Advertisment

ஜனாதிபதி தேர்தல் கண்ணோட்டம் 2 : மோடி – நிதிஷ் மோதிய பிகார் யுத்தம்

பிரித்தாளும் சூழ்ச்சி என்பார்கள். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் படித்தவர்கள் சூழ்ச்சிக்கு பதிலாக சூட்சுமம் அல்லது சூத்திரம் என்பார்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
president election - nitish-kumar-7592

கதிர்

Advertisment

ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும், அதிகாரத்தை ருசிக்க வேண்டும். இதைத் தவிர ஒரு அரசியல் கட்சிக்கு வேறென்ன கொள்கை இருந்துவிடப் போகிறது?

ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் வேறு கிரகத்தில் இருந்து வந்தவர் அல்ல. அதனால்தான் கொள்கைக்கு ஏற்ப தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றிக் கொள்கிறார். கூட்டணிக்காக கொள்கையை தியாகம் செய்பவர்களைக் காட்டிலும் இது மேல்தானே.

வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் ஐக்கிய ஜனதா தளம் பிரதிநிதியாக ரயில்வே அமைச்சராக சேர்ந்தவர் நிதிஷ் குமார். ஒரு விபத்தால் ராஜினாமா செய்தவர் மீண்டும் சேர்ந்து சில துறைகளை கவனித்தார். அப்போது பிஜேபி தலைவர்களுடன் நல்ல நெருக்கம்.

பெரிய கம்பெனியில் மேனேஜராக இருப்பதைவிட சின்ன கம்பெனி என்றாலும் அதில் மேனேஜிங் டைரக்டராக இருப்பது எல்லோருக்கும் பிடிக்கும். உச்ச அதிகாரம் அல்லவா. நிதிஷுக்கும் சொந்த மாநிலத்தில் முதல்வர் ஆகும் ஆசை இருந்தது. மன்மோகன் பிரதமர் ஆனதும் பாட்னாவுக்கு வந்து விட்டார்.

அதற்கு முன்பே முதல்வர் நாற்காலியில் ஒரு தடவை உட்கார்ந்து அளவு பார்த்து விட்டார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் வழக்கில் சிக்கியதால் பதவி விலகி மனைவி கையில் மாநிலத்தை ஒப்படைத்த காலகட்டம். ஆனால் ஒரு வாரம்தான். மறுபடியும் ராப்ரியே வந்து விட்டார். ஊரெல்லாம் பெயர் நாறிய பிறகும்கூட லாலுவால் எப்படி தனது அரசியல் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது என்று நிதிஷ் குமாருக்கு ஒரே ஆச்சரியம்.

president election - lalu759 லாலு பிரசாத் யாதவ்

இங்கே பிகார் ஜாதி சதுரங்கம் பற்றி சொல்லியாக வேண்டும். நாட்டில் மிக மோசமாக ஜாதிகள் ஆதிக்கம் செலுத்த போட்டியிடும் மாநிலம் பிகார். அந்த சக்திகள் எப்படி வேலை செய்கின்றன; லாலு எப்படி அதில் விளையாடுகிறார் என்பதை நிதிஷ் உற்றுப் பார்த்தார்.

பிகார் மக்கள் தொகையில் யாதவ் இனத்தவர் 12 சதவீதம். முஸ்லிம்கள் 17 சதவீதம். இது தேசிய சராசரியை காட்டிலும் மிக அதிகம். அடுத்து வருவது தலித்துகள். ஆக, தனது யாதவ் இனத்தையும் முஸ்லிம்களையும் ஒன்று சேர்ப்பதால் மட்டுமே லாலுவால் 29 சதவீதம் என்கிற கணிசமான ஆதரவை திரட்ட முடிகிறது என்பதை நிதிஷ் பார்த்தார். 16 சதவீதம் உள்ள தலித் ஓட்டுகளில் ஒரு பகுதியை லோக் ஜனசக்தி கட்சி, எல்ஜேபி, தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஏற்கனவே தன் பக்கம் இழுத்து வைத்திருந்தார்.

ஒட்டு மொத்த முஸ்லிம் ஓட்டுகளையும் லாலு அள்ளிக் கொண்டாலும், அமைச்சர் பதவி அரசு வேலைகள் ஆகியவற்றை அஷ்ரப் எனப்படும் உயர் ஜாதி முஸ்லிம்களுக்கு மட்டுமே வழங்குகிறார் என்ற விவரம் திரட்டினார். பஸ்மந்தா எனப்படும் பின்தங்கிய ஜாதி முஸ்லிம்களுக்கு லாலு எதுவும் செய்வதில்லை. நாலைந்து வாரிய தலைவர் பதவிகளை வினியோகித்தது தவிர. பஸ்மந்தா முஸ்லிம்களின் 7 கட்சிகளை நிதிஷ் தன் பக்கம் வளைத்தார். அவற்றின் தலைவர்கள் லாலுவின் அநீதிகளை பட்டியல் போட்டு பிரசாரம் செய்ய ஆரம்பித்தனர்.

இதே போல, தலித்துகளில் பாஸ்வான் பரிவு காட்டும் சில மேல் ஜாதிகளை தவிர மற்ற தலித்துகளுக்கு நிதிஷ் வலை வீசினார். 21 ஜாதிகள் அடங்கிய மகா தலித் என்ற பிரிவினரை மொத்தமாக வசப்படுத்தினார். அங்குள்ள ஜாதிப் பெயர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதால் பெயர்களை இங்கே குறிப்பிடவில்லை.

நிதிஷ் குமாரின் கும்ரி இனத்தவர்கள் பிகாரில் 4 சதவீதத்துக்கும் குறைவு என்பதை மறக்கக் கூடாது.

கடைசியாக நிதிஷ் குறி வைத்தது யாதவ் அல்லாத பின்தங்கிய வகுப்பினர். அங்கு யாதவ் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்றாலும் பொருளாதார ரீதியில் வசதியாக வாழ்பவர்கள். மற்ற பிற்படுத்தப்பட்ட ஜாதியினர் அப்படி இல்லை. எக்ஸ்ட்ரீம்லி பேக்வேட் எனப்படும் இந்த இபிசிக்களையும் தன் குடையின் கீழ் கொண்டு வந்தார்.

நிதிஷுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்தது. இன்னமும் இருக்கிறது. சொன்னால் செய்வார் என்று நம்புகிறார்கள். எதிர்ப்பக்கம் நின்றிருந்த ஒவ்வொரு ஜாதியையும் உடைத்து தன் பக்கம் கூட்டத்தை பெருக்க அவரால் முடிந்தது என்றால் இந்த நம்பிக்கையே அதற்கு மூல காரணம்.

உயர் ஜாதி (16 சதவீதம்) வாக்காளர்களைப் பற்றி நிதிஷ் கவலையே படவில்லை. அவர்கள் பிஜேபி பக்கம் வெளிப்படையாக நின்றார்கள். பிஜேபி கூட்டணி என்பதால் அந்த ஓட்டுகள் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் விழும் என எதிர்பார்த்தார். ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் தூண்களாக மதிக்கப்பட்ட மேல் ஜாதியினர், முஸ்லிம்கள், தலித்துகள் எல்லோரும் ஆளுக்கொரு திசையில் சென்று விட்டதால் அக்கட்சி முதலில் பெரும் இழப்பை சந்தித்த மாநிலம் பிகார்.

தேர்தல் 2005 பிப்ரவரியில் வந்தது. மொத்தம் 243 இடங்கள். பெரும்பான்மைக்கு 122 தேவை. யாருக்கும் கிடைக்கவில்லை. என்.டி.ஏ.க்கு 92 தான் கிடைத்தது. ஐக்கிய ஜனதா தளம் 55, பிஜேபி 37. லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் 75 இடங்களுடன் தனிப் பெரும் கட்சியாக வந்தது. பாஸ்வான் தனித்து நின்று 29 இடங்களில் வென்றது சாதனை. காங்கிரஸ் 10 இடங்களை பிடித்தது.

ஆட்சி அமைக்க யாருக்கும் வாய்ப்பு இல்லாததால் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் வந்தது பிகார். அக்டோபரில் அடுத்த தேர்தல் நடந்தது. ஐக்கிய ஜனதா தளம் 88, பிஜேபி 55 ஆக என்.டி.ஏ.க்கு 143 இடங்கள் கிடைத்ததால் நிதிஷ் முதல்வர் ஆனார். 54 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது லாலு கட்சி.

president election - pm - modi பிரதமர் நரேந்திர மோடி

அடுத்து வந்த 2009 நாடாளுமன்ற தேர்தலிலும், அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலிலும் நிதிஷ் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி கவுரவமான வெற்றிகளையே தக்க வைத்துக் கொண்டது. சிறந்த நிர்வாகம் காரணமாக முன்பைவிட அந்த தேர்தலில் நிதிஷ் கட்சிக்கு 27 இடங்களும் பிஜேபிக்கு 36 இடங்களும் கூடுதலாக கிடைத்தன. லாலு கட்சி 22 க்கும் காங்கிரஸ் வெறும் 4 க்குமாக சுருங்கிப் போயின. துணை முதல்வர் பதவியையும் 10 அமைச்சர் பொறுப்புகளையும் பிஜேபிக்கு கொடுத்துவிட்டு முதல்வராக தொடர்ந்தார் நிதிஷ்.

திருப்புமுனையாக வந்தது 2014 நாடாளுமன்ற தேர்தல். முந்தைய ஆண்டே பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை தேர்வு செய்தது பிஜேபி. அக்கட்சியின் பல தலைவர்களைப் போல நிதிஷுக்கும் இது பெரும் அதிர்ச்சி. கடுமையாக விமர்சனம் செய்தார்.

”குஜராத் கலவரத்தை ஒடுக்கத் தவறிய மோடி மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள். சென்ற ஆண்டு லோக்சபா தேர்தலில் இதன் விளைவை கண்கூடாக பார்த்தோம். பிகாரில் உள்ள 40 தொகுதிகளில் 11தான் என்.டி.ஏ.வுக்கு கிடைத்தது. அதில் இருந்து பிஜேபி பாடம் படிக்கவில்லை” என்று நிதிஷ் சாடினார்.

ஆனால் பிஜேபி நிலையில் மாற்றம் இல்லை. இதனால் நிதிஷ் – பிஜேபி உறவு நசிந்தது. ஒரு கட்டத்தில் பிஜேபி அமைச்சர்கள் அத்தனை பேரையும் டிஸ்மிஸ் செய்தார் நிதிஷ். அதோடு 17 ஆண்டு கால கூட்டணி உடைந்தது.

ஆனால், 2014 நாடாளுமன்ற தேர்தல் நிதிஷுக்கு பெரும் இடியாக விழுந்தது. பிஜேபியை கழற்றிவிட்டு போட்டியிட்ட அவரது ஐக்கிய ஜனதா தளம் வெறும் 2 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. பிஜேபி 22 தொகுதிகளில் ஜெயித்தது. அதன் கூட்டணியில் இருந்த பாஸ்வான் கட்சி 6 இடங்களையும், ராஷ்ட்ரிய லோக் சமதா 3 இடங்களையும் பிடித்தன. லாலு கட்சி 4 இடங்களில் வென்றாலும், அவரது மனைவி ராப்ரி தோல்வி அடைந்தார்.

தோல்விக்கு தார்மிக பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து கீழே இறங்கிய நிதிஷ், ஜித்தன் மாஞ்சி என்ற மலைஜாதி உறுப்பினரை சீயெம் நாற்காலியில் அமர வைத்தார். கட்சியை அடிமட்டத்தில் இருந்து பலப்படுத்தப் போகிறேன் என்று யாத்திரை புறப்பட்டார்.

நேரம் வரும் வரை காத்திருப்போம் என்று வேடிக்கை பார்த்த பிஜேபி களத்தில் இறங்கியது. அரசுக்கு தொல்லைகள் நாலா பக்கமும் பெருகின. நிலைமை கட்டு மீறி போவதை உணர்ந்த நிதிஷ் 10 மாதங்கள் முடிவதற்குள் திரும்பி வந்தார். ஆனால் ஜித்தன் என்ன பரதனா, நிதிஷ் மட்டும் ராமனா? முதல்வர் நாற்காலியை விட்டு கீழே இறங்க மறுத்துவிட்டார் ஜித்தன் மாஞ்சி. பிஜேபி அவருக்கு ஃபுல் சப்போர்ட். போராடி தன் இடத்தை மீட்டு, பதவிக் காலம் முடியும் வரை பிஜேபி வித்தைகள் அனைத்தையும் சமாளித்தார் நிதிஷ்.

அடுத்த சட்டசபை தேர்தலுக்காக தன் பிரதான எதிரியான லாலுவையும், இருவருக்கும் பொது எதிரியான காங்கிரசையும் இணைத்து நிதிஷ் தைத்ததுதான் மகா கட்பந்தன் என்று சொல்லப்படும் மெகா கூட்டணி. உண்மையில் ராகுல் காந்திதான் இதில் அதிக முனைப்பு காட்டினார். சோனியாவுக்கும் லாலுவுக்கும் இருந்த நட்பை பயன்படுத்தி லாலுவையே நிதிஷுக்கு அழைப்பு விடுக்க வைத்தார்.

எதிர்பார்த்தது போலவே மெகா கூட்டணி மகத்தான வெற்றி பெற்றது. பிஜேபி 53 இடங்களில் மட்டுமே வென்றது. 36 இழப்பு. மெகா கூட்டணி 204 தொகுதிகளில் வென்று வரலாறு படைத்தது. எல்லோருமே கைவிட்ட காங்கிரஸ் அந்தக் கூட்டணியால் 41 இடங்களைப் பெற்றது. ஆனால் லாலுவின் கட்சி 80 தொகுதிகளுடன் முதல் இடத்தை பிடித்து நிதிஷ் கட்சியை 71 இடங்களுடன் இரண்டாம் இடத்துக்கு தள்ளியது. பெருந்தன்மையாக நிதிஷ் முதல்வராக வாழ்த்தினார் லாலு.

president election - tejashwi-yadav-759 பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்

ஆனால் நிதிஷை விதி விடவில்லை. ஒன்பதாம் வகுப்பு ஃபெயிலான லாலுவின் மகன் தேஜஸ்விக்கு துணை முதல்வர் பதவியும், அதற்கு அடுத்த இடத்தை லாலுவின் இன்னொரு மகன் தேஜ் பிரசாத்துக்கும் தாரை வார்க்க நேர்ந்தது. அண்ணன் வயது 26. தம்பி 25. லாலு லிஸ்ட் கொடுத்த 12 பேருக்கு அமைச்சர் பதவிகள். அதே எண்ணிக்கையில் நிதிஷ் கட்சிக்கும் அமைச்சர்கள். அவர் முதல்வர் என்பதால் கூட்டினால் 13. ஒரு சிறிய ஆறுதல்.

வாஜ்பாய், அத்வானி போன்ற பெரிய தலைவர்களுடன் ஆட்சி நடத்திப் பழகிய நிதிஷ் 25 வயது பையன்களுடன் போராடுகிறார். லாலு வைத்ததுதான் சட்டம் என்ற அளவில் ஆட்சி ஓடுகிறது. சிறந்த நிர்வாகி என பெயர் பெற்றவர் குமுறலை வெளிக் காட்டாமல் போய்க் கொண்டிருந்தார். அவ்வப்போது வெளியே ஏதாவது சொல்லி லாலுவுக்கு கடுப்பேற்றி ஆறுதல் பட்டுக் கொள்வார்.

ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பு வந்தபோது மோடியை பாராட்டினார். லாலு கடுப்பானார். அதோடு இன்னொன்றும் சொன்னார். “பெரிய நோட்டுகளை ஒழித்தால் மட்டும் கருப்புப் பணம் ஒழிந்து விடாது. பினாமி பெயரில் பெரிய ஆட்கள் குவித்து வைத்திருக்கும் சொத்துகளை பறிமுதல் செய்தால்தான் பலன் கிடைக்கும்” என்று சொன்னார். லாலு இன்னும் கடுப்பானார்.

ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது. நிதிஷ் அரசில் அமைச்சர்களாக இருக்கும் லாலுவின் மகன்கள், ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கும் லாலுவின் மகள் மிசா பாரதி ஆகியோர் பினாமி பெயர்களில் ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளை குவித்திருப்பதாக மத்திய புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. அவற்றை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன.

அதே சமயம், மாட்டுத் தீவன ஊழல் சம்பந்தமாக லாலு மீது போட்ட வழக்குகளில் நிலுவையில் இருக்கும் 5 வழக்குகளையும் விரைவாக நடத்தி முடிக்குமாறு சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டுள்ளது. கிரிமினல் வழக்கில் ஒருவரை இரண்டாவது முறை தண்டிக்க முடியாது என்று கூறி லாலு தாக்கல் செய்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. ஒரு வழக்கில் மட்டும் 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்ட லாலு இப்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

லாலு குடும்பம் தரும் ஒற்றைத் தலைவலியில் இருந்து கடவுளும் மோடியும் தன்னை கரை சேர்ப்பதாக நிதிஷ் நம்பத் தொடங்கி விட்டார். அதன் விளைவாகத்தான் பிகார் கவர்னர் ராம்நாத் கோவிந்தை என்.டி.ஏ சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்த உடனே அவரை சந்தித்து பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார் நிதிஷ்.

ஜனாதிபதி தேர்தலில் என்.டி.ஏ.க்கு எதிராக எதிர்க்கட்சிகள் கலந்து பேசி பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று முதல் முதலில் யோசனை சொன்னவரே நிதிஷ்தான்.

இந்த முரண் பற்றிக் கேட்டதற்கு ஒரு தலித்தை ஆதரிக்க வேண்டாமா என்றார். கோவிந்தாவது பக்கத்து மாநிலமான உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். பிகாரில் பிறந்து வளர்ந்து பெரிய பொறுப்புகளுக்கு உயர்ந்தவரும் பாபு ஜெகஜீவன் ராமின் மகளுமான மீரா குமாரியை எதிர்க்கட்சிகள் தேர்வு செய்து, இவரும் தலித்துதானே என கேட்டபோது நிதிஷிடம் பதில் இல்லை.

ஏனென்றால் அவர் முடிவு செய்துவிட்டார். மெகா கூட்டணிக்கு இனி வேலை இல்லை. நமது எதிர்காலம் என்.டி.ஏ.யுடன்தான் என்று. புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வந்துவிட்டார். கற்ற வித்தைகள் எல்லாவற்றையும் அவரிடம் இருந்து களவாடிச் சென்று இன்னும் கூர்மையாக்கி அவர் மீதே பிரயோகித்து விட்டது பிஜேபி. வெற்றிகரமாக.

பிரித்தாளும் சூழ்ச்சி என்பார்கள். சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் படித்தவர்கள் சூழ்ச்சிக்கு பதிலாக சூட்சுமம் அல்லது சூத்திரம் என்பார்கள்.

நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்திலும், யுகங்கள் காத்திருந்தாலும் பிஜேபி கால் வைக்க இடமே இருக்காது என்று சொல்லப்பட்ட தமிழ்நாட்டிலும் இதே உத்தியை சன்னமாக மேம்படுத்தி கையாள்கிறது மோடி – அமித்ஷா டீம்.

எப்படி?

நாளை பார்ப்போம்

Kathir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment