ஆர்.எஸ்.எஸ்.ஐ நம்பி ஏமாறமாட்டோம்!

இந்து அமைப்புகளாக திகழும் இந்து மஹாசபா, ராம சேனா, இந்து ராஷ்ட்ர சேனா போன்ற அமைப்புகளில் இருந்து வித்தியாசப்படுகின்றதா ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.

ஷம்சுல் இஸ்லாம்

ஒரு விபத்தின் போது காயப்படும் மனித உடலின் பகுதிகளை மறுசீரமைத்து சரி செய்ய பிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்படும். சில நேரங்களில் பிளாஸ்டி சர்ஜரி என்ற வார்த்தையினை பயன்படுத்தி ஒரு நிறுவனத்தின் பிற்போக்கான எண்ணங்களை கொள்கைகளை மாற்றிக் கொள்வது வழக்கம். சில இடங்களில் இந்த பிளாஸ்டிக் சர்ஜரி போன்றவை வேலை செய்யாது. இதைத்தான் அரசியல் மறுகட்டமைப்பு என்று இராகேஷ் சின்ஹா அவர்களின், மே 2, இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான அவருடைய கட்டுரை நமக்கு விளக்குகின்றது.

சின்ஹா அவர்களின் கட்டுரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு ஆதரவான கருத்துகளை வெளியிட்டும், பாசிச, சர்வாதிகார, மதகுருக்களின் அமைப்பில் இயங்கும் ஹிந்துத்துவ அமைப்புகள், மற்றும் விடி சவர்கர், பிஎஸ் மூஞ்ச் ஆகியோர்களை எதிர்த்தும் வெளிவந்திருக்கின்றது. இந்து அமைப்புகளாக திகழும் இந்து மஹாசபா, ராம சேனா, இந்து ராஷ்ட்ர சேனா போன்ற அமைப்புகள் இந்தியாவில் ஒரு இந்து இராஜ்ஜியம் நிகழ வேண்டும் என்று விரும்புகின்றார்கள். ஐரோப்பாவில் ஹிட்லரும், முசோலினியும் நினைத்தது போல். சில போலியான ஊடக அமைப்புகள் மேற்கூறிய அனைத்து இயக்கங்களும் உண்மையான இந்துத்துவத்தை பிரதிபலிக்கின்றது என்று விளம்பரப்படுத்துகின்றது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பே பிற்போக்கு பண்புடன் திகழும் மற்ற அமைப்புகளில் இருந்து மக்களை பாதுகாத்து வருகின்றது என்றும் எழுதியிருக்கின்றார். ஆதாரத்திற்கும் CPM நிறுவர், ஏ.கே. கோபால், ஆர்.எஸ்.எஸ் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கிய பதிலை முன் வைக்கின்றார் சின்ஹா. சின்ஹாவின் கருத்தினை ஒப்பிட்டு பார்த்துவிடலாம்.

1940ஆம் ஆண்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மிக முக்கிய சிந்தனையாளரான எம்.எஸ். குரு கோல்வாக்கர் அவர்கள் வெளிப்படுத்திய கருத்தினை இங்கு காண்போம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஒரு கொடி, ஒரு தலைவர், ஒற்றைச் சிந்தனையை மையமாகக் கொண்டு இந்துத்துவ கொள்கையினை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் சென்று சேர்க்க வேண்டும் என்று விரும்பியது. இந்த ஒரு கொடி, ஒரு தலைவர், ஒற்றைச் சிந்தனை என்ற கொள்கையினை நேரடியாக நாஜி மற்றும் இதர பாசிச குழுக்களிடமிருந்து பெறப்பட்ட கொள்கையாகும். அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது கூட்டாட்சி முறையினை வெறுக்கின்றது. கோல்வாக்கர் “நமது அரசியலமைப்பின் கூட்டாட்சி அமைப்பானது ஒரு நாடு, ஒரு நிலைப்பாடு, ஒரு சட்டமன்றம், ஒரு தலைமை என்று இருக்கின்றது. இதனை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க நம் அரசு முன் வரவேண்டும்” என்று கூறினார்.

கோல்வாக்கர் இந்திய சிறுபான்மையின மக்களை நடத்தும் வழி முறையாக ஐரோப்பாவில் நடந்த இன ஒழிப்பு முறையை சுட்டிக்காட்டியவர். 1939ல் “தன் இனத்தையும் கலாச்சாரத்தையும் காத்துக்கொள்ள ஜெர்மனி யூதர்களை பலியிட்டது. ஜெர்மனியின் இனத்தையும் கலாச்சாரத்தையும் தேடிக் கொண்டு செல்லும் போது அங்கு பலவகையான பாதைகள் இருப்பதையும் ஜெர்மனி விரும்பவில்லை. இது இந்தியாவிற்கான பாடம். இதனை நடைமுறைப்படுத்தி நாட்டை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்” என்று எழுதியிருக்கின்றார்.

ஆர்.எஸ்.எஸ் மதசார்பற்ற குடியாட்சி இந்தியாவை விரும்புவதே இல்லை. சுதந்திரம் பெறுவதற்கு முதல்நாள் மாலையில் ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆங்கில பத்திரிக்கையான ஆர்கனைசர் “இந்த நாடானது தவறானவர்களின் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது. இந்துஸ்தானில் இந்துக்களே ஆட்சியினை அமைக்க வேண்டும். இந்த நாடானது இந்துக்களுக்காக, இந்து கலாச்சாரம், பண்பாடு, சிந்தனைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும்” என்று எழுதியது. 1949ல் இந்திய அரசியலமைப்பினை எதிர்த்தும் அதற்கு பதிலாக சூத்திரர்களையும் பெண்களையும் தொடர்ந்து அடிமையாக வழி நடத்த கட்டாயப்படுத்திய மனுநீதி தர்மத்தினை பின்பற்ற வேண்டும் என்று எழுதியது.

ஆர்.எஸ்.எஸ், இந்திய கொடி, இந்திய குடியரசு, மற்றும் மதசார்பற்ற தன்மை என அனைத்தையும் விமர்சித்தது. 1947ல் ஆர்கனைசர் பத்திரிக்கையில் “மூன்று என்ற சொல்லிலே தீய சக்திகள் இருக்கின்றன. அதனால் மூவர்ணக் கொடியும் நாட்டிற்கு தீய எண்ணங்களையே கொண்டு வரும். ஆட்சி பொறுப்பிற்கு வந்தவர்கள் மூவர்ணக் கொடியினை நம் கையில் திணிக்கின்றார்கள். இந்துக்களாகிய நாம் அதை ஒரு போதும் எற்றுக் கொள்ளக் கூடாது” என்று பிரசுரித்தது. நல்ல வேலையாக, இந்து இராஜ்ஜியத்திற்கு நாம் கட்டுப்படுகின்றோம் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பு கூறும் உறுதிமொழி மற்றும் பிரார்த்தனைப் பாடல் பற்றி சின்ஹா எழுதாமல் விட்டுவிட்டார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது மற்ற இந்துத்துவ கலகக் குழுக்களிடமிருந்து வேறுபட்டது என்று கூறும் கூற்றும் பொய். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஹெச்.வி. ஷேசாஸ்த்ரி அவர் இவ்வாறு எழுதியிருக்கின்றார். “ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவனர் ஹெட்ஜ்வர் அவர்களுக்கு சவர்கர் அவரின் இந்துத்துவா கொள்கை மிகவும் பிடித்துப் போய்விட்டது”. தனன்ஜெய் கீர் என்னும் எழுத்தாளர் “ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உருவாக்கப்படுவதற்கு முன், ஹெட்ஜ்வர் சவர்கரிடம் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்” என்று கூறியிருக்கின்றார். மூஞ்ச் அவர்கள், இந்து இராணுவ அமைப்பினை உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டிருந்த போது ஹெட்ஜ்வர் மிக முக்கியமான கமிட்டி உறுப்பினராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தகக்து. மூஞ்ச் இத்தாலியில் 12 நாட்கள் முசோலினியுடன் தங்கிவிட்டு ஹெட்ஜ்வர் அவருடன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். அதன் விளைவாகவே ராம சேனை உருவானது என்று வரலாற்று ஆசிரியர் ஹெச்.வி. பிங்கல் குறிப்பிட்டிருக்கின்றார். பின்னர் இராம சேனையில் ஹெட்ஜ்வர் படைத்தளபதியாகவும் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

சின்ஹா தன்னுடைய நேரத்தில் ஆர்.எஸ்.எஸ் பற்றிய வரலாற்றுப் பக்கத்தினை படிக்கவும் செலவிடுவது நல்லது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், 8.5.18 அன்று ஷம்சுல் இஸ்லாம் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். கட்டுரையாசிரியர் ஷம்சுல் இஸ்லாம், டெல்லி பல்கலை கழகத்தில் அரசியல் விஞ்ஞானம் கற்பித்தவர்.

தமிழாக்கம் : நிதியா பாண்டியன்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close