Advertisment

சமூகநீதி என்பது சாதி அடிப்படையிலானது மட்டுமல்ல

சமூக நீதி என்பது வெறும் சாதி அடிப்படையிலானது அல்ல. சமூகத்தின் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்பட்டவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்கு உதவுவதே சமூகநீதி.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Social Justice - MGR - Karunanidhi - Jayalalitha

இரா.குமார்

Advertisment

இந்தியாவின் எந்த மாநிலத்தைவிடவும் சமூக நீதி ஆழமாக வேறூன்றி நிலை பெற்றிருப்பது தமிழகத்தில்தான். இதற்குக் காரணம், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலையை நன்கு உணர்ந்திருந்த காமராஜர், பெரியார், அண்ணா போன்ற தலைவர்கள்தான்.காமராஜர் எடுத்த முயற்சியால்தான், நேரு பிரதமராக இருந்தபோது, இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தில் முதன்முதலாக திருத்தம் கொண்டுவரப்பட்டது. கடந்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியும், தமிழகத்தில் சமூகநீதி நிலைபெற முக்கியக் காரணம்.

வட மாநிலங்கள் பலவற்றில் இன்னமும்கூட மக்களிடம் சமூகநீதி பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை. அதனால்தான், வி.பி.சிங் ஆட்சியில் மணடல் கமிஷன் அறிக்கை அமல்படுத்தப்பட்டு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்த்தவர்கள் யார் தெரியுமா? யாருக்கு இடஒதுக்கீடு சலுகை வழங்கப்பட்டதோ அவர்களே எதிர்த்தார்கள். எங்களை எப்படி பிற்படுத்தப்பட்டவர் என்று சொல்லலாம் என்று கொந்தளித்தார்கள். இடஒதுக்கீட்டால் கிடைக்கும் பயனைவிடவும் தான் உயர்ந்த சாதி என்று சொல்லிக் கொள்வதையே பெருமையாக நினைத்தார்கள். அதனால், தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியதை எதிர்த்து தெருவுக்கு வந்து போராடினார்கள்.

ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை தலைகீழ். முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த சில சாதியினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து, இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டு வருகின்றனர். காரணம், இடஒதுக்கீட்டின் பயன் பற்றிய போதிய விழிப்புணர்வு இங்கே இருப்பதுதான்.

இடஒதுக்கீடு 50 சதவீதத்தைத் தாண்டக்கூடாது என்று அரசியல் சாசனம் சொல்கிறது. இதனால், தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கான 19 சதவீத இடஒதுக்கீடு போக மீதி உள்ள 31 சதவீத இடஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டது. 31 சதவீதம் என்பதை 40 சதவீதமாக உயர்த்தினார் எம்ஜிஆர். இடஒதுக்கீடு சதவீதம் 69 ஆனது. 1991- 96ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 69 சதவீத இடஒதுக்கீடு அரசியல் சாசனத்தை மீறும் செயல் என்று சிலர் நீதிம்னறம் சென்றனர். பெரும் சட்டப் போராட்டத்தின் மூலமும் மத்திய அரசில் தனக்கிருந்த செல்வாக்கின் மூலமும் 69 சதவீத இடஒதுக்கீட்டை தக்கவைத்தார் ஜெயலலிதா.

பிற்படுத்தப்பட்டோருக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோதும், இந்த சலுகை சிலருக்குப் போய்ச் சேரவில்லை. குறிப்பாக வன்னியர்கள், இடஒதுக்கீடு சலுகையால் தங்கள் சமூகம் பயனடையவில்லை; வன்னியருக்கென்று தனியாக இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்டு பெரும் போராட்டம் நடத்தினார்கள். வன்னியர் மட்டுமன்றி வேறு சில பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் சேர்த்து, மிகவும் பிற்படுத்தப்படோர் என்ற பிரிவை உருவாக்கினார் 1989-90ல் முதல்வராக இருந்த கருணாநிதி. பிற்படுத்தப்பட்டோருக்கான 40 சதவித இடஒதுக்கீட்டில், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீதம் ஒதுக்கினார். இதனால், இந்த பிரிவினர் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.

இப்படி சமூகநீதி வழங்குவதற்காக சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோதும், அது சிலருக்கு சரியாகப் போய்ச்சேரவில்லை. அந்த சிலர் யாரென்றால், கிராமப்புறங்களில் படிக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள்தான். இவர்களுக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக 1990ம் ஆண்டுகளின் இறுதியில் கிராமப்புற மாணவர்களுக்கு 15 சதவீதம் உள்ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தார் கருணாநிதி. இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர். சட்டம் செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ”மனத்தைச் செலுத்தாமல் நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்” என்று வருத்தம் தெரிவித்தார் கருணாநிதி.

மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்கல்விகளில் சேர நுழைவுத் தேர்வு முறை, எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு கட்டத்தில், நுழைவுத் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்ற கருத்து எழுந்தது. நகரங்களில் உள்ள மாணவர்கள், நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்று, நுழைவுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர்ந்தனர். ஆனால், நுழைவுத் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு கிடைப்பதில்லை. அதற்கான பொருளாதார வசதியும் அவர்களுக்கு இல்லை. இதனால், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றபோதும் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் குறைந்து, மருத்துவம், பொறியியல் படிக்கும் வாய்ப்பை இழந்தனர். இதன் மூலம் கிராமப்ப்புற மாணவர்களுக்கான சமூக நீதி மறுக்கப்படுகிறது என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. இதில் உள்ள நியாயத்தை உணர்ந்த கருணாநிதி, நுழைவுத் தேர்வை ரத்து செய்தார். பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு பலருக்கு பலனளித்தது. நுழைத்வுத் தேர்வால் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த பலர், நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதும் மருத்துவம் படிக்கும் வாய்ப்பைப் பெற்றனர். படித்துக்கொண்டிருந்த பொறியியல் படிப்பை விட்டுவிட்டு, மருத்துவப்படிப்பில் மகிழ்ச்ச்சியுடன் சேர்ந்தனர்.

நுழைவுத் தேர்வு ரத்து மூலம் கிராமப்புற மாணவர்களுக்குக் கிடைத்த சமூக நீதி, இப்போது நீட் தேர்வு மூலம் பறிக்கப்பட்டுள்ளது.

”நீட் தேர்வு மூலம் சமூக நீதி மறுக்கப்படவில்லை. பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவர்களுக்கு உரிய இடம் தரப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டவர்கள் இத்தனை பேர், தாழ்த்தப்பட்டவர்கள் இத்தனை பேர் மருத்துவக்கல்வியில் சேர்ந்துள்ளனர்” என்று நீட் ஆதரவாளர்கள் நீட்டுகின்றனர்.

அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக நீதி என்பது சாதி அடிப்படையிலானது மட்டுமல்ல. பதிக்கப்பட்டவர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் சமமாக வாய்ப்பு வழங்குவதுதான் சமூகநீதி. சென்னையில் படிக்கும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவனையும் ஏதோ ஒரு கிராமத்தில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பது சரியாக இருக்குமா? சென்னையில் படிக்கும் மாணவனுக்குக் கிடைக்கும் அனுபவமும், அறிவைப் பெறும் வாய்ப்பும் கிராமத்தில் படிக்கும் மாணவனுக்குக் கிடைக்குமா? நிச்சயம் கிடைக்காது.

சென்னையில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவன், பயிற்சி மையத்தில் சேர்ந்து, நீட் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். ஆனால், கிராமப்புற மாணவனுக்கு இந்த வாய்ப்பு இல்லை. பயிற்சி மையத்தில் சேரும் வாய்ப்போ, அதற்கான பொருளாதார வசதியோ அவனுக்குக் கிடையாது. இதனால், நீட் தேர்வில் அவனால் அதிக மதிப்பெண் பெற முடியாது. நகரத்தில் படித்த மாணவனை விடவும் அதிக மதிப்பெண் பெற்ற போதும் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் கிராமப்புற மாணவனுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நியாயமாக அவனுக்குக் கிடைக்க வேண்டிய சமூக நீதி மறுக்கப்படுகிறது. இதற்குக் காரணம் நீட் தேர்வு.

இப்படி சமூகநீதி மறுக்கப்பட்டதால்தான் அனிதாவை இழந்தோம். சாதி பார்த்து மட்டும் கொடுக்கப்படுவதல்ல சமூக நீதி. பாதிக்கப்பட்ட, ஒவ்வொருவருக்கும் சம வாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டும். அதுதான் உண்மையான சமூகநீதி.

Mgr Neet Anitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment