தமிழராகப் பிறக்காதவர் தமிழகத்தை ஆளலாமா?

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒருவர் தமிழர் என்பதை அவரது பிறப்பால் வரும் தகுதியாக வரையறுக்கின்றனர்.

கண்ணன்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை சில தமிழ்த் தேசிய அமைப்புகள் கடுமையாக எதிர்க்கின்றன. தமிழராக பிறக்காத ஒருவர் தமிழகத்தை ஆளக் கூடாது என்ற வாதம் ஏற்கத்தக்கதல்ல.

நடிகர் ரஜினிகாந்த், கடந்த வாரம் சென்னையில் தனது ரசிகர்களை சந்தித்துப் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டபோது, ஆற்றிய இரண்டு உரைகளின் மூலம் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதாகவே கருத வேண்டியிருக்கிறது. அதை வைத்து பல்வேறு செய்தி ஊடகங்கள் அலசல் கட்டுரைகளையும் விவாத நிகழ்ச்சிகளையும் வெளியிட்டுவருகின்றன. சமூக வலைதலங்களிலும் கடந்த ஒரு வாரமாக ரஜினியில் அரசியல் பிரவேசம் பற்றிய பதிவுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்நிலையில் பிறப்பால் தமிழரில்லாத ரஜினிகாந்த் தமிழக அரசியலில் நுழைவதை எதிர்த்துப் பல்வேறு தமிழ்த் தேசிய அமைப்புகள் போராடத் தொடங்கியிருக்கின்றன. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் ரஜினிகாந்தின் உருவப் பொம்மை எரிப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

தீவிர தமிழுணர்வாளர்களாகத் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான், தமிழர் முன்னேற்றப் படை என்ற அமைப்பின் தலைவர் வீரலட்சுமி ஆகியோர் ஊடகங்களில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தைக் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். வீரலட்சுமி ஒரு படி மேலே போய், சென்னையில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு அருகில் அவரது கொடும்பாவியை எரிக்கும் போராட்டத்துக்குத் தலைமை தாங்கிக் கைதானார். இதையடுத்து ரஜினியின் வீட்டுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர்களின் போராட்டத்துக்குப் பதிலடியாக ரஜினி ரசிகர்கள் 500க்கும் மேற்பட்டோர் சீமான், வீரலட்சுமி ஆகியோரின் கொடும்பாவியை எரிக்க முயன்று கைதாகினர். தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் படத்தின் படப்பிடிப்பு முதலில் சென்னையில் தொடங்குவதாக இருந்தது. இப்போது மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. இதையும் இந்தப் போராட்டங்களையும் இணைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

எதிர்ப்புக்கு எதிர்ப்பு

ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த விவாதங்களும் அவர் தமிழரல்ல என்பதால் அதை ஒரு சாரார் எதிர்ப்பதும் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவருவதுதான். ஆனால் இரண்டு தரப்பும் இவ்வளவு தீவிரமாக இயங்குவது இதுவே முதல் முறை.

ரஜினி தமிழ் நடிகர்களில் இன்றுவரை உச்ச நட்சத்திரமாகத் திகழ்கிறார். கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். எனவே அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று சொல்லும் ரசிகர்கள் அவர் முதல்வராக வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர். ஒரு மாநிலத்தின் முதல்வராவதற்கு உச்ச நட்சத்திரமாக இருப்பது ஒன்றே போதுமானதல்ல என்றாலும் கோடிக்கணக்கான விசுவாச ரசிகர்கள் இருப்பது ரஜினி முதல்வராவதற்கு மிகவும் சாதகமாக அமையும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழராகப் பிறந்தவர் தான் தமிழர்களை ஆள வேண்டும் என்பதற்கும். இன்னன்ன சாதியினர் இன்னன்ன வேலைகளை செய்ய வேண்டும் என்று பிரித்துவைத்திருக்கும் வர்ணாசிரம முறைக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் ஒருவர் தமிழர் என்பதை அவரது பிறப்பால் வரும் தகுதியாக வரையறுக்கின்றனர். உண்மையில் பிறப்பால் தமிழரல்லாத பலர் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் பல நன்மைகளை ஆற்றியுள்ளனர். வீரமாமுனிவர் முதல் இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

அதேபோல் பிறப்பால் தமிழரல்லாத எம்.ஜி.ராமச்சந்திரன் திரை நட்சத்திரமாகவும் தமிழக முதல்வராகவும் மிகப் பெரிய மக்கள் செல்வாக்குடன் விளங்கினார். இன்றும் பல லட்சம் தமிழர்களால் இறைவனுக்கு இணையாக மதிக்கப்படுகிறார். அவரது அரசியலிலும் ஆட்சி முறையிலும் பல தவறுகள் இருக்கலாம் என்றாலும் அவையாவும் அவர் பிறப்பால் தமிழரல்ல என்பதால் விளைந்தவை அல்ல. சுதந்திர இந்தியாவில் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் பல்வேறு இன்னல்கள் விளைந்துள்ளன. தமிழகத் தமிழர்கள் பலர் இன்னும் மிக மோசமான நிலையில் இருக்கின்றனர். பல்வேறு வாழ்வாதாரப் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். ஆனால் இவற்றுக்கெல்லாம் தீர்வு ஒரு தமிழராகப் பிறந்தவர் முதல்வராவதுதான் என்று சொல்வதை ஏற்க எந்தத் தரவுகளும் இல்லை.

மற்ற மாநிலங்களில் அந்த மாநிலத்தின் தொல்குடி இனத்தைச் சேராதவர் முதல்வராக முடியுமா என்று சீமான் கேள்வி எழுப்புகிறார். ஆனால் ஒரு மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டிராதவர் அந்த மாநிலத்தின் முதல்வராக இருந்து ஆட்சி செய்ததற்கு சுதந்திர இந்தியாவில் பல்வேறு உதாரணங்கள் உள்ளன. கர்நாடக முன்னாள் முதல்வர் தரம்சிங் ராஜ்புத் இனத்தைச் சார்ந்தவர். ராஜாஸ்தானத்திலிருந்து அவரது குடும்பம் குடிபெயர்ந்தது. மராட்டிய வம்சாவளியைச் சேர்ந்த வசுந்தரா ராஜே தற்போது ராஜஸ்தானத்தின் முதல்வராக ஆண்டு வருகிறார்.

எனவே ரஜினி மட்டுமல்லாமல் எவர் ஒருவரும் தமிழராகப் பிறக்காததால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றோ தமிழகத்தை ஆளக் கூடாது என்றோ சொல்வதில் எந்த நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

ரஜினியின் கொள்கை, அரசியல் பார்வை, திட்டங்கள் ஆகியவற்றைச் சார்ந்து கேள்விகள் எழுப்பலாம், விமர்சனம் செய்யலாம், எதிர்ப் பிரச்சாரம் செய்யலாம். ஆனால் இனவாத நோக்கில் இவற்றைச் செய்வதுதான் பிரச்சினைக்குரியது.

×Close
×Close