Advertisment

ராகுல் காந்தியின் ஆலோசகர்கள் எப்படி?

சோனியாவுக்கு இருந்த சிக்கல்கள் ராகுலுக்கு இல்லை. ராகுல் அரசியல் பயணத்தில் கட்சியின் அமைப்பு, நிர்வாகம், ஆட்சி அதிகாரம் அனைத்தையும் களத்தில் பார்த்தவர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rahul gandhi - congress - sugitha

சுகிதா

Advertisment

(காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் தினம் நேற்று (28.12.17) கொண்டாடப்பட்டது. அதையொட்டி இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது.)

கடந்த இரண்டு நாட்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, சந்திக்க போகும் சவால்கள் பற்றி பார்த்தோம். இன்று அவரின் ஆலோசகர்கள் யார்? எப்படிப்பாட்டவர்கள்? இவர்களிடம் ராகுல் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சோனியா காந்திக்கு அகமது பட்டேல் போன்று அரசியல் ஆலோசகராக ராகுலுக்கு யார் இருக்க போகிறார்கள் என்ற கேள்வி எழும் போதே, இந்தியாவின் அரசியல் களத்தை ஆலோசகர்களிடம் கேட்டு கேட்டு சோனியா தெரிந்துக் கொண்டதன் விளைவு சில நேரங்களில் சொந்தமாக சோனியாவுக்கு முடிவெடுக்க முடியாமல் போனது என்ற குற்றச்சாட்டை மறுப்பதற்கில்லை. ராகுலை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் முதலில் கவுஷல் .கே.வித்யார்த்தியிடம் தான் பேச முடியும். கணினி மற்றும் இணைய தகவல் தொடர்புகளை விரல் நுனியில் வைத்திருப்பவர். ஆனால் கட்சியின் அடிமட்ட அரசியல் தெரியாது என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

கன்ஷிகா சிங், 2004ம் ஆண்டு காங்கிரஸ் பெரும் வெற்றி பெற சோனியாவுக்கு பாதை அமைத்துக் கொடுத்தவர். கே.பி பைஜூ ராகுலின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுப்பவர். அலங்கார் சவாய் ராகுல் காந்தியின் திட்டங்களுக்கான ஆய்வை மேற்கொள்பவர். ராகுலின் செயல்பாடுகளை ஆவணப்படுத்துபவர், சவாயுடன், கவுஷல் கே வித்யார்த்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுடப் பிரிவு செயலாளராக உள்ள திவ்யா ஸ்பந்தனாவும் இணைந்து ராகுலின் தகவல் தொழில்நுட்ப பிரிவாகவும் இவர்கள் செயல்படுகிறார்கள். ராகுலின் தேர்தல் வியூகங்களை வகுக்கும் சச்சின் ராவ் ஆகியோர் ராகுலின் முக்கிய ஆலோசகர்கள்.

அதே நேரத்தில் சோனியாவின் தனி செயலாளரான வின்சென்ட் ஜியார்ஜ், சோனியாவின் கண்களாகவும் காதுகளாகவும் செயல்பட்ட பி.பி மாதவன் மற்றும் எஸ்.வி. பிள்ளை. அதுவும் ராகுலுக்கு நெருக்கமானவர் மாதவன். இரண்டாவது முறை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொள்கை செயலாளாராக பணியாற்றிய புலோக் சாட்டர்ஜி, முன்னாள் பத்திரிகையாளர் சுமன் துபே, ராஜூவ் காந்தி தொண்டு நிறுவனத்தை வழிநடத்துபவர். சுப்ரமணிய சாமி தொடர்ந்த டெக்கான் ஹெரால்டு வழக்கில் சுமன்துபே பெயரும் அடக்கம். அமேதி மற்றும் ரேபரலி தொகுதியை பார்த்துக் கொள்ளும் சோனியாவின் சிறப்பு பிரதிநிதி கிஷோர் லால் ஷர்மா இவர்கள் தான் ராகுலுக்கு நெருக்கமானவர்கள். கடந்த காலம் முதல் தற்போது வரை ராகுலை வழிநடத்துபவர்கள். இவர்களுக்கு மாநில காங்கிரஸூக்கும் இடையே அதிக இடைவேளை இருப்பதால் மாநில அளவில் என்ன நடைபெறுகிறது என்பதை ராகுல் அறிவதும் அல்லது மாநில காங்கிரசார் ராகுலுக்கு சொல்வதும் கடினம். இந்த தூரத்தை சரி செய்ய கள அரசியலில் உள்ளவர்களோடு ராகுல் இணைப்பு பாலம் அமைப்பது இன்றைய காங்கிரசின் முக்கிய தேவைகளுள் ஒன்று.

சோனியாவுக்கு இருந்த சில சிக்கல்கள் ராகுலுக்கு இல்லை. 13 ஆண்டு கால ராகுல் அரசியல் பயணத்தில் கட்சியின் அமைப்பு, நிர்வாகம், ஆட்சி அதிகாரம் அனைத்தையும் நேரடியாக களத்தில் பார்த்தவர் ராகுல் காந்தி. இந்த அனுபவம் கடந்த காலங்களில் செய்த தவறுகளை திருத்திக் கொள்ள உதவும். ராகுலுக்கு அதிகாரப்பூர்வமான பொறுப்புகள் இப்போது தான் கொடுக்கப்பட்டிருந்தாலும் ராகுலின் ஆலோசனைகள் காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு அசைவிலும் கடந்த காலங்களில் இருந்தது கண்கூடு. வெளிப்படையாகவே ராகுல் காந்தி 2013ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் தலையிட்ட இரண்டு உதராணங்களை சொல்லலாம். ஒன்று சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தண்டனை தொடர்பான ஷரத்தை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ராகுல் எதிர்ப்பு தெரிவித்தது. மற்றொன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஏற்றத்தை அறிவித்த சில நாட்களிலயே தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்து திரும்ப பெற வைத்தது. இது இரண்டுமே ராகுல் நேரடியாக மன்மோகன்சிங் ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டது.

காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் புது டெல்லியில் அக்பர் ரோட்டில் உள்ளது. ஆனால் சோனியா காந்தி தனது வீடுள்ள எண் 10, கன்பத் இல்லத்தை தான் கட்சி அலுவலகமாக பயன்படுத்தினார். காங்கிரஸ் கட்சியின் ஆண்டு விழா போன்று சில விழாக்களுக்காக மட்டுமே தலைமை அலுவலகம் வருவார். மற்றபடி கட்சி வேலைகள், தலைவர்களை சந்திப்பது அனைத்தையும் கன்பத் இல்லத்தில் தான் சோனியா முன்னெடுத்தார். சோனியாவின் இல்லத்திற்கு சாமான்யர்களால் செல்ல முடியாமல் போனது. அதீத பாதுகாப்பை கொண்டுள்ள கன்பத் இல்ல அலுவலகம் காங்கிரசின் அடிமட்ட தொண்டனுக்கு எட்டாகனியானது. இது சோனியாவிடமிருந்த மிகப் பெரிய குறை. ராகுல் அடிக்கடி கட்சி அலுவலகம் வந்து தொண்டர்களை சந்திப்பது, அவர்கள் கோரிக்கைகளை கேட்பது அவசியம். இன்னும் சொல்லப் போனால் காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கே முதலில் உயிர் கொடுக்க வேண்டிய கட்டாயம் ராகுலுக்கு இருக்கிறது.

ஒத்த கருத்துடைய எதிர்கட்சியினரை ஒருங்கிணைக்க ராகுல் காந்தியால் முடியுமா? நாளை பார்க்கலாம்...

முந்தைய கட்டுரையைப் படிக்க...

(கட்டுரையாளர் சுகிதா, கவிஞர், ஊடகவியலாளர்)

Rahul Gandhi Sugitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment