நேபாளத்தில் இழந்ததை திரும்ப பெற முடியுமா, மோடியால்?

இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டினையும் அதிகாரத்தையும் நேபாளில் இழந்து கொண்டே இருக்கின்றது என்பதை மோடி அறிய வெகுகாலம் பிடிக்காது என்றே நம்புவோம்.

யூபராஜ் கோமிர்

நரேந்திர மோடியின் அடுத்த பயணம் நேபாளத்தை நோக்கியதாக அமைந்திருக்கின்றது. நேபாள பிரதமர் திரு. கே.பி. ஒலி, டெல்லி வந்து சென்ற 33வது நாளில் நரேந்திர மோடி நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்கின்றார். இப்பயணம் இரு நாடுகளுக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகளைப் பற்றி தீர்வு காண உதவும் விதமாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது. மே 11ம் தேதி நேபாளத்திற்கு செல்லும் மோடியின் பயணம் இம்முறை அலுவல் ரீதியாக இல்லாமல் புனித யாத்ரை போன்றதாக இருக்கின்றது. காரணம் பாட்னாவில் இருந்து பயணம் செய்யும் நரேந்திரமோடி முதலில் இராமாயண புராதனகால நகரமான ஜானக்பூர் சென்று, ஜானகி மந்திரில் நடக்கும் பூஜைகளில் கலந்து கொள்ள இருக்கின்றார். அதனை அடுத்து பிகாரை ஒட்டியிருக்கும் நேபாள எல்லைப் பகுதியில் நடக்கவிருக்கும் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளப் போகின்றார் மோடி.

அதனை முடித்த கையோடு ஒரு நாள் இரவு காத்மாண்டுவில் தங்குகின்றார். பின்னர், ஜானக்பூர் போலவே திபெத்-நேபாள் எல்லையில் அமைந்திருக்கும் மஸ்தங் மாவட்டத்தில் இருக்கும் முக்திநாத் ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இருக்கின்றார். பின்னர் சில மணிநேரங்கள் காத்மாண்டுவில் தங்கிவிட்டு அன்று மாலை மீண்டும் டெல்லி திரும்புகின்றார் மோடி.

சமூக வலை தளத்தில் நரேந்திர மோடியின் வருகைக் குறித்து நேபாள மக்கள் பலவித எண்ணங்களை பகிர்ந்து கொண்டிருக்கின்றார்கள். பொது நிகழ்ச்சிக்காக வருகை தரும் மோடியிடம் இருந்து 2015ல் நேபாளம் மீது போடப்பட்ட பொருளாதார தடை விதிப்பிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அதனால் அவர் பங்கு கொள்ளும் இரண்டு பொது நிகழ்ச்சிகளும் அதிக பாதுகாப்புடன் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மோடியின் பயணம் குறித்து இரண்டு முக்கிய ஆலோசனைகள் மற்றும் பிரச்சனைகள் பற்றி பேசிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றது. கடந்த ஏப்ரல் 30ம் தேதி மோடி, இந்திய புத்த பிட்சுகளிடம் புத்தரின் பிறப்பிடமானது இந்தியா தான் என்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த சில மணிநேரங்களில், நேபாளத்தில் இருக்கும் லும்பினியில் புத்தப்பிட்சுகளும், வெவ்வேறு நாட்டில் இருந்து வந்த தலைவர்களின் மத்தியிலும் “புத்த மதம் தோன்றிய இடம் பற்றி ஏகப்பட்ட வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றார்கள் சிலர்” என்று பேசியிருக்கின்றார் ஒலி. மற்றொரு பிரச்சனையாக இருப்பது, இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு வருவதற்கு செமாரா வான்வழிப் பாதை ஒன்றே ஒன்றை மட்டுமே இந்தியா அனுமதித்திருக்கின்றது. காத்மாண்டுவில் மேலும் மூன்று சர்வதேச விமான நிலையங்கள் கட்டும் முனைப்புடன் நேபாளம் செயல்பட்டு வருகின்றது. அதில் இரண்டு இந்திய எல்லைக்கு மிக அருகில் கட்டுவதற்கான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மோடியின் இந்த பயணமானது, ஒலி அவர்களின் சீனப்பயணத்திற்கு பின்னால் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. பொருளாதார தடை விதிக்கப்பட்ட காலக்கட்டத்தில் சீனாவுடன் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து குறித்து 2016ல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. ஒலியின் இந்தியப் பயணமும், மோடியின் நேபாளப் பயணமும் பொருளாதாரத்தடை வருவதற்கு முன்னான நாட்களை திரும்பிப் பெறுவதற்கான முயற்சிகளாக இருந்து வருகின்றது. லும்பினி வரை தொடரும் சீனாவின் இரயில் சேவை மற்றும் ஒவ்வொரு மாகாணத்திலும் துளிர்விடும் சீனத் தொழிற்சாலைகள் பற்றியும் முக்கிய முடிவுகளும் தீர்மானங்களும் மேற்கொள்ளப்படு என்று நம்பப்படுகின்றது.

பெய்ஜிங்க் மற்றும் சீனாவின் தாக்கம் நேபாளத்தில் நிலைகொள்வது என்பது இந்தியாவினை அச்சுறுத்தும் காரணிகளாக பார்க்கப்படுகின்றது. மேலும் 900 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப் போகும் புத்தி கண்டக்கி புராஜக்ட்டை, ஒலி முன்பு அறிவித்ததைப் போல் சீன நிறுவனத்திற்கு தர வேண்டும் என்று பெய்ஜிங்கிலிருந்து ஒலிக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றது. இந்தியா பல ஆண்டுகளாக நேபாளத்தினை தனது கட்டுக்குள் வைத்திருக்கின்றது. அதனால் நேபாள அரசு எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவுகளிலும் இந்தியாவின் பங்கீடு எவ்வளவு இருக்கும் என்பதை இந்தியாவை விட சீனா நன்றாக உணர்ந்திருக்கின்றது.

தரய் பிரச்சனையை இன்றும் இந்தியா மறக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் விதமாகவே மோடியின் ஜானக்பூர் பயணம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பாவின் உதவியுடன் நேபாளத்தில் குடியரசினை நிலைநிறுத்த இந்தியா விரும்புகின்றது. இப்பயணத்தின் மத்தியில் அருண்3 ஹைட்ரோ ப்ரோஜக்ட்டின் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியும் நடைபெறலாம். கட்டுமானப் பணிகளுக்கு நேபாளம் சட்லஜ் ஜால் நிகம் என்ற இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கின்றது. இது வெறும் சமயப் பயணமாகவும் வாய்ப்புகளும் அதிகம் இருக்கின்றது. இந்தியா தன்னுடைய நிலைப்பாட்டினையும் அதிகாரத்தையும் நேபாளில் இழந்து கொண்டே இருக்கின்றது என்பதை மோடி அறிய வெகுகாலம் பிடிக்காது என்றே நம்புவோம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில்,7.5.18 அன்று யூபராஜ் கோமிர் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தொடர்புக்கு : yubaraj.ghimire@expressindia.com

தமிழில் : நித்யா பாண்டியன்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close