‘புதிதாய் பிறந்த’ மு.க.ஸ்டாலின்: உடன்பிறப்புகளின் 3 முக்கிய எதிர்பார்ப்புகள்

திமுக நிர்வாகிகள் பலர் மு.க.ஸ்டாலின் ஒரு போராட்டம் அல்லது பொதுக்கூட்டம் அறிவித்தாலே பதறுகிறார்கள் என்பதுதான் நிஜம்!

மு.க.ஸ்டாலின் செயல் தலைவர் ஆன சமயம் அது! சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்ட நிர்வாகி ஒருவர் காரில் அறிவாலயம் செல்கிறார். அங்கு மு.க.ஸ்டாலினை சந்திக்க வேண்டிய கட்டாயம்!

போகிற பாதையில் மெடிக்கல் ஸ்டோர் ஒன்றில் காரை நிறுத்தி, ‘பிரஷ்ஷருக்கு ஒரு மாத்திரை கொடுங்க’ என கேட்டு வாங்கி, வாயில் போட்டுக்கொண்டு செல்கிறார். மு.க.ஸ்டாலினை சந்திப்பது, திமுக நிர்வாகிகள் பலருக்கே அப்படி பிரஷ்ஷரை எகிற வைக்கிற விஷயம்தான்!

மு.க.ஸ்டாலின், திமுக புதிய தலைவர்: ‘புதிய எதிர்காலத்தை நோக்கி தமிழகத்தை அழைத்துச் செல்வேன்’ – மு.க.ஸ்டாலின் To Read, Click Here

தப்பு செய்கிற நிர்வாகிகளுக்கு அப்படி பிரஷ்ஷர் எகிறினால், அது நல்லது. ஆனால் இப்படி பிரஷ்ஷர் மாத்திரை வாங்குகிறவர்கள் யார் என்று பார்த்தால், அந்தந்த மாவட்டங்களில் கடந்த 25 ஆண்டுகளாக கோலோச்சுகிற மாவட்டச் செயலாளர்களுக்கு எதிர் கோஷ்டியினர்!

இவர்களைப் பற்றி மாவட்டச் செயலாளர் முன்கூட்டியே ஏதாவது போட்டுக் கொடுத்திருப்பார். இவர்களை பார்த்ததும் அதை மனதில் வைத்து பொரிந்து விடுவார் ஸ்டாலின். இவர்கள் உண்மையை சொல்ல முயன்றாலும், அது எடுபடாது.

திமுக-வின் 2வது தலைவர் பதவியேற்றார் மு.க. ஸ்டாலின்… புகைப்படத் தொகுப்பு! To Read, Click Here

மாவட்டங்களில் கோஷ்டி கலாச்சாரத்தை தடுக்கவே மாவட்டச் செயலாளர் சொல்கிற அம்சங்களை அப்படியே கேட்பது மு.க.ஸ்டாலினின் வாடிக்கை! ஆனால் அதுவே ஒவ்வொரு மாவட்டத்திலும் துடிப்பான கட்சிக்காரர்கள் பலரும் ஒதுங்கியிருக்க வேண்டிய சூழலை உருவாக்குகிறது.

கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர், விழுப்புரம், கடலூர், தஞ்சை, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் என பல மாவட்டங்களில் இதுதான் நிலைமை. வலிமையான மாவட்டச் செயலாளர்கள் பலரும் தங்களுக்கு பிடிக்காதவர்களை ‘தளபதி’க்கு எதிரானவர்களாக சித்தரித்து விடுகிறார்கள்.

‘காவி வண்ணம் அடிக்கத் துடிக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்டுவோம்!’ – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கன்னிப் பேச்சு! முழு உரை To Read, Click Here

பல மாவட்டங்களில் இன்று திமுக.வில் தொய்வு ஏற்பட இது முக்கியமான காரணம்! மாவட்டச் செயலாளருடன் கருத்து முரண் ஏற்படுகிறவரும் கழக உடன்பிறப்புதான் என்பதை மு.க.ஸ்டாலின் உணர வேண்டும். சற்றே பொறுமையாக அவரை அணுகி, அவர் பக்கம் தவறு இருந்தாலுமே அவரை புறந்தள்ளாமல் அரவணைக்க வேண்டும். ஒருவேளை மாவட்டச் செயலாளர் மீது தவறென்றால், அவரை கண்டிக்கவும் தயங்கக்கூடாது.

திமுக நிர்வாகிகளுக்கு இன்று ஆகப்பெரிய இன்னொரு சுமை, பொருளாதார செலவு! அண்மையில் முக்கிய ஊர்களில் நடைபெற்ற ‘கலைஞர் புகழ் பாடும் கூட்டங்களுக்காக’ மட்டும் அந்தந்த ஏரியா மாவட்டச் செயலாளர்களுக்கு தலா 15 லட்சம் வரை செலவு என்றால் நம்புவீர்களா?

நாளிதழ் விளம்பரச் செலவு மட்டுமே தலைக்கு ஒரு லட்சத்திற்கும் மேல்! அதன்பிறகு மேடை, கொடி, தோரணங்கள், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 500-க்கும் குறையாத வாகனங்கள், அதில் வந்தவர்களுக்கு கவனிப்பு… என தண்ணீராய் கரைந்திருக்கிறது பணம்! பல மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்கு கீழேயுள்ள நகர, ஒன்றிய நிர்வாகிகள் மீது இந்தச் சுமையை சுமத்திவிட்டனர்.

ஆட்சியில் இல்லாமல் 8 ஆண்டுகளை கடக்கும் நிலையில், திமுக நிர்வாகிகள் பலர் மு.க.ஸ்டாலின் ஒரு போராட்டம் அல்லது பொதுக்கூட்டம் அறிவித்தாலே பதறுகிறார்கள் என்பதுதான் நிஜம்! இப்போது இப்படி அடிமடி வரை அறுத்து ஆகவேண்டிய நிர்வாகிகள் அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தால், மு.க.ஸ்டாலின் திட்டமிடும் நல்லாட்சிக்கு எப்படி ஒத்துழைப்பார்கள்? அல்லது, அப்படி ஒத்துழைக்க சொல்ல முடியுமா?

திமுக.வை ஆக்டிவாக வைத்திருக்க நினைப்பது தப்பில்லை. செலவு செய்தே ஆக்டிவாக காட்ட வேண்டும் என்கிற கலாச்சாரத்தை வளர்ப்பது ஆபத்து! செயல் தலைவர், தலைவர் ஆகிவிட்ட நிலையில் கொண்டாட்டங்களின் சதவிகிதம் இன்னும் எகிறிவிடுமோ என்கிற கவலை பலரிடம் இருக்கிறது.

கருணாநிதி தலைவராக இருந்து வந்தாலும், கடந்த 2011-க்கு பிறகு முக்கிய முடிவுகளை ஸ்டாலினே எடுத்து வருகிறார். 2011 சட்டமன்றத் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து 2016 சட்டமன்றத் தேர்தலிலும் தோற்றது திமுக.வுக்கு பெரும் பின்னடைவு!

சரித்திரம் காணாத எண்ணிக்கையில் எதிர்க்கட்சியானோம் என்பது, ‘மீசையில் மண் ஒட்டவில்லை’ கதைதான்! ஐந்தாண்டு ஆட்சியை முடித்துவிட்டு, அதன்பிறகு வருகிற தேர்தலில் இப்படி வலுவான எதிர்க்கட்சியாக வந்திருந்தால் கொண்டாடத் தக்கதே! ஆனால் ஆட்சிக்கு வரவேண்டிய நேரத்தில், வலுவான எதிர்க்கட்சி ஆகிவிட்டோம் என குதூகலிப்பது பொருத்தமற்றது.

அந்தத் தோல்விக்கு காரணம், கூட்டணி அமைப்பதில் சில குளறுபடிகள்தான்! தமிழக அரசியல் தலைவர்கள் பலரிடம் இன்னும் மு.க.ஸ்டாலினுக்கு தனிப்பட்ட உறவு பலமாக இல்லை. அரசியல் உறவுகளைவிட தனிப்பட்ட நட்புதான், தேர்தல் கூட்டணிகளை வலுவானதாக மாற்றும்! புதிய தலைவர் ஸ்டாலின் இதை சரியாக செய்தால்தான் 2019 நாடாளுமன்றத் தேர்தல் சுபிட்சமாக இருக்கும்!

2019 நாடாளுமன்றத் தேர்தல்தான் அடுத்து வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம் என்பதை மறந்து விடக்கூடாது. திமுக.வின் தலைவர் ஆனதும் பொதுக்குழுவில் இன்று (ஆகஸ்ட் 28) தனது கன்னிப்பேச்சில், ‘இன்று புதிதாய் பிறந்தேன்’ என உணர்ச்சிப் பெருக்காய் பேசியிருக்கிறார் ஸ்டாலின்.

இதுவரை பார்த்த ஸ்டாலின் வேறு, இனி பார்க்க இருக்கிற ஸ்டாலின் வேறு என்பது அதன் அர்த்தம்! இதுவரை என்னிடம் இருந்த குறைகளை களைந்து விடுவேன் என்கிற உறுதியேற்பாகவும் அதை குறிப்பிட முடியும்! உங்களின் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, தமிழக மக்களும் உங்களிடம் நிகழும் மாற்றங்களை உன்னிப்பாக கவனிக்க காத்திருக்கிறார்கள் ‘தலைவர்’ ஸ்டாலின் அவர்களே!

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close