Advertisment

பேரறிவாளன் 27 ஆண்டு சிறைவாசம்... பாசப் போராட்டத்தில் அற்புதம்மாள்!

பேரறிவாளனின் முகத்தை மறந்தவர்கள் கூட அற்புதம்மாளின் முகத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
perarivalan 27 years

perarivalan 27 years

பூங்குழலி

Advertisment

பேரறிவாளன் சிறைக்கு சென்று இன்றுடன் (ஜூன் 11) 27 ஆண்டுகள் ஆகிறது. 1991-ம் ஆண்டு ஜூன் 11ம் தேதி, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் பேரறிவாளன் கைதாகும் போது அவருக்கு 19 வயது. சிறிய விசாரணைக்குப் பின்னர் வீட்டிற்குத் திருப்பி அனுப்பி வைக்கப்படுவார் என்று உறுதியளித்ததன் பேரில் தனது பெற்றோர்களால் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார் பேரறிவாளன். ஆனால் 27 ஆண்டுகள் கடந்து விட்டன, அன்று ஒப்படைக்கப்பட்ட மகனுக்காக இன்று வரை காத்திருக்கிறார் தாய் அற்புதம்மாள்.

இன்று தமிழகமே அறிகிற பேரறிவாளனை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அறிவு என்றே அழைப்பார்கள். 1991-ம் ஆண்டு கைதான இவரை, அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப விசாரணை முடிந்து போலீசார் வீட்டிற்குத் திருப்பி அனுப்பவில்லை. சுமார் 59 நாட்கள், போலீசார் அவரை எங்கு வைத்திருந்தார்கள் என்று கூட தெரியவில்லை.

தனது மகன் கைதான விஷயம் ஊருக்குத் தெரிந்துவிடுமோ என்ற பயத்தில், மகன் காணவில்லை என்ற புகாரையும் அளிக்கத் தவறிவிட்டனர் பேரறிவாளனின் குடும்பத்தினர். ‘அறிவு குற்றம் புரியவில்லை. எனவே நிச்சயம் விடுவிக்கப்படுவார்’ என்ற உறுதியோடு இருந்ததும் புகார் அளிக்காததற்கு ஒரு காரணம்.

நிரபராதிகளைச் சட்டம் ஒருபோதும் தண்டிக்காது என்று இந்திய சட்டத்தின் மீது கொண்டிருந்த அதீத நம்பிக்கையில் மகனுக்காகக் காத்திருந்தனர். இந்த நம்பிக்கையை மனதில் இருக்கமாகப் பற்றிக்கொண்டு இன்று வரை அவர்களின் போராட்டம் தொடர்கிறது. ஒவ்வொரு முறையும் கனவுகள் நொறுக்கப்படும்போதும், விடா முயற்சியுடன் போராட்டத்தை முதலில் இருந்து தொடங்குகிறார் அற்புதம்மாள்.

ராஜிவ் காந்தியை கொலை செய்ய பயன்படுத்திய வெடிகுண்டில் பொருத்தப்பட்டிருந்த 9 வோல்ட் பேட்டரியை குற்றவாளிகளுக்கு வாங்கித் தந்த புகாரின் அடிப்படையில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். இந்தப் புகாருக்கு சாட்சி கூறிய கடைக்காரர், “9 வோல்ட் பேட்டரியை வாங்கிச் சென்றது பேரறிவாளன் தான்” என்றார்.

கடைக்காரர் கூறிய இந்தச் சாட்சி பலரிடம் சந்தேகங்களை எழுப்பியது. பலரும் வந்து செல்லும் கடையில், பல மாதங்கள் கழித்தும் பேட்டரி வாங்கிய ஒருவரை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. இதன் ரசீது பேரறிவாளனை கைது செய்தபோது சட்டை பாக்கெட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் கிளப்பியது.

தடா சட்டத்தின் கீழ் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் குற்றவாளிகளின் பதிவு செய்த வாக்குமூலங்களும் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படுவது வழக்கம். ஏற்கனவே எழுதப்பட்ட பத்திரங்களிலும், வெற்று காகிதங்களிலும் கையெழுத்திட பேரறிவாளனை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் போலீஸ் துன்புறுத்தியது. மேலும் 9 வோல்ட் பேட்டரியை வாங்கி தற்கொலை படை தாக்குதல் நடத்திய கூட்டத்தின் தலைவன் சிவராசனிடம் அளித்ததாகப் பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தில் பதிவாகியுள்ளது.  இதனை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு, அவருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், 26 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் சிபிஐ அதிகாரி, வி. தியாகராஜன் (அப்போதைய எஸ்.பி) அக்டோபர் 27, 2017 உச்சநீதிமன்றத்தில் புதிய விவரம் ஒன்றை அளித்துள்ளார். அதில் பேரறிவாளன் அளித்த வாக்குமூலம் பற்றிய முக்கிய தகவலை தெரிவித்தார்.

1991ம் ஆண்டு பேரறிவாளனின் வாக்குமூலத்தைத் தானே பதிவு செய்ததாகவும், அதில் ஒரு பாகத்தை குறிப்பிடவில்லை என்றும் கூறினார். என்ன அது? “நான் வாங்கிக் கொடுத்த பேட்டரியை அவர்கள் எதற்காகக் கேட்டார்கள், எதற்குப் பயன்படுத்த வாங்கச் சொன்னார்கள் என்று எனக்கு எதுவுமே தெரியாது” என்று பேரறிவாளன் குறிப்பிட்டிருக்கிறார். இந்தத் தகவலை பதிவு செய்வதில் என்ன முக்கியத்துவம் உள்ளது?

இதனைக் குறிப்பிட்டிருந்தால், 9 வோல்ட் பேட்டரி வாங்கிய சாதாரண செயல், ராஜிவ் காந்தி கொலை சதித்திட்டத்தில் பேரறிவாளனின் பங்கு உறுதி ஆகியிருக்காது என்று தியாகராஜன் கூறினார்.

மேலும், “இந்தக் கொலை சம்பவத்தில் பேரறிவாளனின் பங்கு குறித்து சிபிஐ-க்கு முதலில் எதுவும் தெரியவில்லை, ஆனால் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்தச் சதித்திட்டம் குறித்து பேரறிவாளன் எதுவும் அறியாதவராய் இருந்தது தெரியவந்தது” என்று தியாகராஜன் கூறினார்.

குறிப்பாக ராஜிவ் காந்தியின் கொலை சம்பவத்தில் எல்.டி.டி.இ முக்கிய தலைவர் பொட்டு அம்மன் மற்றும் சிவராசன் நடத்திய உரையாடலை உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார் தியாகராஜன். அந்த உரையாடலில், பொட்டு அம்மனிடம் “நமது நோக்கம் குறித்து எங்கள் மூவரை தவிர வேறு எவருக்கும் ஒன்றும் தெரியாது” என்று சிவராசன் கூறியிருந்தார்.

இதில் சிவராசன் குறிப்பிட்டுள்ள மூவரில் அவர் உட்பட சுபா மற்றும் தற்கொலை தாக்குதல் நபர் தாணு ஆகியோரும் அடக்கம்.  எனவே இந்த உரையாடல் மூலம், ராஜிவ் காந்தியை கொல்லத் திட்டம் தீட்டியதில் பேரறிவாளனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

பேரறிவாளனின் வாக்குமூலத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அவருக்குத் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது. 26 ஆண்டுகள் பின்பு முக்கிய உண்மை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ஒரு வேளை பேரறிவாளனின் வாக்குமூலத்தை மட்டுமே உண்மையாகக் கருதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்தால், இந்த உண்மை வெளிவந்து என்ன பயன் ஏற்பட்டிருக்கும்?

பேரறிவாளன் இறந்திருந்தால் அவரின் உயிரைத் திருப்பி அளித்திருக்க முடியுமா? என்ற கேள்விகள் பலமாகக் கேட்கப்பட்டது. அவரின் மிச்சம் இருக்கும் வாழ்க்கையையாவது அவரின் விருப்பபடி கொடுப்பீர்களா? இந்த கேள்விக்கான பதிலை முடிவு எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் தான் கூற முடியும்.

பேரறிவாளனுக்கு இப்போது 46 வயது. தனது வாழ்நாளில் 27 ஆண்டுகள் சிறையிலியே கழித்து வருகிறார். 23 ஆண்டுகள் மரண தண்டனை கைதிகள் வரிசையிலும் வாழ்ந்து வந்தார். பலமுறை பேரறிவாளனுக்கு தூக்கு என்று கூறி மனதளவிலும் உடல் அளவிலும் போலீஸ் காவலில் அவர் சந்தித்த இன்னல்கள் ஏராளம். அப்போது கூட அவரின் முகத்தில் இருந்த புன்னகையை யாராலும் எடுக்க முடியவில்லை.

ஒரு மனிதனின் வாழ்க்கையில் 27 ஆண்டுகள் என்பது சாதாரணான நாட்கள் இல்லை. பேரறிவாளனின் 1வருட சிறைவாசத்திற்கு பின்பு அவரின் அக்கா திருமணம் செய்து கொண்டார். இப்போது அவரின் மகன்கள் மென்பொறியாளர்களாக வேலை செய்து வருகின்றன.

இந்த 27 ஆண்டுகளில் பேரறிவாளன் இழந்த இன்பங்கள் ஏராளம். ஜோலார்பேட்டையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த பேரறிவாளனின் தந்தை ஒரு பள்ளி ஆசியர். பேரறிவாளனின் கைது அவருக்கும், அவரின் குடும்பத்தாரின் வாழ்க்கையிலும் விழுந்த மிகப்பெரிய இடி. அவர் விழவில்லை என்றாலும், பேறிவாளனின் குடும்பம் அவரின் பிரிவால் எழ முடியாத அளவிற்கு வீழ்ந்து விட்டது. அவர் இன்றும் நீதிக்காக, வலிமையுடன், முகத்தில் புன்னகையுடன் தனது போராட்டத்தை தொடர்கிறார்.

அவரின் வழக்கை வாதாடும் வழக்கறிஞர்கள் மூலம், பேரறிவாளன் தன்னை பற்றி வெளியில் பேசப்படும் அரசியல், மீடியாவில் தன்னை பற்றி வரும் தகவல்கள் இவற்றையெல்லாம் கேட்டறிந்து பிரமிப்பார். தன்னையும் அதற்கு ஏற்றார் போல் புதுபித்துக் கொள்கிறார்.

சிறையில் இருந்தப்படியே 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய பேரறிவாளன் 91.33 சதவீதம் பெற்று தேர்வு எழுதிய கைதிகளில் முதலிடம் பிடித்தார். மேலும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் நடத்திய டிப்ளமோ பாடத்திட்டத்தில் தங்கப் பதக்கம் பெற்றார். கூடவே கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் தனது முதுகலை படிப்பையும் முடித்துள்ளார்.

சிறைக்குள்ளே மற்ற கைதிகளுடன் இணைந்து இசைக்குழு ஒன்றையும் அமைத்து இருக்கிறார். எல்லோரிடமும் பண்போடு பழகுவார். அவரின் சிரிப்பும், பேச்சில் இருக்கும் மரியாதையும் சிறையில் இருக்கும் உயர் காவல் அதிகாரிகளை கூட கவர்ந்து இழுக்கும்.

இவருடன் சிறையில் இருந்த பொன்னப்பன் என்பவர், பேரறிவாளனை பார்த்து வியந்து, சிறையில் இருந்து வெளியே வந்ததும் காஞ்சிபுரத்தில் ஏழை எளிய மாணவர்கள் படிப்பதற்காக அறக்கட்டளை ஒன்றை ஆரம்பித்தார். அந்த அறக்கடளைக்கு ‘பேரறிவாளவன் கல்வி அறக்கட்டளை’ என்றும் பெயரிட்டுள்ளார். ஏராளமான மாணவர்கள் அங்கு படித்து வருகின்றனர்.

நீண்டகாலமாக சிறைத்தண்டனை காரணமாக பேரறிவாளனுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் சாந்த பிரச்சனைகளும் இருக்கின்றன. இன்றைய தினம் பலதரப்பினரும் பேரறிவாளனின் விடுதலையை வரவேற்க தயாராக இருக்கின்றனர் என்றால், அது ஒரே நாளில் நடக்கவில்லை. இதற்கு பின்னால் தினம் தினம் பேரறிவாளின் நினைத்து வருந்தும் அவரின் தாயார் அற்புதம்மாளின் உழைப்பும், கண்ணீரும் இருக்கிறது.

கடந்த 27 ஆண்டுகளின் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனின் விடுதலையை தவிர வேறு எதையுமே நினைத்து பார்த்ததில்லை. இப்போது 71 வயதாகும் அவருக்கு கண் பார்வை பெரிதளவில் குறைந்து விட்டது. மனதளவிலும் உடல் அளவிலும் அற்புதம்மாள் தோய்ந்து விட்டார். இருந்த போதும் தம்மால் முயன்ற அளவிற்கு தனது மகனுக்கு பக்கபலமாக இருந்து, அவரின் விடுதலைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்த 27 ஆண்டுகளில் உடல் அளவில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தபோதிலும் தனது மகனை பார்க்க ஒரு வாரம் கூட தவறியதில்லை அந்த தாய். சமீபத்தில் தமிழகத்தை புயல் தாக்கிய போது கூட அற்புதம்மாள் தனது மகனை நேரில் காண சிறைக்கு சென்றிருந்தார். இதை பற்றி எந்த ஊடகங்களிலும் ஒருவரி செய்தி கூட வெளியாகவில்லை. அதேபோல் பேரறிவாளனும் மறுபக்கம் தனது தாயார் இன்றும் கட்டாயம் வருவார் என்று ஜன்னலை பார்த்தப்படி நின்றுக் கொண்டிருந்தது எல்லாம் வேதனையின் உச்சம்.

பேரறிவாளனின் முகத்தை மறந்தவர்கள் கூட அற்புதம்மாளின் முகத்தை அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள். நீதி கேட்டு அவர் ஏறாத நீதிமன்றங்கள் இல்லை. சந்திக்காத சட்ட ஆலோசகர்கள் இல்லை.

தமிழ் மட்டும் தெரிந்த அற்புதம்மாள், நாட்டில் இருக்கும் எல்லா மனித உரிமை ஆணையத்திடமும் தனது மகனுக்காக முறையிட்டுள்ளார். அவருக்கான ஆதரவையும் பெருக செய்துள்ளார். நாட்டில் இருக்கும் உறுதியான பெண்மணிகளில் அற்புதம்மாளும் ஒருவர் என்றால் அதில் மாற்று கருத்து இல்லை.

இந்த நிமிடம் வரை அப்பாவியான தனது மகன் கட்டாயம் விடுதலை ஆகிவிடுவார் என்று மனதளவில் பெரும் நம்பிக்கையுடன் அற்புதம்மாள் வாழ்ந்து வருகிறார். இந்திய நீதித்துறைக்கு இது ஒரு பரீட்சை! ஏற்கனவே நீதி தாமதமாகி விட்ட நிலையில், மீதமுள்ள நாட்களிலாவது தனது மகனுடன் அற்புதம்மாள் வாழ்வார் என்று உறுதியளிக்க முடியுமா?

(சென்னையை சேர்ந்த பூங்குழலி, எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர் ஆவார். மரண தண்டனைக்கு எதிரான துடிப்பான பிரசாரகரும்கூட! பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் சுய சரிதையின் ஆசிரியர் இவர். தொடர்புக்கு : thamizhpoo@yahoo.co.in)

 

 

Perarivalan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment