வடிவேலு இயங்காத தமிழகம்

Comedy Actor Vadivelu: நேரடியாக அரசியலில் இயங்காமல், இருக்கும் இக்காலகட்டத்தில் வடிவேலுவைப் பற்றிய ஏக்கம் தமிழ்நாட்டில் மிகுந்திருக்கிறது.

விவேக் கணநாதன்

‘வடிவேலு இயங்காத தமிழகம்’ என்பதை ஒரு 7 ஆண்டுகளுக்கு முன்பாக யாரும் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். கடவுளைக் கல் என சொல்வது எப்படி மதநம்பிக்கைக்கு ஒரு பாவச்செயலோ, அப்படி வடிவேலுவை புறக்கணித்துவிட்டு வாழ்க்கையை நடத்துவதும் பொதுவாழ்வின் ஒரு பெரும்பகுதியை புறக்கணிக்கும் பாவச்செயல் என்றே பார்க்கப்பட்டிருக்கும்.

தமிழகத்தின் உளவியலிலும், வாழ்க்கையிலும் இரண்டற கலந்துவிட்ட ஒரு கலைஞனாக வடிவேலு இருக்கிறார். அவர் நேரடியாக அரசியலில் இயங்காமல், இருக்கும் இக்காலகட்டத்தில் வடிவேலுவைப் பற்றிய ஏக்கம் தமிழ்நாட்டில் மிகுந்திருக்கிறது. இந்த ஏக்கத்தின் பின்னணியில், கடந்த 100 ஆண்டுகளில் பரிணாமம் அடைந்து தமிழ் மனதின், கலை – இலக்கிய உலகின் வரலாறு இருக்கிறது.

கடந்த 100 ஆண்டுகளில் தமிழ் சமூகத்தின் மீது மகத்தான தாக்கத்தைச் செலுத்திய மனிதர்களில் வடிவேலுவின் இடம் முக்கியமானது. மிகக்குறிப்பாக, 1991ல் தாராளமயக் கொள்கையை ஏற்றுக்கொண்ட பிறகு மிகச்சிக்கலான வாழ்க்கை முறைக்கு மத்தியில் வடிவேலு மேல் எழுந்துவந்தார்.

இந்திய சமூகத்தின் கலைச்சூழல் என்பது மிக வித்யாசமானது. கலையின் ஆதார இயக்கமான முரண்களுக்கு இடையேயான ஊடாட்டங்களை வெளிப்படையாக வெளிக்கொண்டு வருவதற்கு எதிரான வணிகச் சூழல் உள்ள தேசம் இந்தியா. சினிமா என்பது முழுக்க வணிகக்கலை. சாதி, மதம், ஆதிக்க சக்திகள், பலநூறு ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கும் வர்க்க அதிகாரம் என இருக்கிறது இந்திய இயக்கம். இதனால், சினிமாவின் வழியாக காத்திரமான முற்போக்குக் கருத்துக்களை முன்வைப்பதோ, ஒடுக்குமுறை எதார்த்தமான ஒன்றாக இருக்கும் சமூக இயக்கத்துக்கு எதிரான கலைப்படுத்தலோ, வணிக வெற்றி சாத்தியத்தை குறைக்கிறது. இதனால், பொதுப்புத்தியின் எல்லைகளுக்குள் நின்றுதான் அநேகமான முற்போக்குக் கருத்துக்கள் பேசப்பட்டிருக்கின்றன.

எனவே, பொதுப்புத்தியின் மீது தாக்கம் செலுத்தி, அதை முற்போக்கு வடிவங்களோடு ஒத்துப்போகச் செய்வது என்பதே மிகப்பெரும் கலை சாதனையாக இந்தியாவில் மதிப்பிடப்படுகிறது.

தமிழ்நாட்டில் பொதுப்புத்தியில் மலிந்திருக்கும் எதார்த்த ஒடுக்குமுறையைக் களையும் பெரும்பணியை திராவிட இயக்கப் பிரச்சாரம் செய்தது. ஆனாலும், கலைத்துறையில் பொதுப்புத்தியை உருமாற்றம் செய்யும் படைப்பாளுமைகள் குறைவாகவே வந்தனர். வணிகநலன்களை ஈடுசெய்ய வேண்டிய அழுத்தம் இருந்ததால், இயக்குநர்கள், வசனகர்த்தாக்கள், நடிகர்கள் போன்ற பிரதான படைப்பாளுமைகளுக்கு சில கட்டுப்பாடுகள் இருந்தன. தாண்ட முடியாத லட்சுமணக்கோடு என்பது நிதர்சனமான வெளியாக இருந்தது.

வடிவேலுவின் பங்களிப்பை இந்தப் பின்னணில் வைத்தே நாம் புரிந்துகொள்ள வேண்டும். சமூக ஒடுக்கமுறைகள், அபத்தங்கள், பிற்போக்குத்தனங்களுக்கு எதிராக பொதுப்புத்தியின் மீது கல் வீசுவது, கேலி செய்வது, உருமாற்றுவது என்பது நகைச்சுவைப் பாத்திரங்களின் வேலையாக தமிழ் சினிமா கண்டுகொண்டிருந்தது.

என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, தங்கவேலு தொடங்கி தமிழ் சினிமாவில் கேலி வடிவத்தில் பொதுப்புத்தியின் மீது தாக்கம் செலுத்தியவர்களுக்கென்று ஒரு மரபு இருக்கிறது. கவுண்டமணி அந்த மரபின் ஒரு மகத்தான அத்தியாயம். கவுண்டமணியின் அதிகார மொழி, உடல் பாவனைகள், திரை ஆக்கிரமிப்புத்தனம், உச்சக்குரலில் எதையும் விமர்சிக்கும் துணிச்சல் போன்றவை தமிழ்சினிமாவுக்கு புதிய களங்களைத் திறந்தன.

இயக்க அரசியல் பற்றோ, சாயலோ இல்லாமலேயே வெளிப்படையான அரசியல் கேலிகளை முன்வைக்கும் வழக்கத்தால் கவுண்டமணி மிகப்பெரும் தாக்கத்தை செலுத்தினார். ஆனால், எல்லையற்ற திரை ஆக்கிரமிப்பு செய்ய, கவுண்டமணிக்கு அவருக்கு ‘கீழாக’ பாவனை செய்யும் ஒரு துணைப்பாத்திரம் தேவைப்பட்டது. இந்த மையமே அவருக்கு சில சிக்கல்களையும் ஏற்படுத்தியது.

திரைத்துறையின் எவ்வளவு உச்சநடிகரும், கவுண்டமணி தோன்றும் ஒரு காட்சியில் கவுண்டமணியின் திரை ஆக்கிரமிப்பால் கட்டுப்பட வேண்டியிருந்தது. கவுண்டமணிக்கு முன்பாக எம்.ஆர்.ராதா அப்படி ஒரு திரை ஆக்கிரமிப்பாளராக இருந்தார். ஆனால், கவுண்டமணிக்குப் பிறகு வந்த வடிவேலு, இதில் முற்றும் எதிரானவர்.

வடிவேலுவின் துணைப்பாத்திரங்கள் வடிவேலுவையே அடிப்பார்கள். துன்பத்துக்கு உள்ளாக்குவார்கள். வடிவேலுவை மீறத்துடிப்பார்கள். தன் சகப்பாத்திரங்கள் அனைத்துக்கும், திரையில் எல்லையற்ற ஆக்கிரமிப்பு வெளிக்காகத் துடித்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய அசாத்தியமான கலைவெளியில் வடிவேலு அவர்கள் எல்லோரையும் மீறிக்கிளர்ந்து நிற்பார். வடிவேலு சாத்தியப்படுத்திக் கொண்ட, இந்த கலை சாதூர்யமே பொதுப்புத்தி இயக்கத்தின் மீது உருமாற்றங்களைச் செய்வதற்கு அவருக்கு பெரிதும் உதவியது.

சார்லி சாப்ளின் நகைச்சுவையின் வடிவம் குறிப்பிடும்போது, “கொடூரம் என்பது நகைச்சுவையின் அடிப்படை அம்சம். பைத்தியக்காரத்தனமாக இருப்பது உண்மைதனத்தோடு இருக்கும். அதை பரிதாபப்படும்படி மாற்றிக்கொண்டால் பார்வையாளர்கள் விரும்பத் தொடங்கிவிடுவார்கள். வாழ்க்கையின் அவலத்தைக் காட்டும்போது அழாமல் இருப்பதற்காகவே பார்வையாளர்கள் சிரிக்கத் தொடங்குவார்கள்.

ஒரு வயதான மனிதன் வாழைப்பழத் தோல் வழுக்கி விழுகிறானென்றால் யாரும் அதற்கு சிரிக்க மாட்டார்கள். ஆனால், எப்போதும் அதீத பெருமையுடன் நடந்துகொள்ளும் ஒருவனுக்கு நடந்தால் சிரிப்பார்கள். எல்லா அசாதாரண சூழல்களும் நகைச்சுவை உணர்வோடு பார்த்தால் சிரிக்கக் கூடியவையே” என்றார்.

சாப்ளினின் இந்த விளக்கத்தை வடிவேலு மிகக்கச்சிதமாக தன் திரைவெளியெங்கும் உருவாக்கினார். கலைவடிவத்துக்கு இருமைய முரண்கள் என்பது மிக அவசியம். இப்படி இரு முரண் மையங்களை முடிவுசெய்யும் போது, சமூகத்தின் எந்தவொரு ஒரு சாராரும் அவமதிக்கப்படாமல் இருப்பதும் மிக முக்கியமானது. அதன்மூலமே, எல்லோருக்குமான ஒரு கலைநாயகனாகவும் உருவெடுக்க முடியும். வடிவேலு வேறு எவரையும்விட இங்குதான் அதிகம் ஜெயித்தார்.

ஜம்பம் – போலித்தனம், வீரம் – வெட்டுவேட்டுத்தனம், புத்திசாலித்தனம் – கோமாளித்தனம், கிராமத்தன்மை – நகரத்தன்மை, அப்பாவித்தனம் – ஏமாளித்தனம், புரட்டு – நிதர்சனம் என்கிற உணர்வியல் இருமையங்களை வடிவேலு உருவாக்கிக் கொண்டார். இதன் ஒருபக்கத்தில் ஆதிக்கப் பண்பாட்டு உணர்வையும், ஒடுக்குமுறைகளின் எதார்த்தையும் நிறுத்தினார். வடிவேலு ஏற்றுக்கொண்ட அனைத்துப் பாத்திரங்களிலும் இந்த வடிவத்தை நாம் காணலாம்.

தன் நடிப்பு இயக்கத்தை இப்படி வடிவமைத்துக் கொண்டு, பொதுப்புத்தியின் நினைவேட்டில், எந்தெந்த மனிதர்கள் ‘ரகசியத்தன்மை’ மிக்கவர்களாக இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் வடிவேலு அம்பலப்படுத்தினார். போலீஸ், திருடன், வழக்கறிஞர், மருத்துவர், அரசியல்வாதி என தனிப்பாத்திரங்களாக இருக்கும் பொதுசமூக மனிதர்களில் தொடங்கி மதம், சாதி, வங்கி, கல்வி என புறசமூகத்தின் அனைத்து பொது அமைப்புகளையும் வடிவேலு விமர்சனத்துக்கு உள்ளாக்கியிருக்கிறார்.
இன்னொருபுறம், தமிழ்க்குடும்பச் சூழலிலின் படிநிலை அமைப்புகளை வடிவேலுவுக்கு நிகராக காட்சிவெளியில் கேள்விக்கு உட்படுத்தியவர் வேறு யாரும் கிடையாது. மற்ற எல்லோரையும்விட இதில் இரண்டு முக்கியமான இடங்களில் மகத்தான சாதனையாளராக இருக்கிறார். ஒன்று அறக்கட்டுப்பாடு, இன்னொன்று பொதுசமூகத்தோடு கலத்தல்.

சமூகத்தின் அவலங்களையும், பிற்போக்குத்தனங்களையும் கேலிசெய்யும் போது அந்த அறமின்மை வளர்வதற்கு வாய்ப்பிருக்கிறது. கேலியும், நகைச்சுவையும் பிரச்னைகளின் தீவிரத்தன்மைகளைக் குறைத்து வெறும் சிரிப்புக்கு மட்டுமே உரியதாக்கும் அபாயம் நிகழக்கூடும். ஆனால், வடிவேலுவின் நகைச்சுவைகளில் அப்படியான அறச்சிதைவை செய்யவில்லை என்றே இன்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டியிருக்கிறது. வடிவேலுவின் நகைச்சுவை கேலிகளுக்குள், பொதுசமூகம் கடைபிடிக்க வேண்டிய அற உணர்வும் ஊட்டப்படுவதே தனிச்சிறப்பானதாகும்.

இன்னொருபுறம், வடிவேலு கருத்துச் சொல்பவராகவோ, பிரச்சாரவாதியாகவோ இருக்கவில்லை. இதனால், மிக எளிதாக அவர் பொது சமூகத்துடன் கலந்தார். பிரச்சார நெடியில்லாத வடிவேலுவின் முற்போக்கு கேலி வடிவங்களை தமிழ் சமூகம் உள்வாங்கிக் கொண்டது. தங்கள் வாழ்வின் சகலத்திலும் வடிவேலுவை ஒரு முக்கியப்பங்குதாரராக மாற்றிக்கொண்டது.

அதனால் தான், 2011 தேர்தலில் அவர் திமுகவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரம் செய்தபிறகும்கூட, எதிர் தரப்புகள் அவர்மீது மற்றநடிகர்கள் – பிரபலங்கள் மீது கொட்டும் வெறுப்பைக் கொட்டவில்லை.

காலமாற்றத்தில் மெல்ல மெல்ல நிகழ்ந்திருக்க வேண்டிய இந்த பொதுப்புத்தி மதிப்பீடு மாற்றத்தின் மீது வடிவேலு செலுத்திய விசை மிக உயர்வானது – அற்புதமானது. அந்த விசையே மணியாட்டி சாமியார், ஏட்டு ஏகாம்பரம், வண்டு முருகன், கட்டபொம்மு, கைப்புள்ள, கீரிப்புள்ள, நேசமணி, அய்யாசாமி, வீரபாகு, புல்லட்டு பாண்டி, வளையாபதி, ஸ்நேக் பாபு, ஸ்டீவ் வாக், புலிகேசி, ஸ்டைல் பாண்டி, குழந்தை வேலு, சுடலை, வெடிமுத்து, மாடசாமி, தீப்பொறி திருமுகம், அழகு, அலார்ட் ஆறுமுகம், சலூன் கடை சண்முகம், சூனா பானா, நாய் சேகர், சங்கி மங்கி, முருகேசன், படித்துறை பாண்டி, கபாலி கான், வடிவுக்கரசி, புலிப்பாண்டி, கிரேட் கரிகாலன் என நூற்றுக்கணக்கான பாத்திரத்தில் பொதுப்புத்தியை தோலுரித்தது.

ஆனால், 2011 தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வடிவேலுவின் சினிமா இயக்கம் தடைபட்டது. வடிவேலு இயங்காத தமிழகம் என்கிற சோகம் நிகழத்தொடங்கியது. தமிழ் சமூகத்தின் உள்ளார்ந்த ஒரு உளவியல் துணை நிகழ்காலத்தின் செயல்பாட்டுக் களத்திலிருந்து விலகிக்கொண்டதாகவே வடிவேலுவின் இயக்கம் தடைபட்டதை நாம் மதிப்பிடவேண்டும்.

2011க்கு பிறகான 7 ஆண்டுகளில் கடுமையான அறவுணர்வு வீழ்ச்சி ஏற்பட்டதற்கு சமகாலத்தை இடித்துரைக்கும் வடிவேலு போன்ற மகா கலைஞர்களின் விலக்கம் ஒரு முக்கிய காரணம். இன்றைக்கு இந்துத்துவ நெருக்கடி, விருப்பமில்லாத தலைமையின் கீழ் ஆட்சி போன்றவற்றால் அறவுணர்வுகளை மீட்டெடுக்க வேண்டிய தேவைகளை உணர்த்துகிறது. மெர்சல் திரைப்படத்தின் ஒருகாட்சியில் பணமதிப்பிழப்பை வடிவேலு கேலிசெய்யும் போது ஒட்டுமொத்த தமிழகமும் அதை சந்தோஷமாகக் கொண்டாடியதை இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

வடிவேலுவின் பழைய நினைவுகள் இன்று எங்கெங்கும் வியாப்பித்திருக்கின்றன. ஆனால், நிகழ்காலத்தின் அவலங்களை கலைவடிவம் செய்யும் மகத்தான கலை இயக்கம் தடைபட்டிருக்கிறது. திரை நாயகர்கள் சமூகப்பிரச்னைகளை பேசுவதற்கும், வடிவேலு போன்ற மக்கள் நாயகர்கள் சமூக பிரச்னைகளை வாழ்க்கையோடு கலந்து உணரச்செய்வதற்கும் நிறைய வித்யாசங்கள் உள்ளன.

வடிவேலு இன்றைக்கு தொழில் ரீதியான சிக்கல்களில் உள்ளார். பொருளாதார சிக்கல்கள் காரணமாக, அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. எல்லா கலைஞர்களும் கடக்கும் சோதனை காலமொன்று வரும். வடிவேலுக்கு அந்த சோதனைக்காலம் 7 ஆண்டுகளாய் நீடிக்கிறது. அதற்கு அவரும் ஒரு முக்கியக் காரணம்.

என்றாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் ஊடக சாட்சியாய் 13 பேர் கொல்லப்படும் காலத்தில், ஏழைகளின் நிலத்தில் கார்ப்பரேட்டுக்களுக்கு தார்கொட்டும் அரசாங்கத்தை, நக்கீரன் கோபால்கள் ஆளுநர் மாளிகைக்காக கைதுசெய்யப்படும் நேரத்தில் வடிவேலு மீண்டும் மீண்டும் தேவைப்படுகிறார். மீம்ஸ்களாக, அனுதின உரையாடல் சொற்களாக, நொடிக்கு நொடி நியாபகம் வரக்கூடிய திரை நினைவுகளாக இருக்கும் வடிவேலு நிகழ்வெளியிலும் மீண்டும் இயங்குவது முக்கியமானது. ஏனெனில், ‘வடிவேலுகள்’ இயங்காத தமிழ்நாடு கொஞ்சம் கொஞ்சமாய் வாழமுடியாததாகிவிடும் !

 (கட்டுரையாளர் விவேக் கணநாதன், தொடர்புக்கு: writetovivekk@gmail.com, Facebook, Twitter  )

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close