Advertisment

நதிநீர் இணைப்பும் நீரியல் பார்வையும்

நதி நீர் இணைப்பால் அரசு சொல்வது போல் நன்மை உண்டா? என்பதை நிரியல் பார்வையில் விரிவாக விளக்குகிறார், கட்டுரையாளர் கோ.சுந்தர்ராஜ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
river-linking-8-638

கோ.சுந்தராஜன்

Advertisment

நதிநீர் இணைப்பை செயல்படுத்த நினைக்கும் அரசுகளும், திட்டத்தை ஆதரிப்பவர்களும் முக்கியமாக சொல்வது இரண்டு காரணங்கள்.

அவை

1. ஆறுகளில் உபரியாக ஓடும் நீரை, தண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு கொண்டு சென்று விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்துவது

2. வெள்ளம் கடுமையாக வரும்போது மற்ற பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு சென்றால், வெள்ள சேதத்திலிருந்து பகுதிகளை காப்பாற்றலாம், தண்ணீர் குறைவாக உள்ள பகுதிகளுக்கும் நீரை கொண்டுசெல்லலாம்.

முதலாவது காரணத்தை எடுத்து கொண்டு ஆராய்வோம்,

இந்தியாவில் ஓடிக்கொண்டிருக்கும் எந்தவொரு நதியிலும் உபரி நீர் கிடையாது என்று மத்திய நீர்வள கமிஷன் தெரிவித்துள்ளது, குறிப்பாக நீரியல் வல்லுனர் மிஹிர் ஷா இதை அழுத்தமாக சொல்கிறார். பிரம்மபுத்ரா நதியில் மட்டும் அஸ்ஸாமிற்கு மேற் பகுதியில் கொஞ்சம் உபரி நீர் ஓடுகிறது, அதுவும் இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், எந்த உபரி நீரை எங்கே கொண்டு செல்வார்கள்?

ஒரு நல்ல உதாரணம் சொல்கிறேன்: சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் வெற்று முழக்கங்களுடன் நடைபெற்ற கிருஷ்ணா-கோதாவரி இணைப்பு நிகழ்வு. கிருஷ்ணா -கோதாவரி இணைப்பு திட்டத்தில் முக்கியமாக முன்வைக்கப்பட்ட விசயம், கோதாவரியில் உள்ள உபரி நீரை கிருஷ்ணா நதியில் கொண்டு போய் சேர்த்து வளம் கூட்டுவது என்பதுதான். இதில் வேடிக்கை என்னவென்றால், கோதாவரி படுகையில் தான் மிகவும் வறட்சியான "மராத்வாடா பகுதி" வருகிறது. எனவே உபரி நீர் எந்த இடத்திலும் கிடையாது.

நதிநீர் இணைப்பு நாம் நினைத்துப் பார்க்க முடியாத மிகப்பெரிய திட்டம். இதன் கீழ் இமாலய நதிகள் பதினான்கையும் இணைக்கவிருக்கிறார்கள். அது போல பதினாறு தீபகற்ப நதிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்கவிருக்கிறார்கள். தவிர கங்கையையும் காவிரியையும் இணைக்க திட்டமிடுகிறார்கள். இந்த மிக பிரம்மாண்டமான திட்டத்தில் இரண்டை மட்டுமே எடுத்துக் கொண்டு பேசுவோம்.

கென்-பெட்வா நதிகள். இந்த இரண்டு நதிகளும் விந்திய மலையில் பிறந்து வடக்கு நோக்கி பாய்ந்து யமுனையுடன் கலக்கின்றன. ஒரே இடத்தில் உற்பத்தியாகும் நதிகள் என்றால் ஒரே சமயத்தில் வெள்ளமும் இருக்கும் வறட்சியும் இருக்கும். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையை வெள்ளம் சூழ்ந்த போது கடலூரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது, அதற்காக அடையாற்றிலிருந்து கடிலம் ஆற்றுக்கு தண்ணீரை திசை திருப்புவது பொருத்தமானதாக இருக்குமா? நிச்சயம் கிடையாது. அதே போல தான் இரண்டு நதிகளிலும் வெள்ளம் போகும் போதும் எந்த நீரை கொண்டு போய் எந்த நதியில் விடுவது? ஷர்தா-யமுனா இணைப்பிலும் இந்த சிக்கல் இருக்கிறது.

நதி நீர் இணைப்புக்கான இன்னொரு முக்கியமான வாதம், வெள்ளம் வரக்கூடிய காலகட்டத்தில் நீரை மடைமாற்றி, வெள்ளத்தின் பாதிப்புகளை குறைத்து நீர் தேவைப்படும் இடங்களுக்கு எடுத்து செல்வது. இந்த யோசனையை யார் சொன்னார்கள், எப்படி சொன்னார்கள் என்றே தெரியவில்லை. பிரம்மபுத்ரா நதியின் அகலம் அசாம் மாநிலத்தில் 3.5 கிலோமீட்டர், அதாவது ஒரு கரையில் இருந்து பார்த்தால் இன்னொரு கரை தெரியாது. அந்த அளவிற்கு அகலம் கொண்ட நதியால் வெள்ளத்தை தாங்கமுடியவில்லை, கறைகளை கடந்து மூன்று மடங்கு அதிகமாக போகும் தண்ணீர். அவ்வளவு அகலம் கொண்ட நதிகளை 50 மீட்டர் அல்லது 100 மீட்டர் அகலத்தில் கட்டப்படும் கால்வாய்களை கொண்டு வெள்ளத்தை கட்டுப்படுத்த நினைப்பது எவ்வளவு பெரிய அறிவீனம் என்பதை உணர்ந்து கொள்ள நாம் ஜி.எஸ்.டி புள்ளியாக இருக்கவேண்டியதில்லை, கொஞ்சம் பொது அறிவு இருந்தாலே போதும். இந்தியாவில் வருடம் ஒன்றிற்கு கிட்ட தட்ட 41,000 டி.எம்.சி கடலில் சென்று கலக்கிறது, மகாநதியில் மட்டும் 3,000 டி.எம்.சி, இவ்வளவு நீரை மடைமாற்றுவதற்கு நீங்கள் கங்கா போல், பிரம்மபுத்ரா போல் நதிகளை கட்ட வேண்டும், இவர்கள் சொல்வது வெறும் 100 மீட்டர் அகலம் கொண்ட கால்வாய்கள். சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது, கடலுக்கு போன நீரின் அளவு 320 டி.எம்.சி. யோசித்துப்பாருங்கள், 41,000 டி.எம்.சி தண்ணீரின் அளவை. நதிகளை இணைப்பதின் மூலம் அதிகபட்சமாக 10% நீர் மடைமாற்றம் செய்ய முடியும். அதாவது 4,000 டி.எம்.சி நீரை மடைமாற்றம் செய்ய முடியும், அதுவும் வெள்ளம் வரக்கூடிய நாட்கள் என்றால் அதிகபட்சமாக 1000 டி.எம்.சி நீரை மட்டுமே மடைமாற்றம் செய்ய முடியும்.

சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி வைத்திருந்தால் நீங்கள் 80முதல் 100 டி.எம்.சி நீரை சேமித்து வைக்கமுடியும். இப்போது யோசித்துப்பாருங்கள் இந்தியா முழுமைக்கும் உள்ள நீர் நிலைகளை தூர்வாரி, செப்பனிட்டு வைத்தால் எத்தனை ஆயிரம் டி.எம்.சி நீரை நீங்கள் சேமிக்க முடியுமென்று ?

வெள்ளம் நல்லது: கரை நல்லது என்று ஒரு விளம்பரத்தில் வரும், அது போல் வெள்ளம் நல்லது. வெள்ளம் வரும் போது அதிகப்படியாக வண்டல் மண்ணை எடுத்துவரும், அப்படி உருவானவை தான் டெல்டா மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகள். இயற்கையான வெள்ளம், டெல்டாவிலும் பிற பகுதிகளிலும் நன்னீரை மீள்நிரப்பு செய்து நிலத்தடி நீரை வளமாக வைத்திருக்க உதவும். திடீரென வெள்ளம் இல்லாவிட்டால், மெதுவாக கடல்நீர் நிலத்தினுள் உட்புகுந்து நிலம் உலர்ந்து பாலைவனமாக மாறும். வெள்ளத்தால் கடைமடை பகுதியில் வந்து விழும் வண்டல் மண், கடல் அரிப்பை தடுத்து நிறுத்தும். வங்காள விரிகுடா படுகை பகுதியில் அதிகமாக நன்னீர் இருப்பது நல்லது, அதனால் தான் நீரில் உப்பின் அளவு குறைந்து, நீர் ஆவியாகி மேகமாகி நமக்கு கோடை மழையை கொண்டு வருகிறது. இதில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும் நமக்கு கிடைக்கும் பருவ மழையில் மாற்றம் வரும். அதிக அளவில் அணைகள் கட்டி, அவற்றில் நீரை அதிகமாக தேக்கினால், நீரின் அழுத்தம் நிலப்பிளவுக்குள் அழுத்தத்தை தந்து நிலநடுக்கம் வருவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

புவி வெப்பமயமாதலும் காலநிலை மாற்றமும் இந்தியாவை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வேளையில், மழை பொழிவின் தன்மைகள் அதிகமாக மாறி வருகின்றன. 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய பருவமழை குறித்து வெளிவந்த முக்கியமான ஆய்வு ஒன்றில் காலநிலை மாற்றத்தால் இந்த சமயத்தில் அதிகமாக மழை பெய்கின்ற இடங்களில் மழையின் அளவு குறையும் என்றும் அடர் மழை பெய்யாத இடங்களில் அப்படி பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி நடக்கும் பட்சத்தில் நதிநீர் இணைப்பின் மூலம் உருவாக்கப்படும் கால்வாய்களால் எந்த பலனும் இருக்காது. இமய மலையில் உள்ள பனி பாறைகளும் வேகமாக உருகி வருகின்றன. இந்த திட்டங்கள் முழுவதும் முடிவடையும் சமயத்தில் கிட்டத்தட்ட 75% பனி பாறைகள் உருகியிருக்கும், கங்கையில் நீர் என்பதே இல்லாமல் போயிருக்கலாம், அப்போது பள்ளத்தில் இருந்து மேட்டு பகுதிக்கு நீரை கொண்டு போக முடியுமா?

ஏற்கனவே தக்‌ஷின பீட பூமி் (deccan plateau) பல இடங்களில் கங்கை சமவெளிப்பகுதியை விட உயரத்தில் உள்ளது. நீரை பள்ளத்திலிருந்து மேட்டு பகுதிக்கு கொண்டு அதிக அளவில் நீரேற்றம் செய்ய வேண்டி இருக்கும், அதிக அளவில் மின்சாரம் தேவைப்படும்..

இப்போது சொல்லுங்கள், நீரியல் பார்வையில் கூட நதி நீர் இணைப்பு சாத்தியமான திட்டம்தானா? அழிவுகளின் தோற்றுவாயாகவே அந்த திட்டம் நிச்சயம் இருக்கும்.

கோ.சுந்தர்ராஜனின் முந்தைய கட்டுரையைப் பட்டிக்க...

G Sundarrajan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment