Advertisment

எல்லையற்ற மதவாதம்

உலகெங்கும் கொண்டாடப்படும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பு கொண்டாட்டங்களில் சில இடையூறுகள். சிலரின் தேவையில்லாத வெறுப்பூட்டும் செயல்பாடுகள். அவதூறான முன் மொழிவுகள். இவை அனைத்துமே பிரதமரிடம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை.

author-image
WebDesk
New Update
எல்லையற்ற மதவாதம்

இந்துக்களைப் போலவே முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் அனைவரும்  இந்தியர்கள் தான். அவர்களுக்கும் தத்தமது மத உரிமைகளை கடைப்பிடிக்க உரிமை உண்டு. அரசியலமைப்பின் 25ம் பிரிவின் படி அவர்களுக்கு அவர்களது மதத்தைப்  பரப்பவும் உரிமை உண்டு.



முதலில் அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் பேசவில்லை

Advertisment

ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை

பின்னர் அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தனர், நான் பேசவில்லை

ஏனென்றால் நான் சோசலிஸ்ட் இல்லை

பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தனர், நான் பேசவில்லை

ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி  இல்லை

பின்னர் அவர்கள் யூதர்களைத் தேடி வந்தனர், நான் பேசவில்லை. ஏனென்றால் நான் யூதன்  இல்லை

பின்னர் அவர்கள் எனக்காக வந்தார்கள் - அப்போதும் யாரும் எனக்காக பேசவில்லை.



மார்ட்டின் நிமோல்லர், ஜெர்மன் இறையியலாளர் (1892-1984)



டிசம்பர் 25,  சனிக்கிழமை  அன்று கிறிஸ்துமஸ்  கொண்டாட்டங்கள் முடிவதற்குள் சில இடங்களில் கிறிஸ்துவம் தொடர்பான அவதூறுகள் தலை தூக்கின. ஒரு ஆண்டுமுடிந்தது மறு ஆண்டு துவங்கும் நிலையில் இதில் அபத்தங்களே நிறைந்திருந்தன. கடந்த இரண்டு வாரங்கள் கிறிஸ்துவர்களுக்கு சவாலாகவே இருக்கும் அளவுக்கு சூழல் உள்ளது.     



கடந்த  2021 ஆம்  வருடம் முக்கியமானது.  இந்த வருடம் தான் ஜார்கண்ட் பழங்குடியின மக்களிடையே தனது வாழ்நாள் முழுவதையும்  செலவழித்த  தமிழ்நாட்டைச் சேர்ந்த மத போதகர்  ஸ்டான் சுவாமியின் மரணம் நடந்தது. அவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதாக  குற்றம் சாட்டப்பட்டார், சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டார், மருத்துவ காரணங்களுக்காக கூட அவருக்கு ஜாமீன் மறுக்கப் பட்டது. விசாரணை செய்யப்படவில்லை.  நிம்மதியாக சாகக் கூட அனுமதிக்கப்படவில்லை. அன்னை தெரேசாவால் நிறுவப்பட்ட மிஷனரி ஆஃப் சேரிட்டி கூட ஒரு சிறிய கணக்கியல் மீறலுக்காக தண்டனை  அடைந்தது. தனது தொண்டு பணிகளுக்காக வந்த வெளிநாட்டுப் பங்களிப்புகளுக்கான உரிமைகளை பெற முடிய வில்லை.



களங்கப்படுத்தப் படும் கிறிஸ்துமஸ்



கிறிஸ்மஸ் நாளில் நடந்ததை மன்னிக்க முடியாது. கிறிஸ்தவர்கள் தாம் என்ன செய்கிறோம் என தெரியாமல் நடந்து கொள்பவர்களை அதாவது தம்மை களங்கப்படுத்துபவர்களை மன்னிக்கத் தயாராகவே இருந்தார்கள். இதற்கு உதாரணமாக சில சமீபத்திய நிகழ்வுகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம். ஹரியானா மாநிலத்தின் அம்பாலாவில், 1840களில் கட்டப்பட்ட புனித மீட்பர் தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தில் நள்ளிரவு நேரத்தில் இருவர் உள்ளே நுழைந்து  இயேசு கிறிஸ்துவின் சிலையை இடித்து, கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்களை எரித்தனர். அதே மாதிரி இரண்டு நாட்களுக்கு முன்பு, ஹரியானா மாநிலம், குருகிராம் பட்டோடியில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஒரு குழு நுழைந்து, 'ஜெய் ஸ்ரீ ராம்' போன்ற கோஷங்களை எழுப்பி பிரார்த்தனையை சீர்குலைத்தது.



உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் மிஷனரி கல்லூரிகளுக்கு முன்பாக  கிறிஸ்துமஸ் தாத்தா உருவங்கள்  கொளுத்தப் பட்டன. ஆனால் இந்துத்வாவின் ஒரு அங்கமான பஜ்ரங் தளத்தின் தலைவர்கள் இதை நியாயப்படுத்தினர். கிறிஸ்துவர்கள் நமது குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா மூலம் பரிசுகள் கொடுத்து அவர்களை கிறிஸ்துவர்களாக்க  முயல்கிறார்கள் என்று குற்றம் சாட்டினர். இதை சொன்னவர்களுக்கு மிஷனரிகள் தமது பாடசாலைகள் மூலம்  பல பத்தாண்டுகளாக,  ஆயிரக் கணக்கான இந்தியக் குழந்தைகளுக்கு தன்னலமே இல்லாமல் கற்பித்தது நினைவுக்கு வர வில்லை.  



அசாமின் கச்சார் மாவட்டத்தில், காவி உடை அணிந்த இருவர் கிறிஸ்துமஸ் இரவில் பிரஸ்பைடிரியன் தேவாலயத்திற்குள் நுழைந்து அனைத்து இந்துக்களையும் அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு  கோஷங்கள் எழுப்பினர்.  கூடியிருந்த கிறிஸ்துவர்களை பார்த்து உங்களுக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என எச்சரிக்கையும் விடுத்தனர்.  



களத்துக்கு வந்த மதவாதம்  



2021 ஆம் ஆண்டில், பல மாநிலங்கள், குறிப்பாக கர்நாடக மாநிலம் கிறிஸ்தவர்களை இலக்காகக் கொண்டு  மதமாற்ற எதிர்ப்பு மசோதாவை நிறைவேற்றியது. இதை உற்று நோக்கினால்  பிற மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக இந்துக்கள் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள் என்பதற்கு மிகக் குறைவான சான்றுகளே  உள்ளன. ஆர்எஸ்எஸ், பிஜேபி மற்றும் பிற ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்ந்த அமைப்புகள்  இருக்கும்  தீவிர வலதுசாரிகளின் இலக்கு கிறிஸ்தவர்களே  என்பது தெளிவாகிறது. அவர்கள் முக்கிய  அங்கம் வகித்து  மத்திய அரசின் அமைச்சர்கள் குழுவில் கூட பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். முன்பு முஸ்லீம்களை குறி வைத்தனர். இப்போது கிறிஸ்துவர்களை குறி வைக்கின்றனர். அவர்களை வெறுக்கத்தக்கவர்களாக நினைக்கின்றனர். இந்துக்கள் அல்லாதவர்களுக்கு எதிராக வெறுப்பை பரப்புவதன் சுயலாபம் அடைய முயற்சிக்கின்றனர்.



ஆறு மாதங்களுக்கு முன்பு, டெல்லியில் 'சுல்லி டீல்ஸ்' என்ற பயன்பாடு தோன்றியது,  அதே நேரத்தில்  ஆறு மாதங்களுக்கு முன்பாகவே மும்பையில் 'புல்லி பாய்' என்ற மற்றொரு பயன்பாடு தோன்றியது. இந்த  செயலிகள்  முஸ்லீம் பெண்களை  தவறாக சித்தரித்து  ஆன்லைனில் ஏலத்தில் விடும் ஒரு செயலை கையில் எடுத்தன.  புல்லி பாயை  விளம்பரப்படுத்திய ட்விட்டர் தனது ட்வீட்களில்  'ஜதீந்தர் சிங் புல்லர்' மற்றும் 'ஹர்பால்' போன்ற சீக்கியப் பெயர்களைப் பயன்படுத்தியது. ஒரு வேளை இது  இந்துத்வாவின் சீக்கியர்கள் மீதான குறியாக இருக்கலாம். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் இந்துக்களை போலவே இந்தியர்களாக வாழும் உரிமை படைத்தவர்கள் தான். அவர்களுக்கு தங்கள் மதத்தை கடைப்பிடிக்க உரிமை உண்டு, அரசியலமைப்பின் 25 வது பிரிவை நீங்கள் படித்திருந்தால், அவர்களின் மதத்தையம் பரப்புவதற்கான உரிமை உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். ஆனால் தீவிர வலதுசாரிகள் தங்கள் மதத்தைப் பின்பற்றும் பிற மதத்தினரின் உரிமைக்கு சவால் விடுகிறார்கள். இது அரசியலமைப்புக்கு எதிரானது.



திரு மோடியின் நிகழ்ச்சி நிரல்



அரித்துவாரில்  நடந்த சில நிகழ்ச்சிகளிலிருந்து சில முக்கிய விஷயங்களை நாம் புரிந்து கொள்ள முடியும். அதன் சில பகுதிகளை நாம் இப்போது பார்க்கலாம்.  



"நீங்கள்  அவர்களை  (மாற்று மதத்தினரை) வேரறுக்க  விரும்பினால், அவர்களைக் கொன்று விடுவதே சிறந்தது. இதை செய்து முடிக்க வேண்டுமானால்  20 லட்சம் பேரைக் கொல்லக்கூடிய 100  படை வீரர்கள்  தேவை. அவர்கள்  கொல்ல  நினைப்பது முஸ்லீம்களாக இருக்கலாம். ஓன்று கொலை செய்ய வேண்டும் அல்லது கொல்லப் பட வேண்டும். வேறு வழியில்லை. ஒவ்வொரு இந்துவும் மியான்மரில் நடந்ததைப் போல காவல்துறை, ராணுவம், அரசியல்வாதிகள் உட்பட அனைவரிடமும்  பேச்சு வார்த்தையை தொடங்க வேண்டும். இது ஒரு இனப் படுகொலைக்கான அழைப்பாக இருந்து  விடக் கூடாது.



இவை பைத்தியக்காரர்களின் கூக்குரல் இல்லை. அதிலும் சில முறைமைகள் உண்டு.  ஹிலால் அகமது என்பவர்  தான் ஜனவரி 6ம், 2021  அன்று  தி இந்தியன் எக்ஸ்பிரஸில் எழுதிய கட்டுரையில்  மோடி தனது  நிகழ்ச்சி நிரலை எவ்வாறு  மறு வரையறை செய்துள்ளார் என்பது குறித்து சொல்லியிருக்கிறார். அகமது சொல்லியபடி கோவிட் பேரழிவு, விவசாயிகள், வளர்ந்து வரும் பொருளாதார நெருக்கடி போன்றவை மோடியை "இந்துத்துவாவின் பிடியில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவும் தன்னை தலைவனாக காட்டிக் கொள்ளவும் கட்டாயப் படுத்துகின்றன. வளர்ச்சியும் இந்துத்துவாவும் இனி பிரிக்கப்பட வேண்டியதில்லை, இந்த நோக்கத்திற்காக, தீவிர வலதுசாரிகள் இந்துத்துவா தவிர, இந்து அல்லாத மதங்களை மற்றும் அவர்களின் நம்பிக்கையை வளர்ச்சியின் எதிரிகளாகக் காட்டுகின்றனர்.



கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் வரும்  இடையூறுகள், வெறுப்பூட்டும் பேச்சுகள் மற்றும் தீங்கிழைக்கும் பயன்பாடுகள் போன்றவை பிரதமரிடமிருந்து எந்த ஒரு கண்டனத்தையும் எழுப்பவில்லை. நாம்  நமது எதிர்காலத்திற்காக தயாராக வேண்டும். மதவெறி கட்டுப்பாடற்றதாகவும் எல்லையற்றதாகவும் இருக்கும். எனவே நீங்கள் உங்கள் உரிமைகளை  தட்டிக்  கேட்டு  பெறுங்கள். இல்லையென்றால்  உங்களுக்காக யாரும் பேச எங்கும் எவரும் இருக்க மாட்டார்கள்.  

தமிழாக்கம் த. வளவன்   

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment