Advertisment

ஊரடங்கு தளர்த்திக் கொள்ளப்படாவிட்டால், தற்போதைவிட அதிக விதிமீறல்கள் நடக்கும்

ஊரடங்கு 1.0 எதிர்பார்க்கப்பட்டபோது, 4 மணி நேரத்திற்கு முன்னர் அதை அறிவித்தது முதல் தவறு.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Corona Virus india lockdown

Corona Virus india lockdown

ப.சிதம்பரம், கட்டுரையாளர்.

Advertisment

நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கும்போது, நாம் 47-வது நாள் ஊரடங்கில் இருப்போம். ஊரடங்கு முடிவதற்கு 7 நாட்கள் மீதமிருக்கும். மார்ச் 24-ம் தேதி தேசிய தொலைக்காட்சியில் பிரதமர் ஊரடங்கு 1.0 அறிவித்தபோது (நமக்கு அப்போது தெரியாது அது முதல் ஊரடங்கு என்று) அதன் குறிக்கோள்களை எடுத்துரைத்தார். சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின்படி, கொரோனா வைரஸ் சங்கிலியை உடைப்பதற்கு 21 நாள் கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் கூறினார். அடுத்த நாள் வாரணாசியில் தனது தொகுதி மக்களிடம் பேசும்போது, மகாபாரதப்போர் 18 நாட்கள் நடந்தது. இந்த கொரோனாவுக்கு எதிரான போர் 21 நாட்கள் நடக்கும் என்று கூறினார். அதில் முக்கியமான வார்த்தையாக கொரோனா சங்கிலியை அறுத்து, அதனை ஒழிக்கவேண்டும் என்பது இருந்தது. அவரது முகத்திற்காக நிறைய பேர், இந்த வார்த்தைகளை ஏற்று, அவரின் கட்டளைகளைப் பின்பற்றினர். 21 நாளில் அந்த சங்கிலி அறுபடும் என்றும் நம்பினர் மற்றும் கொரோனாவுக்கு எதிரான போர் வெற்றியடையும் என்றும் எண்ணினர்.

உண்மையான குறிக்கோள் மற்றும் தவறுகள்

மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களுக்கு தெரியும், இந்த சங்கிலி 21 நாளில் அறுபடாது என்று, அவர்கள் மேலும் சில நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஏப்ரல் 14ம் தேதி மீண்டும் தேசிய தொலைகாட்சி வழியாக, ஊரடங்கு 2.0வை அறிவித்தார். கடந்த சில நாட்களாக கிடைத்த அனுபவங்களை வைத்து, அரசு, இந்த சரியான பாதையை தேர்ந்தெடுத்ததாக கூறினார். நாம் பொறுமையாக இருந்து, ஊரடங்கு விதிமுறைகளை முறையாக கடைபிடித்தால், கொரோனா போன்ற தொற்றுநோய்களை கூட நாம் வெற்றி கொள்ளலாம். இங்கு முக்கியமான வார்த்தைகளாக நாம் சரியான பாதையை தேர்ந்தெடுத்தது, பொறுமை மற்றும் கொரோனா போன்ற தொற்று நோயைக்கூட வெல்லலாம் என்ற வார்த்தைகள் இருந்தன.

மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களே சந்தேகித்தனர். விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் உடனடியாக சுகாதார கட்டமைப்புகளை அதிகரிப்பதுதான் உண்மையான குறிக்கோளாக இருக்க முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். நான் மீண்டும், மீண்டும் கூறுகிறேன். ஊரடங்கு தொற்றை குணப்படுத்தாது. அது நமக்கு, தொற்று ஏற்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது, நாம் தயாராக இருக்க வேண்டியதற்கு தேவையானவற்றை செய்வதற்கு கால அவகாசம் கொடுக்கும். அரசு திட்டமிடாமல் சில முக்கியமான தவறுகளை செய்துவிட்டது. ஊரடங்கு 1.0 எதிர்பார்க்கப்பட்டபோது, 4 மணி நேரத்திற்கு முன்னர் அதை அறிவித்தது முதல் தவறு. மார்ச் 25-ம் தேதி அறிவித்த நிதி செயல் திட்டத்தின் கீழ், ஏழை மக்களின் வங்கிக்கணக்கில் பணத்தை போடாதது மற்றொரு பெரிய தவறு. தொற்று பரவும் அளவு மிகக்குறைவாக இருந்தபோதே புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு செல்வதற்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்காதது மற்றொரு பெரிய தவறு.

உயர்ந்து வரும் எண்ணிக்கை

தேதி வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

மார்ச் 24 : 536

மார்ச் 25-ம் தேதி முதல் ஊரடங்கு துவங்கியது.

ஏப்ரல் 14 : 10,815

ஊரடங்கு முடிந்து, மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

மே 3 : 40,263

ஊரடங்கு முடிந்து, மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டது.

மே 8 : இரவு 8 மணி நிலவரப்படி 56,342

இந்த எண்ணிக்கை அதிகரிப்பு என்பது மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர் எதிர்பார்த்த ஒன்றுதான். ஊரடங்கு 3.0 பிரதமரால் அறிவிக்கப்படவில்லை. ஆனால், உள்துறை செயலரின் கையொப்பமிட்ட அறிவிப்பாக வெளியானது என்பதை குறித்துக்கொள்ளுங்கள். எந்த குறிக்கோளும் இதற்கு இல்லை. வெளியேறும் வழிமுறையும் கோடிட்டு காட்டப்படவில்லை. இது வழக்கத்திற்கு மாறானதாகவும், குழப்பமாகவும் இருந்தது.

தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை, தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்லும் என்று நிபுணர்கள் எச்சரித்தனர். இந்தியர்கள் தேவையான நோய் எதிர்ப்புத்திறனை ஒட்டுமொத்தமாக வளர்த்துக்கொள்வார்கள் என சில நிபுணர்கள் தெரிவித்தனர். மூன்று முறை ஊரடங்கு தொடர்ந்போது, அந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே சென்றது. ஊரடங்கு 3.0 அமலில் உள்ள மே 4 முதல் 8ம் தேதி வரையுள்ள 5 நாளில், நாளொன்றுக்கு 3,215 பேர் சராசரியாக பாதிக்கப்பட்டனர். நல்லவேளையாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மற்ற நாடுகளை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, 130 கோடி மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், தொற்று விகிதம் குறைவாக உள்ளது. அநேகமாக பரிசோதனை குறைவாக உள்ளதால், தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கலாம். மேலும் தொற்று ஏற்பட்டவர்களில் இறப்பு விகிதமும், 3.36 சதவீதம் என குறைவாக உள்ளது.

இரண்டு வழிகள் 

ஊரடங்கு 3.0 முடியும்போது, இரண்டு விஷயங்களை பிரதமர் செய்யலாம்.

தற்போது உள்ள ஊரடங்கு 3.0 மே 17-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், ஊரடங்கு 4.0-ஐ அறிவிக்கலாம்.

அல்லது

ஊரடங்கை தளர்த்திவிட்டு, அனைத்து பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளையும் மீண்டும் தொடர அனுமதிக்கலாம். அனைத்து சரக்கு மற்றும் சேவைகளின் வழங்கல் சங்கிலியை மீண்டும் செயல்பட அனுமதிக்கலாம். சாலை, ரயில், விமானம் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதிகளையும், அனுமதிக்கலாம். தொற்று அதிகரிக்கும்போது, அதற்கு சிகிச்சையளிக்க தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதிகளவில் பாதிக்கப்பட்ட தாராவி போன்ற கட்டுப்பாட்டு மண்டலங்களில், பாதிக்ப்பட்ட நபர்களை மருத்துவமனைகளுக்கோ, தனிமை மையங்களுக்கோ அழைத்து சென்றபின் கட்டுப்பாடுகள் தொடருவது அவசியம்.

இந்த இரண்டில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுப்பது கடினம். ஒருவேளை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலோ அல்லது குறைவதற்கான அறிகுறிகளை காட்டினாலோ, முதலாவதை நாம் தேர்ந்தெடுப்பதில் அர்த்தம் இருக்கும். ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஏற்கனவே தள்ளாட்டத்தில் உள்ள பொருளாதாரத்தை மற்றொரு ஊரடங்கு முற்றிலும் சிதைத்துவிடும். இந்தியாவில் நிறத்தின் அடிப்படையில் மண்டலங்கள் பிரித்து (சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை) அவற்றில் எச்சரிக்கையுடன் சில தளர்வுகள், வழங்கப்பட்டதும் பொருளாதார நடவடிக்கைகளை துவங்க பெரிதாக உதவவில்லை. கடந்த 47 நாட்களில், சிறு மற்றும் குறு தொழில்கள் முற்றும் முழுதாக அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுவிட்டன. பல மில்லியன் ஏழை மக்கள் வறுமை நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஆயிரக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினர், கடனாளிகளாக்கப்பட்டுள்ளனர். இந்த ஊரடங்கை தளர்த்தாவிட்டால், தற்போது செய்வதைவிட, அதிகளவில் விதிமீறல்கள் நடைபெறும்.

இரண்டாவது தேர்வு பொருளாதாரத்தை உயர்த்தும். ஆனால், பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை திடீரென அதிகரிக்கும். பச்சை மண்டலங்கள் ஆரஞ்ச் மண்டலங்களாக மாறும், ஆரஞ்ச் மண்டலங்கள் சிவப்பு மண்டலங்களாக மாறும். மாநில மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சிரமப்படுத்தி, இன்று பயன்படுத்தப்படாமல் உள்ள கோவிட் – 19 மருத்துவமனைகளை நிரப்பும். பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தனி நபர்களிடமே ஒப்படைக்கப்படும்.

ஆனால், முடிவெடுக்கும் இடத்தில் அமர்ந்திருப்பது ஒரு கடினமான காரியமாகும். அங்குதான் பிரதமர் அமர்ந்திருக்கிறார். இந்திய மக்களின் நன்மைக்காக அவர் சரியான முடிவை எடுக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.

இக்கட்டுரையை எழுதியவர் ப.சிதம்பரம், முன்னாள் மத்திய நிதியமைச்சர்.

இதனை ஆங்கிலத்தில் படிக்க - If the lockdown is not lifted, there may be defiance on a larger scale than at present

தமிழில் - R பிரியதர்சினி.  

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment