பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு நீதிமன்றத்தில் ஏன் நிற்காது?

வரலாற்று ரீதியான பாகுபாட்டுக்கான ஆதாரம் இல்லாத நிலையில், இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட முடியாது.

ஃபைசான் முஸ்தபா,
ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் (நல்சார்) துணை வேந்தர்

நரேந்திர மோடி அரசாங்கம் 2014-ல் தொடங்கியபோது, நீதிபதிகளின் நியமனத்தில் அரசாங்கத்துக்கு முக்கிய பங்கு இருக்கவேண்டும் என்ற நோக்கில், ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர முயற்சி செய்தது. ஆனால், 2016-ல் அது சட்டபூர்வமானது அல்ல என்று உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. ஏனெனில், அந்தச் சட்டத் திருத்தம், நீதிபதிகளின் நியமனத்தில் தலைமை நீதிபதிக்கு உள்ள முக்கியத்துவத்தை புறமொதுக்கியது. உண்மையில், இந்த நியமன முறை நமது அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்புகளில் ஒன்று.

பதவிக்காலம் நிறைவுபெற இருக்கும் இந்தத் தருணத்தில், இன்னொரு முக்கியமான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறது மோடி அரசாங்கம். இதனையும் உச்ச நீதிமன்றம் நிராகரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம். இதில் ஆச்சரியம் என்னவென்றால், நீதிபதிகள் நியமனத்தில் ‘தகுதி’ என்ற வரையறையை முன்னிலைப்படுத்திய அரசாங்கம், தற்போது, இடஒதுக்கீட்டை 59 சதவிகிதத்துக்கு உயர்த்தியுள்ளதோடு, அதில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள சுமார் 95 சதவிகிதத்தினரை உள்ளடக்கியுள்ளது. மேலும், தனியார் துறைக்கு ஆதரவளிக்கும் இந்த அரசாங்கம், முன்வைத்துள்ள இடஒதுக்கீட்டு முறை, தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தெரிவித்திருக்கிறது. இத்தனைக்கும் 2008 அஷோக் தாகூர் வழக்கில் இவ்விஷயத்தில் முடிவு எதையும் சொல்லாமல் உச்ச நீதிமன்றம் விட்டுவிட்டது என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது, மோடி அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களைப் போல், ஒன்றும் புதுமையானதோ வித்தியாசமானதோ அல்ல. பி.வி. நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது, இதுபோன்ற இட ஒதுக்கீட்டு முறை கொண்டுவரப்பட்டது. அப்போது, 1992-ல், இந்திரா சாஹ்னி தலைமையிலான 9 பேர் கொண்ட அமர்வு இதனை நிராகரித்தது. பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2008-ல் ஒருசில படிப்புகளுக்கான சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்க, கேரள அரசாங்கம் முயன்றது. 2008-ல் ராஜஸ்தானில் இருந்த காங்கிரஸ் அரசாங்கமும், 2016-ல் குஜராத்தில் இருந்த பா.ஜ.க. அரசாங்கமும் இதனை முயன்று பார்த்தன. மாயாவதி கூட, மத்திய அரசின் இத்தகை இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதோடு, வரவேற்றும் இருக்கிறார்.

இட ஒதுக்கீடு மூலமாக சமூக நீதியை நிலைநாட்ட முடியும் என்று என்றுமே பா.ஜ.க. நம்பியதில்லை. சொல்லப் போனால், 2015-ல், ஆர்.எஸ்.எஸ். தலைவரான மோகன் பாகவத், இட ஒதுக்கீட்டுக் கொள்கையையே மறுஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று பேசியவர். அந்தப் பேச்சினால், பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்று பயந்த பா.ஜ.க., மோகன் பாகவத்தின் கருத்தில் இருந்து விலகிநின்றது. இதேபோன்று, இட ஒதுக்கீடு வழங்கும்போது, பல்கலைக்கழகத்தில் உள்ள அத்தனை இடங்களையும் ஒட்டுமொத்தமாக கணக்கில் எடுத்துக்கொள்ளாமல், ஒவ்வொரு துறையையும் தனித்தனியே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழங்கிய வழிகாட்டுதலை இந்த அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. இதன்மூலம், பல்கலைக்கழகங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்குக் கிடைத்துவந்த இடங்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துபோனது. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் வலுவான வாதங்களை முன்வைக்காததோடு, அது தவறாகப் பயன்படுகிறது என்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்ளவும் செய்தார். அதனால், அச்சட்டம் நீர்த்துப் போனது.

பெரும்பாலான இட ஒதுக்கீட்டுத் திட்டங்கள், பொதுத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல்களை ஒட்டியே அறிவிக்கப்பட்டிருப்பதை வரலாறு சொல்கிறது. இந்திய வாக்காளர்களை, அரசியல் தலைமைகள் எப்போதும் முட்டாள்களாகவே கருதுவதோடு, இத்தகைய திட்டங்கள் தேர்தல் வெற்றிகளைப் பெற்றுத் தந்ததில்லை என்பதையும் அவர்கள் மறந்துவிட்டார்கள். ஷாபானு தீர்ப்பை தகர்த்தெறிந்து, பாபர் மசூதியின் கதவுகளைத் திறந்துவிட்ட பின்னரும், 1989-ல் ராஜிவ் காந்தி வெற்றி பெறவில்லை. சோஷலிச தலைவர் கர்பூரி தாக்கூரோ, வி.பி.சிங்கோ கூட, தங்களுடைய இட ஒதுக்கீடு நிலைப்பாடுகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பெரும் மக்கள் ஆதரவைப் பெறவில்லை.

எப்படி இருந்தாலும், மோடி அரசாங்கத்தின் இட ஒதுக்கீட்டு அறிவிப்பு, சட்டத்தின் முன் நிற்பது சிரமமே. ஏனெனில், வரலாற்று ரீதியான பாகுபாட்டுக்கான ஆதாரம் இல்லாத நிலையில், இட ஒதுக்கீடு என்பது பொருளாதார அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட முடியாது என்று அரசியலைமைப்புச் சட்டத்தை சுட்டிக்காட்டி, உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது. வரலாற்று ரீதியான பாகுபாட்டுக்கும் அதனால் தொடரும் பாதிப்புகளுக்குமான தீர்வே இட ஒதுக்கீடு என்று இந்திரா சாஹ்னி தலைமையிலான 9 பேர்கொண்ட அமர்வு தெரிவித்தது. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார மேம்பாடு அல்லது ஏழ்மை ஒழிப்பை இலக்காகக் கொண்டதில்லை என்பதையும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சமூகப் பின்னடைவினாலேயே பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டிருக்க வேண்டும்.

அரசு நிர்வாகத்தில் பிரதிநிதித்துவம் இல்லாததும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளினாலும் பின்னடைவு ஏற்பட்டிருக்க வேண்டும். சட்டப் பிரிவு 16 (1) குறிப்பிடும் பின்னடைவு இதுதான். அது மொத்த வகுப்பாருக்கும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்க வேண்டுமே அன்றி, ஒருசில தனிப்பட்ட நபர்களுக்கு அல்ல. இப்படிப் பார்க்கும்போது, சட்டப் பிரிவு 16 (4) என்பது அரசியமைப்புச் சட்டத்தில் இருந்து தானாகவே நீக்கப்பட்டுவிடும். பொருளாதாரப் பின்னடைவு என்பது சமூகப் பின்னடைவினாலேயே ஏற்படுவது என்பதை சட்டப் பிரிவு 16 (4) குறிப்பிடுகிறது.

அரசாங்கத்தின் புதிய சட்டத் திருத்தத்தினால், இட ஒதுக்கீடு விஷயத்தில் உச்ச நீதிமன்றம் வகுத்த 50 சதவிகித உச்சவரம்பு பாதிக்கப்படும். இந்திரா சாஹ்னி தலைமையிலான அமர்வில் இடம்பெற்ற நீதிபதி தாம்மென், “இட ஒதுக்கீட்டினால் கிடைக்கக்கூடிய பலன்களை உயர்த்துவதோ, அதன் வரையறையை விரிவுபடுத்துவதோ, எதிர்மறையான பாகுப்பாட்டை அதிகப்படுத்துவதுடன், வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடும்” என்று தெரிவித்தார். அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் நவம்பர் 30, 1948 அன்று உரையாற்றிய பி.ஆர். அம்பேத்கர், “சிறுபான்மை இடங்களுக்கு” இட ஒதுக்கீடு வழங்குவதில்தான் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் என்றும், அதுவும், “அரசு நிர்வாகத்தில் அதுநாள்வரை பிரதிநிதித்துவம் பெறாத பிற்படுத்தப்பட்டவர்களுக்கு” வழங்கப்படவேண்டும் என்றும் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

சட்டப் பிரிவு 46 குறிப்பிடும் நலிந்த பிரிவினர் என்பவர்கள் ஒரு பேரினம் என்றால், அதில் சட்டப்பிரிவு 16 (4) தெரிவிக்கும் பிற்படுத்தப்பட்டோர் என்பவர்கள் ஒரு சிற்றினம். அதனால், அனைத்து நலிந்த பிரிவினரும் அல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள் மட்டும்தான் இட ஒதுக்கீடு பெறத் தகுதிவாய்ந்தவர்கள். சாதியும் வகுப்பும் ஒன்றல்ல. வகுப்பு என்பது சாதிக்கு முரணானதும் அல்ல, சாதி என்பது வகுப்பையும் உள்ளடக்கியதுதான். சட்டப் பிரிவு 15 இல், உட்பிரிவு 4 சேர்க்கப்பட்ட முதல் சட்டத் திருத்த சமயத்தில் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் பேசும்போது, “பிற்படுத்தப்பட்ட வகுப்பார் என்போர், சாதிகளின் தொகுப்புதானே அன்றி, வேறில்லை” என்று தெரிவித்தார். இங்கே வகுப்பு என்பது சமூக வகுப்பு. அதனால், பொருளாதாரத்தில் பின்னடைவு என்பது, சமூகப் பின்னடைவினால் ஏற்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் செய்யப்படும் சட்ட திருத்தம் என்பது, அடிப்படைக் கட்டமைப்புக் கொள்கையில் செய்யப்படும் மாற்றமாகவே அமையும். அடிப்படைக் கட்டமைப்பு என்பதற்கு எந்த வரையறையும் இல்லை. ஒவ்வொரு முறையும் நீதிமன்றம்தான், அரசமைப்புச் சட்டம் எதை அடிப்படைக் கட்டமைப்பு என்று சொல்கிறது என்பதை முடிவுசெய்கிறார்கள். அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது அடிப்படைக் கட்டமைப்புதானா என்பதில் முரண்பாடுகள் நிலவுவதால், அவர்கள் கொண்டுவந்திருக்கும் சட்ட திருத்தம், நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் என்று மோடி அரசாங்கம் நம்புகிறது. 1975 இந்திரா காந்தி வழக்கில், நீதிபதி கே.கே. மாத்யூ, அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக சட்டப் பிரிவு 14ஐ ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில், சமத்துவம் என்பது பன்முகத்தன்மை கொண்ட ஒரு கருத்து, அதற்கு ஒரு குறிப்பிட்ட வரையறையை வழங்கமுடியாது என்றார்.

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கினால், அது சமத்துவம் எனும் குறிக்கோளை மேலும் விரிவுபடுத்தும் என்று மத்திய அரசு வாதிடலாம். மேலும் சமத்துவம் எனும் கோட்பாடு, அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதிதான் என்பதோடு, அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை தெரிவிப்பது போன்று அனைவருக்கும் சமதகுதி, சம வாய்ப்பு என்பதும் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதிதான். இதனால், இட ஒதுக்கீட்டில், பொருளாதார வரையறையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வாய்ப்புண்டு.

எப்படி இருந்தாலும், இந்திரா சாஹ்னி அமர்வு வழங்கிய தீர்ப்பை, 11 பேர் கொண்ட பெரிய அமர்வுதான் தற்போது மாற்றமுடியும். அந்த முடிவு அடுத்த ஆறு மாதங்களில் கிடைக்க வாய்ப்பில்லை. மோடி அரசாங்கத்தின் இந்தச் சட்டத் திருத்தம், சட்ட ரீதியாக ஏற்கத்தக்கதா என்பது இறுதியாக முடிவு ஆகும்வரை, இதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்கவே வாய்ப்பு அதிகம். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது, பிற்படுத்தப்பட்ட நிலையை நிர்ணயம் செய்ய 11 வரையறைகளை முன்வைத்தார் இந்திரா சாஹ்னி. தற்போது, சமூகரீதியாகப் பின் தங்காமல், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடுச் சட்டம், அந்த 11 வரையறைகளை பூர்த்தி செய்கிறதா என்று பார்க்கவேண்டும்.

(கட்டுரையாளர் ஃபைசான் முஸ்தபா, ஹைதராபாத்தில் அமைந்திருக்கும் சட்டக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய கல்வி நிறுவனத்தின் (நல்சார்) துணை வேந்தர்)

தமிழில்: துளசி

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close