ஓய்வு பெற்ற இந்திய வருவாய் துறை அதிகாரி சேகர் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் நாளிதழுக்கு அளித்த நேர்காணல் இங்கே:
தேவேந்திரகுல வேளாளர் அரசாணை குறித்து?
ஏழு பட்டியல் பிரிவு இனங்களை தேவேந்திரகுல வேளாளர்களாக வகைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது வரவேற்கத்தக்கது. பட்டியல் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேறும் என்று நாங்கள் நம்புகிறோம்.
சாதி ஒருங்கிணைப்பு குறித்து?
எனக்கு தெரிந்த வரை தேசிய அளவில் பட்டியல் வெளியேற்றம் என்ற கோரிக்கையை இந்த சமூகம் தான் முன்னெடுத்துள்ளது. ஆனால், சாதி ஒருங்கிணைப்பு பல இடங்களில் வெற்றிகரமாக நடந்திருக்கிறது. உதாரணமாக, வடமாநிலங்களில் யாதவ், மராத்தியர்கள் ஒருங்கிணைப்பு ஆட்சி அதிகாரத்திற்கு வழி வகுத்தது. தமிழகத்தில் முக்குலத்தோர் சமூக ஒருங்கிணைப்பை அனைவரும் அறிந்ததே. சாதி ஒருங்கிணைப்பு ஜனநாயகத்திற்கு எதிரனாதாக கருத முடியாது. அதுவும், ஒரு ஜனநாயக நடைமுறை தான். இன்னும், சொல்ல போனால் அது ஜனநாயகத்தை வலுப்படுத்தும்.
மானுடவியல் ஆய்வு குறிப்புகள் குறித்து:
சங்ககால மருதநில உழவரான மள்ளரே பிற்காலத்தில் பள்ளராக அழைக்கப்படுகின்றனர் என்பதை பல அறிஞர்களும் எடுத்துரைத்துள்ளனர். நாயக்கர் வருகையால் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்ட போர்க்குடிகள். ஆனால், இது தீண்டாமை சமூகமாக இருந்ததில்லை.
உதாரணமாக, கி.பி 1528ல் பழனி மலைக்கு மேல் பாலதண்டாயுத பாணி சுவாமி சன்னதி, தேவேந்திர சாதி அறமடம், விநாயகர் கோயில், மடத்தில் 365 நாட்களும் 24 மணி நேரமும் உணவு , கோயில் முன்பு நந்தவனம், மலைமேல் ஏறுபவர்களுக்கு தண்ணீர்ப்பந்தல் ஆகியவை உண்டு பண்ணியுள்ளனர். பழனி செப்பேட்டில் 121 தேவேந்திரர்கள், 85 ஊர்களில் இருந்து வந்த முக்கியஸ்தவர்களின் பெயர் மற்றும் ஊர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த வசதிகளும் இல்லாத காலத்தில் பல ஊர்களின் முக்கியஸ்தர்கள் ஒன்று கூட முடிந்திருக்கிறது. தமிழகம் முழுவதும் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்பட்டுள்ளனர் என்பதும், பிற சமூக அங்கீகாரத்துடன் வாழ்ந்துள்ளனர் என்பதும் பொதுவாக விளங்குகிறது.
தீண்டாமை சாதி அடையாளத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
தீண்டாமை சமூகம் என்பதற்கான அளவுகோல் ஒரு குறிப்பிட்ட அளவில் தான் உள்ளது. உதரணாமாக, கர்நாடகாவில் பட்டியல் சாதி அட்டவணையில் தங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற சில சமூகங்களின் கோரிக்கைகளை கூட பட்டியல் வகுப்பினர் புறக்கணிக்கின்றனர்.
அனைத்து துன்பங்களுக்கும் ஒரே பதிலாக தலித் அரசியலை அம்பேத்கர் முன்னெடுக்கவில்லை. பட்டியல் சாதி என்பதற்கான அடையாளம் ஒரு குறிப்பிட்ட அளவீட்டுடன் நின்றுவிடுகிறது. கோயிலுக்குள் நுழைய முடியாதவர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்பவர்கள் போன்ற எந்த குறியீடுகளும் தேவேந்தர்களுக்குப் பொருந்தவில்லை. நாங்கள் பசுவை தெய்வமாக வணங்குபவர்கள். அதனால், தலித் என்ற வரையறைக்குள் வரமாட்டோம்.
அரசியல் நகர்வுகள் குறித்து?
எங்கள் அரசியல் அணுகுமுறைகளில் மாற்றங்கள் வந்துள்ளது. அரசுக்கு எதிரான, அதிகாரத்துக்கு எதிரான மனோபாவ நிலை மாறியுள்ளது. தற்போது, இந்தியாவின் வளர்ச்சிக்கான மைய நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டு வருகிறோம். பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு கொள்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டோம். நாட்டின் பிரதமரை முன்னிலைப்படுத்துகிறோம். கடந்த, இடைத்தேர்தலில் அதிமுகவின் தேர்தல் வெற்றியை எங்கள் சமூகம் உறுதி செய்தது.
எங்களின் அடிப்படை அரசியல் சொல்லாடல் மாறியிருக்கிறது. உதாரணமாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திராவிடக் கட்சிகளின் முழக்கங்களை ஏற்றுக் கொள்ள வில்லை. அந்தணர்கள் இல்லாமல் தேவேந்திர குல வேளாளர்கள் வரலாற்றை இன்று மீட்டெடுக்க முடியாது. இதை, பழமைவாதமாக கருதுவது நவீனத்துவ அரசியலின் இயலாமை என்று நான் கருதுகிறேன். எல்லா பண்பாட்டு குறியீடுகளையும் அரசியல் மொழிக்குள்ள கொண்டு வர முடியாது.
பாஜக அரசியல் குறித்து:
ஆழ்ந்த சமூக-அரசியல் மாற்றங்களை பாஜக முன்னெடுத்து வருகிறது. அதிகாரம் பெறாத பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தலித் வகுப்பினர் ‘இந்து’ என்ற கட்டமைப்புக்குள் கொண்டு வரப்படுகின்றனர். ஒபிசி, தலித் அரசியல் ராம் ஜன்மபூமி போராட்டத்திற்குப் பிறகு வலுப்பெறத் தொடங்கியது. 2019 தேர்தல் வெற்றியை இஸ்லாம் எதிர்ப்பு அரசியல் என்ற வரையறைக்குள் சுருக்கி விட முடியாது. இந்துத்துவா தன்னிச்சையாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்துத்துவாவின் அரசியல் பாதையை நம்மில் பெரும்பாலானோர் பகுப்பாய்வு செய்வதில்லை.

திராவிட கட்சிகள் பற்றி:
அரசியல் ரீதியாக திராவிடக் கட்சிகள் எங்களுக்கு சம வாய்ப்பை அளிக்கவில்லை. தமிழகத்தில், கணிசமான அளவு தேவேந்திர குல வேளாளர்கள் உள்ளனர். இன்றைய அமைச்சர்களில் எத்தனை பேர் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பதை நான் சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் பதவியில் எத்தனை பேர் தேவேந்திரகுல இனத்தைச் சேர்ந்தவர்கள்? 2010ல் தேவேந்திர குல வேளாளர் பொதுப் பெயர் மற்றும் பட்டியல் வெளியேற்றம் நிறைவேற்ற நாங்கள் கலைஞர் கருணாநிதியைத் தான் முதலில் சந்தித்தோம். நீதிபதி ஜனார்த்தனன் குழுவை அமைத்தார். ஆட்சி மாற்றத்தால் எதுவும் நடைபெற வில்லை. 2015ல் மதுரை மாநாட்டில் அமித்ஷா இந்த கோரிக்கைக்கு வலுவான ஆதரவை அளித்தார். பின்னர், டெல்லியில் பிரதமரை சந்தித்தோம். எங்கள் கோரிக்கைக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக பேசினார்.
இளைய தலைமுறையினருக்கு கூறிக் கொள்ள விரும்புவது?
எந்த சமூகத்திற்குத் தங்களைச் சரியாக அடையாளப்படுத்திக் கொள்ள தெரியவில்லையோ அந்தச் சமூகம் வெற்றி பெற முடியாது.
தேவேந்திரகுல வேளாளர்களுக்கான அரசியல் அதிகாரம் தமிழக அரசியலில் பகிர்ந்தளிக்கப்படவில்லை.
தமிழக அமைச்சரவையில், ஒரே ஒரு ஆதிதிராவிடர் நலத்துறை மட்டுமே, ஒதுக்கப்படுவதை நாங்கள் அவமானமாகக் கருதுகிறோம். சாதி ஒழிப்பு அரசியலில் நம்பிக்கை இல்லை. சாதிகளை ஒழிப்பது என்பது ஏமாற்று வேலை. சுயசாதிப்பற்று தவிர்க்கவியலாதது. அதேநேரம்,
பிறசாதி நட்பை வலியுறுத்துகிறோம். போர்க்குடிகள் என்று எங்களை அடையாளப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம்.
நேர்மையான நீண்ட நெடிய கலாச்சார உரையாடலுக்கு நாங்கள் தயாராகி விட்டோம். பிறப்பு, முதுமை, இறப்பு, மறுபிறவி குறித்த எங்களது புரிதல்களையும், வாழ்வியல் முறைகளையும் மற்ற சமூகங்களோடு பகிர்ந்து கொள்ளவே விரும்புகிறோம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil