்களிடம் காவல்துறை விசாரணை நடைபெறும்.

தொடர்ந்து நடைபெறும் தற்கொலைகள்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், பெரும் கனவுகளுடன் மருத்துவம் படிக்க, உத்திரப் பிரதேசத்தில் இருந்து டெல்லி வந்தவர் பால் முகுந்த் பாரதி. அவருடைய கிராமத்தில் 50 வருடங்களில் இது போன்ற மிகப்பெரிய கல்லூரியில் படிக்கச் சென்ற  முதல் மாணவர் இவர் தான். சாதிய ரீதியிலான துன்புறுத்தல்கள் தாங்க முடியாமல் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார்.

2012ம் ஆண்டு, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர் அனில் குமார் மீனாவும் இது போன்ற சூழலில் தற்கொலை செய்து கொண்டார். இந்தியாவின் தலை சிறந்த மருத்துவக் கல்லூரிகள், கல்விக் கூடங்கள், மற்றும் பல்கலைக்கழகங்களில் தொடர்ந்து நடைபெறும் இது போன்ற துயர் சம்பவங்களில் இருந்து தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் பிழைப்பது எங்கனம்? இதற்கான கடுமையான சட்டதிட்டங்களை இந்திய அரசு முன்னெடுத்து இம்மாணவர்களை காப்பாற்றுவது எப்போது?

Rohit Vemula
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment